எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ்நாடு அரசின் ‘பெரியார் விருது'

பிற்படுத்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டவர்களுக்கு மட்டும்தானா?

தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள கண்டன அறிக்கை

தமிழ்நாடு அரசின் ‘‘பெரியார் விருது’’ பெறுவோர் பிற்படுத் தப்பட்ட சமூகத்திற்குப் பாடுபட்டவர்கள் மட்டும் என்ற கருத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட அறிவிப்பினைக் கண்டித்து திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

‘‘தமிழக அரசு வழங்கும் சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. ஆண்டுதோறும் சமூகநீதிக்காக பாடுபடு பவர்களை கவுரவிக்கும் விதமாக ‘‘சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது’’ தமிழக அரசால் வழங்கப் பட்டு வருகிறது.

இவ்விருதைப் பெறுவோருக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும், ஒரு பவுன் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2017 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு உரியவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

எனவே, சமூகநீதிக்காக பாடுபட்டவர்கள் அவர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாடு அடைய மேற்கொண்ட முயற்சிகள், அம்மக்களின் வாழ்க்கைத் தரம் உயர கடந்த ஆண்டுகளில் அவர்களால் மேற் கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற் றுடன் அவர்களது பெயர், சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன் நவம்பர் 5 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக் கலாம்.’’

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் விருது பெறுவதற்குத் தகுதி பிற் படுத்தப்பட்டோருக்குப் பாடுபட்டவராகத்தான் இருக்க வேண்டுமா?  தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவராக இருந்தால் அவர் தந்தை பெரியார் விருது பெறத் தகுதியற்றவர் ஆகிவிடுவாரா?

தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பாடு படவில்லை என்ற கருத்துக்கு அ.தி.மு.க. அரசு வந் துள்ளதா?

டாக்டர் அம்பேத்கர் விருது பெறுவோர் தாழ்த்தப் பட்டவர்களுக்காகப் பாடுபட்டவர்களுக்கு மட்டும் தானா? வாழ்நாள் முழுவதும் ஜாதி - வர்ணாசிரமத்தை ஒழிக்கப் பாடுபட்ட தலைவர்கள் மீது ஜாதி வர்ண முத்திரை குத்துவது எந்த அடிப்படையில் சரியானது?

இதைவிட தந்தை பெரியாரை எப்படித்தான் அவமதிக்க முடியும்? இதன் பின்னணியில் விஷமத்தனம் இருக்கிறது என்பதில் அய்யமில்லை.

அ.இ.அ.தி.மு.க. அரசு நெறி கெட்டு, தறிகெட்டுப் போய் விட்டதா?

முதல்வருக்கும், சம்பந்தப்பட்ட துறையினருக்கும் இப்படி யாரோ சில அதிகாரிகள் எழுதித் தருவதை விளம்பரப்படுத்துதல்மூலம் நீங்காத பழியை, அவ மானத்தைத் தேடிக் கொள்ளலாமா?

அ.தி.மு.க. அரசு பி.ஜே.பி.யின் சட்டைப் பைக்குள்ளி ருப்பதால்தான் இந்தத் தடுமாற்றமா?

உடனே இதைத் திருத்தி தமிழ்நாடு அரசு தன் போக்கை மாற்றிக் கொண்டு பொதுவாக சமூகநீதிக்காகப் பாடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கும் வகையில் அறிவிப்பினை மாற்றி வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இல்லையெனில் உரிய முறையில் பரிகாரம் காணப்படும் என்று எச்சரிக்கிறோம்.

 

கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்.

சென்னை  
5.12.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner