எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு

பன்னாட்டு நாத்திகப் பெருமக்கள் பங்கேற்பு!

புத்துலகைப் படைப்போம் - குடும்பம் குடும்பமாக வாரீர்!

தமிழர் தலைவரின் அன்பு அழைப்பு வேண்டுகோள்

வரும் 5,6,7ஆகிய மூன்று நாட்களில் திருச்சியில் நடைபெறவிருக்கும் உலக நாத்திகர் மாநாட்டின் நோக்கம், அவசியம் குறித்து விளக்கி, அம்மாநாட்டுக்குக் குடும்பம் குடும்பமாக வருமாறு, பகுத்தறிவாளர் கழகப் புரவலர் - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கழகக் குடும்பத்தினர்களே, பகுத்தறிவாளர்களே, எக்கட்சியில் இருந்தாலும் அறிவியல் மனப்பான்மையில் ஆர்வம் உள்ளோரே, உங்களுக்கெல்லாம் ஓர் அரிய வாய்ப்பு - கருத்து விருந்து படைக்கும் கருத்தரங்க மாநாடு  உலக நாத்திகர் மாநாடும்  - கருத்தரங்குகளும்! - திருச்சியில் ஜனவரி 5,6,7 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறும்.

திருச்சியில் பன்னாட்டு மாநாடு

திராவிடர் கழகம்  - பகுத்தறிவாளர் கழகம் - ஆந்திராவில் உள்ள கோரா நாத்திகர் மய்யம் ஆகியவை இணைந்து நடத்தும் பன்னாட்டு மாநாட்டில், நாத்திகர்களும், பகுத்தறிவாளர்களும், சுதந்திர சிந்தனையாளர்களும், மனிதநேய மாண்பாளர்களும், அமைப்புகளின் பேராளர்களும் ஏராளம் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் ஆய்வுரைகளை ஆழமான விவாதங்களை நடத்தவிருக்கிறார்கள்!

நாம் இதே திருச்சியில் 2011-இல் இத்தகைய பன்னாட்டு நாத்திகர் (உலக) மாநாட்டினை நடத்தியுள்ளோம்.

அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே முதலிய அய்ரோப்பிய நாடுகளிலிருந்தும், அனைத்திந்தியாவின் பற்பல மாநிலங்களிலிருந்தும் பல பேராளர்களும், சிந்தனையாளர்களும், கல்வியாளர்களும், பேராசிரியர்களும், எழுத்தாளர்களும், கருத்தாளர்களும் கலந்து கொண்டதுபோலவே, இம்மாநாட்டிலும் பங்கேற்று ஒப்பற்ற கருத்துக் கருவூலங்களை இன்றைய தலைமுறைக்கும், இளைய சமுதாயத்தினருக்கும் ஏராளம் வழங்க ஏற்பாடாகியுள்ளது.

பன்னாட்டு நாத்திகப் பெரு மக்கள் பங்கேற்பு!

புதிய அரிய நூல்கள் - ஆங்கில வெளியீடுகள், தமிழ் வெளியீடுகள் வெளியிடும் நிகழ்ச்சியும் சிறப்பு நிகழ்வாக நடைபெறவிருக்கிறது.

உலக மனிதநேய அமைப்பின் சார்பிலும் (Athiesm is the hope of Humanity)  தலைவர் மற்றும் பொறுப்பாளர்களும், ஆந்திர நாத்திகர்களும் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களி லிருந்து வரும் பல்வேறு பகுத்தறிவாளர்களும், மனிதநேய, நாத்திக, சமூகசேவை அமைப்பு களின் பிரதிநிதிகளும் மகிழ்ச்சியுடன் பங்கேற்க இசைவு தந்துள்ளனர்!

"நாத்திகமே மனிதகுல நம்பிக்கை!"

இம்முறை திருச்சியில் நடத்தப்படும் உலக நாத்திகர் மாநாட்டின் பொதுத் தலைப்பு "நாத்திகம்தான் மனித குலத்தின் நம்பிக்கை" என்பதாகும். (கிtலீவீமீsனீ வீs tலீமீ லீஷீஜீமீ ஷீயீ பிuனீணீஸீவீtஹ்)

கடவுள், மத நம்பிக்கைகளான  அடிப்படைவாதம், தீவிரவாதம், மனிதகுலப் பிளவுகள், சண்டை சச்சரவுகள், கலவரங்கள், கலகங்கள் ஏற்பட்டு வருவதும் பல நூற்றுக்கணக்கானவர்கள் ரத்தம் சிந்தி, பலியாவதும் இப்போது வெளிப்படையாகவே தெரியும் நிகழ்வுகள்.

வெறுக்கத்தக்கதா நாத்திகம்?

நாத்திகம் என்றாலே அது வெறுக்கத்தகுந்தது என்பது போன்ற ஒரு விஷமப் பிரச்சாரத்தினையும், தவறான புரிதலையும்  திட்டமிட்டே விதைத்துள்ளனர்.

படித்துச் சுதந்திரமாக சிந்தித்தவர்களை எதிர்க் கருத்துகளைக் கூறி, தன் வயப்படுத்த முடியாத (மூட) நம்பிக்கையாளர்கள் அவர்களை உயிரோடு எரித்தனர்; விஷங் கொடுத்துக் கொன்றனர் - வன்முறைகளைக் கையாண்டு அழித்தொழித்து விரட்டினர்.

மாறாக நாத்திகர்கள் அறிவு வழியில் மனிதகுலத்தை ஒன்றுபடுத்தி ஒரு குலமாக, ஒரு குடையின் கீழ் நிற்பவர்கள் பரந்த விரிந்த மானுடப் பற்றாளர்கள்.

மதத்தினால் ஏற்பட்ட கேடுகள்

வரலாற்றினைப் புரட்டினால் அன்று முதல் இன்று வரை மதப் போர்களில் தொடங்கி மசூதி இடிப்பு வரை போட்டிகள் எதிர் வினைகள் என்று மதக் குரோதங்களின் மூலம் மக்களின்  சுக வாழ்வை - சக வாழ்வை அவமதிப்பது, வாழ்வை சீர்குலைப்பது அன்றாடம் நடந்த வண்ணமே உள்ளன.

மாறாக, நாத்திகர்களும், நாத்திகத் தத்துவங்களும் அனைவரும் உறவினர் - 'யாதும் ஊரே, யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா' - ஜாதி, மதங்கள் போன்ற பாகுபாடுகளால் மனிதகுலம் சிதைக்கப்படக் கூடாது என்பதை நிலை நாட்டி வருகிறது.

பேதமற்ற இடமே மேலான திருப்திகரமான இடமாகும்

'பேதமற்ற உலகு பேசு சுயமரியாதை நிலவும் நல்ல உலகு' என்ற நம்பிக்கையை விதைக்கும் தத்துவம் நாத்திகம்; இந்த 21ஆம் நூற்றாண்டிலும், இனி வரும் கால கட்டங்களிலும் அதுதான் மனிதகுலத்திற்கு நம்பிக்கை ஒளியூட்டி நன்னெறியைத் தழைக்க வைக்கும் தத்துவமாக உயரும் என்பதைப் புரிய வைக்கும் 'பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடம்' என்றார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார். ('குடிஅரசு' 11.11.1944)

புதியதோர் உலகு படைப்போம்! திருச்சிக்கு வாரீர்!

மாநாட்டிற்கு வாருங்கள்!

குடும்பம் குடும்பமாய் வாருங்கள்!

புதியதோர் உலகு படைக்க மானுடத்திற்கு மகத்தான வழிகாட்ட, அறியாமை இருளகற்றி, அறிவு ஒளி பரப்பிட அனைவருக்கும் அனைத்தும் என்ற சம உரிமை பகுத்தறிவு, பட்டறிவு, ஒத்தறிவுடன் (Empathy)
பிரச்சினைகளை அணுக நாத்திக சாணைக் கல்லில் உங்கள் அறிவைத் தீட்டிடும் அரிய அனுபவத்தைப் பெற - திருச்சிக்கு வாரீர்!

அறிவு ஆசானின் பூமி, அவனியோரை அழைக்கிறது, வரவேற்பளிக்கக் காத்திருக்கிறது!

அக்காட்சி காண வாரீர் வாரீர்!

மருட்சிக்கு விடை கொடுக்க வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

 

 

தலைவர்
திராவிடர் கழகம்

 

சென்னை
2-1-2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner