எழுத்துரு அளவு Larger Font Smaller Font

2017 இல் நமது கழகப் பணிகள் தனி முத்திரை பொறித்தன!

2018 ஆம் ஆண்டிலும் நாம் எதிர்நோக்கும் பணிகள் ஏராளம் உண்டு!

அரும்பணியாற்றிய தோழர்களுக்குப் பாராட்டு

2018 லும் வேகத்துடனும், விவேகத்துடனும் பணி தொடர்வோம், வாரீர்!

புத்தாண்டில் புது வரலாறு படைக்க அழைக்கும்

கழகத் தலைவரின் அறிக்கை

2017 ஆம் ஆண்டில் நமது கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் ஆற்றிய அரும்பணிகள் பாராட்டத்தக்கவை - 2018 லும் வேகத்துடனும், விவேகத்துடனும் பணி தொடரப்படும். இருபால் கழகத் தோழர்களும் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்ற வேண்டுகோளோடு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நகரும் 2017 ஆம் ஆண்டில், கழகத்தின் செயல்பாடுகள், கழகப் பொறுப்பாளர்கள், ஆதரவாளர்கள், பகுத்தறிவாளர்கள், நமது அழைப்பை ஏற்று ஆண்டுமுழுவதும் அடர்த்தியாக நடைபெற்ற அத்துணை அறப்போராட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் - கலந்துரையாடல்கள் அனைத்திற்கும் சிறப்பாக ஒத்துழைப்பைத் தந்த தோழமைக் கட்சித் தலைவர்கள், பொறுப்பாளர்கள் ஆகியவர்கள், அறிவித்தபோதெல்லாம் ஏற்று செயல்பட்ட கழகக் குடும்பத்தினரான செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆகிய அத்துணைப் பேர்களுக்கும் இதயங்கனிந்த பாராட்டையும், நன்றியையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

நம்முடையது கட்சியல்ல - இயக்கம்!

நம்முடையது இயக்கம்; கட்சியல்ல; இயக்கம் என்றால், இயங்கிக் கொண்டே இருக்கவேண்டிய ஒன்றாகும்.

எதிர்நீச்சல் பணியில் என்றும் சளைக்காது ஈடுபட்டு இன்பம் காணும் லட்சியப் பயணம் நடத்தும் இயக்கம் நம் இயக்கம். எனவேதான், ‘ஓய்வு’ என்ற ஒன்றை அறியாது பணிபுரியும் ‘குடிசெய்வார்க்கில்லை பருவம்‘ என்றே உழைத்திடும் ஒப்பற்ற உன்னதத் தலைவர் நம் அறிவு ஆசானின் பணி முடிக்க எப்பழியும் ஏற்று, ஏற்றமுடன் வீறுகொண்ட விவேக - வேக நடை இயக்கம் இது!

ரிலேரேஸ் (Relay Race) என்று ஒருவர் ‘மற்றவர்’ கொடுக்கும் சுடரை வாங்கி, தாங்கி ஓடிக்கொண்டே இலக்கை எட்டும் விளையாட்டு வீரர்களைப் போன்ற போராட்ட வீரர்கள் நாம்!

2017 இல் நமது பணி - தனி முத்திரை!

எனவேதான், அவர்களது தயங்காத ஒத்துழைப்பில் தளராத தன்னம்பிக்கை கொண்ட தலைமை, தணியாத பாசத்துடன் அவர்களிடம் தொடர்பணிகளை அடுக்கடுக்காக இவ்வாண்டு முதல் தந்த நிலையில், அதே உற்சாகம், அதே உணர்வுடன், ‘இயலாது - முடியாது - அல்லது எப்படி?’ என்ற கேள்விகளையே எழுப்பாது, ‘‘அதற்கென்ன செய்து முடித்துவிடலாம்‘’ என்றே அகமலர்ச்சியுடனும், முகமலர்ச்சியுடனும் செயல்பட்டு, நம் இன எதிரிகளும், கொள்கை எதிரிகளும், ஆட்சியாளர்களும் அஞ்சும் அளவுக்கு உயிரோட்டமான நம் பணி இவ்வாண்டு தனி முத்திரை பதித்துள்ளது.

கழகப் பொறுப்பாளர்கள், தோழர்களின் அரும்பணிகள்!

நமது கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, கழகப் பொதுச் செயலாளர்கள் டாக்டர் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ், தஞ்சை ஜெயக்குமார், அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன், வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், அவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, மகளிரணிச் செயலாளர்கள் தோழர்கள் கலைச் செல்வி, கோ.செந்தமிழ்ச்செல்வி, இளைஞரணி செயலாளர் இளந்திரையன், மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், செயலாளர் பொ.நடராசன், தொழிலாளரணி, கலைத்துறைப் பொறுப்பாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், பெரியார் மருத்துவர் அணி, டாக்டர் கவுதமன், அதேபோல பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் போன்றோரின் ஒத்துழைப்பும் ஒன்றுபட்ட உழைப்பும் பாராட்டி மகிழத்தக்கதே!

மண்டல, மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் ஆகி யோரின் கழகக் களப் பணிகள் வியர்க்கத்தக்க, வியக்கத்தக்க பணிகளுக்கு எப்படி நாம் பாராட்டுத் தெரிவிப்பது என்றே தெரியாமல் திண்டாடுகிறோம்!

பெரியார் திடலிலும் சரி, விடுதலைக் குடும்பத்திலும் சரி, நமது பொறுப்பாளர்கள் அயர்வறியாத பணிகள் அருமைத் தோழர்கள் த.க.நடராசன், ப.சீதாராமன், க.சரவணன், நூலக ஆய்வுப் பணியாளர் கோவிந்தன், மதியழகன், கலையரசன், கணக்காளர் ஜெயராஜ், மோகனப்பிரியா, ரவி, சுரேஷ், கலைமணி உள்ளிட்ட ஆசிரியர் பயிற்சி பெற்ற மாணவர்கள், நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றப் பொறுப்பாளர்கள், தோழர்கள் ரெங்கநாதன், குமார் முதலியோரின் தொடர் பணிகள் தொய்வில்லாமல் நடந்தேறுகின்றன.

பெரியார் வலைக்காட்சிப் பணியாளர்கள், பெரியார் மணி யம்மை மருத்துவமனை, பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யத்தில் பணியாற்றுவோர், புத்தக விற்பனைப் பிரி வைச் சேர்ந்தவர்கள் என்று பாராட்டத்தக்கவர்களின் நீண்ட பட்டியலே உண்டு.

2018 இல் இது மேலும் வேகமாகப் பெருகிட வேண்டும்; கார ணம், நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலுவையில் உள்ள பணிகள் நம்மைக் களம் காண கண்சிமிட்டி அழைக்கின்றன.

கழகப் பொறுப்புகளுக்கு அப்பாற்பட்டிருந்தாலும் தோழர் கள் கோ.கருணாநிதி, பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் போன்றோரின் பெரியார் திடலில் பெரும் பங்களிப்பு நமது பாராட்டு கலந்த நன்றிக்குரியது.

2018 ஆம் ஆண்டில்

மேலும் நமது பணியின் வேகம்!

2018 இல் இந்த அடுக்குகளின்மீது அடுத்தடுத்த அடுக்கு களைக் கட்டிட மேலும் மகிழ்ச்சியுடன் நமது தொண்டறம் தொடரவேண்டும்.

2018 இல் எனது சுற்றுப்பயணத் திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் என்ன தெரியுமா? நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் ஊர்களில் மய்யப் பகுதியில் கழகத் தோழர்கள் - கலந்துரையாடல், பொதுவானவர்கள் அல்லது ஒத்தக் கருத்துடையோர், கட்சிசாரா சான்றோர் பெருமக்கள் சந்திப்பை கழகப் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்தல் அவசியம் ஆகும். நேரத்தை அதற்கென - தலைமை நிலையத்தின் பொறுப்பாளர்களை குறிப்பாக தோழர் அன்புராஜ் அவர்களைக் கலந்து ஒழுங்குபடுத்தவேண்டும்.

ஏற்கெனவே தலைமைச் செயற்குழுவில் எடுத்து செயல்படுத் தப்படாத முடிவுகள் எவை எவை என்று வரும் 7 ஆம் தேதி (2018 ஜனவரி) திருச்சியில் நடைபெறும்போது பரிசீலித்து அவைகளை இவ்வாண்டு உடனடியாகச் செயல்படுத்த முனையவேண்டும்!

பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் நகரும் ஆண்டில் (2017) மிகவும் சிறப்பாக நடைபெற்றன. (நாமக்கல் தவிர - பின்னாளில் நடைபெறும்).

கலந்துகொண்ட பயிற்சியாளர்களின் தொடர்புகளை உடனடி யாக தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் புதுப்பித்து, மாதம் ஒருமுறை தொடர்பு கொள்ளவேண்டும்.

2018 இல் வெளிநாடுகளிலும் - வெளிமாநிலங்களிலும் நமது பணிகள்!

சென்ற ஜூலை வெளிநாட்டில் ஜெர்மனியில் பெரியார் சுயமரியாதை பன்னாட்டு மாநாடும், கேரளம், கருநாடகம், ஆந் திரம், டில்லி முதலிய பல இடங்களில் கொள்கைத் தொடர்புப் பணிகளும் சிறப்பாக நடைபெற்ற நிலையில், அதுபோன்ற திட்ட மிடுதல் - சமூகநீதிக் களத்தில் மிகுதியும் இவ்வாண்டும் தேவை.

நமக்கெல்லாம் ஏறும் வயது என்பது, முதுமையல்ல; மாறாக முதிர்ச்சியே - வளர்ச்சியே!

தந்தை பெரியாரைச் சுவாசிக்கும் எவருக்கும் லட்சியப் பயணத்தில் அது இளமைக்குப் பாலாகும்!

‘விடுதலை’ விநியோகத்தில் புதிய யுக்திகள்

இணைய ‘விடுதலை’ தனித்த பொலிவுடன் இனி வெளிவரவும், இப்போதுள்ள நம் நாளேட்டின் விநியோக முறையில் புதுப்புது (மார்க்கெட்டிங்)  நவீன உத்திகளும் கடைப்பிடிக்கப்படும். புத்தக வெளியீடுகள் மேலும் அதிகமாக மக்களை - இளைஞர்களை - மகளிரைப் போய்ச் சேரவேண்டும்; புதிய அணுகுமுறைகள்பற்றி யோசிப்போம்!

பிரச்சாரம் - போராட்டம் - இருமுனைகளில் சம கவனம் செலுத்தும் பணி நமது இயக்கப் பணி என்பதை மனதில் இறுத்தி, அணிவகுத்துப் பணி முடிப்போம் தோழர்களே!

இருபால் தோழர்களே, தயாராவீர்!

காலத்தை வென்ற பெரியாரின் கொள்கை

ஞாலத்தை தன்வயமாக்கிட சலிப்பின்றி உழைப்போம்!

உழைப்போம்; உழைப்போம்; உழைத்துக்கொண்டே இருப் போம்!

வாருங்கள், இளைஞர்களே, வாருங்கள்!

மகளிரே வாருங்கள்! வாருங்கள்!!

கி.வீரமணி
தலைவர்,       திராவிடர் கழகம்.

சென்னை

31.12.2017

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner