எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆன்மிக அரசியல் என்பது ரஜினியின் குழப்பத்தைக் காட்டுகிறது! தமிழர் தலைவர் கருத்து

சென்னை, டிச.31ரஜினியின் ஆன்மிக அரசியல் என்ற அறிவிப்பு அவரது குழப்பத்தைத்தான் காட்டுகிறது; தமிழ்நாடு, பகுத்தறிவு பூமி, பெரியார் பூமி; இந்தப் பகுத்தறிவினுடைய வேரை வெட்டுவதற்கு எந்த சக்திகள் முனைந்தாலும், அந்த சக்திகளை காலூன்றாமல் தடுப்பது எங்களைப் போன்றவர்களுடைய பணியாக எதிர்காலத்தில் அமையும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியுள்ளார்.

இன்று (31.12.2017) ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

கட்சிக்கு என்ன கொள்கை?

என்ன செயல் முறை?

செய்தியாளர்: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்திருக்கிறார்; மேலும் அவர் ஆன்மிக அரசியலில் ஈடுபடுவதாகவும் சொல்லியிருக்கிறார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: எந்த ஓர்அமைப்பும், யாரும் அரசியலுக்கு வரலாம்; அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், அதே நேரத்தில், அவர்கள் அரசியலுக்கு வந்து கட்சியைத் தொடங் கும்போது, அந்தக் கட்சிக்கு என்ன கொள்கை? என்ன செயல் முறை? எதை நோக்கி அவர் பயணம் செய்கிறார்? என்பதைப் பொறுத்துத்தான் அந்தக் கட்சிக்கு மக்களுடைய வரவேற்போ, எதிர்ப்போ இருக்கும்.

எங்களைப் போன்றவர்கள், அரசியலில் மிகப்பெரிய அளவிற்கு வரக்கூடியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும், சமூகநீதியையும், பகுத்தறிவு அடிப்படையில், பெண்ணடிமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு,  தீண்டாமை ஒழிப்பை மய்யப்படுத்துவதாக இருந்தால், நிச்சயமாக அதனை வரவேற்கக்கூடிய நிலையில், தெளிவாக கருத்துகளைக் கூறுவோம்.

அதேநேரத்தில், ‘ஆன்மிக அரசியல்' என்று அவர் சொல்வது இருக்கிறதே,  அதுதான் குழப்பம்! அரசிலையும், ஆன்மிகத்தையும் சம்மந்தப்படுத்தக் கூடாது. இது முற்றிலும் அவருடைய குழப்பத் தைக் காட்டுகிறதே தவிர, வேறொன்றுமில்லை.

எனவேதான், அவருடைய ‘ஆன்மிக அரசியலை' அவர் தெளிவுபடுத்தட்டும்; அதற்குப் பிறகு எங்கள் தெளிவான கருத்தைக் கூறுகிறோம்.

தமிழ்நாடு, பகுத்தறிவு பூமி, பெரியார் பூமி; இந்தப் பகுத்தறி வினுடைய வேரை வெட்டுவதற்கு எந்த சக்திகள் முனைந்தாலும், அந்த சக்திகளை காலூன்றாமல் தடுப்பது எங்களைப் போன்றவர்களுடைய பணியாக எதிர்காலத்தில் அமையும்.

234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி

செய்தியாளர்: 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறாரே?

தமிழர் தலைவர்: நல்லது. ஏனென்று கேட்டால், அவருடைய பலம் என்னவென்று அவர் புரிந்துகொள்ளவேண்டியது மிக முக்கியம். 234 தொகுதிகள் என்ன? இந்தியா முழுவதும் போட்டி யிட்டாலும் நல்லதுதான். ஏன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி கிடையாதோ?

- இவ்வாறு ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner