எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'நீட்' தேர்வு பற்றி தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றிய

இரு சட்டங்கள் ஆளுநர் உரையில் இடம் பெறாதது ஏன்?

கோவையில் தமிழர் தலைவர் பேட்டி

கோவை,ஜன.9  'நீட்' தொடர்பாக தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்கள்பற்றி, ஆளுநர் உரையில் இடம் பெறாதது ஏன் என்று வினவினார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கோவையில் நேற்று (8.1.2018)  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

தமிழகத்தில் மருத்துவத் துறை

சிறப்பாக விளங்குகிறதா?

செய்தியாளர்: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது மருத்துவத் துறை சிறப்பாக விளங்குவதாக அ.தி.மு.க. ஆட்சிக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறாரே ஆளுநர்; அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: பொதுவாகவே, ஆளுநர் உரை என்பது இருக்கிறதே, அந்த உரை அமைச்சரவையில் வைக்கப்பட்டு, அவர்கள் தயாரித்து கொடுப்பதை ஆளுநர் படிப்பாரே தவிர, அவர் தயாரித்ததோ, அவருடைய கருத்தாகவோ இருக்க முடியாது. அவருடைய கருத்தாக இருப்பதாகக் கொண்டாலும், இதைவிட உண்மைக்கு மாறானது வேறு இருக்க முடியாது.

‘நீட்' தேர்வுப் பிரச்சினையில்  தமிழக சட்டப் பேரவையில் இரண்டு மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஓராண்டு ஆகியும், அதனுடைய நிலை என்னவென்று தெரியாத நிலையில், மருத்துவத் துறை மிகச் சிறப்பாக விளங்குகிறது என்றால், இதைவிட கேலியான, வேடிக்கை யான, விபரீதமான, உண்மை கலப்பற்ற ஒன்று, வேறு இருக்க முடியாது.

ஆளுநர் உரையின்போது, திராவிட முன்னேற்றக் கழகம் வெளிநடப்பு செய்தது என்றால், அவர்களுடைய உரிமை அது. அதற்கான காரணத்தை அவர்கள் சொல்லி யிருப்பார்கள். ஆளுநர் உரையை ஒரு சம்பிரதாயமாக எழுதிக் கொடுக்கிறார்கள் - அதனை ஆளுநர் படிப்பார்.

இப்பொழுது தமிழகத்தில் நீட் தேர்வினால் மாணவர்கள் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்; அனி தாக்கள் ஏன் தற்கொலை செய்துகொண்டார்கள்? இதற் கெல்லாம் பதில் காண வேண்டாமா? இதற்கு என்ன பரிகாரம்?

இதற்கிடையில், ஆளுநர் அவர்கள் தனியாகவே சென்று ஆய்வு செய்தாரே, அந்த ஆய்வில் அவர் எத்தனை மருத்துவ மனைக்குப் போனார், என்ன செய்தார்? என்பதை வைத்தா சொல்லியிருக்கிறார்?

போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்கலாம்

என்று நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்களா?

செய்தியாளர்: போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்சினையை தீர்க்கவில்லையென்றால், போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கலாம் என்று நீதிபதிகள் சொல்லி யிருக்கிறார்கள். தொடர்ந்து அரசு விஷயங்களில், நீதி மன்றங்கள் தலையிட்டுக் கொண்டிருக்கின்றனவே?

தமிழர் தலைவர்: கொள்கைப்படி அரசு விஷயங்களில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமை கிடையாது. போக்குவரத் துத் துறையை தனியார் மயமாக்கலாம் என்று சொல்வதற்கு நீதிபதிக்கு உரிமை இல்லை. அவர்களுக்கும் ஓர் எல்லை உண்டு.  எனவே, கொள்கை முடிவில் தீர்ப்பு சொல்வதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை.

-  இவ்வாறு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

புதுக்கோட்டை

உயர்ஜாதித்தன ஆதிக்கம், இப்பொழுது புது ரூபத்தில், புது பார்ப்பனியமயமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இதனு டைய விளைவை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.,  குஜராத்தில் மட்டு மல்ல, நாடு முழுவதும் அறுவடை செய்ய இருக்கிறது என்று தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களிடம் கூறினார்.

நேற்று (8.1.2018) புதுக்கோட்டையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

விதைப்பதை அவர்கள் அறுவடை செய்தாகவேண்டும்

செய்தியாளர்: குஜராத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் தலித் மாணவர் ஒருவர், உயர்ஜாதி மாணவர்களால்  துன் புறுத்தப்பட்டதால், தற்கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டு காப்பாற்றப்பட்டு இருக்கிறார். இந்த செயலுக்கு அனைத்து தலித் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள் - இந்த செயலுக்கு உங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: மோடியினுடைய சொந்த மாநிலமாக இருக்கக்கூடிய குஜராத்தில், ஏற்கெனவே உன்னா போன்ற பகுதிகளில் நடந்த நிகழ்வுகள்தான்; தேர்தலில்  பிரதிபலித்தன.

அதேபோல, அண்மைக்காலத்தில் மகாராஷ்டிரத்தில், புனேவிற்குப் பக்கத்தில் வழமையாக நடத்தக்கூடிய ஒரு விழாவில், திட்டமிட்டு அவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த தலித் மக்கள் பெரிதும் தங்கள் வயம் இல்லை; ஆர்.எஸ்.எஸ். பக்கம் இல்லை. அதற்குப் பதிலாக அவர்கள் காங்கிரசு ஆதரவாளர்களாகவும், பா.ஜ.க. எதிர்ப் பாளராகவும் இருக்கிறார்கள் என்பதை மனதில் கொண்டு, அவர்களை அடக்கவேண்டும், ஒடுக்கவேண்டும் என்ற அந்த உயர்ஜாதித்தன ஆதிக்கம், இப்பொழுது புது ரூபத்தில், புது பார்ப்பனியமயமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இதனுடைய  "விளைவை" பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.,  குஜராத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் அறுவடை செய்ய இருக்கிறது.

விதைப்பதை அவர்கள் அறுவடை செய்தாகவேண்டும் என்பது இயற்கையின் நியதி.

தமிழக அரசு பாராமுகமாக இருக்கிறது

செய்தியாளர்: தமிழக மாணவர்கள் தொடர்ச்சியாக வெளி மாநிலங்களில் பாதிக்கப்படுகிறார்கள்; இது தொடர் பாக தமிழக அரசு மாணவர்களின் பாதுகாப்பிற்கு எத்தகைய நடவடிக்கையை எடுக்கவேண்டும்?

தமிழர் தலைவர்: தமிழக அரசு எத்தனையோ விஷயங் களில் பாராமுகமாக இருக்கிறது. அவசர பிரச்சினைகள்கூட அவர்களுக்குத் தெரியாது. இந்த சூழ்நிலையில், அவர்கள் மோடியினுடைய உத்தரவுக்காக ஒரு வேளை காத்திருப் பார்கள்.

ஆன்மிக சாமியார்கள் எல்லாம் இப்பொழுது

பெரும்பாலும் சிறையில்தான் இருக்கிறார்கள்

செய்தியாளர்: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக அரசை பா.ஜ.க.வும், ஆர். எஸ்.எஸ்.சும்தான் பின்புலமாக இருந்து இயக்குகிறது என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இந்த சூழ்நிலையில், ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதுபற்றி உங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: இந்தக் கேள்விக்கு ஏற்கெனவே தெளிவாகப் பதில் சொல்லியிருக்கிறேன். அரசியலில் ஆன்மிக அரசியல் என்று ஒன்று கிடையாது. ஆன்மிக அரசியல் என்பதே பித்தலாட்டம், புரட்டு! காரணம், ஆத்மா என்பதே புரட்டு. ஆகவே, ஆத்மாவை தமிழ் மொழியில் ஆன்மா என்றழைத்தார்கள். ஆன்மா ஆன்மிகம் என்றா யிற்று. ஆன்மிக சாமியார்கள் எல்லாம் இப்பொழுது பெரும்பாலும் சிறையில்தான் இருக்கிறார்கள். ராம்ரகீம் பாபாக்கள்கூட பஞ்சாபிலிருந்து சிறைச்சாலைக்குத்தான் போயிருக்கிறார்கள். எனவே, ஒழுக்கத்தை வலியுறுத்தக் கூடிய ஒன்றாக இருந்தால், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 28 லட்சம் ரூபாய்தான் செலவழிக்கவேண்டும் என்ற விதியை ரஜினி  கடைப்பிடிப்பாரா? அதற்கு என்ன திட்டம் என்று முதலில் விளக்கட்டும்!

அவரைப் பொறுத்தவரையில், உங்களைப் போன்ற ஊடகக்காரர்கள் ஊதி ஊதிப் பெருக்குகிறீர்கள்; ஊடகங் களால் அவர் ஊதிப் பெருக்கப்பட்டவரே தவிர, அவர் கொள்கையால் வளர்க்கப்பட்டவரோ, தியாகத்தால் வளர்க்கப்பட்டவரோ அல்ல.

- இவ்வாறு செய்தியாளர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner