எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அய்யா தந்த அந்த அணையாச் சுடர் ஏந்தி

அடுத்தகட்ட அறப்போருக்குத் தயாராவோம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் நன்றியுடன் கூடிய போர்ச் சங்கு அறிக்கை

 

ஈரோட்டில் கடந்த 2 ஆம் தேதி முப்பெரும் விழா எடுத்து வரலாறு படைத்த தோழர்களுக்கு நன்றி தெரிவித்து, அடுத்தகட்ட போராட்டத்திற்கும் போர்ச் சங்கு ஊதும், திராவிடர் கழகத் தலைவரின் அறிக்கை வருமாறு:

ஈரோட்டில் 2.12.2017 அன்று காலை முதல் தொடங்கி, இரவு

10.10 மணிவரை நடைபெற்ற அடர்த்தியும், அதேநேரத்தில் நேர்த்தியும் கூடிய முப்பெரும் விழாக்கள் சீரிய கொள்கை லட்சியப் பிரச்சாரப் பயணத்தில் இது ஒரு புதிய சாதனை - மைல்கல் என்று கழக வரலாற்றில் பதிவாகிவிட்டது.

அமைப்புச் செயலாளர் த.சண்முகம், மாவட்டக் கழகத் தலைவர் இரா.நற்குணன், மாவட்டக் கழக செயலாளர் கு.சிற்றரசு, மண்டல தலைவர் ப.பிரகலாதன், மண்டல செயலாளர் பெ.இராச மாணிக்கம், பொதுக்குழு உறுப்பினர் கோ.பாலகிருஷ்ணன்,  பேராசிரியர் ப.காளிமுத்து, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தே.காமராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் ராம்கண் (மறைந்த எஸ்.ஆர்.சாமி அவர்களின் பெயரன்), மாவட்டக் கழக துணை செயலாளர் பிரகாசன், மாநகர செயலாளர் தியாகராசன், வழக்குரைஞர் நம்பியூர் மு.சென் னியப்பன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ம.கிருட்டிணமூர்த்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பி.என்.எம்.பெரியசாமி, இளைஞரணி செயலாளர் ஜெபராஜ் செல்லதுரை, பவானி அசோக்குமார், ஒன்றிய செயலாளர் மணிகண்டன், கோ.திருநாவுக்கரசு, கோபி மாவட்டக் கழகத் தலைவர் இரா.சீனிவாசன், மாவட்ட செயலாளர் ந.சிவலிங்கம், கோபி மாவட்ட இளைஞரணி செயலாளர் வெற்றிவேல், கா.யோகநாதன், நாமக்கல் மாவட்ட கழகத் தலைவர் அ.கு.குமார், ஒன்றிய செய லாளர் து.நல்லசிவம் ஆகியோர்தம் பணிகள் பாராட்டத்தக்கவை.

இவர்களின் கடும் உழைப்பு மகத்தான வெற்றியைத் தந்தது!

பொதுமக்கள், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட சான்றோர்கள் அனைவரின் பேராதரவு பெருவெளிச்சமாகப் ‘பளிச்‘சென்று தெரிந்தது; தெளித்தது!

அறிவுக் கண்ணைத் திறந்த

ஈரோடு என்னும் பேரேடு!

ஈரோடு  நமது அறிவு ஆசான் மண் ஈரோடுதான் நம் கழக வாழ்வின் சாதனையின் பேரேடு! ஊரோடு சென்ற உலகத்தாருள் நீரோடு செல்லாமல், எதிர்நீச்சல் போடும் திடச் சித்தம் கொண்ட கருஞ்சட்டை சிப்பாய்களின் களப் பயிற்சிப் பாதையை காட்டி சீரோடு பணியாற்றச் சொல்லிக் கொடுக்கும் மண்!

அம்மண்ணில் என்னை - இல்லை, இல்லை ‘நம்மை’,  ஊக்கமும், உற்சாகமும்படுத்தி, அடுத்த மகத்தான போராட்டத் திற்கு ஆயத்தப்படுத்த அருமையான பாசறையாம் பயிற்சிக் களம் - லட்சிய தளம் நேற்று முன் நடந்த கொள்கை முழக்கப் போர்ப் பரணியாகும்!

12 வயதில் ஈரோட்டில் திராவிட மாணவர்களுக்கான கோடை கால கொள்கைப் பயிற்சி முகாமில் நம் அய்யாவே வகுப்பெடுத்து நாங்கள் குருகுல மாணவர்களாகிய அந்த நாள் ஞாபகம் வந்ததே, வந்ததே! மகிழ்ச்சியைத் தந்ததே!

எப்பக்கம் காணினும் இளைஞர்கள்!

அப்போதும் சரி, அதற்குப் பிறகு பல ஆண்டுகள்வரை மூத்த முதிய சீடர்களே - தொண்டர்களே, தோழர்களே அய்யாவின் இயக்கத்தில் இருந்த நிலை!

இன்றோ, எப்பக்கம் காணினும் இருபால் இளைஞர் கூட்டம்! எழுச்சிமிகுந்த இராணுவப் பட்டாளத்து சிப்பாய்களாகக் காட்சி அளித்தது - அய்யாவாம் நம் அறிவு ஆசான் உடலால் மறைந்து 44 ஆண்டுகள் உருண்டோடிய பிறகும், அவர் விதைத்தவை முளைத்தன - முளைத்தவை கிளைத்தன - கிளைத்தவை பூத்தன - பூத்தவை கனிந்தன!

நன்றியை எதிர்பாராது தொடரும் பணி!

கனியின் சுவையை நம் இனம் சமூகநீதி - படிப்பு - உத்தி யோகம் - சமத்துவம் என்ற ரூபத்தில் உண்ணத் தவறவில்லை; ஆனால், வழமைபோல, கனியின் சுவையை ருசித்து உண்ணு வோரில் எத்தனைப் பேர் அத்தோட்டக்காரரை எண்ணுபவர்? அத்தோட்டக்காரரும் அதை எண்ணாததுதான் எம் தனித் தன்மை; எமது தொண்டறம் வியாபாரத்திற்கல்ல; விளம்பரத்திற் கல்ல என்று கூவிக் கொண்டிருக்கக் கூட நேரமின்றி, ‘குடிசெய்வார் பருவம் பாராது’, பயிற்சி வகுப்பில் பயன்பெற்று ஊர் ஊராக ஈரோட்டுத் தேரை இழுத்துச் சென்று, அடம்பிடித்த மக்களை வடம்பிடிக்க வைத்த பிறகு, அதே ஈரோட்டில் தன் மாணவனை ஆசிரியராக்கினார் எம் அய்யா!

எமக்குக் கிடைத்த இரண்டாம் வாய்ப்பு!

அதோடு மட்டுமா? அவருக்குச் சிலை 1971 இல் -அதுவும் மகத்தான அரசியல் - இனப்போர் வெற்றிக்குப் பிறகு!

அப்போது அவருக்கும், அவரது இரு குருகுல மாணாக் கர்களுக்கும் (ஒருவர் கலைஞர், மற்றொருவர் நான்) அவரது கொள்கையைக் கருப்புடன் கூடிய நற்காவி தவத்திரு அடி களாருக்கு, ஈரோடு நகராட்சியின் வரவேற்பு தந்து (அய்யா தலை வராக 1917 இல் இருந்த அதே நகராட்சியில்) பெருமைப்படுத்தினர்!

தலைதாழ்ந்த நன்றி!

தம்மின் தம் மக்கள் கொள்கை உடைமை கண்டு இன்புற்றார் - நல்லாசான்!  அப்போது அது எனக்குக் கிட்டிய இரண்டாம் அரிய வாய்ப்பு!

நேற்று முன்தினம் - நம் அய்யாவும், அன்னையார்களும் உருவத்தால் மறைந்து உணர்வால், உள்ளங்களில் நிறைந்த நிலையில், ஈர்க்கப்பட்ட இளைய தலைமுறையால் அணையாத சுடராக தந்தை பெரியாரின் சுடரைத் தூக்கிப் பிடித்து, தொடர்ந்து பயணித்து இருட்டை விரட்ட இப்பயணம்  முடிவு பெற, அடுத்தகட்ட போராட்டத்திற்கு  கைகாட்டப்பட்டது; அறப்போர் முழக்கம்; ஆட்பெரும் படைக்குத் தரப்பட்டுவிட்டது என்று அறைகூவிய அந்த நிகழ்ச்சியை சரித்திரமாக்கிய என்னருந் தோழர்காள்!

உங்களுக்கு எனது தலைதாழ்ந்த நன்றி! நன்றி!!

உங்கள் தோழன், தொண்டன்

 

கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்.குமரி மாவட்டத்தில்

தமிழர் தலைவர் பயணம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல்,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை டிசம்பர் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் தமிழர் தலைவர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார். பெரியார் மெடிக்கல் மிஷன் மற்றும் பெரியார் தொண்டறம் அமைப்புகளின் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner