எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'ஆன்மிகம் என்ற பெயரால் படமெடுக்கும் ஆரியத் தத்துவத்தின்

நச்சுப் பல்லைப் பிடுங்கி எறிவோம் - வாரீர்!'

சென்னை கூட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்!

சென்னை, ஜன.4   ஆன்மிகம் என்ற பெயரால் படமெடுத் தாடும் பாம்பின் விஷப் பல்லை,பெரியார் - அம்பேத்கர் கொள்கை வழி நின்று பிடுங்குவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

3.1.2018 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற ‘‘டாக்டர் அம்பேத்கரின் புத்தக் காதலும் - புத்தகக் காதலும்’’ நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

எனது ஆசான் நீதிபதி மோகன் அவர்களும், எழுச்சித் தமிழரோடு, அதேபோல, இனமான கொள்கையை நாள் தவறாமல் நாடு முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கின்ற நம்முடைய சுயமரியாதை இயக்கத்தின் வழித்தோன்றல் அன்பிற்குரிய சுப.வீ. அவர்களும், இந்நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

கருஞ்சட்டைக் கூட்டம் - திராவிடர் கழகம்

எழுச்சித் தமிழருக்கு யார் என்ன விலை கொடுத்தாலும், அவருடைய தலைக்கே ஒரு கோடி ரூபாய் என்றாலும்;  பல கோடியில் நீங்கள்  நின்றாலும், அவரை அசைக்க முடியாது; அவரை திசை திருப்ப முடியாது; அவருடைய ஒவ்வொரு ரத்த அணுக்களும் இந்த நாட்டுக்காகப் பாடுபடக்கூடிய மிகப்பெரிய உணர்வு மிகுந்த அணுக்கள். ஆகவே, எளிதில் அது சிந்திவிடக் கூடாது என்பதிலே, அக்கறையோடு இருக்கிற ஒரு கூட்டம்தான் கருஞ்சட்டைக் கூட்டம் - திராவிடர் கழகம் என்கிற காரணத்தினால், எப்பொழுதும் எங்களோடு இருப்பார்; அவர் எங்களோடு இருப்பார்; நாங்கள் அவரோடு இருப்போம். நாங்கள் மட்டுமல்ல, நீதியும் எங்கள் பக்கம் இருக்கும் என்பதுதான் இந்த நிகழ்ச்சியினுடைய அடையாளம்.

‘இலக்கியச் செல்வர்’ என்கிற பெருமைப் பெற்றவராக இருந்தாலும், இப்பொழுது ‘பயணச் செல்வர்’

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர்களே தீர்ப்பு எழுதிவிட்டார்கள்; நல்ல தீர்ப்புகளை எழுதியி ருக்கிறார்கள். சில தீர்ப்புகளைப் போல அல்ல. அப் படிப்பட்ட ஓர் அற்புதமான இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற நம்முடைய அருமை சான்றோர் பெருமக்களே, எதிரில் அமர்ந்திருக்கின்ற எனது அருமைத் தமிழர் என்றைக்கும் ‘இலக்கிய செல்வர்’ என்கிற பெருமைப் பெற்றவராக இருந்தாலும், இப்பொழுது ‘பயணச் செல்வர்’ என்றே தன்னை ஆக்கிக் கொண்டிருக்கக்கூடிய, முதுமை இல்லை என்று மற்றவர்களுக்கெல்லாம் காட்ட முயற்சி செய்துகொண்டிருக்கின்ற எனது அருமைத் தோழர், வகுப்புத் தோழர், பல்கலைக் கழகத் தோழர் அருமை நண்பர் குமரிஅனந்தன் அவர்களே,

எங்களுடைய மதியுரைஞர் அய்யா ராஜரத்தினம் அவர்களே, சிறந்த ஆய்வாளர் நூலாசிரியர் வீரமணி அவர்களே, கவிஞர் கண்மதியன் அவர்களே, அருமைப் பேராசிரியர் அரங்கசாமி அவர்களே, விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பொறுப்பாளர்களே, திராவிடர் கழகத்தின் முக்கியப் பொறுப்பாளர்களே, கட்சிகளுக்கு அப்பாற்பட்ட சான்றோர் பெருமக்களே, புத்தகக் காதலர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய தலைதாழ்ந்த நன்றி

முதற்கண் என்னுடைய பணிவன்பான நன்றியை கலந்து கொண்ட எனது ஆசிரியரும், உச்சநீதிமன்ற  நீதிபதியாக இருந்தவருமான அன்பிற்குரிய அய்யா ஜஸ்டீஸ் மாண்புமிகு மானமிகு மோகன் அவர்களுக்கும், எழுச்சித் தமிழர் அவர்களுக்கும், அதேபோல, பேராசிரியர் சுப.வீ. அவர்களுக்கும், கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கும், மற்ற தோழர்களுக்கும் என்னுடைய தலைதாழ்ந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏராளமான புத்தகங்களை வாங்கியிருக்கிறீர்கள். வாசகர்களுக்காக எழுதியிருக்கிறோம். அதனை வரவேற் பதற்கு நாங்கள் என்றைக்கும் தயாராக இருக்கிறோம் என்று சொல்லி, அய்ந்து புத்தகங்கள், மூன்று புத்தகங்கள் என்று வாங்கி உற்சாகப்படுத்தி இருக்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு  அன்பான நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு செய்திகளை உங்களுக்குச் சொல்லி, என்னுடைய ஏற்புரையை, நன்றியுரையை முடிக்கவிருக்கிறேன்.

நாங்களும் நாணயத்தின் இரண்டு பக்கங்களுடைய தொடர்ச்சிதான்

அண்ணல் அம்பேத்கர் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதை எல்லா இடங்களிலும் நாம் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கிறோம். எனவே, அவர்கள் இரண்டு பக்கங்கள் என்றால், நாங்களும் அதே நாணயத்தின் இரண்டு பக்கங்களுடைய தொடர்ச்சிதானே தவிர வேறொன்றும் இல்லை. அது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல.

மிக முக்கியமான சில எச்சரிக்கைகளை திருமா அவர்கள் இங்கே அரசியல் ரீதியாக எடுத்துச் சொன்னார்கள்.

அவர் சொன்ன சில கருத்துகள், ஊடகங்கள் வாயிலாக வேக வேகமாக திரிபுவாதத்திற்கு ஆளாக்கப்பட்டு, அவர் இப்படி இருக்கிறாரோ? அங்கே செல்வாரோ? இங்கே செல்வாரோ? அந்த அணிக்குப் போவாரோ? என்றெல்லாம் இனிய கற்பனைகளை அவிழ்த்து விடுவார்கள். ஊடகங்களுக்குத்  தீனி வேண்டும். 24 மணிநேரத்தில் என்னதான் திரைப்பாடல்களை ஒளிபரப்பினாலும், திரைப்படங்களை ஒளிப்பரப்பினாலும், சில புதுக்கதைகளையும் விடவேண்டும் அல்லவா!

ஆகவேதான், சில விஷயங்களை திருமா அவர்கள் சொன்ன நேரத்தில், அதனைத் தெளிவுபடுத்துவதற்கு இந்த மேடையை அவர் பயன்படுத்தி இருக்கிறார். எனவே, அந்த வகையில், இது மிகவும் சிறப்பானது. அதனுடைய தொடர்ச்சியாக ஒரு செய்தியை சொல்கிறேன், இந்த புத்தகத்தில் இருக்கிறது.

தந்தை பெரியாரும் -

அண்ணல் அம்பேத்கரும்தான்!

பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சென்னைக்கு வந்து பெரியாரை சந்திக்கிறார்.

அகில இந்திய தலைவர்களில், அதிகமாக சந்தித்து உரையாடி, கருத்துரையாடிய இரு தலைவர்கள் உண்டென்றால், தந்தை பெரியாரும் - அண்ணல் அம்பேத்கரும்தான்! நான்கைந்து முறைக்கு மேல்!

அறிமுகமாவதற்கு முன்பு கருத்தியல் ரீதியான நட்பு, பிறகு நேரிடையான நட்பு.

சென்னையில் ஒரு பிரம்மாண்டமான கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்திற்குத் தந்தை பெரியார் அவர்கள் தலைமை தாங்குகிறார். பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார்.

பகவத் கீதை வருணாசிரம தர்மத்தைப் பாதுகாக்கின்ற ஒரு நூல்

மிகப்பெரிய அளவிற்கு அகில இந்திய அளவிற்கு விளம்பரங்கள் செய்யப்பட்டன. வடநாட்டில் அதனைப் பிரபலப்படுத்தினார்கள். பகவத் கீதை என்பது இருக்கிறதே, அது முழுக்க முழுக்க ஜாதியை, பெண்ணடிமையை, மூடத்தனத்தை, ஆரியத்தினுடைய தத்துவத்தை, வருணாசிரம தர்மத்தைப் பாதுகாக்கின்ற ஒரு நூல் என்றார் தந்தை பெரியார்,

ஜாதியை ஒழிக்கவேண்டும் என்றால், எது ஜாதியைப் பாதுகாக்கிறதோ, அதனை நாம் ஒழிக்கவேண்டும் என்றார்.

எடுத்த எடுப்பிலேயே பகவத் கீதையில், சதுர் வர்ணம் மயாசிருஷ்டம் - நான்கு ஜாதிகளை நானே உண்டாக்கினேன். நானே நினைத்தாலும் அதனை மாற்ற முடியாது. வருணாசிரம தர்மத்திற்கு அவ்வளவு பெரிய சக்தியாம்; அந்தக் குலதர்மத்தைவிட்டு யாரும் மாறக்கூடாது.

ஒரு ஜாதியைவிட்டு, இன்னொரு ஜாதியில் திருமணம் செய்தால், ரத்தக் கலப்பு ஏற்பட்டுவிடும். ஆண்கள் எல்லாம் இறந்து போய், பெண்கள் மட்டும் மிஞ்சினால், மிகப்பெரிய அளவிற்கு ஆபத்து ஏற்படும்.

ஜாதியைக் காப்பாற்றவேண்டும்;

ஜாதி தர்மத்தைக் காப்பாற்றவேண்டும்

எனவேதான், எதிரே நிற்கிறவன் சொந்தக்காரன் ஆயிற்றே, நீ தயங்காதே, போரிடு என்று அர்ஜூனனுக்கு, கிருஷ்ணன் சொல்கிறான்.

நீ ‘‘உன்னுடைய கடமையைச் செய்; பலனைப்பற்றிக் கவலைப்படாதே!’’ என்று சொல் வருகிறது. இதை மொட்டையாக எடுத்துக்கொண்டு, ‘‘கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே’’ என்று சொல்கிறார்கள்.

‘‘கீதை முட்டாளின் உளறல்’’

எதற்காக அது சொல்லப்பட்டது என்றால், ஜாதியைக் காப்பாற்றவேண்டும்; ஜாதி தர்மத்தைக் காப்பாற்றவேண்டும். நீ இப்பொழுது போரிடவில்லையானால், அந்த ஜாதி தர்மத்தைக் காப்பாற்ற முடியாது. பெண்களும், சூத்திரர்களும் யார்? பாவ யோனியில் இருந்து பிறந்தவர்கள் என்று சொல்வதுதான் கீதை.

இதையெல்லாம் தந்தை பெரியார் படித்திருக்கிறார்; பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். நாமெல்லாம் பிறப்பதற்கு முன்போ அல்லது நாமெல்லாம் குழந்தையாக இருக்கும்பொழுதே சொல்லியுள்ளனர்.

அவர்கள் இரண்டு பேரும், கருத்தில், பண்பாட்டில் மிகவும் உயர்ந்தவர்கள். அவர்களுடைய கருத்தைச் சொல்லும்பொழுதோ, அதைத் தாக்குகிறபொழுதே கடுமையான ஆயுதத்தோடுதான் தாக்குவார்கள். அதுதான் அவர்கள் இரண்டு பேருக்கும் பொதுமையான செய்தி. ‘‘கீதை முட்டாளின் உளறல்’’ என்று அண்ணல் அம்பேத்கர் சொன்னார்.

ரேசர் பிளேடை கொண்டு

மரத்தை வெட்ட முடியுமா?

அம்பேத்கர் அவர்களுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் அவரிடம் சென்று, ‘‘என்னங்க அய்யா, நீங்கள் இன்னும் கொஞ்சம் மென்மையாக சொல்லாம் அல்லவா’’ என்றார்.

அப்பொழுது அம்பேத்கர் அவர்கள் முகச்சவரம் செய்து கொண்டிருக்கிறார்; உடனே அம்பேத்கர் அவர்கள், இது என்ன? என்று அவரிடம் கேட்டார்.

ரேசர் பிளேடு என்றார் நண்பர்.

நான் என்ன செய்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும், முகச்சவரம் செய்கிறேன். இந்தப் பிளேடைக் கொண்டு மரத்தை வெட்ட முடியுமா? என்று கேட்டார்.

அந்த நண்பர் அசந்து போய்விட்டார்.

விஷ விருட்சத்தை வெட்டுவதற்குக் கோடரியைத் தான் எடுக்கவேண்டும்; அதற்காக ரேசர் பிளேடைக் கொண்டு வெட்ட முடியுமா? என்று கேட்டார்.

பெரியார் - அம்பேத்கர் பெயரால் பிரகடனப்படுத்துகிறோம்

அதுபோன்று கடுமையான வாசகங்களாக இருக்கலாம்; ஆனால், அந்த பகவத் கீதையை மீண்டும் அரியணை ஏற்றலாம்; அதுதான் ஆன்மிக அரசியல் என்றால், அந்த அரசியலுக்குத் தமிழ்நாட்டில் இடமே இல்லை என்று பெரியார் - அம்பேத்கர் பெயரால் பிரகடனப்படுத்துகிறோம்.

எங்களுக்கு அரசியல் பார்வை, தேர்தல் பார்வை இல்லை; தத்துவ பார்வை, லட்சியப் பார்வைதான் உண்டு. மாயமான் எந்த ரூபத்தில் இருந்தாலும், அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய ஆற்றல், பெரியாருடைய கண்ணாடிக்கும், நுண்ணாடிக்கும் உண்டு. அதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

‘‘உங்கள் நண்பர் யார்? என்று சொல்லுங்கள், உங்களைப்பற்றி சொல்கிறோம்’’ என்று சொல்வதுதான் ஆங்கிலப் பழமொழி.

'உன்னுடைய விரோதி யார்?'

நீங்கள் இங்கே அய்யா நினைவிடத்தில் உள்ள அய்யா பொன்மொழிகளைப் பாருங்கள்.

அதில், ‘‘உன்னுடைய விரோதி யார்? அதை வைத்து உங்களைப்பற்றி சொல்கிறோம்’’ என்று சொல்லியிருப்பார் தந்தை பெரியார். யார் உன்னை விரோதி என்று கருதுகிறான் என்பதுதான் முக்கியம். நீ யாருடைய கொள்கையை, எந்தக் கொள்கையை எடுத்துச் சொல்கிறாய் என்பதுதான் முக்கியம்.

சென்னையில் நடைபெற்றக் கூட்டத்திற்கு  மறு படியும் வருகிறேன்; அம்பேத்கரும், பெரியாரும் சென்னையில் ஆற்றிய உரை, அது வடபுலத்தில் உள்ள ஆங்கில பத்திரிகைகளில் வெளிவந்தது.

அம்பேத்கர் அவர்கள் அடுத்த நாள் வடபுலம் சென்றதும்;  அம்பேத்கர் அவர்களை, பிர்லா சந்திக்க வருவதாக சொல்கிறார்கள்.

'என்னை எதற்கு பிர்லா பார்க்க வருகிறார்? எனக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே! சரி, வரச் சொல்லுங்கள்' என்கிறார்.

அம்பேத்கரிடம் பிர்லா விடுத்த வேண்டுகோள்!

அம்பேத்கர் அவர்களை பிர்லா சந்தித்தபொழுது, ‘‘உங்களுடைய பணி மிகச் சிறப்பானது. நல்ல பணிகளை நீங்கள் செய்கிறீர்கள். தீண்டாமையையெல்லாம் ஒழிக்கவேண்டியதுதான். அதற்காக உங்களுக்கு ஒரு 10 லட்சம் ரூபாய் கொடுக்கவிருக்கிறேன்; அதனை நீங்கள் வாங்கிக் கொள்ளவேண்டும். பெரிய அளவிற்கு உங்களுடைய பணியைத் தொடரவேண்டும்.

அதேநேரத்தில், உங்களை ஒன்று கேட்டுக் கொள்கிறேன், ‘‘நேற்று நான் ஒரு செய்தியைப் பார்த்தேன். சென்னையில் ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் தலைமையில் நீங்கள் பேசும்பொழுது, கீதையைப்பற்றி தாக்கிப் பேசியிருக்கிறீர்கள். அதுபோன்று இல்லாமல், தீண்டாமையை ஒழித்தால் நன்றாக இருக்கும்’’ என்றார்.

உடனே அம்பேத்கர் அவர்கள், ‘‘உங்களுடைய பணத்தை வாங்கி நான் என்னுடைய பணியைத் தொடர விரும்பவில்லை. உங்கள் ஆலோசனைக்கு நன்றி - நீங்கள் போய்வாருங்கள்!’’ என்று சொன்னார்.

இந்த உறுதி - அம்பேத்கர் அவர்களுடைய உறுதி. இந்த புத்தகத்தில் அதனைப் பதிவு செய்திருக்கிறோம். அவருடைய சீடர்கள் சங்கரானந்த சாஸ்திரி மற்றவர்கள் சொல்லியதை பதிவு செய்திருக்கிறோம்.

அம்பேத்கர் அவர்கள் மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார்; மிகப்பெரிய வழக்குரைஞராக இருந்திருக்கிறார்; அவருடைய கடைசி காலத்தில், அவருடைய புத்தகத்தை வெளியிடுவதற்கு, 50 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டு இருக்கிறது.

ஆங்கிலத்தில், ‘மேக்னம் ஓப்பஸ்’ (Magnum opus) என்கிற ஒரு சொல் இருக்கிறது. பல புத்தகங்களை எழுதினாலும், எந்தப் புத்தகம் தலைசிறந்த புத்தகமோ அதனை மேக்னம் ஓப்பஸ் என்று சொல்வார்கள்.

‘‘புத்தமும் - தம்மமும்’’ என்கிற புத்தகம். இதைத் தோழர்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும். யாரும் அந்த சொல்லை, ‘‘புத்தரும், தருமமும்’’ என்று சொல்லாதீர்கள்.

Dhamma is different from Dharma

தம்மா என்பது நெறி

தர்மா என்பது மனுநீதி

இதைத் தெளிவாகத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு என்ன சூழ்நிலை? மீண்டும் மனுதர்மம் நேரிடையாக இல்லாமல், மறைமுகமாக இன்றைக்கு வரலாம் என்று சொல்லக்கூடிய நிலை.

ஆன்மிகம் என்பதே புரட்டு!

ஆன்மிகம், ஆன்மிகம் என்று சொல்கிறார்களே? அதுவே புரட்டு! ஆத்மா என்று எங்காவது உண்டா? புத்தர் ஆத்மாவை ஒப்புக்கொண்டாரா?

ஆத்மா என்பது எங்கே இருக்கிறது சொல்லுங்கள் என்று பெரியார் கேட்டாரே!

நம்முடைய புலவர்கள் என்ன செய்தார்கள் என்றால், நம்முடைய இலக்கியச் செல்வர் என்னுடைய நண்பர், அதனால் கோபித்துக் கொள்ளமாட்டார் - அதனால் உரிமை எடுத்துக்கொள்ளலாம்; இங்கே நிறைய இலக்கியச் செல்வர்கள் இருக்கிறார்கள்.

நம்முடைய தமிழ் மொழிக் காதலர்கள் இருக்கிறார் களே அவர்கள் என்ன செய்தார்கள் என்றால், ஆத்மா என்பது வடமொழிச் சொல்லாக இருக்கிறது; அதனை தமிழ்ச் சொல்லாக வேண்டும் என்பதற்காக ஆன்மா என்று சொன்னார்கள்.

நமக்கு சம்பந்தம் இல்லை என்பதை

ஒலியிலேயே புரிந்துகொள்ளவேண்டும்

ஜாதி என்பதை சிலர் சாதி என்று போடுவார்கள். நாங்கள் ‘விடுதலை’யில் ஜாதி என்றுதான் எழுது வோம். சாதி என்று எழுதக்கூடாது என்று நான் சொல் வேன். ஏனென்றால், அது நம் சொத்து கிடையாது; அது வேறிடத்திலிருந்து இறக்குமதி ஆனது. பார்த்த வுடன் புரிந்துகொள்ளவேண்டும்; ஒலியிலேயே புரிந்து கொள்ள வேண்டும், இது நமக்கு சம்பந்தம் அல்ல என்பதை.

பெரியார்தான் சொன்னார், எது நம்முடையது; எது பிறருடையது என்பதை அடையாளம் காணவேண்டும் என்றால், அதற்காக பெரிய ஆராய்ச்சி தேவையில்லை; அதனுடைய சொல்லைப் பார்; அதிலிருந்தே புரிந்து கொள்ளலாம் என்றார். கட்சியைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றாலே, அதனுடைய பெயரைப் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம் என்றார்.

அந்த அடிப்படையில் நண்பர்களே, இந்த உணர்வை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்.

ஆத்மா - ஆன்மா

ஆன்மாவிலிருந்து ஆன்மிகம்.

ஆத்மார்த்தம் என்பது சமஸ்கிருதம்; அதற்குப் பதில் ஆன்மிகம்.

ஆத்மா என்பது எங்கே இருக்கிறது?

ஆத்மா என்பது எங்கே இருக்கிறது? தயவு செய்து நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

அவர்களுடைய கருத்துப்படியே ஆத்மா என்பது எங்கே இருக்கிறது? என்று கேட்டார் பெரியார்.  இதுவரையில் அதற்குப் பதில் இல்லை.

ஆத்மாவிற்கு உயிரோட்டமே கீதைதான்; ஏனென்றால், புத்தத்தை எதிர்த்துத்தான் பின்னால் உருவாக்கப்பட்டது கீதை. (கிருஷ்ண அவதாரமே புத்தருக்குப்பின் கற்பிக்கப்பட்ட ஒன்று என்பதுதான் ஆய்வின் முடிவு)

கீதை என்பது இடைச்செருகல்தான்!

ஒரிஜினல் மகாபாரதத்தில் எங்கேயாவது கீதை இருக்கிறதா? என்று யாராவது சொல்லுங்கள். கீதை என்பது இடைச்செருகல்தான்.

பகுத்தறிவிற்கும், அதற்கும் சம்பந்தம் உண்டா? எல்லோரும் சொல்கிறார்கள், அதனால் நானும் சொல்கிறேன் என்றுதானே நிறைய பேர் சொல்கிறார்கள்.

யுத்தம் நடத்துவதற்கு அவன் தயாராக இருக்கிறான்; இவர் 700 சுலோகத்தை சொல்லிக் கொண்டே இருக்கிறான்; அவன் தயாராக இருக்கிறான், 630 சுலோகம்தான் முடிந்திருக்கிறது; இன்னும் மீதியும் முடியட்டும் என்று. போர்க்களத்தில் காத்துக் கொண்டு இருப்பார்களா? (விவேகானந்தரேகூட இந்தக் கேள்வியைக் கேட்கிறார்?)

பகுத்தறிவிற்கும், இதற்கும் சம்பந்தம் உண்டா?

அங்கே சொல்கிறார், சொந்தக்காரர்களை சாகடிக் கிறோம் என்று நினைக்காதே! உண்மையில் அவன் சாகவில்லை; அவனுடைய ஆத்மா சாகவில்லை. ஆத்மா என்பது கூடுவிட்டு கூடு பாயும் அழியாதது என்கிறார்.

ஆத்மா என்ன குட்டி போட்டதா?

பகவான் கண்ணன் கீதையில் , உடல்தான் சாகிறது; ஆத்மா சாகவில்லை என்கிறார்.

பெரியார்தான் கேட்டார், ‘‘நீ சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்; அப்படியென்றால், ஆரம்பத்தில் எவ்வளவு ஜனத்தொகை இருந்ததோ, அதே ஜனத்தொகைதானே இன்றைக்கும் இருக்கவேண்டும்’’ என்ற கேள்வியைக் கேட்டார்.

அன்றைக்கு 30 கோடி ஜனத்தொகை  பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னால்; இன்றைக்கு எப்படி 125 கோடி ஜனத்தொகை இருக்கிறது? ஆத்மா என்ன குட்டி போட்டதா? சிந்திக்க வேண்டாமா?

சரி, மனிதனுக்கு மட்டும்தான் ஆத்மாவா?  நாய், யானை, பூனை, சிங்கம், புலி, கரடி, சிறுத்தை எல்லாம் இருக்கிறதே - இந்த சிறுத்தைக்கும் ஆத்மா கிடையாது; அந்த சிறுத்தைக்கும் ஆத்மா கிடையாது.

ஆத்மா எங்கே இருக்கிறது? ஆத்மா என்பது இல்லாத ஒன்று.

ஏமாற்றுவதற்காக அதனை சொன்னான்; உடல் வீழும்; ஆத்மாவிற்கு சாவில்லை என்றானாம்.

ஆத்மாவிற்கு அடுத்தபடியாக கிருஷ்ணன், ஜீவாத்மா, பரமாத்மா, மகாத்மா எத்தனை ஆத்மாக்கள்? நாங்களோ ஆத்மாவே இல்லை என்கிறோம்.

நல்ல பார்ப்பனர்கள் ஒருவரைக்கூட தெரியவில்லையா என்று கேட்டார் காந்தியார்

காங்கிரசிலிருந்து பெரியார் விலகிய பிறகு, காந்தி, பெரியாரிடம் கேட்கிறார்,

‘‘என்னங்க ராமசாமி நாயக்கரே, உங்களுக்கு  பார்ப் பனர்களுக்கு மேல் ஏன் வெறுப்பு? நல்ல பார்ப்பனர் ஒருவரைக்கூட உங்கள் கண்களுக்குத் தெரியாதா?’’ என்றார்.

உடனே பெரியார், ‘‘இதுவரையில் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ராஜாஜியிடம் பழகியிருக்கிறேன்; மற்றவர்களிடமும் பழகியிருக்கிறேன். மகாத்மாதான் சொல்லவேண்டும்’’ என்று சொன்னார்.

காந்தி, ‘‘ஏன், கோபாலகிருஷ்ண கோகுலே இருக்கிறாரே, அவர் நல்ல மனுஷன்தானே!’’ என்றார்.

பெரியார் அவர்கள் அமைதியாக இருந்தார்.

‘‘என்ன ராமசாமி நீங்கள் இப்படி பேசாமல் இருக்கிறீர்களே,’’ என்றார் காந்தி.

‘‘மகாத்மாஜி, நீங்களோ மகாத்மா; நீங்களே ரொம்ப நேரம் கழித்துதான் ஒரே ஒரு நல்ல பார்ப்பனரைக் கண்டுபிடித்திருக்கிறீர்கள். நான் வெறும் ஆத்மாகூட இல்லையே, நான் எப்படி கண்டுபிடிக்க முடியும்?’’ என்றார்.

கோட்டைக்குள்ளேயே

ஆத்மா நுழைய நினைக்கிறது!

எவ்வளவு பெரிய பித்தலாட்டம், ஒரு பொய், அதற்குமேலே இன்னொரு பெரிய கட்டடம் - அதற்குமேலே 21 ஆம் நூற்றாண்டில் கோட்டைக்குள் ளேயே ஆத்மா நுழைய வேண்டும் என்று நினைக்கிறது.

எது ஆன்மிகம்? சாமியார்களைக் காட்டுவது ஆன்மிகமா? பாபா முத்திரைக்குக் கீழ் என்ன இருக்கிறது; தாமரை இருக்கிறது. தமிழ்நாட்டில், தடாகத்தில்தான் தாமரை இருக்கும்;  பாம்பு பக்கத்தில் வருகிறது, ஜாக்கிரதை. பாம்பு படம் எடுத்து ஆடுகிறது. அதனுடைய விஷப் பல்லைப் பிடுங்கி, விஷத்தை எடுத்துவிடுவோம் தமிழ்நாட்டில்.

பகவத் கீதை - மனிதகுலத்தினுடைய எதிரி!

நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இதற்குமேலும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால், கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையை சொறிந்துகொள்வதாகும். தயவு செய்து நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்; வேறு எதையும் நான் சொல்லவேண்டிய அவசியமில்லை.

பகவத் கீதை - மனிதகுலத்தினுடைய எதிரி அது. ஒழுக்கத்திற்கும், அதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.

பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் எழுதிய ரிடில்ஸ் ஆஃப் இந்துயிசம் என்கிற புத்தகம் மகாராட்டிர அரசால் வெளியிடப்பட்ட புத்தகம், தமிழாக்கம் செய்யப்பட்டு, ‘‘இந்து மதத்தின் புதிர்கள்’’ என்ற தலைப்பில் இருக்கிறது.

ஆரியர்களுக்கும், ஒழுக்கத்திற்கும் சம்பந்தமில்லை

அதில் ஆரியர்களுக்கும், ஒழுக்கத்திற்கும் சம்பந்தமில்லை. புரோகிதத் திருமணத்தில் ஏழடி எடுத்து வைக்கிறார்களே, ஏன் தெரியுமா?

‘‘சோம ப்ரதமோ, விவித கந்தர்வோ,விவித உத்தர! த்ருதயோ அக்னிஷ்டேபதி துரியஸ்தே மனுஷ்யஜா" என்று மந்திரம் சொல்கிறார்களே, அந்த மந்திரத்திற்கு என்ன பொருள் என்ற வரலாற்றை அம்பேத்கர் அவர்கள் ஆதாரப்பூர்வமாக அந்தப் புத்தகத்தில் எழுதி யிருக்கிறார். அதாவது, அடுத்தவனுக்கு தன்னுடைய மனைவியைக் கொடுப்பது என்பது ஆரியருடைய ஒழுக்கம்.

சோமனுக்கு இவ்வளவு கெடு; அக்னிக்கு இவ்வளவு கெடு என்று வைத்து, அதற்குப் பிறகு மீட்கிற நிகழ்ச்சிக்குத்தான் திருமணத்தில் ஏழடி எடுத்து வைத்தார்கள் என்று அம்பேத்கர் அவர்கள் எழுதி வைத்திருக்கிறார்.

பெரியாரும் - அம்பேத்கரும்தான்

இரண்டு சம்மட்டிகள்!

இந்தக் கலாச்சாரம் மீண்டும் தமிழகத்தைப் பீடிக்க வேண்டுமா? நினைத்துப் பாருங்கள். ஆகவேதான், அரசியல் பார்வை வேண்டாம்; அரசியலைப் பின்னுக்குத் தள்ளுங்கள். ஒரு பண்பாட்டு அடிமைத்தனத்தில், மூளைக்குப் போட்ட விலங்கை, பெரியாருடைய சம்மட்டி உடைத்தது என்றால், மீண்டும் உங்கள் மூளைக்கு விலங்கை மாட்டிக் கொள்ளாதீர்கள். பெரியாரும் - அம்பேத்கரும்தான் அந்த இரண்டு சம்மட்டிகள். அதனை உடைக்கக்கூடிய வாய்ப்பு வரும் வரும் என்று சொல்லி, என்னுரையை முடிக்கிறேன்.

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வாழ்க அம்பேத்கர்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

ஆசிரியர் கி. வீரமணி எழுதிய 'டாக்டர் அம்பேத்கரின் புத்தக் காதலும் புத்தகக் காதலும்!' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி மோகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்

தொல். திருமாவளவன், திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆகியோருக்கு ஆசிரியர் இயக்க நூல்களை வழங்கினார்.  (சென்னை 3.1.2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner