எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஏழுமலையான் கோவில் உண்டியலுக்குக் காவல் ஏன்?

கவிஞர் கனிமொழி கேட்ட கேள்விக்குப் பதில் எங்கே?

வழக்குத் தொடர்ந்தால் சந்திக்க

ஏராள வழக்குரைஞர்கள் தயார்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

திருச்சியில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டில் பங்கேற்ற கவிஞர் கனிமொழி எம்.பி. அவர்கள் திருப்பதி ஏழுமலையானுக்குச் சக்தி யிருந்தால், அக்கோவில் உண்டியலுக்குத் துப் பாக்கி ஏந்திய போலீஸ் ஏன் என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வக்கில்லாமல் சேற்றை வாரி இறைப்பதா? வழக்குத் தொடுக்கட்டும் - சந்திக்கத் தயார் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

உலக நாத்திகர் மாநாட்டில் தி.மு.க. மகளிரணி செயலாளரும், மாநிலங்களவையில் தி.மு.க. தலைவராக உள்ளவருமான கவிஞர் கனிமொழி அவர்கள், "மதங் களால் மக்கள் பிளவுபட்டார்கள்; இரத்தம் சிந்தினர்; சிந்திக் கொண்டே உள்ளனர்" என்றார்.

திருப்பதி உண்டியலுக்குத் துப்பாக்கி

ஏந்திய போலீசார் ஏன்?

"சர்வ சக்தி படைத்ததாகச் சொல்லப்படும் கடவுள்கள், கருணையே வடிவாக உள்ளனர் என்று வர்ணிக்கப்படும் கடவுள்கள் ஏன் ஊனமுற்ற குழந்தைகளைப் பெற வைக்கின்றன? திருப்பதியில் என்னை நாடாளுமன்ற நிலைக்குழுவின் சார்பாகக் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள்; எங்களுடன் வந்தவர் ஒரு எம்.பி., ‘மேடம், நீங்கள் கடவுளை நம்ப மறுக்கிறீர்களே, இங்கே பாருங்கள் எவ்வளவு ஆயிரக்கணக்கான பேர் காத்திருந்து ‘சுவாமி தரிசனத்திற்கு' வந்துள்ளார்கள்! கடவுளின் சக்தியை இப்பொழுதாவது ஒப்புக் கொள்கிறீர்களா?' என்று என்னைக் கேட்டபோது, நான் அவரிடம் திருப்பிக் கேட்டேன். ‘இந்தக் கடவுளுக்கு (திருப்பதி வெங்கடாசலபதிக்கு) அவ்வளவு சக்தி இருந்தால், இதோ அவர் அருகில் வைக்கப்பட்டுள்ள காணிக்கைச் செலுத்தப்படும் உண்டியலுக்குப் பக்கத்தில் ஏன் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் - போலீஸ்காரர்கள் எந்த நேரமும் காவல் காத்துக் கொண்டிருக்கவேண்டும்?' என்று கேட்டேன். அவரால் பதில் சொல்ல இயலாமல், சிரித்தார்" என்றும், "எங்களுக்கு ஸ்பெஷல் தரிசனம், பணம் உள்ளோருக்கு முன்னுரிமை, ஏழை, எளிய பக்தர் களுக்கு வெகுநேரம் காத்திருந்த பின்பே ‘தர்ம தரிசனம்' ஏன்? என்று கடவுள் இப்படி ஏழை, பணக்காரன் என்ற பேத உணர்வோடு நடக்கலாமா?" என்றும் கேட்டார்.

பக்தி சிகாமணிகளே,

புத்தி சிகாமணி ஆகமாட்டீர்களா?

இந்தப் பேச்சினால் மனம் ஒரே அடியாய் புண்ணாகி, ரத்தம் கொட்டோ கொட்டுண்ணு வடிந்து ஆறாக ஓடுகிறதாம்! போலீசிடம் சில அநாமதேய லெட்டர் பேட் விளம்பர வியாபாரிகள் புகார் மனு கொடுத்து, கனிமொழி அவர்கள்மீது வழக்குப் போட வற்புறுத்தியுள்ளார்களாம்!

அட பக்திப் பரவசம் கொண்ட மஹா மஹாபக்த சிகாமணிகளே, நீங்கள் எப்போதுதான் புத்தி சிகா மணிகளாக மாறப் போகிறீர்களோ தெரியவில்லை.

கனிமொழி கேட்ட கேள்விக்குப் பதில் என்ன?

கனிமொழி கேட்ட கேள்விக்கு என்ன பதில்? சர்வ சக்தியுள்ள சாமிகளின், சாமிகளின் பெண்டாட்டிகள் வகையறா உள்பட அவர்களின் சக்தியை நிரூபித்து, நாத்திகர்களையெல்லாம் மனம் மாறச் செய்திட, எல்லா நகைகளையும் அணிவித்து, காவல் இல்லாமல், கதவுகளைத் திறந்து 48 மணிநேரம் வைத்திருந்து கடவுள் சக்தியை நிரூபித்துக் காட்டச் செய்யலாமே!

கடத்தப்பட்டக் கடவுள்களைக் கண்டுபிடிக்க போலீசில் தனிப் பிரிவு ஏன்?

செய்வார்களா? இந்து கடவுள்கள்தானே கடத்தப்படு கின்ற கடவுள்கள்? (மற்ற மதக் கடவுள் நம்பிக்கைகளையும் பகுத்தறி வாளர்களோ, நாத்திகர்களோ ஏற்பதே இல்லை என்பதும் உண்மை - முக்கியம்) கோவிலுக்கு உள்ளே இருக்கும்போது அவை ‘கடவுள்கள்', களவு போன அந்தக் கடவுள்களைக் கண்டுபிடித்து மீட்டுக்கொண்டு வந்த பிறகு, சிலைகளா? அதற்கென்றே தனி சிலைத் திருட்டு தடுப்பு - கண்டுபிடிப்புப் பிரிவு போலீஸ் என்று உள்ளதே! அதற்கெல்லாம் புண்படாத உங்கள் மெல்லிய(?) மனது, இந்தப் பேச்சைக் கேட்டு புண்பட்டு விட்டதோ!

அடிக்கடி பெரியார் திடலுக்கு வந்து அங்கு நடை பெறும் சிந்தனையைத் தூண்டும் உரைகளைக் கேளுங்கள் புண் சரியாகி  பண்பட்ட மனிதர்களாகி விடுவீர் நீவிர்!

கவிப் பேரரசு வைரமுத்து என்றாலும் சரி, கவிஞர் கனிமொழியாக இருந்தாலும் சரி - அபவாதம் பேசி அடியாள் தன்மையுடன் மிரட்டலாம் என்று நினைத்தால் தந்தை பெரியார் பிறந்த மண் அதனைக் கம்பீரமாகவே எதிர் கொள்ளும்.

தரக்குறைவான பேச்சுக்கு நாங்கள் இறங்க மாட் டோம் அப்படி வீண் வம்புக்கு அழைத்தால் - நீங்கள் யாரும் - ‘கைபர் கணவாய் கூட்டம் தாங்கவே முடியாது' எச்சரிக்கை.

வழக்கு வந்தால் சந்திக்கத் தயார்!

வெற்றுப் பூச்சாண்டி, மிரட்டல் எல்லாம் திராவிடர் இயக்கத்தவர்களிடம் நடக்காது. நெருப்பாற்றிலேயே நீந்தி வந்தவர்கள் - வருபவர்கள் நாங்கள் என்பதை மறவாதீர்!

வழக்கு வந்தால், நூற்றுக்கணக்கில் வழக்குரைஞர்கள் பலரும் வாதாட வரிசையில் அணி வகுப்பார்கள் மறவாதீர்கள்!

கி.வீரமணி 
தலைவர்,   திராவிடர் கழகம்.சென்னை
11-1-2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner