எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தமிழ்நாட்டிலிருந்து வடமாநிலங்களுக்கு படிக்க செல்லும் மாணவர்கள் கொலை செய்யப்படுவது தொடர்கதையாகிவிட்டது. இவற்றின் மீது விசாரணை நடத்தப்பட்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை  வருமாறு:

டில்லி யூசிஎம்எஸ் மருத்துவமனையில் திருப்பூரைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவர் அங்குள்ள விடுதி கழிவறையில் சடலமாகக் காணப்பட்டார். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. சாய ஆலை நடத்தி வருகிறார். இவரது மகன் சரத்பிரபு. கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்த இவர், டில்லி யூசிஎம்எஸ் (University College of Medical Sciences (UCMS)) மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ். படித்து வந்தார்.

விடுதியில் தங்கி படித்து வந்த அவர் நேற்று முன்தினம் இரவு (16.1.2018) கழிவறையில் காயத்துடன் கிடந்தார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் அவர், சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார் என்று கூறுகிறார்கள். பின்னர் அவரது உறவினர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து செல்வமணி, தனது நண்பருடன் கோவை யிலிருந்து டில்லிக்கு விமானம் மூலமாக புறப்பட்டார்.

இதுகுறித்து அவரது தந்தை செல்வமணி கூறுகையில்,

‘‘நேற்று இரவு எனது மகன் காயங்களுடன் கிடப்ப தாகத்தான் கூறினார்கள். இதனால் பதறிய நான் எனது மகனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக் குமாறு என்னுடன் தொலைபேசியில் பேசியவரிடம் கூறினேன். ஆனால், இன்று காலை எனது மகன் இறந்துவிட்டார் என்கிறார்கள்’’ என்றார் செல்வமணி. இதுபோல் தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களில் படிக்கச் செல்லும் மாணவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையிலும், தற்கொலை செய்து கொண்டும் இறக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

ஜாதியப்பாகுபாட்டால் அழிந்து போகும் விலைமதிப்பில்லா கருவூலங்கள்

குஜராத் மாநிலம் அகமதாபாத் மருத்துவக் கல்லூரி யில், தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் மாரிராஜ், முது நிலை படிப்பை படித்து வருகிறார். இவர் ஜனவரி 7 ஆம்தேதி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு மயக்கமடைந்தார். சக மாணவர்கள் மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அகமதாபாத் மருத்துவமனையில் சக மருத்துவர்கள் ஜாதிப் பாகுபாடு காட்டுவதாகவும், அறுவை சிகிச்சை அரங்கிற்குள் அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூறி மாரிராஜ், தற்கொலை முடிவை எடுத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஜாதிப்  பாகுபாட்டால் தற்கொலை முயற்சி மேற் கொண்டதாக குஜராத்தில் மருத்துவம் பயிலும் தமி ழக மாணவர் குற்றஞ்சாட்டி உள்ளார். முக்கியமாக தமிழகத்தில் இருந்து உயர்கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் மீது இது போன்ற ஜாதிவாத வன்முறைகள் அதிகம் தொடர்கின்றன.

இந்த ஜாதிவாத வன்முறையில் சிக்குபவர்கள் தாழ்த் தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மட்டுமே!

நினைவிருக்கிறதா- ரோகித் வேமுலா?

இந்தியாவில் அனைத்துப் பகுதியிலும் உயர்கல்வியில் ஜாதியப் பாகுபாடுகள் இருப்பதை யாரும் மறைக்க முடியாது, உலகப் புகழ்பெற்ற விண்ணியல் மேதை கார்ல் சகனுக்கு இணையான ஒரு விண்ணியல் மேதையாக வருவார் என்று கணிக்கப்பட்டவர் ரோகித் வேமுலா, அவரது மரணத்தைத் தொடர்ந்து கார்ல் சகனின் மனைவி எழுதிய இரங்கல் கடிதமே சான்று. ஆனால், ரோகித் வேமுலா ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ரோகித் வேமுலாவை மேலும்படிக்கவைத்தால்அவர்உலகப்புகழ்பெற்று விடுவாரோஎன்றகொடியஎண்ணத்தின்காரணமாக அவருக்குப் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. அவருக்குவழங்கப்பட்டகல்விஉதவித்தொகை நிறுத்தப்பட்டது, அம்பேத்கர் விழாவை பல்கலைக்கழகத் தில் நடத்தினார் என்பதற்காக அவரை வேறு ஒரு காரணம் கூறி வகுப்பறைக்கு வரக்கூடாது என்று அறிவிப்புப் பலகையில் எழுதினர். மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்பதற்காக அவர் கொடுத்த ஆய்வுக்கட்டுரைகளை குப்பையில் வீசியது போன்ற நடவடிக்கைகளை பல் கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டது. இருப்பினும் அவர் தன்மீது நடத்தப்படும் இதுபோன்ற அவமானகரமான செயல்களால் மனம் சோர்ந்துவிடாமல், கல்வியில் கவனம் செலுத்தினார். இதனால் தெலங்கானாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் அப்போதைய மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி யிடமிருந்து பல்கலைக்கழகத்திற்கு மேலும் அழுத்தங்கள் வர, ரோகித் வேமுலா  பல்கலைக்கழக விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.  இறுதியாக தனது கல் வியை இவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு தொடரமுடியாது என்ற நிலையில் மரணத்தைத் தழுவி னார். இது ஓர் அப்பட்டமான படுகொலை என்று உஸ்மானிய பல்கலைக்கழக பேராசிரியர் காஞ்சா அய்லையா கூறியிருந்தார்.

ரோகித் வேமுலா தொடர்ந்து முத்துக்கிருஷ்ணன், ஜோயல் பிரகாஷ் மரணமே சாட்சி. இதை தமிழக மாணவர்கள் என்று மட்டும் சொல்ல முடியாது. தென் இந்திய மாணவர் எனும் நிலைப்பாட்டிலும் ஒடுக்கப்படும் சமுதாயத்தில் இருந்து வரும் மாணவர்களின் நிலையில் இருந்தும் பார்க்கவேண்டும். கல்வி அமைப்புகளில் கண் டிப்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு சீரமைக்க வேண்டும்.

முத்துக்கிருஷ்ணன் (13.3.2017)

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் ஆய்வு படிப்பு மேற்கொண்டவர் சேலத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன், முனிர்க்காவில் உள்ள தனது நண்பனின் அறைக்கு ஹோலி கொண்டாட சென்றார்.

பின்னர் தனது நண்பர்களிடம் உறங்கச் செல்வதாகக் கூறியுள்ளார். அதன் பின்னர், அவரது நண்பர்கள் வெகுநேரமாக அறையை தட்டியும் திறக்காததால், போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, முத்துக்கிருஷ்ணன் தூக்கில் தொங்கியது தெரியவந்தது.

இந்நிலையில் 2017, மார்ச் 10 ஆம் தேதி முத்துக்கிருஷ் ணன், தனது முகநூல் பக்கத்தில்  ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர் சேர்க்கையில் ஜாதி பார்க்கிறது,  ஆய்வு மாணவர்களுக்கு ஜாதிரீதியாக பாரபட்சம் காட்டப்படுவதாகவும் திறமையானவர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்றும் எழுதியிருந் தார்.

திருப்பூர் சரவணன் (10.7.2016)

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதுகலை முதலாமாண்டு பயின்று வந்த தமிழகத்தின் திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரவணன், கடந்த ஜூலை 10 இல் (2016) அவரது விடுதி அறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். சரவணன் தற்கொலை செய்து கொள்வதற்கான வாய்ப்பில்லை. அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று சரவணனின் பெற்றோர்கள் தெரிவித்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து, சரவணனின், உடலினை மீண்டும் உடற்கூறாய்வு செய்யவேண்டும் என அவரது தந்தை டில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து மருத்துவர் சுதிர் கே.குப்தா தலைமையிலான மருத்துவக் குழுவினர் சரவணனின் உடலை, உடற் கூறாய்வு செய்து உடற்கூறாய்வு அறிக்கையை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், சரவணன் தற் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், அவரது உடலில் யாரோ விஷ ஊசி செலுத்தியிருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பின்னர் அவரது மரணம் கொலை என்று நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு, தற்போது விசாரணையில் இருக்கிறது. உயர்கல்வி நிலையங்களில்  ஜாதி ரீதியான தனிமனித வன்முறை பிரச்சினையினை பெருமளவில் சந்திக்கிறார்கள்.  2008 ஆம் ஆண்டு இயற்பியல் பிரிவில் ஆராய்ச்சி செய்து வரும் செந்தில்குமார் கடுமையாகப் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கல்வி நிறுவனங்களில் குறிப்பாக, வட மாநிலங்களில் பல்கலைக் கழகங்களில் மத அமைப்புகள் உள்ளே புகுந்து விட்டன.  அதனை எதிர்த்து மாணவர்கள் குரல் கொடுக்கும் போது அவர்கள் தாக்குதலுக்கு ஆளாகு கிறார்கள்.

படிக்கச் செல்லும் மாணவர்கள் படுகொலை செய்யப்படுவது பச்சையான காட்டுமிராண்டித்தனமாகும்.

இந்தப் பிரச்சினை தொடர்ந்து மாணவர்களிடையே வடக்கு தெற்கு பிரச்சினையாக வெடித்துக் கிளம்பக் கூடிய அபாயம் இருப்பதை அலட்சியப்படுத்த முடியாது.

கல்வி நிறுவனங்களில் ஜாதிப் பாகுபாடுகள் இருந் தால் அந்தக் கல்வி நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுப்பதை உடனே அமலுக்குக் கொண்டு வர வேண்டும். வெளிமாநிலத்திலிருந்து படிக்க வருகிறவர்களுக்கு உரிய வகையில் பாதுகாப்பு உத்தரவாதம் அவசியம் தேவை.

குற்றவாளிகள் காலங்கடத்தப்படாமல் தண்டிக்கப்பட் டால்தான் இத்தகு குற்றங்கள் தொடர்வது தடுக்கப்பட முடியும்.

 

கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.


சென்னை
18.1.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner