எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கேரளாவில் செல்லுபடியாகும் சட்டம் இங்கு பொருந்தாதா?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை அமலாக்கப்பட 2018 இல் மிகப்பெரிய மக்கள் போராட்டம்!

தருமபுரி செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர் அறிவிப்பு

தருமபுரி,டிச.28ஜாதி- தீண்டாமை ஒழிப்பில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது முக்கிய மானது; கேரளாவில் செயல்படுத்தப்பட்டு விட்டது; அது தமிழ்நாட்டுக்கும் பொருந்தும்; 2018 இல் இதற்கான மக்கள் போராட்டம் வெடித்துக் கிளம்பும்  என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தருமபுரியில் நடைபெற்ற கழகப் பொதுக்கூட்டத்திற்குச் செல்கையில், அதியமான் பேலஸ் ஓட்டலில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

நல்ல பாசறையாகப் பயன்படுகிறது

நான்காவது ஆண்டாக ஒகேனக்கல்லில் பெரியாரியப் பயிற்சி பட்டறை நடைபெற்றது கடந்த மூன்று நாள்களாக. 110 இருபால் மாணவர்கள் அதில் பங்கேற்றனர்.

இளைஞர்களுக்கு திராவிட இயக்க உணர்வையும், பெரியார் தத்துவங்களையும் ஆண்டுதோறும் சொல்லிக் கொடுப்பதற்கு இந்தப் பயிற்சி முகாம்கள் ஒரு நல்ல பாசறையாகப் பயன்படுகின்றன.

ஆகவே, அதையொட்டி இன்றைக்கு மாலை பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது. அதற்காக இங்கே வந்த நேரத்தில், உங்களையெல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் இறுதிப் போராட்டமாகும். அந்தப் போராட்டம் எந்த நோக்கத் தோடு தொடங்கப்பட்டது அய்யா அவர்களால் என்று சொன்னால்,

ஜாதி - தீண்டாமையை ஒழிப்பதற்கு அதுதான் சரியான முறை என்று அய்யா அவர்களால் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டது. காரணம், இன்றைக்குக் கருவறைக்குள்தான் கடைசியாக ஜாதி ஒரு அபயத்தைத் தேடியிருக்கிறது.

95 ஆம் வயதில் போராட்டக் களத்தில் நின்றார் பெரியார்

அங்கிருந்து அதனை வெளியேற்றவேண்டும் என்று சொல்கிறபொழுது, அதற்குவேண்டிய முயற்சியாக தந்தை பெரியார் அவர்களே, தன்னுடைய 95 ஆம் வயதில் போராட்டக் களத்தில் நின்றார்.

அதற்காக நீங்கள் போராடவேண்டிய அவசிய மில்லை. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடை பெறுகின்ற காரணத்தினால், என்று அன்றைக்கு முதல மைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் சொன்னார். அதற்கு வேண்டிய சட்டத்தை நாங்கள் இயற்றுகிறோம் என்று சொல்லி, அவ்வாறே சட்டமும் இயற்றப்பட்டது. இருமுறை உச்சநீதிமன்றத்திற்குச் சென்று, அந்தச் சட்டம் செல்லுபடியாகும் என்று தீர்ப்பு வந்திருக்கிறது.

அதற்குப் பிறகுகூட இரண்டு வழக்குகளில் அப்படிப் பட்ட தீர்ப்புகள் வந்த பிறகும்கூட, திட்டமிட்டே வேண்டுமென்றே பார்ப்பனர்கள், உயர்ஜாதிக்காரர்கள் தங்களுடைய ஆதிக்கத்தை கருவறையில் விட்டுவிடக் கூடாது என்பதற்காக, ஜாதி - தீண்டாமையை மறை முகமாகக் காப்பாற்றுகின்ற வருணாசிரம புத்தியோடு, அவர்கள் மீண்டும் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று தடை வாங்கினார்கள்.

உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார்கள் - ஒருவேளை ஆகம விதிகள் மீறப்பட்டு இருந்தால் என்ன செய்வது என்று.

ஏ.கே.ராஜன் தலைமையில்

ஆணையம்!

ஆகம விதிகளை மீறவேண்டிய அவசியம் இல்லை. ஆகமப்படியே வேண்டுமானாலும், 69 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறோம் என்று சொல்லி, அதற்காக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்து, அந்த ஆணையத்தில் சிவாச்சாரியார்கள், ஜீயர்கள் போன்றவர்களை உறுப் பினர்களாக கலைஞர் ஆட்சியில், அறநிலையப் பாதுகாப்புத் துறையே அதனை செய்தது.

அப்படி பயிற்சி பெற்ற மாணவர்கள் 206 பேர் இருக் கிறார்கள்.

இரண்டாண்டுகள் பயிற்சி அவர்களுக்கு அளிக் கப்பட்டது.  ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் ஆன பிறகும்கூட, அந்த மாணவர்கள் பயிற்சி பெற்று, பட்டயத்தைப் பெற்ற பிறகும்கூட,

வைணவ கோவில்களில் வைணவ ஆகமப்படி பயிற்சி, சிவன் கோவில்களில் சிவாகமப்படி பயிற் சியை அவர்கள் பெற்று போதிய தகுதிகளோடு இருக் கிறார்கள்.

அப்படி இருந்தும், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் தடை இருக்கிறது என்று ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில், அதனை ஒரு சாக்குப் போக்காக சொல்லிக் கொண்டிருந்தார்.

ஓராண்டுக்கு முன்னால் உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துவிட்டது; திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் இயற்றிய சட்டம் செல்லும் என்று தெளிவாகத் தீர்ப்பு கொடுத்துவிட்டது. எனவே,  இனிமேல் எந்தத் தடையும் கிடையாது.

ஆகமப்படி பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள், அனைத்து ஜாதியிலிருந்தும், ஆதிதிராவிடர் உள்பட, பார்ப்பனர்கள் உள்பட அதில் இருக்கிறார்கள்.

ஆகமப் பயிற்சியே பெறாத அர்ச்சகர்கள் பல கோவில்களில் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள் என்று நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைந்த ஆணையம் மிகத் தெளிவாகத் தெரிவித்திருக்கிறது.

‘கிணற்றில் போடப்பட்ட கல்’ போன்று

ஆகவே, அந்த நிலையில், இப்பொழுது முறை யாக ஆகமப்படி இருக்கவேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள், இதுதான் சந்தர்ப்பம் என்று, வைதீகர்களே சொல்லவேண்டும்; நாங்கள் சொல்வதைவிட அவர்கள் தான் சொல்லவேண்டும்.

ஆனால்,  இன்றைக்கு சிலருடைய ஆதிக்கம் இருக்கின்ற காரணத்தினால், ‘கிணற்றில் போடப்பட்ட கல்’ போன்று அப்படியே கிடக்கிறது.

இதனை நடைமுறைக்குக் கொண்டுவர வேண் டும். பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளோடு நான் புதைத்தேன் என்று கலைஞர் அவர்கள் சொல்லி வருத்தப்பட்டார்களே, அந்த முள்ளை அகற்றவேண்டும் என்பதற்கான ஒரு போராட்டத்தைத்தான் இறுதி வடிவம் கொடுத்து, அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு, வருகிற 2018 ஆம் ஆண்டு முதல் கட்டமாக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி, இதனை செய்யும்படி அரசாங்கத்தை வற்புறுத்தவேண்டிய திட்டத்தை திராவிடர் கழகம் மேற்கொண்டு இருக்கிறது.

திராவிடர் கழகத்தினுடைய மிக முக்கியமான - அவசரமான பணியாகும்

அதைத்தான் இன்று மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விளக்க இருக்கிறோம். இதுதான் திராவிடர் கழகத்தினுடைய, ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பினுடைய மிக முக்கியமான - அவசரமான பணியாகும்.

நமக்குப் பின்னால் கேரளாவில் இந்த உணர்வை பெற்றவர்கள், அங்கே ஒரு முற்போக்கு அரசு பினராயி விஜயன் தலைமையில் இருக்கிறது. அவர்கள், அங்கே உள்ள முக்கியமான கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக்கி உள்ளனர். வைதீகர்களின் எதிர்ப்புகூட கிடையாது அங்கே.

எந்த அளவிற்கு அவர்கள் முற்போக்காக ஆகியி ருக்கிறார்கள் என்றால், அடுத்தகட்டமாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் 12 வயதிற்குமேல், 50 வயதிற்குள் செல்லக்கூடாது என்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு இருக்கிறார்கள்.

ஏற்கெனவே கேரளாவில்ஆட்சியில் இருந்த அரசு, பழைய சனாதன முறையை நாங்கள் வரவேற்கிறோம் என்று ஒரு பிரமாணப் பத்திரத்தை அளித்தார்கள்.

ஆனால், பினராயி விஜயன் அவர்களின் தலை மையில் இருக்கின்ற அரசு, அதனை மாற்றி, இல்லை, இல்லை, பெண்களாக இருந்தாலும், அரசியல் சட்ட உரிமைப்படி பாலின வேற்றுமை காட்டக்கூடாது என்று கூறியுள்ளனர். ஆண்களுக்கு என்னென்ன உரிமை கள் இருக்கிறதோ, அந்த உரிமைகள் பெண்களுக்கும் இருக்கவேண்டும் என்று சொல்லி, வழக்குப் போட் டார்கள். அந்த வழக்கு முடியும் தருவாயில், மிகத் தந்திரமாக, நம்முடைய நாட்டில் நீதிமுறையில் ஒரு விசித்திரம் என்னவென்றால், அந்த வழக்கினை அரசியல் சட்ட அமர்வுக்கு ப் பரிந்துரைக்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள். அதிலும் மிகப்பெரிய அளவிற்கு வெற்றி கிட்டும்.

அந்த அளவிற்கு ஒரு அமைதிப் புரட்சி கேரளா வில் நடக்கிறது.

அதேபோன்று மற்ற இடங்களிலும் செய்யவேண் டிய முயற்சிகள் நடைபெறுகின்றன. திருப்பதி தேவஸ்தானத்தில்கூட அதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு ஆந்திர அரசு வந்துவிட்டது.

தமிழ்நாடு அரசு, இதற்கெல்லாம் முந்தி இருக்க வேண்டும். ஆனால், இன்றைக்குத் தமிழ்நாடு எல்லாத் துறைகளிலும் பின்தங்கி இருப்பதுபோன்று, இதிலும் அவர்கள் ஏனோ அர்த்தமற்ற தயக்கத் தைக்காட்டுகிறார்கள்.அவர்களுக்குள்ளேசண்டை ஓய்வதற்கே நேரமில்லை. அதனால், இதுபோன்ற மக்கள் பிரச்சினையைப் பார்ப்பதற்கு ஆட்சியாளர் கள் தயங்குகிறார்கள். அவர்களை செய்ய வைக்க வேண்டும் என்பதுதான் இப்பொழுது மிக முக்கியமான எங்களுடைய கோரிக்கை போராட்டமாக இருக்கும்.

செய்தியாளர்: கேரளத்தில் வைதீகர்களே முற் போக்குவாதிகளாகி விட்டார்கள்; தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திராவிட கட்சியின் வழித்தோன்ற லாக இருக்கும் அ.தி.மு.க. இதில் முற்போக்காக இல்லை என்று கருதுகிறீர்களா?

தமிழர் தலைவர்: அவர்கள் உண்மையான திராவிட கட்சியாக இருந்தால் செய்திருப்பார்கள். அவர்களுடைய லகான் இப்பொழுது டில்லியில் இருக்கிறது. இவர்கள் சிரிப்பதற்குக்கூட அவர்களிடம் அனுமதி கேட்டுத்தான் சிரிக்கிறார்கள்.

இரண்டு பேருக்கும் பயனில்லாத ஒன்று

செய்தியாளர்: ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளது பற்றி...?

தமிழர் தலைவர்: ஆடிட்டர்கள் ஆண்மைப் பரிசோதனையில் இறங்கக்கூடாது. மருத்துவர்கள்தான் இறங்கவேண்டும். இரண்டு பேரின் கைகளைப் பிடித்து ஒன்றாக இணைத்தவர் அவர்தான். திருமணத் திற்கு முன் அந்தப் பரிசோதனை செய்தால், பயனுள்ள தாக இருக்கும்; திருமணத்திற்குப் பிறகு அந்தப் பரி சோதனை செய்தால், இரண்டு பேருக்கும் பயனில்லாத ஒன்றாகும்.

செய்தியாளர்: எதையோ எதிர்பார்த்து கிடைக்க வில்லை என்பதால், இப்படி சொல்லியிருக்கிறாரோ ஆடிட்டர் குருமூர்த்தி?

தமிழர் தலைவர்: ஆமாம்! காரணம் என்னவென் றால், எவ்வளவுதான் வெட்கம், மானத்தை விட்டாலும், வீட்டுக்குள்ளே இருக்கும் இந்தப் பரிசோதனைக் கட்டம் - முடிவுகள் எல்லாம். ஒரு கட்டம் தாண்டியவுடன், வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டது.

ஆனால், அளவுக்கு மீறி தங்களுக்கு சம்பந்தம் இல்லாதவர்களின் கால்களில் விழுந்தால், அதனுடைய விளைவு இப்படித்தான் இருக்கும் என்பதை, கால்களில் விழுந்தவர்கள் புரிந்துகொண்டு எழுந்து நின்றால் நல்லது.

பெரியார் அவர்கள் மிக அற்புதமான ஒரு கொடை யைக் கொடுத்துள்ளார். மனிதர்களுக்கு முதுகெலும்பு இருப்பதை ஞாபகப்படுத்தி, எல்லோருக்கும் முது கெலும்பை கொடுத்தார். முதுகெலும்பு இருக்கிறது என்கிற நினைப்பு பல பேருக்குக் கிடையாது என்பதுதான் வருத்தப்படக்கூடிய நிலை.

மோடியப்பா சரணம்!

செய்தியாளர்: அ.தி.மு.க. அரசினுடைய சரணாகதி போக்கினுடைய விளைவுதான் இதுவா?

தமிழர் தலைவர்: ஆமாம்! டில்லியே சரணம்  மோடியப்பா! என்று சொல்வதினால்தான்!

செய்தியாளர்: முதுகெலும்பு இல்லாத தி.மு.க. தலைமை இருக்கிறது என்று மு.க.அழகிரி சொல்லி யிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: பொருட்படுத்த வேண்டியவர் களுக்குத்தான் பதில் சொல்லி பழக்கப்பட்டவன் நான்!

செய்தியாளர்: பல ஆயிரம் கோடி ரூபாயை வாரி இறைத்து  டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்று இருக்கிறார் என்று சொல்கிறார்களே?

தமிழர் தலைவர்: உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. நம்முடைய வாக்காளர்களின் நாண யத்தைப் பாராட்டவேண்டும். ஏனென்றால், வாங்கிய பணத்திற்கு மாறுபடாமல் வாக்களித்திருக்கிறார்கள். ஒழுக்கக்கேட்டிலும், ஒரு தலைசிறந்த ஒழுக்கம்.

என்றைக்கும் பெரியார் பூமியாகவே தொடரும்

செய்தியாளர்: தமிழகத்தில் காலூன்றுவோம் என்று சொன்ன பா.ஜ.க. 1500 வாக்குகளைகூட ஒரு தொகுதி யில் பெற முடியவில்லையே, இது எதைக் காட்டுகிறது?

தமிழர் தலைவர்: பெரியார் பூமி, என்றைக்கும் பெரியார் பூமியாகவே தொடரும் என்பதையே காட்டுகிறது.

செய்தியாளர்: இன்றைக்குத் தமிழ்நாட்டில் பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்கிறார்களே?

தமிழர் தலைவர்: நடத்தட்டும். ஆனால், ஏற்கெ னவே நடந்த சோதனைகளின் முடிவு என்ன என்று தெரிந்தால் பரவாயில்லை. ஏற்கெனவே 89 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார் என்று ஒரு தேர்தலைத் தள்ளி வைத்து, பிறகு அதைவிட அதிகமாகப் பணம் கொடுத்து தேர்தல் நடைபெற்றது என்றால், இந்த சோதனைகள் எல்லாம் அன்றாடம் சொல்லக்கூடிய வானிலை அறிக்கை போன்றுதான் இருக்கிறது.

செய்தியாளர்:  நடிகர் ரஜினிகாந்த் 31 ஆம் தேதி கட்சி தொடங்குவதுபற்றி அறிவிக்க இருக்கிறாரே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: ஏற்கெனவே இதற்குப் பதில் சொல்லியிருக்கிறேன். பொதுவாகவே, அரசியல் தலைவர்களே நல்ல நடிகர்கள் பெரும்பாலும். அதனால் நடிகர்களுக்கெல்லாம் அரசியல் ஆசை இப்பொழுது வந்திருக்கிறது என்பது ஒரு விசித்திரமான போக்கு. நல்ல நடிகராக, நல்ல மனிதராக இருப்பவர், நல்ல அரசியல்வாதியாக திகழ்வாரா என்பதும், அதைவிட முக்கியம். 31 ஆம் தேதி முடிவை சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். எந்த 31 ஆம் தேதி என்று தெரியாது.

செய்தியாளர்: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தேசிய கட்சிகள், திராவிட கட்சிகள் தோற்று, ஒரு சுயேச்சை வெற்றி பெற்ற சூழ்நிலையில், தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் பின்னால், மக்கள் போகக்கூடிய அரசியல் சூழ்நிலை இல்லை. அதனால், அரசியலில் இறங்கலாம் என்று நடிகர்கள் எல்லாம் முன்வருகிறார்களா?

தமிழர் தலைவர்: இல்லை இல்லை. அதற்கு முன்பே அவர்கள் இறங்கிவிட்டார்கள். இப்பொழுது பணச் சுனாமி அடித்திருக்கிறது என்றவுடன், நிறைய பணம் வைத்துக்கொண்டு, எப்படி செலவழிப்பது என்று தெரியாமல் இருப்பவர்கள் வேண்டுமென்றால், அந்தத் துணிச்சலைப் பெற்று இருப்பார்கள்.

திராவிடர் கழகம் தொலைக்காட்சி தொடங்குமா?

செய்தியாளர்: திராவிடர் கழகத்திற்காக ஒரு தனித் தொலைக்காட்சி தொடங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

தமிழர் தலைவர்: ஏற்கெனவே தொலைக்காட்சி களை, பல நண்பர்கள் உதாரணமாக ‘மதிமுகம்‘ என்ற பெயரால், நம்முடைய வைகோ அவர்கள், ‘வெளிச்சம்‘ என்ற பெயரில், திருமா அவர்கள் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், போதிய வெளிச்சம் கொடுப்பதற்கு வாய்ப்பில்லாமல், இழுத்துப் பிடித்துக் கொண்டு நிற்கிறார்கள். அதேபோன்று பல சிக்கல்கள் உண்டு. சிக்கலற்றத் தன்மை எப்பொழுது வருகிறதோ -  அப்பொழுது பார்க்கலாம். ‘‘கொக்கக் கூம்பும் பருவத்து’’ என்ற நிலைக்குத் திராவிடர் கழகம் காத்திருக்கிறது.

- இவ்வாறு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner