எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 24ஆம் ஆண்டு விழா - இன உணர்வுத் தீயாக எழுச்சிக்கோலம்!

பொங்கல் விழா வெறும் கேளிக்கையன்று, பண்பாட்டுப் படையெடுப்பை தகர்க்கும் போர்!!

தமிழர் தலைவர் போர் முரசம்

சென்னை, ஜன.17 தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு விழா, பொங்கல் விழா திராவிடர் திருநாள், தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 24 ஆம் ஆண்டு விழா சென்னை வேப்பேரி பெரியார் திடல் எம்.ஆர்.ராதாமன்றத்தில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றது.

இரண்டாம் நாள் விழா

திராவிடர் திருநாளில் படத்திறப்பு மற்றும் பெரியார் விருது வழங்கும் விழாவில் கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்றார்.  பத்திரிகையாளர் கோவி.லெனின் அறிமுக உரையாற்றினார். வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி இணைப்புரை வழங்கினார்.  பொறியாளர் இன்பக்கனி, க.பார்வதி, கு.தங்கமணி, வி.வளர்மதி, பூவை செல்வி, வனிதா, பசும்பொன் செந்தில்குமாரி, க.சுமதி, கும்மிடிப்பூண்டி செல்வி, பா.மணியம்மை, கோவி.கோபால் முன்னிலையில் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை யுரையாற்றினார்.

பல்துறைகளைச்சார்ந்தவர்களான திரைப்பட நடிகர் இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன், மாரத்தான் வீரர் சட்டமன்ற உறுப்பினர் சைதை மா.சுப்பிரமணியன், இன் னிசை ஏந்தல் திருபுவனம் ஆத்மநாதன், இயக்குநர் ஒளிப் பதிவாளர் செழியன், ஓவியர் அபராஜிதன், கவிஞர் சல்மா ஆகிய அறுவரின் சாதனைகளைப் பாராட்டி, தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில்  Ôபெரியார் விருதுÕ வழங்கி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

படத்திறப்பு

தமிழறிஞர் மணவை முஸ்தபா, இயக்குநர், நடிகர் மணிவண்ணன் ஆகியோரின் படங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார். படத்திறப்பையடுத்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் எழுச்சி முழக்கம்

மணவை முஸ்தபா அறிவியலில் தமிழ் வளர்த்தவர்.  யுனெஸ்கோ அமைப்பின் கூரியர் இதழ் உலகெங்கிலும் பல மொழிகளில் வெளியிடப்படுகிறது. தமிழில் அதன் ஆசிரியராக மணவை முஸ்தபா இருந்தார். நம்முடையவர்கள் நுழைய முடியாத அளவுக்கு  கடுமையானத் துறையாக திரைப்படத்துறை இருந்து வந்துள்ளது. இயக்குநர் மணி வண்ணன் படம் இங்கே திறக்கப்படுகிறது. அவரால்தான் இனமுரசு சத்தியராஜ் பகுத்தறிவுப் பாதையைப் பெற்றார் எனும் அளவுக்கு சிறந்த சாதனைகளை செய்தவர். பெரியார் விருது பெற்றவர். திராவிடம்தான் சகோதரத்துவம், மனித நேயத்தை காப்பாற்றுவது. யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் பண்பாட்டைக் கொண்டது. தமிழ் மொழியை செம்மொழியாக்கியதும், தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவித்ததும் கலைஞரின் சாதனைகளாகும். திராவிடம் இல்லாமல் தமிழ்நாட்டில் எந்த பருப்பும் வேகாது. இங்கே குழுமியுள்ள கூட்டத்துக்கு நாங்கள் எதைக் கொடுக்கிறோம்?  தன்மானம், இனமானம் கொடுக்கிறோம். இங்கே குடும்பம் குடும்பமாக வந்துள்ளீர்கள். எதை நாம் இழந்தோமோ அதை நாம் பெற்றாக வேண்டும்.

தந்தை பெரியார் சொன்னதைப்போல, எந்த இடத்தில் தொலைத்தோமோ அந்த இடத்தில் அதைத் தேடவேண்டும்.

117 ஆண்டுகளுக்கு முன்பு அபிதான சிந்தாமணியில் 1691ஆம் பக்கத்தில் சித்திரையில் தமிழ் வருஷப்பிறப்பு, 60 வருஷங்கள் கிருஷ்ணனுக்கும், நாரதனுக்கும் பிறந்தவையே என்று அதில் கூறப்பட்டுள்ளது. தமிழ்ப்புத்தாண்டு என்று நாம் சொல்கிறோம்.

புரட்சிக் கவிஞர் கூறியுள்ளாரே,

நித்திரையில் இருக்கும் தமிழா

சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு

அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே

அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழருக்கு

தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு.

60 வருஷங்களும் புராணப்படி கிருஷ்ணனுக்கும், நாரத னுக்கும் பிறந்ததென்றால், ஆணுக்கும் ஆணுக்கும் பிறந் தவையா? இதை நாங்கள் சொல்லும் போது புண்படுகிறது என்றால், புண்பட்டவர்களை எல்லாம் நீதிமன்றத்துக்கு அழைக்கிறோம். முடிந்தால் அறுவை சிகிச்சை செய்வோம்.

60 வருஷங்களில் ஒரு பெயராவது தமிழ்ப்பெயர் உண்டா?

பண்பாட்டுப் படையெடுப்பு, மொழி, இனம் அழிப்பு அல்லவா?

திராவிடம், ஆரியம் இரு வேறு பண்பாடுகள்.

திருக்குறள் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிறது. உழவுத் தொழிலை போற்றுகிறது. உழவர் திருநாள் அறுவடைத்திருநாள் பொங்கல் விழா.

உலகெங்கிலும் அறுவடைத்திருவிழா நடைபெறுகிறது.

மனு தர்மம் அதற்கு எதிரானது.

மனுதர்மம் 10ஆவது அத்தியாயம் 84ஆவது சுலோகத்தில் பயிர்த்தொழில் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது.

"சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக் கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப் பட்டது. ஏனெனில்,- இரும்பை முகத்திலேயுடைய கலப்பை யும், மண் வெட்டியும் பூமியையும், பூமியிலுண்டான பலபல ஜெந்துக்களையும் வெட்டுகிறதல்லவா!"

இவ்வாறு மனுதர்மம் கூறுகிறது.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்கிறது குறள்.

அம்பேத்கர் எழுதிய அரசமைப்புச்சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு, அந்த இடத்தில் மனு தர்மத்தை கொண்டு வருவோம் என்கிறார்கள்.

இந்த விழாக்கள் வெறும் கேளிக்கைக்காக இல்லை. இது ஒரு பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிரான போர்.

நம் நாட்டில் தேர்தல் பெயரால் இனப்போராட்டம் இன்றும் அன்றும் நடக்கிறது.

சேலம் மாநாட்டில் ராமனை செருப்பால் அடித்ததாகக் கூறி, ஆரியர் - திராவிடர் போராட்டத்துக்கு வித்திட்டனர் பார்ப்பனர்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் கடிதம்  எழுதி, அதை அப்படியே "விடுதலை"யில் போடவேண்டும் என்று அனுப்பி வைத்தார்.

"எது வேண்டும்?

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

- இது உண்மை சமயம்

இன்று Ôஆஸ்திகம்Õ என்பது உயர் சாதியினரின் நலம்.

இன்று Ôநாஸ்திகம்Õ  என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலம்.

உங்களுக்கு இதில் எது வேண்டும்?

- தவத்திரு குன்றக்குடி அடிகளார் "

என்று கட்டம் கட்டி "விடுதலை"யில் 18.2.1971 அன்று வெளியானது.

ராஜாஜி கூறினார், தமிழ்நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதியில்லாமல் ஆகிவிட்டது என்றார். நாவலர் கேட்டார் எப்போழுது கிளம்புகிறீர்கள்? நீங்களாக கிளம்புகிறீர்களா? நாங்கள் வழி அனுப்ப வரவேண்டுமா? என்றார்.

மீண்டும் திரும்பப்போகிறது வரலாறு எனத் தமிழர் தலைவர் எழுச்சி முழக்கமிட்டார்.

Ôபெரியார் விருதுÕ

திரைப்பட நடிகர் இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன், மாரத்தான் வீரர் சட்டமன்ற உறுப்பினர் சைதை மா.சுப்பிரமணியன், இன்னிசை ஏந்தல் திருபுவனம் ஆத்மநாதன், இயக்குநர் ஒளிப்பதிவாளர் செழியன், ஓவியர் அபராஜிதன், கவிஞர் சல்மா ஆகியோருக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து தந்தை பெரியார் முழு உருவ சிலை, இயக்க புத்தகங்களுடன்  Ôபெரியார் விருதுÕ வழங்கி பாராட் டினார். Ôபெரியார் விருதுÕ பெற்ற அனைவரும் நெகிழ்ச்சியுடன்  உரையாற்றினார்கள்.

பெரியார் விருது பெற்ற அனைவரின் ஏற்புரையைத் தொடர்ந்து, தமிழர்களின் நன்றியறிதல், இனஉணர்ச்சியைப் பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை யாற்றினார். நம்முடைய மாரத்தான் ஓட்டமான இனப் போராட்டத்தில் எதிரி ஓடி ஒளிய வேண்டும். திராவிட இனத் தின் எழுச்சி என்பது வீழ்ச்சியுற்ற இனத்தின் எழுச்சியாக வெடிக்கும். வாகைசூடுவோம் என்று எழுச்சியுரையில் குறிப்பிட்டார்.

குடும்ப விழா

திராவிடர் திருநாளின் இரண்டாம் நாளில் குடும்ப விழா நடைபெற்றது. காலை முதல் மாலை வரை பெரியார் பிஞ்சுகள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இளை ஞர்கள், பெண்கள், மணமாகாதவர்கள், மணமானவர்கள், இணையர் என பல்வகையினருக்கும் விளையாட்டுப் போட்டிகள், கடவுள், மதம், ஜாதி ஒழிக்கப்பட வேண்டியவை என்பதை உணர்த்தும் வகையில் பானை உடைப்புப் போட்டியில் பலரும் பங்கேற்று பானையை சுக்குநூறாக உடைத்தனர். போட்டிகளில்  பெரும் உற்சாகத்துடன் பலரும் பங்கேற்றனர்.

கலை நிகழ்ச்சி, தீப்பந்தங்களுடன் சிலம்பாட்டம்

பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலை அருகில் கலைநிகழ்ச்சிகளை கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலை மையில் தோழர் ஓவியா பறையொலி எழுப்பித் தொடங்கி வைத்தார். அலங்காநல்லூர் சமர் கலைக்குழுவினரின் பறையொலி முழங்க இளைஞர்கள், பெண்கள், மழலையர் குதூகுல ஆட்டங்களுடன் ஊர்வலமாக பெரியார் திடலில் ஏராளமானவர்கள் எழுச்சிமிக்க திராவிடர் திருநாள் விழாவில் பங்கேற்றனர். பெரியார் வீர விளையாட்டுக்கழகம் சார்பில் பறையொலிகளின் பின்னணியில் இருபால் இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்ற சிலம்பாட்டம், தீப்பந்த சிலம்பாட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. மயிர்க்கூச்செரியச் செய்யும் வண்ணம் இளைஞர்கள், பெண்கள் வாயிலிருந்து தீயினை கக்கி சாகசங்களை புரிந்தார்கள்.

இரண்டு நாள்களிலும் வழிநெடுகிலும் கழகக் கொடி களுடன் கரும்புகளும்  இணைத்து கட்டப்பட்டிருந்தன. உணவு அரங்கங்கள், சிறுவர்களைக் கவரும் விளையாட்டு அரங்கம், உணவு பண்டங்களுக்கான அரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளுடன் பெரியார் திடல் திராவிடர் திருநாளில் திருவிழாக்கோலம் பூண்டது.

தமிழ் இசை வரலாறு ஒளிப்படம்,

இசைக் கருவிகள் கண்காட்சி

விழாவுக்கு வருகைதந்த பலரும் தமிழ் இசை வரலாறு ஒளிப்படக் கண்காட்சி, இசைக்கருவிகளின் கண்காட்சி மற்றும் செயல் விளக்கம் சிறப்பாக தனித்தனியே அரங் குகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தமிழ் இசை வரலாறை எடுத்துக்காட்டும் வகையில் தமிழ்ப்பண்களின் பெயர்கள், குறிப்புகள் படக்காட்சிகளாக அமைக்கப்பட்டி ருந்தன. பார்வையாளர்கள் பலரும் பெரிதும் ஆர்வத்துடன் அரங்குகளுக்கு சென்ற வண்ணமிருந்தார்கள்.

இசைக்கருவிகள் கண்காட்சி அரங்கில் பால் சங்கு, கோமுடி சங்கு, வலம்புரி சங்கு (போர்ச்சங்கு), மாட்டுக் கொம்பிலிருந்து உருவாக்கப்பட்ட குக்கரை, குத்தேரி (டிரம்பட்), நெடுந்தாரை, டமருகம் (உடுக்கை), கஞ்சிரா, உடல், தாளம், கொட்டு (தமுக்கு), இசை கிண்ணம், பலகை, தப்பு, பறை, சட்டி, தவண்டை (பம்பை), கோமுக வாத்தியம், முகவீணை, கோணை தாரை (எஸ் கொம்பு) உள்ளிட்ட பல்வேறு தோல் கருவிகள், காற்று கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. இசைக்கருவிகளை இயக்குவதற்கான நுட்பங்களுடன் விளக்கங்களைப் பெற்றுப் பயன்பெற்றனர்.

விழா முடிவில் பகுத்தறிவாளர் கழக அமைப்புச் செயலாளர் இரா.தமிழ்செல்வன் நன்றி கூறினார்.

திராவிடர் திருநாள் - இரண்டு நாள்கள் நடைபெற்ற அத்துணை நிகழ்ச்சிகளும் இணையத்தில் நேரலை செய்யப் பட்ட சிறப்பு பெற்றன. நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களாகப் பங்கேற்ற பலராலும் முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் நிகழ்ச்சிகள் நேரலை செய்யப் பட்டன. திராவிடர் திருநாள் எனும் இனமான மீட்புக்கான, பண்பாட்டு மீட்டுருவாக்கத்துக்கான விழா, தங்கள் விழா என பங்கேற்ற அனைவரும் ஒரு குடும்ப உணர்வுடன் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தனர்.

திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல், பெரியார் கலை இலக்கிய அணி, பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை, பெரியார் களம், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் உள்ளிட்ட அமைப்புகளின் ஏற்பாட்டில் கழகத் தோழர்கள் குடும்பத்தினருடனும், பொதுமக்கள் பலரும் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner