எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தந்தை பெரியார் வயதையும் தாண்டி வாழும்

நமது இனமானப் பேராசிரியர்

நூறாண்டும் கண்டு நீடு வாழ்க வாழ்கவே!

சென்னை விழாவில் தமிழர் தலைவர் வாழ்த்து

சென்னை, டிச.19 தந்தை பெரியார் 95 ஆண்டு காலம் வாழ்ந்தார். அவர்களையும் தாண்டி 96 ஆம் ஆண்டில் நமது இனமானப் பேராசிரியர் அன்பழகனார் அவர்கள் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சிக்குரியது. நூறாண்டும் கடந்து நமக்கு அவர் வழிகாட்டவேண்டும் என்று வாழ்த்தினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

18.12.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

வகுப்புரிமை விளக்கிய முதல் நூல்!

மிகுந்தஎழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் நடை பெறக் கூடிய நம்முடைய ஒப்பற்ற இனமானப் பேராசிரியர் அவர்களுடைய 96 ஆம் ஆண்டு பிறந்தநாள்பெருவிழா-திருவிழாஎன்றஇந்நிகழ்ச்சி யும், அதேநேரத்தில், அவர்களே அதை வெறும் பாராட்டுரையாகவோ, அனைவருடைய வாழ்த்துரை யாக மட்டும் நடத்தினால், அவர்கள் அதை அனுமதிப்பதில்லை. அவர்களுடைய மனப்பாங்கை நன்றாக நாங்கள் உணர்ந்தவர்கள். அதனால், அவர் கள் இனமானப் பேராசிரியராக இருந்து, திராவிட இயக் கத்தினுடைய அடிப்படைக் கொள்கையான சமூகநீதி, இட ஒதுக்கீடு, வகுப்புரிமை என்பதற்கெல்லாம் ஆபத்து ஏற்பட்டபொழுது, அதற்குத் தன்னுடைய தெளிவான விளக்கத்தை மாணவர்களுக்கும், மற்றவர்களுக்கும், மக்களுக்கும் எடுத்துச் சொன்ன முதல் நூல் என்று சொன்னால், நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள் எழுதிய வகுப்புரிமை நூல்தான்.

அன்றைக்கு அவர்கள் விளக்கமளித்தார்கள். அதற்கு முன் வகுப்புரிமை என்றாலே என்னவென்று புரியாது இருந்த ஒரு காலகட்டம்  உண்டு. அன்றைக்கு அவர்கள் வகுப்புரிமையைத் தொடங்கி விளக்கம் எழுதினார்கள். இன்றைக்கும் அது தேவைப்படுகிறது - அன்றைய போராட்டம் இன்றைக்கும் வேறு வடிவத்தில் தொடரவேண்டியபோராட்டமாக இருக்கிறது என்பதற் காகத்தான் - வாழ்க்கையைப் போராட்டமாக ஆக்கிக் கொண்டு - போராட்டமே வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டிருக்கின்ற நம்மைப் போன்றவர்கள் அத்துணை பேரும், இதனை வெறும் வாழ்த்தரங்கமாக மட்டும் அமைத்துவிடாமல், அதேநேரத்தில், பேராசிரியர் அவர்கள் எந்த இனமானத்தை வலியுறுத்திக்கொண்டு, வாழ்நாள் முழுவதும் 96 ஆண்டுகாலத்தை அவர் கள் செலவழித்து வருகிறார்களோ, இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து நமக்கு வழிகாட்ட இருக் கிறார்களோ, அதற்காகத்தான் நண்பர்களே இந்த சமூக நீதியையும் இணைத்து ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிற இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து, நமக் கெல்லாம் வழிகாட்டக்கூடிய அறிவுரையை, மூது ரையை அடுத்து வழங்க இருக்கக்கூடிய நம்மு டைய ஒப்பற்ற அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளை சிறப்பாக அரசியல் ரீதியாக எடுத்து வைக்கக்கூடிய நம்முடைய ஒப்பற்ற தலைவர், இனமானத் தலைவர் கலைஞர் அவர்களுடைய பொறுப்பு - இவற்றையெல்லாம் ஏற்று வழிகாட்டக்கூடிய மூத்தவராக இருக்கக்கூடியவர் நமது இனமானப் பேராசிரியர்.

ஒரு தந்தைக்கு என்ன பெருமை?

96 ஆண்டுகள் - தந்தை பெரியார் அவர்களைவிட அதிகம் வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள் என்று சொன்னால், ஒரு தந்தைக்கு என்ன பெருமை? எல்லா வகையிலும் பிள்ளைகள் தந்தையைத் தாண்டி இருக்கிறார்கள். அதுதான் தந்தை வளர்த்த முறை - தந்தை ஆளாக்கிய முறை என்பதுதான் தந்தைக்குப் பெருமை!

பெரியார் அவர்கள் விடை பெற்று சென்ற நிகழ்ச்சியான - இறுதிப் பேருரையும், பேராசிரியர் பிறந்த நாளும் எதிர்பாராமல் வரலாற்றில் ஒன் றாகிப் போன ஒன்று. இது பல பேருக்குத் தெரியாது.

கடைசியாக தந்தை பெரியார் அவர்கள் இறுதிப் பேருரையை நிகழ்த்திய இடம் சென்னை தியாகராயர் நகர். டிசம்பர் 19 ஆம் தேதிதான் தந்தை பெரியார் அவர்கள் இறுதி உரையை நிகழ்த்தினார்.

திராவிடர் கழகம் பாராட்டுவது என்பது புது மையல்ல. இளைய தலைமுறையினருக்குத் தெரியவேண்டும்; அல்லது மறந்தவர்களுக்கு நினைவூட்டவேண்டும்.

ஈரோட்டு பள்ளிக்கூடம்தான் எங்களுக்கு மிக முக்கியம். ஈரோட்டுக் குருகுலம்தான் எங்களுக் கெல்லாம் சிறப்பு. ஆகவே, அந்த ஈரோட்டில், அந்த மணிவிழாவை திராவிடர் கழகம் மட்டுமே எடுத்து, பேராசிரியர் அவர்களை அங்கே அழைத்து வைத்து நடத்திய பெருமை திராவிடர் கழகத்திற்கு உண்டு. அந்த வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

அதற்குப் பிறகு புத்தக வெளியீட்டு விழாவினை இதே மேடையில் சிறப்பாக நடத்தியிருக்கிறோம். இங்கே நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளில், கலைஞர் அவர்கள், பேராசிரியர் அவர்கள், தளபதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இப்படி தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கின்ற ஒரு இயக்கம், இந்த இயக்கம்.

ஆகவேதான், அப்படிப்பட்ட ஒரு காலகட்டத் தில், இன்றைக்கு சமூகநீதிக்கு ஏற்பட்டிருக்கிற ஒரு ஆபத்தையும் இணைத்து இந்த விழாவினை ஏற்பாடு செய்திருக்கிறோம்.

மிகச் சிறப்பாக இந்த விழாவினை நடத்துகின்ற நேரத்தில், எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய பெருமை என்னவென்றால், இங்கே மூன்று புத்த கங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. அந்த புத்தகங்கள் - பேராசிரியர் அவர்களுடைய உரை யாக, பல நேரங்களில் எழுதப்பட்ட உரை - மூன்று உரைகள். பேராசிரியர் அவர்கள் சில நாள்களுக்கு முன் பெரியார் திடலுக்கு வந்திருந்தபொழுது, அந்தமூன்றுஉரைகளைஅவர்களிடம்காட்டிய பொழுது, அவர் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந் தார். ‘‘என்னிடத்திலேயே இல்லை; நீங்கள் பாது காப்பாக வைத்திருக்கிறீர்கள்’’ என்றார்.

இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாத ஒரு செய்தியை சொல்லுகிறேன். அண்ணா அவர் களுடைய நூல்கள், திராவிடர் நிலை, நாடும் ஏடும், ஆரிய மாயை போன்ற நூல்களையெல்லாம் நாங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால், அந்தத் தத்துவங்களைப் புரிந்துகொண்டால்தான், தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய புத்த கங்களை சமூகநீதிக்கு, மற்றவைகளுக்கு எப்படியெல்லாம் உருவாக்கித் தருகிறோமோ, அதேபோன்று, இதைப் புரிந்துகொண்டால்தான், நமக்கு ஏற்படுகின்ற, நம்முடைய இனத்திற்கு ஏற்படுகின்ற அறைகூவல்களுக்கெல்லாம் உரிய முறையில் பதில் சொல்ல முடியும்.

‘‘உள்ளொன்று வைத்து

புறமொன்று பேசத் தெரியாதவர்’’

இனமான பேராசிரியர் அவர்களுடைய பிறந்த நாள் விழாவினை நாம் கொண்டாடுகிறோம் என்று சொன்னால், வெறும் விழாவிற்காக அல்ல - பாராட்டு என்பது, அவருக்கு இயல்பாக பிடிக்காத ஒன்று. அவரைப் புரிந்தவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். மற்ற தலைவர்களுக்கும், அவருக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடு என்னவென்று சொன்னால், ‘‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்’’ நம்முடைய பேராசிரியர்.

யார் விரும்புகிறார்கள்? யார் விரும்பமாட்டார் கள்? யார் வெறுக்கிறார்கள்? யார் ஏற்கிறார்கள்? யார் ஏற்கமாட்டார்கள்? அதைப்பற்றி அவருக்குக் கவலையில்லை. மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வார். அவருடைய தனித்தன்மையே அது தான்.

‘கண்ணிவெடியை' வைத்து

அவரைப் பிடித்திருக்கிறோம்

நீண்ட நேரம் அவரைப் பாராட்டிக் கொண்டி ருந்தால், ‘‘போதும்‘’ என்று சொல்வார். இன்னும் கொஞ்ச நேரம் பாராட்டமாட்டார்களா? என்று எதிர்பார்க்கமாட்டார்; அந்தப் பழக்கமே அவருக் குக் கிடையாது. அதனால்தான் நாங்கள், பிறந்த நாள் விழாவாக நடத்தினால் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்பதற்காகத்தான், புத்தக வெளியீட்டு விழாவாக வைத்து- இன்னும் சொல்லப்போனால், ‘கண்ணி வெடியை' வைத்து அவரைப் பிடித்திருக்கிறோம். அதுதான் மிக முக்கியமானது. ஆக, அந்த வாய்ப்பு களைப் பொறுத்தவரையில், இன்னும் தேவை.

எங்களுக்கெல்லாம் என்ன பெருமை? குறிப்பாக, எனக்கு ஒரு பெரிய வாய்ப்பு என்று நான் இதனை கருதுகிறேன்.

நான் 11 வயது சிறுவனாக

இருந்தபொழுது...

நான் 11 வயது சிறுவனாக இருந்தபொழுது, பேராசிரியர் அவர்களை வரவேற்கின்ற தொண் டர்களில் ஒருவன். அவர் அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் மாணவர். நாங்கள் பள்ளி மாணவர்கள். எங்களுடைய ஆசிரியர் ஆ.திராவிட மணி. பேராசிரியர் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். பழைய சுப்பிரமணியாக இருந்தவர் திராவிடமணி ஆனார். அய்யா அவர்கள் அவரை அழைத்து, திராவிடர் கழகத்திற்குப் பொதுச்செயலாளராக ஆக்கினார். அப்படிப்பட்ட அவர்கள், எங்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, அவர் பணிக்குச் சென்று விடுவார்.

நாவலர் வருகிறார், பேராசிரியர் வருகிறார் -அவர் களை வரவேற்று, பொதுக்கூட்டம் முடிந்ததும், அவர்களை வழியனுப்பி வைக்கவேண்டும் என்பார்.

மாணவப் பட்டாளங்களாக நாங்கள் இருந்து, அவர்களை வரவேற்போம். எங்களோடு நன் றாகப் பழகுவார்கள் அவர்கள். மாலையில் பொதுக்கூட்டம், வழக்கம்போல் எதிர்ப்புகள் இருக்கும்; கற்கள் வந்து விழும். இதனால், அவர்கள் உற்சாகமடைந்து, மேலும் வேகமாகப் பேசுவார்கள்.

இன்னொரு பெரிய சிறப்பு என்னவென்றால், பேராசிரியர் அவர்களிடம் எந்தத் தடுமாற்ற மும் இல்லை என்பதை, நம்முடைய எழுச்சித் தமிழர் அவர்கள், சோதனை ஏற்பட்டபொழுதெல்லாம்கூட தலைமைக்குக் கட்டுப்பட்டு, கலைஞர் அவர்களி டத்தில் இருந்தார்கள் என்று சொன்னார்களே, அதற்கு என்ன காரணம்? பதவிக்காக இந்த இயக்கம் வந்ததல்ல. இதனை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அய்ந்துநிமிடம்நேரம்கிடைத்தாலும்,இளை ஞர்களுக்கு கொள்கைகளை சொல்லிக் கொண் டிருக்கிறார் பேராசிரியர் அவர்கள்.

லட்சியம் மிக முக்கியம்; லட்சிய வரலாறு மிக முக்கியம். மாண்புமிகுக்களால் வரலாறு மாற்றப்படுவது இல்லை; மானமிகுக்களால்தான் வரலாறு மாற்றப்படுகிறது.

மாண்புமிகு வரும் - போகும்; மாண்புமிகுகள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களுக்கு எவ்வ ளவு மரியாதை இப்பொழுது இருக்கிறது என்று உலகத்தார் எல்லோருக்கும் தெரியும்; தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்குக் குறிப்பாகத் தெரியும்.

ஆனால், மானமிகு என்று வந்துவிட்டால், அந்த இனமானத்திற்கு என்ன சிறப்பு என்று சொன்னால், மாண்புமிகுக்கு வயது உண்டு; அளவு உண்டு; கால எல்லை உண்டு; அது எப்பொழுது பறிபோகும் என்று சொல்ல முடியாத ஒரு நிலையும் உண்டு.  மானமிகுவை யாராலும் பறிக்க முடியாது - மரணத்தைத் தவிர. அதுதான் மிக முக்கியம்.

சில வார்த்தைகள் சொன்னால் போதும்

அந்த உணர்வுகளை வைத்துக்கொண்டுதான், அவர்கள்இவ்வளவுசிறப்பானநிலையைஅடைந் திருக்கிறார். இன்னமும் நமக்கு வழி காட்டக்கூடிய அளவில், பல்லாண்டு காலம் மிகச் சிறப்பாக வாழ வேண்டும்.  அவர்கள் எவ்வளவு நேரம் பேசுவார்கள் என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. அவர் கள் சில வார்த்தைகள் சொன்னால் போதும்.

கலைஞர் அவர்கள் இன்றைக்குப் பேசாவிட் டாலும், அவர் எப்படி நமக்கு மிகப்பெரிய தோன்றாத் துணையாக வெளிச்சமாக இருந்து கொண்டிருக்கிறார்களோ, அதுபோல, நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதே எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகம்; உத்வேகம்; ஊக்கம். ஆகவே, நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழவேண்டும் நல்ல அளவிற்கு என்கிற உணர்வை - எங்களுடைய இளைய தலைமுறையினுடைய உணர்வை நாங் கள் வைத்துக் கொள்கிறோம்.

பல்லாண்டு காலம்

வாழவேண்டும்

இதில் இன்னொரு சுயநலமும் உண்டு. அது என்னவென்றால், நம்மைவிட மூத்தவருக்கு விழா கொண்டாடினால்தான், நாம் வயதானவர்கள் என்பது தெரியாது இருக்கும் என்பதில் ஒரு பெரிய மகிழ்ச்சி உண்டு. ஆகவேதான், அவர்களை நாங்கள் வழிகாட்டியாக, அவர்கள் பல்லாண்டு காலம் வாழவேண்டும் என்று சொல்வதின்மூலம், நாங்கள் லாபம் அடையக்கூடியவர்களாக, உற் சாகம் பெறக்கூடியவர்களாக இருக்கிறோம்.

பேராசிரியர் அவர்களை அதிக நேரம் காக்க வைக்க விரும்பவில்லை. நாங்கள் அவரிடம் சொன்னோம், ‘‘நீங்கள் நீண்ட நேரம் அமர்ந் திருக்கவேண்டாம்; முதலில் நீங்கள் பேசிவிட்டுச் செல்லலாமே’’ என்றோம்.

இல்லை, இல்லை நான் கடைசிவரையில் இருப்பேன் என்றார்.

எப்பொழுதும் கடைசிவரையில் இருக்கிறவர் நம்முடைய பேராசிரியர் அவர்கள்.

-இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner