எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தால் சமத்துவத்தைக் கொண்டு வர முடியுமா?

ஈரோடு விழாவில் தமிழர் தலைவர் வினா

ஹார்வர்டு பல்கலைக் கழகத்திற்கு ரூ.5 லட்சம் அளிப்பு: தமிழர் தலைவர் அறிவிப்பு

ஈரோடு, டிச.3  இந்திய அரசமைப்புச் சட்டம் ஜாதியைப் பாதுகாக்கும் நிலையில், சமத்துவத்தை எங்கிருந்து கொண்டுவர முடியும் என்ற அர்த்தமுள்ள வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ஹார்வர்டு பல்கலைக் கழகத்துக்கு பெரியார் அறக்கட்டளை சார்பில் ரூ.5 லட்சம் அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

நேற்று (2.12.2017) ஈரோட்டில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தம் உரையில் குறிப்பிட்டதாவது:

நான் தந்தை பெரியார் அவர்களின் வாழ்நாள் மாணவன். எனது பிறந்த நாள் விழாவைக் கொண்டாட எதைச் சொன்னால் நான் சம்மதிப்பேனோ அதைச் சொன்னார்கள் கழகத்தினர். அந்த வகையில் ‘விடுதலை’ சந்தாத் தொகையாக முதல் கட்டமாக ரூபாய் 67 லட்சத்தை அளித்துள்ளனர் கழகத் தோழர்கள் - அவர்களுக்கு இந்த நேரத்தில் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். ‘விடுதலை’ இல்லங்களுக்கு வந்தால்தான் இருள் விலகும்.

உள்ளத்தால் ஒன்றுபட்ட மேடை!

உருவத்தால் பலராய்க் காண்பினும், உணர்வால், உள்ளத்தால் ஒன்றுபட்டவர்கள் தோன்றும் மேடைதான் இந்த மேடை!

இது ஒரு ஜாதி ஒழிப்பு மேடை, தீண்டாமை ஒழிப்பு, மேடை, சமூகநீதி மேடை, மதவாதத்தை ஒழிக்கும் மேடை, ஜாதிகளால் தொடரக்கூடிய ஆபத்தை அறிந்தவர்கள் கூடிய மேடை, அவைகளால் ஏற்படும் தீங்குகளைத் தடுத்து நிறுத்தும் மேடை என்று எடுத்த எடுப்பிலேயே கூறி, மாநாட்டின் நோக்கத்தைப் புரிய வைத்தார் ஆசிரியர்.

மேலும் தன் உரையில் அவர் குறிப்பிட்டதாவது:

அவதூறுகளை அலட்சியப்படுத்தவேண்டும்

தன்மீது அவதூறுகளைப் பரப்புகிறார்களே என்று எனது அருமைச் சகோதரர் திருமாவளவன் கூறினார். இந்த நேரத்தில் சகோதரருக்குக் கூறிக்கொள்கிறேன். அவதூறுகளை அலட்சியப்படுத்துங்கள். அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டும் இருக்காதீர்கள். கொஞ்ச நாளில் அவை தானாகவே அடங்கிவிடும், நின்று முடிந்துவிடும். எத்தனை அவதூறுகள் உங்கள்மீது, உங்கள் அமைப்பின்மீது சுமத்தப்பட்டாலும், திராவிடர் கழகம் உங்கள் பக்கம்  இருக்கும், துணை புரியும் (பலத்த கரவொலி!).

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள்.

சட்டத்தை எரிப்பேன் என்றவர் அம்பேத்கர்

தந்தை பெரியார் 1952 இல் ஜாதி ஒழிப்புக்காக இந்திய அரசியல் சட்டத்தைக் கொளுத்தினார். அந்தச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரே, நானே அந்த சட்டத்தைக் கொளுத்துவதில் முதல் ஆளாக இருப்பேன் என்று சொன்னதுண்டே!

(ஆந்திர மசோதாபற்றிய விவாதத்தில் (3.9.1953) மாநிலங்களவையில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பேசியதாவது:)

My friends tell me that I made the constitution. But I am quiet prepared to say that I shall be the first person to burn it out. I do not want it, It does not suit any body.

‘‘சிலர் நான்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்படுத்தினேன் என்று சொல்கிறார்கள். நான்தான் அதனை நெருப்பிலிட்டுக் கொளுத்திவதிலும் முதல் ஆளாக இருப்பேன். நான் அரசியல் சட்டத்தை முற்றிலும் வெறுக்கிறேன்’’ என்று கூறினார் அண்ணல் அம்பேத்கர். (3.9.1953, மாநிலங்களவையில்).

ஜாதி இருந்தால் சமத்துவம் வருமா?

இந்திய அரசமைப்புச் சட்டம், சமூகம், பொருளாதாரம், அரசியல் இந்த மூன்று பற்றியும்  பேசுகிறது - உறுதி அளிக்கிறது. ஆனால், நடப்பில் எந்தளவு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது முக்கியமான கேள்வியாகும்.

ஜாதியைப் பாதுகாத்துக் கொண்டு விட்டு சமத்துவம்பற்றிப் பேசலாமா? ஜாதி இருந்தால், சகோதரத்துவம் எங்கிருந்து குதிக்கப் போகிறது? நாயை, பூனையைக் கொஞ்சுகிறார்கள். ஆனால், துப்புரவுப் பணியைச் செய்யும் என் சகோதரனைத் தீண்டினால் தீட்டா? பார்த்தால் தீட்டா?

இதைவிடக் காட்டுமிராண்டித்தனம் வேறு உண்டா? 1924 இல் வைக்கத்தில் தந்தை பெரியார் நடத்திய தீண்டாமை எதிர்ப்பு ஒழிப்புப் போராட்டத்தில் தந்தை பெரியார் வெற்றி பெற்றார் என்றாலும், இன்றுவரை இங்கு அது தொடர்கிறதே!

அண்ணல் அம்பேத்கரின்  Annihilation of Caste என்ற ஆங்கில நூலை ‘‘ஜாதியை ஒழிக்கவழி’’ என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து முதலில் வெளியிட்டவர் தந்தை பெரியாரே! இது நடந்தது 1934 இல் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

தாழ்த்தப்பட்டவர் அய்.ஏ.எஸ். ஆகலாம்; அய்.பி.எஸ். ஆகலாம்; அர்ச்சகர் ஆக முடியாதா?

மோட்சத்தில் முன் சீட் பெறுவதற்காக, அர்ச்சகர் பணிக்காக நாங்கள் போராடவில்லை. ஒரு மனிதனுக்குள்ள உரிமை மற்றொரு மனிதனுக்கு ஏன் இல்லை - ஏன் மறுப்பு என்பதுதான் இந்தப் போராட்டத்துக்கான காரணம்.

சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன - நீதிபதிகளின் ஆலோசனைக் குழுக்களும் அமைக்கப்பட்டன. கடைசியாக நீதிமன்றத் தீர்ப்பும் சாதகமாகக் கிடைத்திருக்கிறது.

அரசு தயங்குவது ஏன்?

தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அண்ணா, எம்.ஜி.ஆர்., அம்மா பெயர்களைச் சொல்லிக் கொண்டு இருக்கும் இன்றைய அ.தி.மு.க. அரசு செயல்படுத்த முன்வராதது ஏன்? தயக்கம் ஏன்? என்ற வினாவை எழுப்பிய திராவிடர் கழகத் தலைவர் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்காக இருவழிகளிலும் நமது போராட்டமும், திட்டமும் இருக்கும் என்றார்.

ஒன்று நீதிமன்றங்களின் வழியாகவும் போராடுவது - அதற்கான வாய்ப்பும் இருக்கிறது. இரண்டாவதாக வீதிமன்றங்கள் மூலமாக மக்களைப் பெருந்திரளாகத் திரட்டிப் போராடுவது, மெரினா போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை அரசுகள் மறந்திட வேண்டாம் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.

நடக்கவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சூரியன் உதிக்கும் - இருள் விலகும் என்றும் குறிப்பிட்டார்.

(முழு உரை பின்னர்)

‘விடுதலை' சந்தா நிதியாக ரூ.67,59,810 அளிப்பு


‘விடுதலை' சந்தா நிதியாக ‘விடுதலை' ஆசிரியர் - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் முதல் கட்டமாக பலத்த கரவொலிக்கிடையே ரூ.67,59,810 நிதியினை திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர்கள் வீ.அன்புராஜ், முனைவர் துரை.சந்திரசேகரன், தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், அமைப்புச் செயலாளர்கள் ஈரோடு த.சண்முகம்,  மதுரை வே.செல்வம், தருமபுரி ஊமை.ஜெயராமன் ஆகியோர் வழங்கினர் (ஈரோடு, 2.12.2017).

 

ஹார்வர்டு பல்கலைக் கழக தமிழ் இருக்கைக்கு

பெரியார் அறக்கட்டளை சார்பில் ரூ.5 லட்சம்

தமிழர் தலைவர் அறிவிப்பு

உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை உருவாக்க இரு மருத்துவர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதனைப் பொறுக்க மாட்டாமல் இது ஒரு கிறிஸ்துவ சதி என்று பார்ப்பனர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். ஏற்கெனவே சமஸ்கிருதத்திற்கு அங்கு துறை இருக்கிறது. தமிழ் அங்கு நுழைந்தால், சமஸ்கிருதத்தின் ஆளுமை மங்கும் - தமிழின் தொன்மை எத்தகையது என்பது வெளிச்சத்துக்கும் வரும். அதனால்தான் எதிர்க்கிறார்கள். பெரியார் அறக்கட்டளையின் சார்பாக 5 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் (பலத்த கைதட்டல்).

சமஸ்கிருத ஆதிக்கத்தை, அதன் பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுக்கவே இந்த எளிய நிதி என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner