எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எங்கள் செல்வங்களே - இந்தக் கல்லூரியில் படித்து பல்வேறு பெரிய பதவிகளில் இருப்பது அறிந்து எல்லையில்லா மகிழ்ச்சி

பெரியார் காண விரும்பிய புரட்சிப் பெண்களாக இருக்கிறீர்கள்! மற்றவர்களுக்கும் உதவும் உள்ளம் உங்களுக்குப் பெருகட்டும்!

வல்லம் பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரி பழைய மாணவிகள் சந்திப்பில் தமிழர் தலைவர் நெகிழ்ச்சி உரை

வல்லம், டிச.23 இந்தக் கல்லூரியின் பழைய மாணவிகளாகிய நீங்கள் பல்வேறு துறைகளில் பெரிய நிலையில் இருப்பது கண்டு, தந்தை போன்ற உணர்வோடு மகிழ்கிறேன். உங்களின் நன்றி உணர்வைப் பாராட்டுகிறேன் - நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் உதவுங்கள் என்று வாழ்த்திப் பேசினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

1988-1992 ஆம் ஆண்டு பயின்ற பொறியியல் மாணவர்களின் சந்திப்பு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் 22.12.2017 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் வாழ்த்துரையாற்றினார்.

அவர் ஆற்றிய வாழ்த்துரை வருமாறு:

இன்றைக்கு எல்லோரும் மகிழ்ச்சியாக கூடி யிருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் பேசிய போது, எனக்குப் பேசவேண்டும் என்கிற எண் ணமே வரவில்லை. நீங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என்று நினைத் தேன்.

ஏனென்றால், இங்கே உலகத்திலுள்ள பல பகுதிகளிலிருந்து வந்திருக்கிறீர்கள். அமெரிக்கா, சிங்கப்பூர், யூ.கே., சென்னை போன்ற இடங் களிலிருந்து வந்திருக்கிறீர்கள். உள்நாடு - வெளிநாடு என்று சொல்லக்கூடிய அளவில் இல்லாமல், ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’’ என்பதற்கு அடையாளமாக இங்கே நம்முடைய பிள்ளைகள் வந்திருக்கிறார்கள்.

பொதுவாக பல நேரங்களில் உணர்ச்சிவயப் படாத அளவிற்கு ஒரு பகுத்தறிவுவாதியாக நடந்துகொள்ளவேண்டும் என்று கருதுகிற எங்களைப் போன்றவர்களுக்கு, இன்றைய நிகழ்ச்சி மிகுந்த உணர்ச்சிவயப்படக்கூடிய நிகழ்ச்சியாக இருக்கிறது.

நம்முடைய பிள்ளைகள் எல்லாம் எவ்வளவு பெருமையாக இருக்கிறார்கள்; எவ்வளவு ஆளுமைத் திறத்தோடு இருக்கிறார்கள்; எவ்வளவு ஆற்றலோடு இருக்கிறார்கள் எல்லாவற்றையும்விட, எவ்வளவு நன்றியோடு இருக்கிறார்கள் என்று நினைக் கின்ற நேரத்தில், அதை வர்ணிப்பதற்கு, அதைப்பற்றி பேசுவதற்கு வார்த்தைகளே கிடைக்காமல் நான் திண்டாடிக் கொண்டிருக்கிறேன்.

இந்த நிறுவனத்தைத் தொடங்கும்பொழுது, இரண்டு, மூன்று பிரச்சினைகள் வந்தன.

பெண்களுக்காக தொடங்குகிறீர்களே, அதை உங் களால் நடத்த முடியுமா? என்று பலரும் கேட்டார்கள்; நல்லெண்ணத்தோடுதான் கேட்டார்கள். அத்தனைப் பெண்கள் பொறியாளர்களாக வருகிறார்களா? இன்னுங் கேட்டால், பெண்கள் எல்லாம் மருத்துவத் துறைக்குச் செல்வார்கள் அல்லது வேறு துறைகளுக்குச் செல்வார்கள். அவர்கள் பொறியியல் கல்லூரிக்குப் படிக்க வரமாட் டார்கள்; ஒரு மூன்று பேர்தான் பெண்கள் பொறியியல் கல்லூரியில் படிப்பார்கள் என்றனர்.

என்னை சங்கடப்படுத்தக்கூடிய ஒரு நிகழ்ச்சி என்னவென்றால், கேக் வெட்டியதுதான். நான் கேக் எல்லாம் வெட்டுவது இல்லை. பிறந்த நாளில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கமாட்டேன். மூன்று முறைதான் என்னுடைய பிறந்த நாளில் நான் இருக்கவேண்டிய கட்டாயத்திற்கு, வேறு வழியில்லாமல், அவர்களுடைய சொல்லைத் தட்ட முடியாமல் நடந்துகொண்டேன்.

‘‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்’’

ஒன்று 75 ஆம் ஆண்டு பிறந்த நாளுக்குமுன் ஒரு பிரச்சினை   - ‘பெரியார்’ திரைப்படம் 100 ஆம் நாள் வெற்றி விழாவில் அன்றைய முதல்வராக இருக்கக்கூடிய நம்முடைய பெருமதிப்பிற்குரிய கலைஞர் அவர்கள் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த விழாவில், நம்முடைய தோழர் கள் யாரோ எழுதிக் கொடுத்துவிட்டார்கள். ‘‘அடுத்து ஆசிரியர் அவர்களுக்கு 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் வருகிறது. அன்றைக்கு யார் கண்ணிலும் படமாட்டார். குறைந்தபட்சம் நீங்கள் சொன்னீர்கள் என்றால், உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து தட்டாமல் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பார்’’ என்று.

உடனே கலைஞர் அவர்கள், ‘‘நானே அவருடைய 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை வள்ளுவர் கோட்டத்தில் நடத்துவேன்; அவர் அந்த பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ளவேண்டும்‘’ என்றார்.

75 ஆம் ஆண்டு பிறந்த நாள் என்றவுடன், அதனை என்னால் தட்ட முடியவில்லை. ‘‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்’’ என்று சொல்வதற்கேற்ப, அன்றைய விழாவில் நான் கலந்துகொண்டேன்.

அடுத்ததாக, 80 ஆம் ஆண்டு பிறந்த நாளில், 50 ஆயிரம் சந்தாக்களை ‘விடுதலை’க்காகக் கொடுக்கிறோம் என்று சொல்லி, நம்முடைய பல்கலைக் கழக வளாகத்தில் அந்த விழாவினை ஏற்பாடு செய்தார்கள்.

‘விடுதலை’க்கான சந்தா

முக்கியம் என்பதால்...

எனக்கென்னவென்றால், என்னுடைய திட்டத்தைப் பற்றி கவலைப்படாமல், 50 ஆயிரம் விடுதலை சந்தா வருகிறதென்றால், அதனை இழப்பதற்கு நான் தயாராக இல்லை. பெரியார் அவர்கள் விடுதலையைத் தொடங்கி, ஒரு பெரிய சமூகப் புரட்சியை உருவாக்கினார். ஆகவே, அந்த ‘விடுதலை’க்கான சந்தா முக்கியம் என்று நான் 80 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டேன்.

அடுத்ததாக, 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா. அதேபோன்று விடுதலை சந்தாக்கள் கொடுப்பதால், நான் அந்த விழாவிலும் கலந்துகொண்டேன்.

உற்ற மகள்கள்மீது இருக்கின்ற பாசமும், அன்பும் எல்லையற்றவை!

ஒருவகையில் பார்த்தீர்களேயானால் மகிழ்ச்சிதான். இன்னொரு பக்கத்தில் பார்த்தீர்களேயானால், வயதாகி விட்டதே என்று மற்றவர்கள் ஞாபகப்படுத்துவது சற்றுக் கவலையை அளிக்கக் கூடியதுதான்.

நாங்கள் பெறாத பெற்ற மகள்களை இங்கு பார்க்கி றேன். பெற்ற மகள்களைவிட, எனக்கு உற்ற மகள்கள்மீது இருக்கின்ற பாசமும், அன்பும் எல்லையற்றவை.

என்னுடைய பிள்ளைகள்கூட என்ன சொல்வார்கள் என்றால், ‘‘நீங்கள் எங்களோடு எங்கே நேரத்தை செலவுபடுத்துகிறீர்கள்; எங்களோடு ஒரு நாளாவது இருக்கக்கூடாதா?’’ என்று கேட்பார்கள்.

என்னுடைய துணைவியாரும் என்னிடம் சொல்வார், ‘‘இன்றைக்கு ஒரு நாளாவது எங்களோடு இருங்கள்’’ என்பார்.

ஒரு நாள் இருப்பதுகூட எனக்குப் பெரிய தண்டனை போன்றுதான் தோன்றும். ஏனென்றால், நான் கலகலப்பாக பேசிக்கொண்டிருக்கமாட்டேன். புதிய புத்தகம் ஏதாவது இருந்தால், அதனைப் படித்துக்கொண்டிருப்பேன்.

ஆனால், இன்றைக்கு இங்கே பார்த்தீர்களேயானால், இங்கே பிள்ளைகள் சொன்ன கருத்துகள் என் உள்ளத் தைத் தொட்டன. எனக்குச் சாதாரணமாகவே இந்த வளா கத்திற்கு, நான் வரும்பொழுது, சில நேரங்களில் பிரிசின்சி பல் ராமச்சந்திரன் அவர்களோடு, கோபால்சாமி அவர் களோடு, மற்ற பேராசிரியர்களோடு காலையில் நடைபயிற் சிக்கு செல்வேன். அதனுடைய நோக்கம் என்னவென்றால், நடைபயிற்சி சென்றதாகவும் இருக்கும்; நடக்கும்பொழுதே எல்லா திட்டங்களைப்பற்றியும் பேசிக்கொண்டே செல் வேன். என்னென்ன பணிகள் செய்யவேண்டும் என்ப தைப் பேசிக்கொண்டே வருவோம். ஒரு மணிநேரம் நடைபயிற்சி மேற்கொள்ளும்பொழுது மிகவும் பயனுள்ள தாகவும் இருக்கும்.

எத்தனைக் கோடி ரூபாயை சம்பாதித்தாலும் வராத மகிழ்ச்சியாகும்

காலை 7 மணிக்கெல்லாம்  டிபனும் கொடுப்பார்கள். 7 மணிக்கு உங்கள் பிள்ளைகள் எல்லாம் அதற்குள் தயாராகி விடுவார்களா? என்று சிலர் வியப்புடனும் என்னிடம் கேட்டதுண்டு.

காலையில் நம்முடைய பிள்ளைகள் கும்பலாக நடந்து வரும்பொழுது, நான் அவர்களைப் பார்க்கும்பொழுது பெற்ற மகிழ்ச்சி இருக்கிறதே, அந்த மகிழ்ச்சி, எத்தனை கோடி ரூபாயை சம்பாதித்தாலும் வராத மகிழ்ச்சியாகும்.

பிரச்சாரம் மற்றும் பல பணிகளுக்காக உலக முழு வதும் செல்லக்கூடியவன். அப்படி லண்டனுக்குச் சென் றால், அங்கே பிபிசி தமிழோசையில் பணியாற்றும் சங்கர் என்பவர், என்னை சந்தித்து, ‘‘நீங்கள் எங்கள் வீட்டில்தான் தங்கவேண்டும்‘’ என்பார். இப்பொழுது அவர் இல்லை.

அதேபோன்று ஸ்டேட்சிலிருந்து வரும்பொழுது, டெட்ராயிட்லிருந்து இன்னொரு ஊருக்குச் செல்லவேண் டும்; ஒன்றரை மணிநேரம்தான் இருக்கிறது விமானம் ஏறுவதற்கு. அங்கே இருக்கும் நண்பர் ஒருவர், ‘‘எங்கள் வீட்டில் வந்து சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும்‘’ என்றார்.

என்னுடைய துணைவியாரும் என்னுடன் வந்தி ருந்தார். நாங்கள் பேசிக்கொண்டே இருந்தோம். கடி காரத்தை நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். முதலில் ஒரு ஜூஸ் கொடுத்தார்கள்;  மதிய நேரம் அது. சாப்பாடு எடுத்து வைக்கவில்லை.

நான் கூச்சப்படாமல், ‘‘என்னங்க, நேரம் போய்க்கொண் டிருக்கிறதே, சாப்பாடு எடுத்து வைக்கவில்லையே’’ என் றேன்.

அவர் உடனே, ‘‘கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். நம் கல்லூரியில் படித்த மாணவி 30 மைல் தொலைவுக்கு அப்பால் இருக்கிறார். நீங்கள் வருகிறீர்கள் என்று தெரிந்த வுடன், அவருடைய வீட்டிற்குச் சாப்பிட அழைத்து வரவேண்டும் என்று சொன்னார். நான் அவரிடம், அவ் வளவு தூரம் வர முடியாது என்றேன். அப்படியென்றால், மீன் குழம்பை நான் செய்து எடுத்து வருகிறேன். நீங்கள் குழம்பு வைக்கவேண்டாம். நான் எடுத்துக்கொண்டு வருகிறேன் என்று சொன்னார். அவர் வந்துகொண்டிருக் கிறார். உங்களை கண்டிப்பாக சரியான நேரத்திற்கு விமானத்தில் ஏற்றிவிடுகிறோம் என்றார். தஞ்சாவூரைச் சேர்ந்த அந்த மாணவி அதேபோன்று அங்கு வந்தார்.

எங்கே சென்றாலும், நம்முடைய கல்லூரி நிறுவனங்களில் படித்த மாணவிகள்

அதேபோன்று ஒரு பெரிய வாய்ப்பு என்னவென்றால், எங்கே சென்றாலும், நம்முடைய கல்லூரி நிறுவனங்களில் படித்த மாணவிகள் என்னை சந்தித்துப் பேசிவிட்டு செல்வார்கள்.

இதைவிட ஒரு மனிதனுக்குக் கிடைக்கக்கூடிய சம் பாதனை வேறு எதுவும் கிடையாது.

சிலர் என்னிடம் கேட்பார்கள், ‘‘நீங்கள் வழக்குரைஞ ராக சென்றிருந்தால் எப்படியோ இருந்திருப்பீர்கள்’’ என்பார்கள்.

வழக்குரைஞராக ஆகியிருந்தால், பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்திருக்கும். பணம் சம் பாதித்தவர்களின் கதியைத்தான் இன்றைக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறோமே!

குழந்தைக் குட்டிகள் என்றால் என்ன?

இன்றைக்கு இந்தப் பிள்ளைகளைப் பார்க்கும்பொழுது எவ்வளவு பெரிய மகிழ்ச்சி ஏற்படுகிறது! உலகம் முழு வதும் நம்முடைய கல்விக் குழுமத்துப் பிள்ளைகள் பரவியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, நம்மூரில் குழந்தைக் குட்டிகள் என்று சொல்வார்கள் அல்லவா! நான் வேடிக்கையாக கேட்பேன், ‘‘அது என்னங்க, குழந்தைகள், குட்டிகள்; குழந்தைகள் என்றால் புரிகிறது; குட்டிகள் என்றால் என்ன?’’ என்று கேட்டேன்.

‘‘குழந்தைகள் என்றால் கட்டுப்பாடோடு இருக்கவேண் டும்; குட்டிகள் என்றால், கட்டுப்பாடு என்பது இருக்காது. அதனால்தான், குழந்தை, குட்டி என்றார்கள்.’’

ஆகவே, குடியரசியைக் கேட்டேன். ‘‘ஏம்மா, குடும்பத் தோடு வந்திருக்கலாமே?’’ என்று.

‘‘ஏங்க, நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள வேண்டும்; மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற் காகத்தானே இங்கே வந்திருக்கிறோம். எங்கள் நண்பர் களோடு, தோழியர்களோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்‘’ என்று சொன்னார்.

எங்களுக்கு அதைவிட பெருமை

வேறு எதுவும் கிடையாது

நான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.

இவ்வளவு நன்றி உணர்ச்சியோடு நீங்கள் இங்கே வந்து சிறப்பாக இந்த நிகழ்ச்சியை செய்ததோடு மட்டு மல்ல, ஒவ்வொருவரும் நல்ல நிலைக்கு உயர்ந்திருக் கிறீர்கள். எங்களுக்கு அதைவிட பெருமை வேறு எதுவும் கிடையாது.

வள்ளுவருடைய குறளில் சொல்வார்,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.

இதில் ஒரு கேள்வி எழுந்தது; அதென்ன மகனை என்று போட்டிருக்கிறார்; மகளை என்று ஏன் போட வில்லை என்று. பிறகு அதற்கு விளக்கம் சொன்னார்கள்; மகன் என்று சொன்னாலும், மகள் என்று பொருள் படுத்திக்கொள்ளவேண்டும் என்று.

அதன் பிறகு இன்னொருவர் விளக்கம் சொன்னார், ‘‘இல்லை. கேட்ட தாய் என்று சொன்னார். ஏனென்றால், அந்தத் தாய்க்குப் படிக்கத் தெரியாது. இன்னொருவர் சொல்வதைத்தான் காதால் கேட்டு, அந்தப் பெருமையைத் தெரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு பெண்கள் உலகம் இருந்தது என்று ஒரு துணைவேந்தர் விளக்கம் சொன் னார்.

பெரியார் கண்ட புரட்சிப் பெண்களாக...

எப்படி இருந்தபொழுதும், நம்முடைய பிள்ளைகள் ஒரு பெரிய வரலாற்றை, பெரியார் கண்ட புரட்சிப் பெண் களாக இருக்கிறீர்கள்.

ஆண்கள் - பெண்கள் என்கிற பேதம் ஒரு அதீதமான தேவையற்ற பேதம் - தந்தை பெரியார் அவர்களின் கருத்தில்.

அதனால்தான் அய்யா அவர்கள், எல்லா வாய்ப்பு களும் அவர்களுக்குக் கொடுக்கவேண்டும். உள்ளே இருக்கின்ற திறமைகளை வெளிக்கொணரவேண்டும். மற்றவர்களுக்கும் உதவும் உள்ளம் வேண்டும்.

இன்றைக்கு இருக்கின்ற அடிக்கட்டுமான வசதிகளை, நீங்கள் எதையும் அனுபவிக்கவில்லை. அன்றைக்கு எவ்வளவு வசதிக் குறைவுகள். அந்த வசதிக் குறைகளைப் பொருட்படுத்தாமல், இன்றைக்கு இவ்வளவு மலர்ந்த முகத்தோடு நிற்கிறீர்களே உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

நீங்கள் எங்களிடம் பேசுவதைவிட, இன்றைக்கு இருக் கும் மாணவர்களிடம் நீங்கள் பேசவேண்டும். நீங்கள் எப்படி இருந்தீர்கள்? அவர்கள் இப்பொழுது எப்படி இருக்கிறார்கள்? என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

நம்முடைய நாட்டில் நன்றி உணர்வு என்பது மிகவும் குறைவு

பொதுவாக நம்முடைய மக்கள் எத்தனைப் பேர் நன்றி சொல்கிறார்கள் என்பதைப்பற்றி பெரியார் அவர்கள் கவலைப்படவில்லை. பெரும்பாலும் நம்முடைய நாட்டில் நன்றி உணர்வு என்பது மிகவும் குறைவு.

பெரியார் சொல்வார், அதனை எதிர்பார்க்காதே; எதிர்பார்த்தால் மனதில் சங்கடம் ஏற்படும். நன்றி என்பது பயனடைந்தவர்கள் காட்டவேண்டிய பண்பே தவிர, எதிர்பார்த்தால், அது சிறுமைக் குணமே ஆகும். இதுதான் பெரியாருடைய தத்துவமாகும்.

இதற்கு ஒரு உதாரணம் சொன்னார்,

தண்ணீர் பந்தல் வைக்கிறார்கள். தாகம் எடுக்கிற பல பேர் தண்ணீர் பந்தலில் உள்ள தண்ணீரைக் குடிக்கிறார் கள். அவர்கள் யாராவது, இந்தத் தண்ணீர் பந்தலை வைத்தது, பானையை வைத்தது என்று தேடிக் கண்டு பிடித்து நன்றி சொல்கிறார்களா? கிடையாது. அவருடைய தாகம் தீரவேண்டும். ஆனால், அவர்களின் தாகம் தீர்ப்பதில், தண்ணீர் பந்தல் வைத்தவர்களுக்கு ஒரு திருப்தி!  அதுதான் மிக முக்கியம். ஆனால், அதையும் தாண்டி நன்றியோடு இருக்கிறார்கள் நம்முடைய நாட்டில் என்றால், மிகவும் மகிழ்ச்சியாகும்.

பெரியார் அவர்கள் நகைச்சுவை உணர்வு உள்ளவர். நன்றி சொல்லாவிட்டால் என்ன? டம்ளரை விட்டுச் சென்றிருக்கிறார்களே, அது போதும் என்பார்.

வசதி குறைவுகள் இருந்தாலும், இது ஒரு பெரிய குடும்பம் என்கிற உணர்வோடு நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்கள் எல்லோருக்கும் நன்றி!

வெளிநாட்டிலோ, வெளிமாநிலங்களோ அல்லது வெளியூர்களில் நீங்கள் இருந்தாலும், இங்கே வரும் பொழுது உங்கள் பிள்ளைகளையெல்லாம் அழைத்துக் கொண்டு வரவேண்டும்; அல்லது உங்கள் பேரப் பிள் ளைகளை அழைத்துக்கொண்டு வந்து காட்டவேண்டும்; நாங்கள் இங்கேதான் படித்தோம் என்று சொல்லும் பொழுது, அதிலிருக்கிற பெருமையும், மகிழ்ச்சியும் அவர்களுக்கு வேறு கிடையாது.

எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி!

ஆகவே, நீங்கள் அத்துணைப் பேரும் உங்களுடைய நேரத்தை ஒதுக்கி, இங்கே இரண்டு நாள் தங்கி இருந்த மைக்காக நிர்வாகத்தின் சார்பில் உங்களுடைய ஒரு மூத்த குடும்பத்து உறுப்பினர் என்கிற முறையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

எத்தனைப் பிள்ளைகள்; எவ்வளவு மழலைகள், எவ்வளவு செல்வங்கள் இதைவிட எங்களுக்கு வேறு என்ன மகிழ்ச்சி?

ஒவ்வொருவரும் நான் இங்கே பணியாற்றுகிறேன்; அங்கே பணியாற்றுகிறேன் என்று சொல்லும்பொழுது, அதனைக் கேட்ட பொழுது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.

நேற்றுகூட ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந் தேன். புத்தர் அவர்கள் தலைசிறந்த பகுத்தறிவுவாதி. அவர்கூட, ஆண் - பெண் சமத்துவம்; பெண் கல்வி;  பெண்களுக்கு வாய்ப்பு இவை அத்தனையும் சொன்னவர் புத்தர். அவர் சமூகப்புரட்சியாளர்.

‘‘புத்தம் தம்மா’’ என்ற நூலில்...

அம்பேத்கர் அவர்கள் எழுதிய ‘‘புத்தம் தம்மா’’ என்ற நூலில், ஆண்களைவிட பெண்கள்தான் நாட்டிற்குத் தேவை. பெண் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள்.

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குமுன் அப்பொழுது பொறியியல் கல்லூரியாக இருந்தபொழுது, கனடாவில் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்கள்.

பெண்கள் பொறியியல் கல்லூரியை நீங்கள்  நடத்து கிறீர்களே - எத்தனைப் பெண்கள் அக்கல்லூரியில் படிக்கிறார்கள்?

300 பெண்கள் படிக்கிறார்கள் என்றேன் நான்.

ஓ, இத்தனைப் பேரா? வியப்பாக இருக்கிறதே! இந்தியா போன்ற பின்தங்கிய நாட்டில், கனடா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளுடன் போட்டி போடக்கூடிய அளவிற்கு உங்கள் கல்வி நிறுவனத்தில் படிக்கிறார்களே என்று வியப்போடு சொன்னார்கள்.

எனவேதான், நீங்கள் எல்லோரும் இங்கே சிறப்பாக வந்தமைக்கு நன்றி. அடுத்து ஒரு வேண்டுகோள் - நீங்கள் உங்களுடைய அறிவு, ஆற்றலை எல்லாம் இங்கே பயன்படுத்தவேண்டும் என்று சொன்னீர்கள்.

நிச்சயமாக உங்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள் துணைவேந்தர், பதிவாளர் ஆகியோர்.

உங்கள் உடல்நலத்தைப்பற்றி கவலைப்படுங்கள்

உங்களிடத்தில் ஒரு வேண்டுகோள் என்னவென்று சொன்னால், நீங்கள் எல்லோரும் உங்கள் உடல்நலத் தைப்பற்றி கவலைப்படுங்கள். அதை அலட்சியப்படுத் தாதீர்கள். அதிலும் குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, நாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கக்கூடாது.

நம் நாட்டில் ஒரு வேடிக்கை என்னவென்றால், படிக்காதவர்கள்கூட தங்களுடைய உடல்நலத்தைப்பற்றி கவலைப்படுகிறார்கள். படித்தவர்களோ, ‘‘பிறகு பார்த்துக் கொள்ளலாம்‘’ என்று நினைக்கிறார்கள். அது பல நேரங்களில் சிக்கலை ஏற்படுத்துகிறது.

எனவேதான், நோயற்ற வாழ்வு - குறைவற்ற செல்வம் என்பது மிகவும் எளிமையாக நாம் பார்ப்பது. உங்களு டைய குடும்பத்தவர்களின் உடல்நலத்தையும் நீங்கள் கவனிக்கவேண்டும்.

எங்களுடைய அன்பான நன்றி!

அப்படி உடல்நலத்தைக் கவனித்தால், மனநலம் சரி யாகும். மனத்திற்கும் - உடலுக்கும்தான் மிகவும் தொடர்பு உண்டு. ஆகவே, தன்னம்பிக்கையோடு இருக்கக்கூடிய உங்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை. துணிவோடு இருக்கக்கூடிய அளவிற்கு இந்த நிறுவனம் உங்களை ஆளாக்கியிருக்கிறது; செதுக்கியிருக்கிறது. நீங்கள் நல்ல பயன்பெற்று இருக்கிறீர்கள். உங்களுடைய ஆற்றலை, இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் திருப்பித் தர வந்தமைக்காக மீண்டும் எங்களுடைய அன்பான நன்றி!

எங்கள் செல்வங்களே, எங்கள் பிள்ளைகளே நீங்கள் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியோடு வாழுங்கள் - சிறப்பாக வாழுங்கள்!

முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் எல்லையே இல்லை என்று அளவிற்கு சிறப்பாக வாழுங்கள் என்று சொல்லி, என்னுரையை முடிக்கிறேன்.

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு வேந்தர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் டி.கவிதா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

துணைவேந்தர் பேரா. சா.சுந்தர் மனோகரன் தனது வாழ்த்துரையில், பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் கடந்து வந்த பாதை மற்றும் முன்னேற்றங்களை எடுத்துரைத்தார். குறிப்பாக நடப் பாண்டில் தஞ்சாவூர் இந்திய மாணவர் படையில் இணைந்து ஆராய்ச்சி மேற்கொண்டு இருப்பதை எடுத் துக் கூறினார். அதே போல் இதய துடிப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் செயல்பாடுகளையும் எடுத்துக்கூறினார். கல்வி மற்றும் ஆராய்ச்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனை களையும் பகிர்ந்துகொண்டார்.

பதிவாளர் சொ.ஆ.தனராஜ் தனது வாழ்த்துரையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு தாங்கள் படித்த கல்லூரியில் சந்தித்து தங்களது நன்றிக் கடனை செலுத்திய மாண வர்களை பாராட்டினார். வாழ்க்கையில் குறிப்பிட்டுக் கூறும்படி சாதித்துக்காட்டியுள்ள அனைவரையும் வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் பிறந்த நாளையொட்டி முன்னாள் மாணவர்கள் இணைந்து ஆளுயர ரோஜா மாலையை மகிழ்ச்சியோடு உற்சாகமாக தமிழர் தலைவருக்கு அணிவித்தனர். பின்னர் ஏற்பாடு செய் யப்பட்டிருந்த கேக்கை தமிழர் தலைவர் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். கல்லூரி விழா மலரை தமிழர் தலைவர் வெளியிட முன்னாள் மாணவர்கள் பெற்றுக் கொண்டனர். சிறப்பு விருந்தினர்களுக்கு முன்னாள் மாணவர்கள் பயனாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கினர்.

வணக்கத்திற்குரிய வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள்  தலைமையுரை ஆற்றினார்.

முன்னாள் மாணவி குடியரசி அவர்கள் உரை யாற்றும்போது, “தான் பெரியார் குடும்பத்தை சார்ந்தவர் என்றும், எனக்கு கல்வி பயில முடியாமல் உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது ஆசிரியரின் அறிவுரைப்படி நடந்துகொண்டதால் நான் இன்று நலமாக உள்ளேன். அதற்கு ஆசிரியர் அவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் நான் இன்று சிங்கப்பூரில் கெப்பல் என்ற நிறுவனத்தில் துணைமேலாளராக பணியாற்றி வருகிறேன்” என்றார். பல முன்னாள் மாணவர்கள் தங்களது பதவிகளையும், தாங்கள் எங்கு வேலை பார்க்கிறோம் என்றும், அதற்கு ஆசிரியரே காரணம் என்றும் கூறினார்கள்.

உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் நமது மாணவர்களை சந்திக்க முடிகின்றது என்று குறிப் பிட்டு முன்னாள் மாணவி சகிரா மெரியூனிஷா நன்றி யுரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner