எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் ஆற்றும் கடமை என்ன?

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் ஆற்றும் கடமை என்ன? என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

வரலாற்றுக் குறிப்பு நாள்

இன்று (6.12.2017) புரட்சியாளர் அம்பேத்கர் மறைந்த நாள் (1956).

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு மட்டுமல்ல, மற்ற ஒடுக்கப் பட்டோருக்கும் உயர் தனித் தகுதியை உருவாக்கிட உழைத்த மனிதகுல மாமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள். அது அவருக்கு - வைதீக பார்ப்பனீய சடங்குகள் செய்வதுபோல் ‘சிரார்த்தமோ, திதி யையோ’ கொடுக்கும் நாள் அல்ல!

அய்ந்தறிவுள்ள மிருகங்களைக் கொஞ்சி முத்தமிடுவோர், உடன்பிறவா சகோதரர்கள், ஊருக்கு உழைப்பதில் முதன்மையாக இருப்போராகிய ஆறறிவுள்ள மனிதன், நெருங்கக் கூடாதவர், பார்க்கக் கூடாதவர், தொடக்கூடாதவர் என்ற காட்டுமிராண்டி காலச் சிந்தனைக்கும், செயலுக்கும் பலியான படிக்கட்டு ஜாதியி னர்களுக்கு விடியலை, விடுதலையைப் பெற்றுத்தர உழைத்தவர் மாமனிதரான டாக்டர் அம்பேத்கர் அவர்கள்!

சமூக விடுதலை வாங்கித் தந்தவர்

தமது மக்களின் பிறவி இழிவைப் போக்க ஒரே வழியாக பார்ப்பன சனாதன வேத மதமான, ‘ஹிந்து‘ மதம் என்று பிற்காலத் தில் அழைக்கப்பட்டதுமான அந்த மதத்திலிருந்து வெளியேறி, பகுத்தறிவு, சமத்துவம், பெண்ணடிமை ஒழிப்பு ஆகியவைகளை ஏற்று, கடவுள், ஆத்மா, ஜாதி, மூடநம்பிக்கைகளை ஒழித்த பவுத்தத்தைத் தழுவி, சமூக விடுதலை வாங்கித் தந்தவர்.

தந்தை பெரியாரும் - பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கரும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை மறைத்துவிட்டு, அம்பேத்கரை இன்று ஹிந்துத்துவம் பேசும் மதவெறி சக்திகள் ‘கபளீகரம்‘ செய்யப்படும் பேரபாயம் உள்ளது!

அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள்

உண்மையாக அம்பேத்கரைப் பின்பற்றுவோர் அவரது நினைவு நாளில் அவர் அக்டோபர் 15, 1956 அன்று நாகபுரியில் பவுத்தத்தைத்  தழுவியபோது எடுத்த 22 உறுதிமொழிகளை கடைபிடித்தொழுகுவதே சிறப்பானது.

அந்த 22 உறுதிமொழிகள் இதோ:

1. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி வணங்கமாட்டேன்.

2. ராமன், கிருஷ்ணன் இரண்டும் இறைவனின் அவதாரமென எண்ணி வணங்கமாட்டேன்.

3. கணபதி, ‘கௌரி’ மற்றும் இந்து தேவதைகளை தெய்வங் களாக ஏற்று வணங்கமாட்டேன்.

4. கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்ததாகவோ நம்ப மாட்டேன்.

5. மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்ற விஷமத் தனமான பிரச்சாரத்தை எதிர்த்து முறியடிப்பேன்.

6. இறப்பு நிகழ்ச்சியில் இந்துமதச் சடங்குகளை செய்யமாட் டேன்.

7. புத்தரின் போதனைகளையும், நெறிகளையும் மீறமாட்டேன்.

8. பார்ப்பனர்களின் எந்தவொரு ஆச்சாரச் செயலையும் அனுமதிக்க மாட்டேன்.

9. மானுட சமத்துவத்தை நம்புவேன்.

10. சமத்துவத்தை நிலைநிறுத்த முழுமூச்சாக பாடுபடுவேன்.

11. புத்தரின் எட்டு வழிநெறிகளை நம்பிக்கையோடு பின்பற்று வேன்.

12. புத்தரின் பத்து தம்ம போதனைகளை ஏற்று செயல்படுவேன்

13. எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டி, பாதுகாத்து, வாழவைப்பேன்.

14. பொய் பேச மாட்டேன்.

15. களவு செய்ய மாட்டேன்.

16. உடல் இன்பத்துக்காகத் தவறுகள் இழைக்கமாட்டேன்.

17. மது அருந்த மாட்டேன்.

18. புத்தரின் அன்பு, அறிவு, பரிவு ஆகிய உயரிய நெறிகளின் அடிப்படையில் என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயற்சி செய்வேன்.

19. மனித நேயத்துக்கு முரணான, சமத்துவம் இல்லாத கேடு கெட்ட இந்து மதத்தை விட்டொழித்து, இன்றுமுதல் மேன்மைமிகு பௌத்தத்தை தழுவிக் கொள்கிறேன்.

20. புத்தரும், அவர் தம்மமும் உண்மையான மார்க்கம் என்று உறுதியாக ஏற்கிறேன்.

21. இன்று மறுவாழ்வு பெற்றதாக நம்புகிறேன்.

22. புத்தரின் கொள்கை கோட்பாட்டுக்கு ஏற்ப இன்று முதல் செயல்படுவேன்.

மாலை அணிவிப்பதினால் என்ன பயன்?

இவைகளைப் பின்பற்றாமல் அம்பேத்கர் படத்திற்கு மாலையணிவிப்பதனால் மட்டும் என்ன பயன்?

திட்டமிட்டே மனுவாத பார்ப்பனீய மதவெறிச் சக்திகள் இந்நாளைத் தேர்வு செய்து பாபர் மசூதியை இடித்து, மதச் சார்பின்மைக்குரிய தத்துவத்தையே இடித்து நொறுக்கினார்கள். ‘மண்டலுக்கு' எதிராக ‘கமண்டலைத்' தூக்கி வந்தனர் மதவெறிக் கூட்டத்தினர் என்பதைப் புரிந்துகொள்க!

விழிப்புணர்வோடு இளைஞர்களே, உணர்வைப் பெறுங்கள்!

 

கி.வீரமணி
தலைவர்,             திராவிடர் கழகம்.


சென்னை

6.12.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner