எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இது தமிழர் பண்பாட்டு மீட்டுருவாக்கப் பெருவிழா

அன்றைக்கு கரிகாலன் காவிரிக்குக் கல்லணை கட்டினான்

இன்றைக்கு ஜாதிக்குக் கல்லறை கட்டுவோம் வாரீர்!

திருக்காட்டுப் பள்ளியில் தமிழர் தலைவர் ஆசிரியர் இனமான உரை வீச்சு!

- நமது சிறப்புச் செய்தியாளர்

திருக்காட்டுப்பள்ளி, டிச.17 கரிகால் பெருவளத்தான் அன்று காவிரியில் கல்லணை கட்டினான், இன்றைக்கு நாம் ஜாதிக்குக் கல்லறை கட்டுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

திருக்காட்டுப்பள்ளியில் நேற்று (16.12.2017), தந்தை பெரியார் 139ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, கல்லணையைக் கட்டிய மாமன்னன் கரிகாற் சோழனுக்குப் பெரு விழா, மாவீரன் நரகாசுரன் விழா ஆகிய முப்பெரும் விழாவில் பங்கேற்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

தோழர்களே, இங்கே முப்பெரும் விழாவை ஏன் நடத்து கிறோம்? நம்முடைய பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்யவே! மொழியிலும் ஆரியம் கலப்பு - பண்பாட்டிலும் ஊடுருவல்.

வேதங்களில் திராவிடர் நிந்தனைகள்

ஆரியத்தை எதிர்த்த திராவிடர்களை வேதங்களில் வசை மாரி பாடியிருக்கிறார்கள் - சூழ்ச்சியால் கொன்றுள்ளனர். அவர்கள் சுரர்களாம் - நாம் அசுரர்களாம். சுரா பானத்தை, சோம பானத்தைக் குடித்தவன் சுரன் - ஆரியர்கள். குடிக்க மறுத்தவர்கள் அசுரர்களாம் - குடியை மறுத்தவர்கள் இழிவானவர்களாம்.

நரகாசுரனை சூழ்ச்சியால் கொன்றார்கள்; அவனைக் கொன்று விட்டு அவன் சாகடிக்கப்பட்ட நாளையும் நம்மைக் கொண்டாட வைத்து விட்டானே, எவனாவது ஒருவன் சாகும் போது என் இறந்த நாளைக் கொண்டாடுங்கள் என்று சொல்லுவானா?

கடவுளுக்கும் கடவுளச்சிக்கும் பிறந்த பிள்ளை எப்படி அசுரன் ஆனான்?

தந்தை பெரியார் தான் ஒரு கேள்வி கேட்டார், மகாவிஷ்ணு கடவுள் - அவன் எடுத்தது வராக அவதாரம் - அதாவது பன்றி அவதாரம். பூமியோ பூமாதா.  அப்படி என்றாலும் மகா விஷ்ணுவுக்கும் - பூமாதேவிக்கும் பிறந்தவன் எப்படி அசுரன் ஆவான் என்று கேட்டாரே தந்தை பெரியார். இதுவரை யார் பதில் சொல்லியிருக்கிறார்கள்?

நம்முடைய அரசர்கள் வீரஞ்செறிந்தவர்கள்தாம்.  கங்கை, கடாரம் கொண்டவர்கள்தான். ஆனால் அவர்கள் வீரம் ஆரியத்திற்கு அடி பணிந்து விட்டதே! நரகாசுரன் கொல்லப் பட்ட நாளை விழா எடுக்க ஏற்பாடு செய்தவர்கள்தான் காந்தியாரைக் கொன்ற கோட்சேவுக்குச் சிலை எடுக்க முயற்சிக்கிறார்கள்!

ராஜராஜ சோழனைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறோம். அவன் சதய விழா கொண்டாடப்படுகிறது. அவனவனும் ராஜராஜன் என் ஜாதிக்காரன் என்று உரிமை கொண்டாடு கிறான் அப்படிப் பெருமை பாராட்டுவதற்கு அப்படி என்ன ராஜராஜன் அரும் பெரும் காரியத்தைச் செய்துவிட்டான்?

ராஜராஜன் சாதித்தது என்ன?

கோயில் கட்டினான், கோயிலுக்குப் பார்ப்பனர்களை வடநாட்டிலிருந்து கொண்டு வந்து அர்ச்சகர்களாக்கினான். சமஸ்கிருதத்தைக் கோயிலுக்குள் விட்டான். பெண்களைப் பொட்டுக் கட்டி 'தாசிகள்' என்ற முத்திரை குத்தி, கோயிலுக்குள் கொண்டு போய் விட்டான்.

பார்ப்பனர்களுக்கு நிலங்களைத் தானமாகக் கொடுத்தான். இறையிலி மங்கலமாக்கினான். மங்கலம், மங்கலம் என்று பெயர் உள்ள ஊர்கள் எல்லாம் ராஜராஜனால் பார்ப்பனர் களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்டவை தான். நான்கு வேதங்கள் படித்தால் சதுர்வேதி மங்கலம், மூன்று வேதங்கள் படித்தால் திரிவேதிமங்கலம், இரண்டு வேதங்களைப் படித்திருந்தால் துவிவேதிமங்கலம் என்று கிராமங்களைப் பார்ப்பனர்களுக்குத்  தூக்கிக் கொடுத்தது தானே ராஜராஜ சோழப் பேரரசர் செய்த கைங்கர்யம். ராஜகுரு என்று மன்னனுக்குப் பார்ப்பானை ஆலோசனை கூறும் உயர்ந்த பீடத்தில் வைத்தவனும் இதே ராஜராஜன்தான்.

நமது மானமிகு கலைஞர் என்ன செய்தார்?

நமது மானமிகு கலைஞர் அவர்கள் ஒரு நல்ல காரியத்தைச் செய்தார்;  அவர் முதல் அமைச்சராக இருந்த போது தஞ்சை பெருவுடையார் கோயிலின் முன்புறம் ராஜராஜனுக்குச் சிலை ஒன்றை நிறுவினார். கோயிலுக்குள்ளே வைக்கவில்லை. இதன் பொருள் என்ன? கோயில் கட்டிய தமிழன் எல்லாம் வீதியில்தான் நிற்க வேண்டும் என்ற நிலையை விளக்குவதுதானே இது?

அன்றைக்கு ராஜராஜ சோழன் என்ற தமிழ் அரசன் கோயிலையும் கட்டி; பூஜை செய்ய பார்ப்பனர்களையும் அர்ச்சகனாக்கினான். தமிழன் கோயிலுக்குள் சென்று அர்ச்சனை செய்ய முடியாது - அந்தத் தகுதி தமிழனுக்கு இல்லையாம் - அவன் பிறப்பால் சூத்திரானாம் - ஆரிய இந்து மதம் சொல்லுகிறது. இந்த நிலை உருவானதற்கு ஆரிய அடிமையான ராஜராஜ சோழன் தானே காரணம்.

தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?

இந்த இழி நிலையை போக்க இன்றுவரை நாம் போராட வேண்டியுள்ளதே. அரசாங்கம் சட்டம் இயற்றியும், இப் பொழுது உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியும் தமிழன் கட்டிய கோயிலில் தமிழன் அர்ச்சகனாக முடியவில்லையே!

தமிழ்நாடு அரசாங்கம் முன்வந்து தாழ்த்தப்பட்டோர் உட்பட தமிழர்களை அர்ச்சகர்களாக்கிட இப்பொழுது எந்தத் தடையும் இல்லையே! டில்லி எஜமானனுக்கு அடி பணிந்து கிடக்கிறதே அண்ணா பெயரில் உள்ள இந்தத் தமிழக அரசு.

தாழ்த்தப்பட்ட தோழர் அர்ச்சகரானால்

அது எத்தகு புரட்சி!

இன்றைக்கு தீண்டாமை -  ஜாதி அதிகாரப் பூர்வமாக ஆதிக்கம் செலுத்தும் இடம் கோயில் கர்ப்பக் கிரகம்தானே.

கோயில் கருவறைக்குள் எங்கள் தாழ்த்தப்பட்ட சகோ தரன் அர்ச்சகனானால் அது எவ்வளவுப் பெரிய புரட்சியாக இருக்கும் - ஜாதி ஆணவக்காரர் வாலாட்ட முடியாதே, உடு மலையில் பட்டப் பகலில் சங்கர்கள் படுகொலை செய்யப்பட முடியாதே - மனமாற்றத்திற்கு அடிகோலியிருக்குமே!

கவுசல்யா தனி மனிதர் அல்ல!

தமிழனின்  கலாச்சாரத்தில் ஜாதிக்கு இடம் உண்டா? பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தானே தமிழனின் சமத்துவப் பண்பாடு. ஆரியர் விதைத்த ஜாதி என்னும் கொடுமையை அனுமதிக்கலாமா?

இன்னும் கோயில்களில் சூரசம்ஹாரம் நடத்துகிறார்களே - அதன் தாத்பரியம் என்ன? கடவுள் - அசுரனான திராவிடர் களைக் கொல்லுவதுதானே இந்த சூரசம்ஹாரங்கள்!

இந்த ஜாதியை ஒழிக்கத்தானே தந்தை பெரியார் 95 வயது வரை பாடுபட்டார். இன்றைக்கு கவுசல்யாக்கள் துணிவுடன் வீதிக்கு வந்து ஜாதியை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார் என்றால் அது தந்தை பெரியார் ஊட்டிய துணிச்சல்தானே! அந்த பெண்ணையும் கொச்சைப்படுத்த சிலர் வந்திருக் கிறார்கள். கவுசல்யா தனி மனிதர் அல்ல - அவருக்குப் பின்னால் ஓர் இயக்கம் இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்!

போராட்டத்திற்கு வாரீர்! வாரீர்!!

அன்றைக்கு கரிகால் சோழன் என்னும் திருமாவளவன் காவிரிக்கு அணை கட்டினான். இன்றைக்கு நாம் ஜாதிக்குக் கல்லறைக் கட்டுவோம் (பலத்த கைதட்டல்). ஜாதி ஒழிப்புக்காக தந்தை பெரியார் அறிவித்த இறுதிப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற ஜாதி ஒழிப்பு போராட்டத்தில் குதிக்க தாய்மார்களே தயாராகுங்கள்!, கருஞ்சட்டை குடும்பத்தினரே தயாராகுங்கள்!!

தந்தை பெரியார் பணி முடிப்போம்! வெகு சிறப்பாக, அரும்பாடுபட்டு விழாவை ஏற்பாடு செய்திருக்கிற கழகத் தோழர்கள் அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்! என்று உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner