எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செவ்வாய்க் கிரகத்திற்குச் சென்றுவரும் இக்காலகட்டத்தில்

மனிதன் மலத்தை மனிதன் சுமப்பதா? தேவை இதற்கொரு முற்றுப்புள்ளி!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள மனித உரிமை அறிக்கை

மனிதன் செவ்வாய்க் கிரகத்திற்குச் சென்று திரும்பிவரும் ஒரு காலகட்டத்தில் மனிதன் மலத்தை மனிதன் சுமப்பதும், மலக்கழிவு சாக்கடைகளில் இறங்கி மனிதன் சுத்தம் செய்வதும், அதன் காரணமாக நச்சு வாயு தாக்கி மரணம் அடைவதும் கண்டிக்கத்தக்கது - வெட்கக்கேடானது. இதற்கொரு முடிவு எட்டப்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள மனித உரிமை வேட்கை அறிக்கை வருமாறு:

21 ஆம் நூற்றாண்டாகிய இந்த நூற்றாண்டில் அறிவியல் தொழில்நுட்பம், மின்னணு தொழில் வளர்ச்சி - இவைகளில் முன்னேறிய நாடுகளுடன் இந்தியா போட்டி போடுகிறது என்று ‘பெருமை’ பேசப்படுகிறது.

செவ்வாயன்று, செவ்வாய்க் கிரகத்திற்கு நமது விஞ்ஞானிகளால் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் ஓராண்டுக்குமேலாகச் சுற்றி, பல்வேறு ஒளிப்படங்களை எடுத்து செவ்வாய் ‘தோஷம்‘ ஏதும் பிடிக்காமலே திரும்பி வந்து சாதனை படைத்தது!

வேதனையும், வெட்கமும்

அடைய வேண்டிய ஒரு செய்தி

இந்த நிலையில், மிகமிக வருத்தமும், வேதனையும், வெட்கமும் அடைய வேண்டிய ஒரு செய்தி இன்று (3.1.2018) வந்துள்ளது!

துப்புரவுத் தொழிலாளர்களைவிட்டு பாதாள சாக்கடைகளைத் தூய்மைப்படுத்தவும், செப்டிக் டேங்க் (Septic Tanks)
என்ற கழிப்பறைக்கான  தொட்டியைச் சுத்தம் செய்யவும் சென்ற துப்புரவுத் தொழிலாளர்கள் மூச்சுத் திணறி இறந்தனர் (இவர்கள் அத்துணைப் பேரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர்களே ஆகும்; இது ஒரு குலத்தொழில்; இன்னமும் ‘‘சாகாவரம்‘’ பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் தொழில்).

உச்சநீதிமன்றம்

கண்டிப்பான தீர்ப்பு

மனிதக் கழிவுகளை மனிதர்கள் சுமப்பது - அதற் கான சாக்கடை, கழிப்புகளை சுத்தம் செய்ய பாதாள சாக்கடைக் குழாய்க்குள் இறங்கி மூச்சுத் திணறி சாகும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டிப்பான தீர்ப்பு வழங்கி யும், அதனைக் கண்டிப்பாக மத்திய - மாநில அரசுகள் செயல்படுத்திட, சரியான இயந்திரங்களை அத்தகைய அபாயப் பணிகளுக்குப் பயன்படுத்தி, அதே துப்புரவுத் தொழிலாளர்களுக்குஅவ்வியந்திரங்களை இயக்கும் குறுகிய காலப் பயிற்சியைக் கொடுத்து, சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதில் எவ்வித தீவிர முனைப்பும், ஆர்வமும், அவசரமும் காட்டவில்லை என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

நாடாளுமன்றத்தில்

மத்திய அமைச்சர் கொடுத்த புள்ளிவிவரம்

1993 ஆம் ஆண்டுமுதல் இந்தியா முழுவதும் இத்தனை மனித உயிர்கள் - உழைப்போர் பலி கொடுக்கப்படும் பரிதாப எண்ணிக்கை 323 என்றும், இதில் தமிழ்நாட்டில் மட்டும் இறந்தோர் எண்ணிக்கை 144 பேர்; கருநாடகாவில் 50 பேர்; உ.பி.யில் 52 பேர் என்ற தகவலை மாநிலங்களவையில் நேற்று (2.1.2018) அர்தீப்சிங்பூரி என்ற மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

அந்நியருக்கிருந்த உணர்வு

ஆனால், இத்துப்புரவுத் தொழிலாளர் நல உரிமை அமைப்பான ‘சஃபாய் கர்மச்சாரி அந்தோலன்’ என்ற  ழிநிளி அமைப்பு எடுத்துள்ள ‘சர்வே’மூலம் பெறப்படும் தகவல் கூடுதலான இழப்புகள் ஆகும்.

1,340 பேர் மொத்தம் இறந்துள்ளனர் கடந்த 10 ஆண்டுகளில். இதில் தமிழ்நாட்டில் மாத்திரம் 294 பேர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது!

பொதுவாக, இம்மாதிரி இறப்புகளின் எண்ணிக் கையை அரசுகள் சரியாகப் பதிவு செய்வதில்லை என்பது உலகறிந்த உண்மையாகும்!

1947 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசாங்கம், மலம் அள்ளும் தொழிலாளர்கள் குறித்து அய்ந்து அம்ச திட்டங்கள் வெளியிட்டது. இதன் நீட்சியாக 1992 மற்றும் 2007 ஆம் ஆண்டு மேன்மைப்படுத்தப்பட்ட சட்டமாகக் கொண்டுவரப்பட்டது.

அந்நியர் ஆங்கிலேயர்களுக்கு இருந்த மனித உரிமை, மனிதநேய உணர்வு இந்தியர்களுக்கு இல்லாமல் போனது ஏன்?

திராவிடர் கழகம் தீர்மானம் போட்டுள்ளது!

நமது இயக்கம் இந்தக் கழிவுகளை மனிதர்கள் சுமப்பதற்கோ அல்லது மலக்குட்டைகளில் மூழ்கி ‘நைட்ரஜன் வாயு' தாக்கி மரணமடைய இந்த அறி வியல் யுகத்தில் அனுமதிக்கவோ கூடாது என்று பலமுறை வன்மையாகக் கண்டித்து திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டங்களிலும்,  மாநாடுகளிலும் தீர்மானங்கள் போட்டுள்ளோம்!

அரசின் காதுகள் - கேளாக் காதுகளாக; கண்கள் - பார்க்கா கண்களாகவும்; இதயங்கள் - இரங்காத இதயங்களாகவும் இருக்கின்றனவே!

முன்னணியில் இருப்பது தமிழ்நாடுதானாம்!

இந்தியாவில், தமிழ்நாடுதான் இந்த இழிவைச் சுமந்து, பழியைத் தக்க வைப்பதில் முன்னணியில், முதன்மையாக இருக்கிறது என்பது பெரும் வெட்கக் கேடு; மகா தலைகுனிவு!

மனிதாபிமானத்தை மரித்துப் போக விடுவதுதான் மக்கள் நாயகமா?

இதன்மூலம் மரணிப்பவர்கள் எல்லாம் எங்கள் ‘கீழ்ஜாதி’ சகோதர சகோதரிகள் என்பதால், இந்த அலட்சியம்; இதுவே பார்ப்பனர் அல்லது மற்ற முன்னேறிய ஜாதிக்காரர்கள் என்றால், பெருங்குரல் எழுந்து,  எப்போதோ அவசரத் தடுப்பு முறைகள் உருவாகியிருக்கும்!

என்னே, 70 ஆண்டுகால மனுதர்ம ஆளுமை - இதில்கூட மனிதாபி மானத்தை மரித்துப் போக விடுவதுதான் மக்கள் நாயகமா? சிந்தியுங்கள் நண்பர்களே!


கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்.


சென்னை 
3.1.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner