எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உச்சநீதிமன்றத்தின்  தலைமை நீதிபதிக்கு எதிராக கொதி நிலை வெடித்துள்ளது

நீதித் தராசு ஒரு பக்கம் சாய்ந்து விட்டால்,

பிறகு எதேச்சதிகாரக் கொடிதான் பறக்கும்

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

இராமாயணம், கீதை, மனுதர்ம நூல்கள் கொளுத்த நாள் குறிப்போம்

உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நேற்று (12.1.2018) பத்திரிகையாளர் சந்திப்பு என்ற இதுவரை நிகழாத ஒரு அசாதாரண நிலையை ஏற்படுத்தியுள்ளனர். நீதித் தராசு ஒரு பக்கம் சாய்ந்து விட்டால், நாட்டில் ஜனநாயகம் விடை பெற்று எதேச்சதிகாரக் கொடிதான் பறக்கும் அவலம் ஏற்படும். அது தடுக்கப்பட வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

உச்சநீதிமன்றம்தான் - தற்போதைய அரசியல் சட்ட முறையில் மக்களுக்கு நீதி கிடைக்க ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாகும்.

ஜாதி உணர்வும், மேல் ஜாதி ஆதிக்கமும் நீதித்துறையில் துவக்கம் முதலே தனது விளையாட்டை சில நேரங்களில் வெளிப்படையாகவும், பல நேரங்களில் மறைமுகமாகவும் நடத்தி வருகின்றன.

உச்சநீதிமன்றத்தில் சமுகநீதிக் கொடி தலை தாழ்ந்தே பறக்கிறது - வெகு நீண்ட காலமாகவே!

சட்டவிதிகளில் இல்லாத 'கொலிஜியம்'

"கொலிஜியம்" என்ற இந்திய அரசியல் சட்டத்தின் விதிகளில் இல்லாத ஒரு முறையை வெகு சாமர்த்தியமாகவும், தங்களது சில தீர்ப்புகள் மூலமும் ஏற்படுத்திக் கொண்டு, சமூகநீதியை குழி தோண்டிப் புதைக்க வழிவகை செய்தனர்!

இப்போது உச்சநீதிமன்றத்தின் கொதி நிலை வெளியே வெடித்துக் கிளம்பி, நீதித்துறையின் சுதந்திரம் பறிப்பது எப்படி நிகழ்கிறது என்பதை மனம் வெதும்பி - உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நேற்று (12.1.2018) பத்திரிக்கையாளர் சந்திப்பு என்ற இதுவரை நிகழாத ஒரு அசாதாரண நிலையை ஏற்படுத்தியுள்ளனர்! அதில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் தீபக் மிஸ்ராவின் 'தானடித்த மூப்புத்தனத்தை'க் கண்டு வெதும்பி, தாங்கள் அவருக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தை, மக்களுக்குப் பகிரங்கப்படுத்தியுள்ள, நாட்டில் இதுவரை ஏற்படாத மிக அசாதாரண நிலை அகிலத்தின் கவனத்திற்குரியதாகும்!

அய்ந்து முக்கிய பிரச்சினைகள்

அந்த நான்கு முக்கிய நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ள அய்ந்து முக்கிய பிரச்சினைகளை நாம் இதே பக்கத்தில் தனியே தந்துள்ளோம்.

தலைமை நீதிபதி என்பவர் உயர்நீதிமன்றங்களிலும் சரி, உச்சநீதிமன்றத்திலும் சரி மற்ற நீதிபதிகளுக்கு மேல் உள்ள தலைமை ஆசிரியர் அல்ல. மாறாக, சமமான அதிகாரம் உள்ளவர்களில் முதல் நிலையில் உள்ளவர்.

அவருக்கு நிர்வாகப் பொறுப்பு உண்டு. அதுகூட மரபு வயப்பட்டதே தவிர வேறில்லை. சக நீதிபதிகளிடம் விருப்பு, வெறுப்பின்றி ஓர் குடும்பம் போல நடத்தி நீதி பரிபாலனத்தைக் கொண்டு செலுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தலைமை நீதிபதிக்கு உண்டு.

ஆனால் 4 மூத்த நீதிபதிகளின் 5 குற்றச்சாற்றுகளைப் பார்க்கும்போது, அவர் கடமை தவறியது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளதன் மூலம் தனது நீதித்துறை  சுதந்திரத்தைக் கேலிக் கூத்தாக்கி விட்டார் என்ற உணர்வே மக்களிடம் பரவியுள்ளது.

தலைமை நீதிபதியின் விரும்பத்தகாத போக்கு

குஜராத்தில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவின் வழக்கை விசாரித்த சி.பி.அய்.  நீதிபதி லோயா மர்ம மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தியதில் தலைமை நீதிபதியின் விரும்பத் தகாத போக்கு, ஏற்கெனவே மருத்துவக் கல்லூரி வழக்கு ஒன்றில் லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற நீதிபதியைக் காப்பாற்ற, தன்னுடைய அமர்வுக்கு அவ்வழக்கை  கொணர்ந்தது முன்பே ஒரு பிரச்சினையாக வெடித்தது!

இதுபோன்ற நிலைதான் 'நீட்' தேர்வில் உச்சநீதிமன்றத்தின் போக்கு, மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவே, மாநில உயர்நீதிமன்ற வழக்குப், பற்றிய அலட்சியம், முதலியவற்றில் அனிதாக்களை தற்கொலை முடிவுக்குத் துரத்திட்ட வேதனையான நிலையும் முதலிய பல உள்ளன!

தலைமை நீதிபதி விலகுவதுதான் ஒரே தீர்வு!

சக நீதிபதிகளின் கருத்துக்கே மதிப்பளிக்காததால், அரசியல் கட்சி கோஷ்டிகள் போல உச்சநீதிமன்றத்திலும் ஏற்பட்டுள்ளது விரும்பத்தக்கதல்ல என்பதோடு தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. மூத்த நீதிபதிகளின் கருத்துச் சுதந்திரம், நிர்வாக அறிவின் அங்கீகாரம் மதிக்கப்படவில்லை என்ற குமுறலுக்குக் காரணமானவர், இது இரண்டாவது முறை இப்படி நடைபெறுவது என்றால் இதற்கு சரியானத் தீர்வு, இந்த தலைமை நீதிபதி விலகுவதுதான் உச்சநீதிமன்றத்தின் ஒரே தீர்வாக இருக்க முடியும் என்பது பலரது கருத்து.

அல்லது அவர்மீது "இம்பீச்மெண்ட்" தீர்மானத்தை வருகின்ற பட்ஜெட் தொடரிலாவது கொண்டு  வந்து அதுபற்றி நாடாளு மன்றத்தில் விவாதித்து முடிவு எடுப்பது தான் அவசர அவசியமாகும் என்பதும் பேச்சாக உள்ளது.

ஒருமித்த முடிவு தேவை!

இதுபற்றி எதிர்க்கட்சிகள் நல்ல ஒருமித்த முடிவை எடுப்பது நல்லது!

இந்தப் பிளவுமூலம் ஆளுங்கட்சி உச்சநீதித்துறையை தன் வயப்படுத்தியுள்ளதோ என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் விதைப்பதாக அமைந்து விடக் கூடாது என்பதே நமது கவலை.

'ஊர் இரண்டு பட்டால்' யாருக்கு மகிழ்ச்சி? அந்நிலை ஏற்பட்டு விட்டால் பகிரங்கமாகவே நீதித்துறை அசல் மனுதர்ம நீதியாக - ஒரு குலத்துக்கொரு நீதியாகி - நீதித் தராசு ஒரு பக்கம் சாய்ந்து விட்டால், நாட்டில் ஜனநாயகம் விடை பெற்று எதேச்சதிகாரக் கொடிதான் பறக்கும் அவலம் ஏற்படும். இது தடுக்கப்பட வேண்டும்!

 

கி. வீரமணி,

தலைவர்,       திராவிடர் கழகம்

சென்னை    
13-1-2018

=============

அய்ந்து முக்கிய பிரச்சினைகள்

தலைமை நீதிபதியின் தகாதப் போக்கை எதிர்த்த உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நால்வர். (நீதிபதிகள் 1. ஜலமேசுவர், 2. ரஞ்சன் கோகாய், 3. எம்.பி. லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர்)

5 முக்கிய பிரச்சினைகள்

1. அனைத்து மிகவும் முக்கிய வழக்குகளையும், தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு மட்டுமே விசாரிக்கிறது; மற்ற மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு அவை ஒதுக்கப்படுவதில்லை.

2. மிகவும் முக்கியமான பிரச்சினை உள்ள வழக்குகளை, விதிகளின்படி இல்லாமல், தனக்கு விருப்பமான அமர்வுகளுக்கே தலைமை நீதிபதி ஒதுக்குகிறார்.

3. குறிப்பாக,  நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்த முக்கியமான வழக்கு, மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு ஒதுக்காமல், 10ஆவது நீதிமன்ற அமர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

4. மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். உதாரணத்துக்கு, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான ஊழல் வழக்கை, தலைமை நீதிபதி, நீதிபதிகள் கோகாய், எம்.பி.லோகூர், குரியன் ஜோசப் மற்றும் தான் அடங்கியுள்ள அய்ந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றிட, நீதிபதி சலமேஸ்வர் அமர்வு பரிந்துரைத்தது. ஆனால், அந்த வழக்கு, 7ஆவது நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டது.

5. முன்பு, அய்ந்து நீதிபதிகள் அமர்வு விசாரித்த வழக்குகளை, சிறிய அமர்வில் இடம்பெற்றுள்ள தலைமை நீதிபதி விசாரித்து வருகிறார்.

மூத்த வழக்குரைஞர்களும் முன்பு இப்படிப்பட்ட புகார்களைக் கூறியுள்ளனர். அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை என்பதும்கூட பாய்ந்துள்ளது!

இந்நிலையில் உச்சநீதிமன்றமே மக்களின் நம்பகத் தன்மையை இழப்பதா?

மற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், நிர்வாகம் - இவைகளிலும் உச்சநீதிமன்றம் குற்றச் சாட்டுகளைச் சுட்டிக்காட்ட அதற்கு தார்மீக உரிமையும், தகுதியும் இருக்குமா என்பதும் நடுநிலையாளர்களின் கேள்வி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner