எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அவசர உதவிகள் - நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடுகள்  இவற்றை உடனடியாக மத்திய - மாநில அரசுகள் செய்திடுக!

இழப்பீடுகளை உயர்த்திக் கொடுப்பதும் அவசியம்

தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள மனிதநேய அறிக்கை

புயலாலும், வெள்ளத்தாலும் பெரும் பாதிப் புக்கு ஆளான குமரி மாவட்ட மக்களையும், மீனவர் குடும்பத்தினரையும் இரு நாள்கள்

(7, 8.12.2017) நேரில் சந்தித்து அங்கு நிலவும் உண்மை நிலவரங்களை விளக்கியும், மாநில - மத்திய அரசுகள் மேற்கொள்ளவேண்டிய உடனடி மற்றும் நிரந்தர திட்டங்களையும் விளக்கி,  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

7.12.2017 காலை காரைக்குடி திருமண நிகழ்ச்சி முடிந்து, கழகத் தோழர்களோடு குமரி நோக்கிப் பயண மானோம். இடையில் மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி கழகப் பொறுப்பாளர்களும் எம்மோடு இணைந்து வந்தனர். (அவர்களது விவரம் தனியே).

வாழைகள் - பயிர்கள் நாசம்!

வழியில் சாலையில் பகல் 2.30 மணியளவில் எல் லோரும் வாகனங்களை நிறுத்தி உணவருந்தி, பயணத் தைத் தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் ஆரல்வாய்மொழி சென்றபோது, முகப்பில் வரவேற்றனர் கழகத் தோழர்கள்.

அங்கே குமரி மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் தோழர் கிருஷ்ணேசுவரி, வெற்றிவேந்தன், திருமதி. மணி, வடசேரி நல்லபெருமாள், தி.மு.க. மாவட்ட முன் னாள் ஒன்றிய துணைப் பெருந் தலைவர் தோழர் பூதலிங்கம் ஆகியோர் வரவேற்று, பாதிக்கப்பட்ட விவசாயப் பகுதிகளைப் பார்வையிட, பூதப்பாண்டி, திட்டுவிளை, தெரிசனம்தோப்பு வழியே சென்று, செருமடம் சேர்ந்தோம். அங்கே கழகத் தோழர்களும், மாவட்ட தி.மு.க. பொருளாளர் கேட்சன்,  தி.மு.க. மாவட்ட முன்னாள் ஒன்றிய துணைப் பெருந் தலைவர் தோழர் பூதலிங்கம் ஆகியோரும், மற்ற செய்தியாளர்களும் கூடி வரவேற்று, விளக்கினர்.

கொத்துக் கொத்தாக சாய்ந்த வாழைகள் ஒருபுறம்; நீரில் அமிழ்ந்து அழுகிய நெற்பயிர்கள் மறுபுறம். விவசாயிகள் தங்கள் வேதனையை விளக்கிக் கூறினர் நம்மிடம். அவர்களது துயரத்திற்கு வடிகால் தேடினர்!

ஒக்கிப் புயல் கன்னியாகுமரி மாவட்ட விவசாயி களையும், மீனவக் குடும்பங்களையும் முந்தைய ‘சுனாமி’யைப்போல் பெரிதும் திடீர்த் தாக்குதல் நடத்தி, மாவட்டத்தையே விளைநில வளத்தையும், மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு, அன்றாடம் கடல்மேல் நித்தம் சென்று பிழைப்பிற்கான தொழிலை நடத்தும் - உயிரைப் பணயம் வைத்த எம்அரும் சகோதரர்களான மனித வளத்தையும் சூறையாடியுள்ள கொடுமைகளைக் கண்டு எங்களது நெஞ்சத்தை நெக்குருக வைத்தன - பதைப் பதைப்புக்கு ஆளாக்கின!

ஒருபுறம் விவசாயிகளின் வளர்ந்த வாழ்வாதாரப் பயிர்களான வாழைகளும், ரப்பர் மரங்களும் புயலினால் அடியோடு சாய்க்கப்பட்ட கொடுமை!

தாய்மார்களின் கண்ணீர் வெள்ளம் - கண்கள் குளமாயின!

இன்னொருபுறம் வளர்த்த மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன ஆயிரக்கணக்கில்!

மின் கம்பங்கள் வீழ்ந்து கிடந்தன. ஏழை பாழையான எம்மக்களின் குடியிருப்புகள்கூட இடிந்து வீழ்ந்து, வானக் கூரையைப் பார்த்தே நின்று கதறியழும் தாய் மார்களின் கண்ணீர், வேதனை வெள்ளமாகப் பாய்ந்து நம் கைகளைப் பிடித்துக்கொண்டு சோகத்தோடு அவர்கள் கதறியழுதபோது, நம் கண்களும் குளமாவதை மறைத்து, அவர்களைத் தேற்றினோம்!

அங்கு பிரதானமானவை வாழையும், ரப்பரும். 15 கன்றுகள் வீதம் 1000 வாழைகளை வளர்த்தால், இரண் டரை லட்சம் ரூபாய் ஆண்டிற்கு செலவாகும். புயல், மழை சேதத்தினால், இரண்டரை லட்சம் நட்டம்!

‘பாட்டம்' என்ற குத்தகை எடுப்பவர், பயிர் செய்து நில முதலாளியிடம் தந்துவிடும் நிலையில், அரசு 7 ஆயிரம்முதல் 13,500 ரூபாய்வரை மானியம் தருகிறது. எப்பொழுதும் இப்பகுதி மக்கள் அவதிப்பட்ட, ஏழ்மையும், கடனும் பெற்ற மக்களாக காலந்தள்ளும் நிலைமையே நீடிக்கிறது.

விவசாயி 15 ரூபாய் செலவழித்து உருவாக்கும் வாழைப் பயிருக்கு அரசு தரும் மானியம் 4 ரூபாய் 50 காசுகள்தான். இப்படி செருமடம், தெரிசனம்தோப்பு பகுதியில் - சேறும், சகதியும் உள்ள வயல்களில், அவர் களோடு இறங்கியும் பார்த்தோம். அவர்கள் குறைபாடு களைப் பதிவும் செய்தோம்.

மின்சாரம் அறவே துண்டிப்பு!

அடுத்து ரப்பர் தோட்டப்பகுதியான தடிக்காரன் கோணம் கிராமப்பகுதியில் ஊராட்சி மன்றத் தலை வரும், தாய்மார்களும் திரண்டு கண்ணீரும், கம்பலை யுமாக தங்கள் வீடிழந்து, மண்டபத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் (மின்சாரம் இல்லாததால்) தரப்படுகின்ற உணவை உண்டு கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். ரப்பர் விவசாய தொழிலாளிகளாக இருந்தும், அவர்கள் நிலைமையும் மிகவும் பரிதாப நிலையில் உள்ளது.

மலைக்கிராமங்களில்

மக்கள் தவிப்பு

தி.மு.க. மாவட்ட முன்னாள் ஒன்றிய துணைப் பெருந் தலைவர் தோழர் பூதலிங்கம், மாவட்ட முன்னாள் ஊராட்சியின் தலைவர் (தடிக்காரன்கோணம்)  ஆகியோர் நிலைமைகளை விளக்கினர். அப்பகுதி தாய்மார்கள், பெரியவர்கள் எல்லோரும் தங்களது துயரச் சம்பவங்கள், இழப்புகள்பற்றிய கண்ணீர் நிகழ்வுகளை சொன்னார்கள். நாம் அவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களை ஆற்றுப்படுத்தினோம்!

பாராமலை, சாமிகுச்சி, பாலாமோர், கரும்பாறை, இஞ்சிக்கடவு, பஸ் கடை போன்ற மலைக்கிராமங்களில் ரப்பர் தோட்டத்தில் பால்வெட்டி எடுக்கும் தொழிலா ளர்கள் பலர் - மேலே திக்கின்றி தவிக்கும் பரிதாபம்! இவர்களின் எண்ணிக்கை 300, 400-க்கும் மேல் இருக்கக் கூடும். அவர்களை அரசும், மாவட்ட நிர்வாகமும் ஹெலிகாப்டர் மூலமாவது மீட்டிடும் முயற்சிகளை மேற்கொள்ள முன்வரவேண்டும்.

சேதமாகி இடிந்த வீடுகளுக்குத் தரப்படும் அரசு உதவி 2,500 + 2,000 மறுபடி 10,000 ரூபாய் போதுமானதல்ல. கொத்தனார் கூலி நாள் ஒன்றுக்கு 1,000 ரூபாய் - மற்ற கட்டுமானப் பொருள் விலையோ மிக அதிகம். அதை மேலும் உயர்த்தித் தரவேண்டும் என்று கூறினர்.

குளச்சல் பகுதியில்...

மறுநாள் காலை நாகர்கோவிலிலிருந்து புறப்பட்டு, பாதிக்கப்பட்ட, இன்னும் கரைக்குத் திரும்பாத பல நூற்றுக்கணக்கான மீனவர்களின் குடும்பங்களைக் கண்டு விசாரிப்பது என்பதற்காக குளச்சல் சென்றோம்.

அங்கு டேவிட்சன் என்ற வாலிபர், உதவி சரியான நேரத்தில் கிடைக்காததால் மரணமடைந்துள்ளார். 13 பேர் ஒரே படகில் சென்றதாகவும், 30 ஆம் தேதி ஹெலி காப்டர் தேடுதல் உதவி கிடைத்திருப்பின், அவர்கள் மீட்கப்பட்டிருப்பார்கள் என்றும், அரசுகளின் மெத்தனம், அவர்களின் வாழ்க்கையைப் பறிப்பதற்குக் காரண மாகியது என்றும் கூறினர்.

குளச்சலில் மறைந்த சேவை சகோதரர் படத்திற்கு (அந்த சர்ச்சில் வைக்கப்பட்டிருந்தது) இறுதி மரியாதை செலுத்தினோம். அங்கு அழுது புலம்பிய அவரது தாயாரிடமும், உறவினர்களிடமும் ஆறுதல் கூறிய பிறகு, மறைந்த டேவிட்சன் இல்லம் சென்றோம். கடலோரத்தில் இருந்த எல்லையற்ற சோகத்திற்கு ஆளான அவரது வாழ்விணையருக்கும், அவருடைய சகோதரிகளுக்கும் ஆறுதல் கூறி, துக்கத்தில்  பங்குகொண்டோம். அந்த இளம் சகோதரி கதறியழுதது எங்கள் நெஞ்சங்களைப் பிளந்தது.

அப்பகுதியின் பங்குத்தந்தை ஆயர் பாதிரியார் திரு.எட்வின் அவர்களைப் பார்த்து முழு நிலவரம் கேட்டு அறிந்தோம்.

கோரிக்கை மனு

அவர்களது குறைகளைக் களைய நிரந்தரப் பாது காப்புத் தர, என்ன செய்தால் மீண்டும் மீண்டும் இந்த அவலங்கள், சோகங்கள் தொடராவண்ணம் செய்யப் படவேண்டும் என்பதை அவர் தந்த மனுவில் உள்ளதை அப்படியே தருகிறோம். (பெட்டிச் செய்தி காண்க).

நமது அரசு மீனவ சமுதாயத்தினரின் நிரந்தர தொழில் காப்பு, உயிர் காப்பிற்கு ஏற்பாடு செய்து, அத்திட்டங்களை உடனடியாகச் செய்தல் அவசர அவசியமாகும்.

600 மைல் நீள தமிழ்நாட்டுக் கடற்கரையில், சென்னை, கடலூர், நாகை, வேதாரண்யம், தேவிப்பட் டணம், மல்லிப்பட்டணம் போன்ற குமரிவரை உள்ள மீன்பிடித் தொழில் வாழ்வாதாரம் உத்தரவாதம் பெற நிரந்தரப் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவசியம் மத்திய - மாநில அரசுகள் செய்யவேண்டும்.


கி.வீரமணி   
தலைவர்,    திராவிடர் கழகம்.

சென்னை  
11.12.2017

 

தமிழர் தலைவரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு

ஒக்கி புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக பின்வரும் கோரிக்கைகளை தங்கள் பார்வைக்கு சமர்பிக்கின்றோம். தாங்கள் பரிசீலனை செய்யுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

1) ஒக்கி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.

2) காணாமல் போன மீனவர்களை இறந்தவர்கள் என அறிவிப்பதற்கு, உடல்கள் கிடைப்பது வரை இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற விதியைத் தளர்த்தி, அவர்களை இறந்தவர்கள் என அறிவித்து, அவர்களுடைய குடும்பங்களுக்கு ரூ. 20 இலட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும்.

3) மீனவர்களை இழந்த குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

4) இறந்து கரை ஒதுங்கும் மீனவர்களின் உடல்களை உடனடியாக அடையாளம் கண்டு ஒப்படைக்க வேண்டும்.

5) காணாமல் போகும் மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்கும் விதத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் தளம் மற்றும் கடலோர காவல் படகுதளம் (Coast Guard Ship) அமைக்க வேண்டும்.

6) விசைப்படகுகளில் ஹிபிதி UHF (Ultra High Frequency) கருவி பொருத்த, ஆபத்து கால தகவல்களை விரைவாக பரிமாற்றம் செய்யும் தொழில்நுட்ப வசதி ஏற்படுத்த வேண்டும்.

7) அனைத்து விசைப்படகுகளிலும் GPS Tracker கருவி பொருத்தி, காணாமல் போகும் விசைப்படகுகளை விரைவாக கண்டுபிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

- அருட்தந்தை ஆர்.எட்வின்

கொளச்சல் (COLACHEL)

குமரி மாவட்டம்

===============

தமிழர் தலைவரோடு பயணித்த தோழர்கள்

ஆசிரியர் இரண்டு நாள் பயணத்தில் பங்கேற் றோரின் விவரம் வருமாறு:

கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராஜா, நெல்லை மண்டலச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், குமரி மாவட்டத் தலைவர் மணி, மாவட்டச் செயலாளர் கிருஷ்ணேசுவரி, பொதுக்குழு உறுப்பினர் தயாளன், தென் மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர்

வே.செல்வம், பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தலைவர் ப.சுப்ரமணியன், தலைமைக் கழக பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா, மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,  புகைப்படக் கலைஞர் பா.சிவகுமார், வலைக்காட்சி முரளி, புத்தக விற்பனையாளர் பூமிநாதன், அர்ச்சுன், செந்தூரப் பாண்டி, விருதுநகர் மாவட்டத்தலைவர் இல.திருப்பதி, தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் வீரன், நெல்லை மண்டலத் தலைவர் பாரி ராஜேந்திரன், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் முனியசாமி, நெல்லை மாவட்டத் தலைவர் காசி, செயலாளர் ராஜேந்திரன், ஓட்டுநர்கள் தமிழ்ச்செல்வன், பாஸ்கர், காளீஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner