எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திராவிட நாகரிகம் தொன்மையானது. சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் களுடையது என்று நிரூபிக்கப்பட்ட உண்மை. அந்தக் கால கட்டத்திலேயே நகர அமைப்புகள், அதன் கட்டுமானங்கள் ஆச்சரியப்படத்தக்கவை. பாதாள சாக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன, எத்தகைய மதி நுட்பத்துடன் அணை கட்டியிருந்தார்கள் என்பதெல்லாம் மிகப் பெரிய சாதனை.

கைபர், போலன் கணவாய் வழியாக வந்த ஆரியர்களுக்கு அந்த நாகரிகம் மிகப் பெரிய வியப்பாக இருந்தது. ஆடு, மாடுகளை ஓட்டி வந்த அவர்களுக்கு, நாடோடியாகத் திரிந்து வயிற்றுப் பிழைப்பு நடத்தி வந்த அவர்களுக்கு அணைகள் கட்டப்பட்டு இருந்ததெல்லாம் பெரும் தடையாக இருந்தன. திராவிடர்கள் உருவாக்கியிருந்த அணைகளை உடைத்தார்கள்.

இதுகுறித்து மார்க்சிய சிந்தனையாளரான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் எழுதிய "இந்திய வரலாறு - ஒரு மார்க்சிய கண்ணோட்டம்" எனும் நூலில் (தமிழில் பி.ஆர். பரமேஸ்வரன்) தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்.

"விலங்கினத்தை வளர்ப்பதை அடிப்படையாகக் கொண்ட ஆரியர்களின் வாழ்க்கைக்கு சிந்து சமவெளி மக்கள் கட்டி உருவாக்கியிருந்த அணைகள் தடையாக இருந்தன. அணைகளை உடைத்து நதிகளை அவற்றின் போக்கில் விட்டால் மாத்திரமே ஆரியர்களுக்குத் தங்களுடைய வளர்ப்பு மிருகங்களுடன் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்குச் செல்ல முடியும். அதனால் ஆரியர் களின் யுத்த முயற்சிகளில் முதன்மையானது நதிகளை சுதந்திரமாக்குவதாக இருந்தது. (அவர்களுடைய வீர புருஷனான இந்திரன், விருத்திரனனைக் கொன்றான் என்ற ரிக்வேதக் கதையின் வரலாற்று ரீதியான உள்ளடக்கம், சிந்து நதியின் மீது கட்டியிருந்த அணைகளை உடைத்தது பற்றியதாகும் என்று சில நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்).

அணைகளை உடைப்பதென்ற இந்த நாச வேலையின் மூலம் ஆரியர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தின் அடிப்படையையே தகர்த்து விட்டார்கள். சிந்து சமவெளி நாகரிகங்களை தீக்கிரையாக்கியதைவிட கொடுமையான ஒரு நாச வேலையாக இருந்தது இது. இத்துடன் சிந்து சமவெளி நாகரிகத்தின் அழிவு முழுமையாயிற்று" என்று இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் எழுதியுள்ளார்.

ஆகவே அணைகள் கட்டுவது திராவிடர் இனத்துக்குரியதாகும். அதன் மூலம் விவசாயத்துக்கு அவர்கள் தந்த முன்னுரிமையும் விளங்கும். 19 நூற்றாண்டுகளுக்கு முன் மாவேந்தன் கரிகாலன் இங்குக் கல்லணையில் அணையைக் கட்டினான் என்பது தமிழர்கள் பெருமைப்படக் கூடியதாகும்.

ஆரியர்களைப் பொருத்தவரை விவசாயம் பாவத் தொழிலாகும். அவர்களின் மனுதர்ம சாத்திரம் அப்படியே கூறுகிறது.

"சிலர் பயிரிடுதலை நல்ல தொழிலென்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது. ஏனெனில் இரும்பை முகத்தினுடைய கலப்பையும், மண்வெட்டியும், பூமியையும், பூமியிலுண்டான பலபல ஜெந்துக்களையும் வெட்டுகிறதல்லவா!"

(மனுதர்மம் : அத்தியாயம் 10 - சுலோகம் 84)

இப்படி விவசாயத்தைப் பழிக்கிற இனம் உலகத்திலேயே இந்த ஆரியப் பார்ப்பன இனந்தான்! (இந்த விவசாயம் இல்லா விட்டால் இவர்கள் வயிற்றுக்கு உணவு எங்கிருந்து குதிக்கப் போகிறது. உடலுழைப்புத் தொழிலை சாஸ்திர ரீதியாகவே பார்ப்பனர்கள் வெறுப்பது இங்குக் கவனிக்கத்தக்கதாகும்).

மாமன்னன் கரிகாலன் விவசாயத்தைப் பெருக்கியவன், அதற்காக அணையைக் கட்டியவன் - வடக்கே படையெடுத்து வடவர்களை அடக்கினான் - புலிக்கொடி பொறித்தான். இன்றைக்கு எந்தக் காவிரியில் கரிகாலன் அணையைக் கட்டி நீரைத் தேக்கி வேளாண்மையை பெருக்கினானோ, "உண்டிக் கொடுத்தார் உயிர் கொடுத்தோரே" என்ற அடிப்படையில் உணவுக் கான விளைச்சலை விரிவுபடுத்தினானோ -

இன்றைக்கு அந்தக் காவிரி நீருக்கு வடவர்களின் தயவை எதிர்நோக்கும் நிலையில் தானே நாமிருக்கிறோம். மத்திய பிஜேபி அரசு காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் தமிழர் விரோத நடவடிக்கையில் தானே ஈடுபட்டு வருகிறது. ஆரியர் - திராவிடர் போராட்டம் கரிகாலன் காலத்திலிருந்தும், அதற்கு முன் சிந்து சமவெளி நாகரிகக் காலத்திலிருந்தே (கி.மு. 3000 ஆண்டு) தொடங்கப்பட்டு விட்டது.

கரிகாலன் விழாவை இன்று இங்கு நாம் நடத்துகிறோம் என்றால் இழந்த நம் இனப் பண்பாட்டை மீட்கவே - மீட்டுருவாக்கம் செய்வதற்கே.

- தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்

திருக்காட்டுப்பள்ளி முப்பெரும் விழாவில் 16.12.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner