எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எங்களது 2018ஆம் ஆண்டு பணி அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையே

கவிப் பேரரசுக்குக் கருத்துக் கூற உரிமை உண்டு

கருத்தால் வெல்ல முடியாதவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்

நெல்லை செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி

திருநெல்வேலி, ஜன.19-  கவிப் பேரரசு வைரமுத்து தன் கருத்தைச் சொல்லியிருக்கிறார். அதற்கு மாற்றுக் கருத்துக்கூற வக்கு இல்லாதவர்கள் வன்முறைகளைத் தூண்டுகிறார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (18.1.2018) திருநெல்வேலிக்குச் சென்ற  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்

அவரது பேட்டியின் விவரம் வருமாறு:

அனைவருக்கும் வணக்கம். பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள் - நம்முடைய நெல்லை செய்தியாளர் சகோதரர்களுக்கு.

‘விடுதலை’ நாளேடு 83 ஆண்டுகளாக செய்யக்கூடிய மகத்தான தொண்டறம், சமூகப் புரட்சி

இன்று மாலை பாளையங்கோட்டையில் திராவிடர் மாணவர்கள் - சட்டக்கல்லூரிகள் மாணவர்களின் ஏற்பாட்டில், திராவிடர் திருநாளான தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் புத்தாண்டையொட்டிய சிறந்த கருத்தரங்க உரைகளும், ‘விடுதலை’ நாளேடு 83 ஆண்டுகளாக செய்யக்கூடிய மகத்தான தொண்டறம், சமூகப் புரட்சி இவைகளைப்பற்றி ஆய்வுரைகள், புத்தக வெளியீடுகள் இவைகளையெல்லாம் வைத்து நிகழ்வுகள் மாலையில் பாளையங்கோட்டையில் நடைபெறவிருக்கிறது.

அதற்காக இங்கே வருகின்ற நேரத்தில், நம்முடைய நெல்லை செய்தியாளர் சகோதரர்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த ஆண்டு திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், தந்தை பெரியார் அவர்கள் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றவேண்டும் - அகற்றாமல் நான் அரசு மரியாதை கொடுக்கிறேனே என்று, மானமிகு சுயமரியாதைக்காரரான தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் சங்கடப்பட்டார்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதி - தீண்டாமை ஒழிப்பை மய்யப்படுத்தி...

அதற்குமுன்பு தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த காலத்திலிருந்து கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதி - தீண்டாமை ஒழிப்பை மய்யப்படுத்தி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பதை வலியுறுத்தி, அந்த ஜாதி ஒழிப்புப் போராட்டம் தொடங்கிய நிலையில், இறுதியாக தி.மு.க. கொண்டு வந்த சட்டங்கள், ஆகம பயிற்சிகள் பெற்ற பிறகும்கூட, அனைத்து ஜாதியிலிருந்தும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 206 பேர் தயாரான பிறகும், அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கூடாது என்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலைச் சார்ந்த அர்ச்சகர்களும், வேறு சில அமைப்புகளும், அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, அந்த வழக்கில் அவர்கள் தடையாணை வாங்கியிருந்தார்கள். அந்த வழக்கு 9 ஆண்டுகாலம் நடைபெற்று, கடந்த 2016 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்து, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று தெளிவாகவே தீர்ப்பு கொடுத்தார்கள்.

அதற்குப் பிறகு வந்த அ.தி.மு.க. அரசு - ஜெயலலிதா அம்மையார் அவர்களின் தலைமையில் இருந்த அரசுக்கு நாங்கள் கடிதம் எழுதினோம்; இன்றைய அரசுக்கும் தெளிவாக கடிதம் எழுதியிருக்கிறோம். அந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை.

கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் அவர்கள் தலைமையில் இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் அரசாங்கம், அனைத்து ஜாதியினரையும், ஆதிதிராவிடர் உள்பட மிக முக்கியமான கோவில்களில் எல்லாம் அர்ச்சகர்களாக நியமனம் செய்திருக்கிறார்கள்.

திருப்பதி கோவில்களில்கூட, மிகத் தெளிவாக, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நடைமுறையைக் கொண்டு வருகிறோம் என்று தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.

வேதனைக்குரியது - கண்டனத்திற்குரியது!

அதேபோல, மற்ற மாநிலங்களிலும் நடைமுறைப் படுத்தக் கூடிய அளவிற்கு வந்துவிட்டது. ஆனால், இதற்கெல்லாம் முந்தைய பெரியார் மண்ணான தமிழ்நாட்டில், இந்த அரசு இன்னமும் அதைப்பற்றி கருத்து சொல்லாமல், நடவடிக்கை எடுக்காமல், இன்னமும் பாராமுகமாய் இருப்பது வேதனைக்குரியது - கண்டனத்திற்குரியது. முதலமைச்சர் அவர்களுக்கும், அறநிலையப் பாதுகாப்புத் துறைக்கும் கடிதங்களை நாங்கள் தெளிவாக எழுதியிருக்கிறோம்.

2018 ஆம் ஆண்டில் -

திராவிடர் கழகத்தின் முக்கிய பணி

எனவேதான், உங்களின்மூலமாக இந்த ஆண்டில், வேண்டுகோளாக வைப்பதோடு, குறிப்பிட்ட காலத்திற்குள் இதனை செயல்படுத்திடாவிட்டால், நீதிமன்றம் - வீதிமன்றம் ஆகிய இரண்டிலும் போராட்டங்களை நடத்தக்கூடிய நிலைக்கு திராவிடர் கழகம் இருக்கும். இதுதான் எங்களுடைய 2018 ஆம் ஆண்டிலே - திராவிடர் கழகத்தின் முக்கிய பணியாக இருக்கும்.

அதேபோல, ஜாதியில்லாத நாடு - சாமியார்கள் என்ற புரட்டு நாட்டில் அதிகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. சாமியார்கள் என்ற பெயராலே, ஆன்மிகம் என்ற பெயராலே நம்முடைய நாட்டில் கற்பழிப்புகளும், கொள்ளைகளும் நடந்துகொண்டிருக்கின்றன.

கிருஷ்ணன் அவதாரம் என்று சொல்லிக்கொண்டு...

அண்மையில் டில்லியில் நடைபெற்ற ஒரு பெரிய சம்பவம் ‘‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது. ஆன்மிகப் பல்கலைக் கழகம் என்ற பெயர் வைத்துக்கொண்டு, அதில் இருக்கக்கூடியவர், தான் கிருஷ்ணன் அவதாரம் என்று சொல்லிக்கொண்டு, பெண்களையெல்லாம் கற்பழித்து கொச்சைப்படுத்தினார் என்கிற முழு விவரம் அந்தப் பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது.

பஞ்சாபில், ராம்பாபா ரகீம் என்கிற ஒருவர்மீது நடவடிக்கை எடுத்து, சிறைச்சாலைக்குச் சென்றது போன்று, மிகப் பெரிய கலவரம் நடந்திருக்கிறது என்கிற தகவல்களையெல்லாம் மாலையில் நடைபெறுகின்ற நிகழ்வில் தெளிவாகச் சொல்லுவோம்.

ஒரு சமுதாயப் புரட்சி இயக்கம் |திராவிடர் கழகம்

ஆகவேதான், ஒருபக்கம் ஜாதி - இன்னொரு பக்கம் ஆன்மிகம் என்ற பெயரால், சாமியார்கள் புரட்டு - மகளிர் மத்தியில் ஒழுக்கக்கேட்டை விதைப்பது. பொதுவாக, மகளிர் உரிமைகளைப் பறிப்பது - மூடநம்பிக்கைகளை அறுவடை செய்வது - இதுபோன்ற நிலைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றவேண்டும். அதுதான் திராவிடர் கழகத்தின் நோக்கம். அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சமுதாயப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் - அந்த வகையில், இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய ஒரு நிலை.

தமிழ்நாட்டிலும் மூடநம்பிக்கைக்கு எதிரான சட்டம் கொண்டுவரப்படவேண்டும்!

கருநாடகத்தில் மூடநம்பிக்கைக்கு எதிரான ஒரு சட்டம் - அதேபோல, பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலமான மகாராஷ்டிரத்தில், மூடநம்பிக்கைக்கு எதிரான ஒரு சட்டம் கொண்டுவரக்கூடிய இந்தக் காலகட்டத்தில், தமிழ்நாட்டிலும் அதுபோன்ற அளவிற்குக் கொண்டு வரப்படவேண்டும். இங்கே மக்கள் வஞ்சிக்கப் படக்கூடாது; ஏமாற்றப்படக்கூடாது; திரும்பத் திரும்ப மகளிர் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்ப தையே மய்யப்படுத்திய பிரச்சாரமும் இந்த ஆண்டின் திராவிடர் கழகத்தின் மய்யப் பிரச்சாரமாக இருக்கும்.

ஜனவரி 30: காந்தியார் நினைவு நாளில்

சென்னையில் மாநாடு - கருத்தரங்கம்!

அதுபோலவே, வருகிற இந்த மாத இறுதியில் வருகிற காந்தியார் அவர்களுடைய நினைவு நாளை -மதவெறி கண்டன நாளாகவும், கருத்துரிமை பாதுகாப்பு நாளாகவும் - அனைத்து ஒத்தக் கருத்துள்ளவர்களை அழைத்து சென்னையில் ஒரு பிரம்மாண்டமான மாநாடு - கருத்தரங்கத்தை மிகப்பெரிய ஒரு மக்கள் நிகழ்வாக நடத்த விருக்கிறோம் என்பதையும் உங்களிடையே தெரிவித்துக் கொள்கிறேன்.

நாகரிக உலகத்திலிருந்து,

காட்டுமிராண்டி யுகத்திற்கு...

செய்தியாளர்: வைரமுத்து பேசியதற்குப் பிறகு அதனு டைய போக்கு எப்படி இருக்கிறது?

தமிழர் தலைவர் ஆசிரியர்: போக்கு, வடநாட்டில் இருக்கக்கூடிய ஒரு கலாச்சாரத்தை, தமிழ்நாட்டிலே கொண்டு வந்து புகுத்தலாம் என்ற ஒரு முனைப்பு! நாகரிகமான ஒரு காலத்தில் வாழக்கூடிய நாம், செவ்வாய்க்கிரகத்திற்கே விண் கலத்தை அனுப்பிக் கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், மிகத் தீவிரமான மூடநம்பிக்கைகள் இருந்த காலகட்டத்தை யெல்லாம் தாண்டி, திருக்குறளைப் போன்ற ஒரு அரிய நூலை இரண்டாயிரத்து அய்நூறு ஆண்டுகளுக்குமுன் ஏற்படுத்திய நயத்தக்க நாகரிகம்,

பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்  (குறள் 580)

என்ற நயத்தக்க நாகரிகத்தை உருவாக்கிய நாட்டில், தலைவெட்டி பேச்சுகள், கொலை செய்வேன் என்ற பேச்சுகள் இவை எல்லாம் நாகரிக உலகத்திலிருந்து, காட்டு மிராண்டி யுகத்திற்குத் திருப்பக் கூடிய ஒரு அரசியல் - அந்த அரசியலில் இப்படியெல்லாம் பேசினால், புதிதாகச் சென்ற தங்களுக்கு ஏதாவது புதிய பரிசுகள் கிடைக்காதா என்ற போட்டி அரசியலில் ஈடுபட்டு, தங்களையும் தாழ்த்திக் கொண்டு, தமிழகத்தையும் தாழ்த்துகின்றவர்களுக்குத் தமிழ் நாட்டில் இடமில்லை என்று செய்யவேண்டியது - அனைத்து நாகரிக சிந்தனை உள்ளவர்களுக்கு மிக முக்கியமானது.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள், ‘‘நான் தாழ்மைப்படுத் துவதற்காக பேசவில்லை. அவரை உயர்த்துவதற்காகத்தான் பேசி இருக்கிறேன்.  அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு இருக்குமானால், அதற்காக நான் வருத்தத்தைத் தெரிவிக் கிறேன்’’ என்று சொல்லிவிட்ட பிறகும்,

இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல்

மிகப்பெரிய ஒரு நாகரிகம் திராவிட நாகரிகம். அந்த நாகரிகத்திற்கு விரோதமாக வேறொரு காட்டுமிராண்டி கலாச் சாரத்தை இங்கே கொண்டு வந்து நுழைக்கலாம் என்று நினைக்கிறார்கள். வடநாட்டில்தான் அந்த நிலை இருக்கிறது. ஆகவே, அதற்கு இங்கே இடமில்லை என்று சொல்வதற்கு கருத்துரிமை பிரச்சாரத்தை செய்வோம்.

எங்கே சரக்கு இல்லையோ - எங்கே கருத்துக்கு கருத்தை மோதவிடுவதற்கு வக்கில்லையோ, அவர்கள்தான் இப்படி வன்முறையில் ஈடுபடுவார்கள். அதற்கு வேறு எந்த காரணமும் இல்லை.

தமிழக அரசிற்கே கேடாக முடியும்!

மாநில அரசாங்கமும் சரி, மத்திய அரசாங்கமும் சரி அதனை ஊக்கப்படுத்துவதைப்போல, வேடிக்கைப் பார்த்துக் கொண்டு, அடிபட்டவன்மேல் வழக்கு - அவமானப்படுத்தப் பட்டவன்மீது வழக்கு - அடித்தவனுக்குப் பாராட்டு என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்தப் போக்கு இருப்பது நல்ல தல்ல. இது கடைசியாக எங்கே போய் முடியும் என்றால், அர சாங்கத்திற்கே கேடாக முடியும். சட்டம் - ஒழுங்கு அமைதி இல்லை என்பதற்கு ஆதாரப்பூர்வமாக இதையே அவர் களுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகள் வரும் என்பதை, இன்றைய தமிழக அரசும் புரிந்து, காவல்துறையும் புரிந்து, ஒரு சார்பாக நடந்துகொள்ளாமல், பொதுநிலையில், தங்களுடைய கடமைகளை ஆற்றவேண்டும்.

செய்தியாளர்: வைரமுத்துவை நாட்டை விட்டு வெளி யேற்றவேண்டும் என்று சிவசந்திரன் பேசியிருக்கிறாரே?

தமிழர் தலைவர் ஆசிரியர்: அடையாளம் தெரியாத ஆட் களையெல்லாம் கொண்டு வந்து அடையாளப்படுத்துகின்ற பணியை ஊடகக்காரர்களாகிய நீங்கள்தான் செய்கிறீர்கள். அவர்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். எப்பொழுது அவர் விசா ஆபீசர் ஆனார் என்று தெரியாது? அவர் விசா ஆபீசராகி, இமிகிரேசனுக்குப் போன பிறகு கேள்வி கேளுங்கள், அதற்கு நாங்கள் பதில் சொல்கிறேன்.

ஏனென்றால், நாடு கடத்தவேண்டிய அவசியம் என்ன? இவர்கள் யார்? எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் இங்கே வந்து புகுந்துகொண்டு, இந்த மண்ணுக்குரியவர்களை நாடு கடத்துவோம் என்றால் என்ன அர்த்தம்? இதற்கெல்லாம் தெளிவான தீர்ப்பை மக்கள் அளிப்பார்கள்.

பதவி கிடைக்கவில்லை என்கிற ஆதங்கம்

செய்தியாளர்: இந்து மதத்தை இழிவாகப் பேசினால், அவர்களை கொலை செய்யவேண்டும் என்று முன்னாள் அ.தி.மு.க. அமைச்சரும், இப்பொழுது பா.ஜ.க. மாநில துணைத் தலைவராக இருக்கின்ற நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறாரே?

தமிழர் தலைவர் ஆசிரியர்: பாவம், அவருக்குப் போது மான அளவிற்குப் பதவி கிடைக்கவில்லை என்கிற ஆதங்கம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

ராஜவிசுவாசம்

காட்டுவோருக்குத்தான் ஆபத்து!

செய்தியாளர்: நயினார் நாகேந்திரன் அவர்கள் திராவிடப் பாசறையில்  பயிற்சி பெற்றவராயிற்றே?

தமிழர் தலைவர் ஆசிரியர்: ஆமாம். இதுபோன்று பேசுவ தற்கு சுதந்திரம் அங்கே இருக்காது என்பதினால் அங்கே இருந்து வெளியே வந்திருப்பார்.

ஏற்கெனவே சொன்ன பதில் இருக்கிறது பாருங்கள். காட்டுமிராண்டி யுகத்திற்கு நாட்டை அழைத்துப் போவதா? நயத்தக்க நாகரிகத்தோடு இருக்கக்கூடிய திராவிட நாகரிகத்தை காப்பாற்றுவதா? இதுதான் பிரச்சினையே தவிர, தனி நபர் பிரச்சினையல்ல!

இன்னுங்கேட்டால், யார் அவர்களுக்குக் காரணமாக இருந்து, யாரை திருப்தி செய்யவேண்டும் என்று நினைக் கிறார்களோ, அவர்களுடைய வாயில் இந்த வார்த்தை வரவில்லை.

ராஜாவை மிஞ்சக்கூடிய ராஜ விசுவாசம் இருக்கிறதே - ராஜவிசுவாசம் காட்டுவோருக்குத்தான் ஆபத்து.

எங்களைப் பொறுத்தவரையில், தலையைப்பற்றி கவலைப்படமாட்டோம் - தலைக்கு மேலே இருப்பதைப்பற்றி கவலைப்படமாட்டோம்- தலைக்குள் என்ன இருக்கிறது என்பதைப்பற்றி கவலைப்படுபவர்கள்.

ஆறாவது முறை நடந்தால்

நன்றாக இருக்கும்!

செய்தியாளர்: வைரமுத்து பேசியதுபோல, 1980 களில் பொதுக்கூட்டத்தில் நீங்கள் பேசிவிட்டு,  மம்சாபுரத்திற்கு வரும்பொழுது தாமரைக்கனி போன்ற ஆட்கள் உங்களைத் தாக்கினார்கள்; காயப்படுத்தினார்கள்; அதுபோன்ற ஆட்கள் இப்பொழுது இல்லை; அப்போது இருந்த எம்.ஜி.ஆர். ஆட்சி போன்று இன்றைய அ.தி.மு.க. ஆட்சி இல்லை என்று மேடை களில் பேசப்படுகிறது; வாட்ஸ் அப்களில் வெளிவருகிறதே?

தமிழர் தலைவர் ஆசிரியர்: பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு - ஒழிப்பு மாநாடு முதன்முதலில் திருநெல்வேலியிலிருந்து தான் ஆரம்பித்தது. பார்ப்பனர்கள் அதனை அங்கே சென்று சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. நான் ஒரு நிகழ்ச்சிக் காக சென்றிருந்தபொழுது,  என்னை தாக்கினார்கள். இது போன்று அய்ந்து முறை என்னை கொலை செய்வதற்கு முயற்சி செய்தார்கள். ஆறாவது முறை நடந்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால், நோயினால் இறந்து போகக்கூடாது; விபத்தினால் இறந்து போகக்கூடாது. கொள்கைக்காக ஒருவர் இறந்துபோனார் என்று சொன்னால், அவர்கள் சாகாதவர்கள் - என்றும் வாழ்வார்கள் என்ற நல்ல விலை கொடுத்திருக் கிறோம் நாம் என்று ஒரு திருப்தி இருக்கும்.

இராஜபாளையத்திற்கு பக்கத்தில் மம்சாபுரத்தில் ஒரு மருத்துவமனையைத் திறப்பதற்காக நான் சென்றேன். போகிற வழியில், தி.மு.க. கொடியைப் பிடித்துக்கொண்டு, கலைஞர் வாழ்க என்று சொல்லிக்கொண்டு, கைகளில் ஒரு மாலையை வைத்துக்கொண்டிருந்தார்கள். என்னுடைய பழக்கம் என்னவென்றால், காரிலிருந்துகொண்டே அதை வாங்குகிற பழக்கம் இல்லை.

மதுரை தேவசகாயம் அவர்களுடைய காரில்தான் நாங்கள் சென்றோம். காரை விட்டு நான் இறங்குவதற்கு முயற்சி செய்யும்பொழுது, பெரிய பாறாங்கல்லை தூக்கிப் போட்டார்கள்; கண்ணாடி உடைந்தது; தடி கொண்டு காரைத் தாக்கினார்கள். என்னுடைய மூக்கில் காயமானது. உடனே கார் ஓட்டுநர் காரை சாமர்த்தியமாக வேகமாக ஓட்டிச் சென்ற தால், அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அங்கிருந்த பலர் குடித்துவிட்டு இருந்தனர்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, இராஜபாளையத்தில் அடுத்த நிகழ்ச்சி பெரியார் படிப்பகத்தில். அதற்கடுத்து, திருவில்லிபுத் தூரில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும். நான் மருத்துவமனையைத் திறப்பதற்காகத்தான் அங்கே சென் றேன். அங்கே முதல் நோயாளியும் நான்தான். என்னுடைய தலையில் கண்ணாடி துகள்கள், மூக்கில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளித்தனர் மருத்துவர்கள். மருத்துவமனையைத் திறந்து வைத்து நான் உரையாற்றிவிட்டு, பெரியார் படிப்பகத் தினையும் திறந்துவிட்டு, திருவில்லிபுத்தூர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிவிட்டு, திருச்சிக்குச் சென்றேன்.

எம்.ஜி.ஆர். அவர்கள் காலையில், “இதுபோன்ற சம்பவம் நடந்ததைப்பற்றி நான் கேள்விப்பட்டேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் உரிய நடவடிக்கையை எடுக்கிறேன்” என்று சொன்ன எம்.ஜி.ஆர். அவர்கள் என்னிடம் வருத்தம் தெரிவித்தார்.

நான் உடனே அவரிடம், “யார் இதைத் தூண்டியது என்பது உங்களுக்குத் தெரியுமே! எல்லோரும் சொல்கிறார்கள். உங்கள் மனச்சாட்சிப்படி நீங்கள் நடந்துகொள்ளுங்கள்” என்று நான் சொன்னேன்.

பூச்சாண்டிகளையெல்லாம் பெரியார்

தொண்டர்களிடம் காட்டவேண்டாம்!

அடுத்த நாள் புதுக்கோட்டை நிகழ்ச்சி -அதனை ஒத்தி வையுங்கள் என்று சொன்னார்கள். இல்லை, அந்த நிகழ்ச்சி யில் கண்டிப்பாக நான் பங்கேற்பேன் என்று சொல்லி, அடுத்த நாள் புதுக்கோட்டைக்குச் சென்றேன்.

இன்னமும் என்னுடைய மூக்கில் அந்தக் காயத் தழும்பு இருக்கிறது.

என்னுடைய அறிவாசான் வழிகாட்டி தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்க்கையில் நிகழாததா? அவர்களுடைய வாழ்க்கையில் அப்படி நடந்திருக்கும்பொழுது, எங்களுடைய வாழ்க்கையில் மம்சாபுரம், சேலத்திற்குப் பக்கத்தில் தம்மம்பட்டியில், சென்னை இராயபுரம், விருத்தாசலம் பாலம் அருகே என்று பலமுறை நடந்திருக்கிறது.

ஆகவே, பொதுவாழ்க்கைக்கு வரும்பொழுதே, வீட்டை விட்டுக் கிளம்பும்பொழுதே, செலவுக் கணக்கில் எழுதி விட்டுத்தான் வருவோம். திரும்பினால், வரவு அவ்வளவு தானே தவிர - இந்தப் பூச்சாண்டிகளையெல்லாம் திராவிடர் கழகத்துக்காரர்களிடமோ அல்லது பெரியார் தொண்டர் களிடமோ காட்டவேண்டாம்.

இரண்டாவது, குரைப்பவன் எப்பொழுதுமே  கடிப்ப தில்லை.

யானைக்கு மதம் பிடிக்கும்;

எங்களுக்கு மதம் பிடிக்காது.

செய்தியாளர்: ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறதே, அதை எப்படி பார்க்கி றீர்கள்?

தமிழர் தலைவர் ஆசிரியர்: சிறுபான்மை சமுதாயத்தின் மீது மோடிக்கு எவ்வளவு ஆசை, பற்று என்பதைக் காட்டு கிறது.

ஏனென்றால், இஸ்லாமிய பெண்கள் உரிமைப் பெற்றுவிட்டார்கள் என்று மகிழ்ச்சியாக சொன்னார் மோடி. அந்த மகிழ்ச்சியினுடைய உச்சக்கட்டம்தான் இது என்று நினைக்கிறேன்.

ஆகவே, சிறுபான்மை சமுதாயத்தினரை அழிக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸினுடைய கொள்கையாகும். எனவே, அந்த சிறுபான்மை சமுதாயத்திற்கு இருக்கக்கூடிய அந்த வாய்ப்புகளை - எந்த அளவிற்கு அவர்களை சங்கடப் படுத்தவேண்டும் என்பதைத் தொடர்ந்து செய்து கொண்டிருக் கிறார்கள்.

அவர்கள் மதத்தில் இவர்கள் தலையிடலாம்; அதே நேரத்தில், இவர்கள் மதத்தைப்பற்றி நியாயமான ஒரு விமர் சனத்தைக்கூட மற்றவர்கள் வைக்கக்கூடாது என்று சொன் னால், மதச்சார்பின்மை மோடி அரசில் படுகிற பாட்டுக்கு உலகளாவிய நிலை.

அவர்களுக்கு யார் மிக முக்கியம் என்றால், டிரம்ப் மிக முக்கியம். பெஞ்சமின் நேத்தன் யாகு வந்தார் என்றால், இஸ்ரேல்காரர்களைக் கட்டிப் பிடித்துக் கொள்வார்.

இதற்கெல்லாம் என்ன அடிப்படை என்றால், இந்த சமுதாயத்தில் இருக்கக்கூடியவர்கள், இங்கே இருக்கிற இசுலாமிய சகோதரர்கள் யாரும் அரேபியாவில் இருந்து ஹெலிகாப்டரில் இறங்கியவர்கள் கிடையாது. அதேபோன்று, கிறித்துவர்களும் ஜெருசலத்தில் இருந்து வந்தவர்களும் கிடையாது.

நான்கு, அய்ந்து தலைமுறைகளுக்குமுன்பு, ஏன் அவ் வளவுதூரம் போகவேண்டும்; உங்கள் மாவட்டத்திலேயே மீனாட்சிபுரத்தை எடுத்துக்கொண்டால், இந்த நாட்டில் அவர்கள் ஒதுக்கப்பட்டது, கேவலப்படுத்தப்பட்டது, பிறவி இழிவிற்கு ஆளானதின் காரணமாகத்தான், எங்கே சகோதரத் துவம் இருக்கிறதோ, எங்கே அவர்களை அரவணைக்கிறார் களோ அங்கே சென்று நாம் மானத்தோடும், மரியாதையோடும் வாழவேண்டும் என்று சென்றவர்களே தவிர வேறொன்றும் கிடையாது. அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எங்களைப் பொருத்தவரையில் மதங்களுக்கு அப்பாற் பட்டவர்கள். யானைக்கு மதம் பிடிக்கும்; எங்களுக்கு மதம் பிடிக்காது. பிடிக்காது என்பதை இரண்டு பொருள்களிலும் நான் சொல்கிறேன்.

இதுபோன்ற மதப் பிரச்சினைகள் என்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. இந்திய அரசியல் சட்டத்தின்மீது அவர்கள் பிரமாணம் எடுத்திருக்கிறார்கள். அரசியல் சட்டத்தில், மைனாரிட்டிகளுக்கு தனி சலுகை என்பது இருக்கிறதே, அடிப்படை உரிமைகளின் ஒன்று அது.  எதில் அவர்கள் கை வைக்கிறார்கள் என்பதைப் பொறுத்துப் பார்க்கவேண்டும்.

செய்தியாளர்: மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் நீங்கள் என்று சொன்னீர்கள்; ஆனால், அண்மையில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டில், கிறித்துவ மதம் சார்பாக புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன என்று தகவல் வந்ததே!

தமிழர் தலைவர் ஆசிரியர்:‘‘நான் ஏன் கிறித்துவன் அல்ல’’ என்ற புத்தகம் விற்கப்பட்டது. மேலும் பல புத்தகங்கள் விற்கப்பட்டன.

எஸ்றா.சற்குணம் அவர்களிடம் கேளுங்கள்!

செய்தியாளர்: உலக நாத்திகர் மாநாட்டை எஸ்றா.சற்குணம் தொடங்கி வைத்ததாக சொல்லப்படுகிறதே?

தமிழர் தலைவர் ஆசிரியர்: அது பொய்யான விஷயம். நாத்திகர் மாநாட்டிற்கு எப்படி நாங்கள் பாதிரியாரை அழைப்போம். யாரோ ஒருவர் பொய் சொல்கிறார் என்றால், அந்தப் பொய்யை நீங்களும் நம்புகிறீர்களே!

உங்களுக்கு யாராவது சந்தேகம் இருந்தால், எஸ்றா.சற்குணம் அவர்களிடம் கேளுங்கள். திருச்சியில் உள்ள செய்தியாளர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

எஸ்றா.சற்குணம் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள வில்லை என்று நிரூபிக்கப்பட்டால், இவர்கள் எல்லாம் பொதுவாழ்க்கையை விட்டு வெளியேறுவார்களா? என்கிற கேள்வியைக் கேளுங்கள்.

எங்களை தேவடியாள் மகன் என்று

சொன்னது எந்த மதம்?

செய்தியாளர்:  தொடர்ந்து நீங்கள் இந்து மதத்தைப் பற்றிதான் விமர்சனம் செய்கிறீர்கள் என்றும், மற்ற மதத்தைப் பற்றி நீங்கள் விமர்சனம் செய்வதில்லை என்கிறார்களே?

தமிழர் தலைவர் ஆசிரியர்:நாங்கள் எந்த மதத்தையும் ஆதரிப்பவர்கள் இல்லை. மதமே இல்லை என்று சொல் பவர்கள் நாங்கள். ‘‘நான் ஏன் கிறித்துவன் அல்ல’’ என்று புத்தகத்தை வெளியிட்டவர்கள் நாங்கள்தான்.

அதேபோன்று, ‘‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை’’ என்று சொல்கிறோமே, அதில் ஏதாவது பிராக்கெட் போட்டிருக்கிறோமோ? இந்து மதக் கடவுள் மட்டும் இல்லை. கிறித்துவக் கடவுள் உண்டு அல்லது இசுலாமியக் கடவுள் உண்டு என்று எங்கேயாவது போட்டிருக்கிறோமா?

நாத்திகர் மாநாட்டில் எல்லா கருத்துகளையும்தான் பேசினோம். எந்த மதத்துக்காரர்கள் வந்தார்கள்? ஆகவே, இது தவறானது.

அதிகமான அளவிற்கு விமர்சனம் செய்வதற்கு என்ன காரணம் என்றால், எங்களை தேவடியாள் மகன் என்று சொன்னது எந்த மதமோ, அந்த மதத்தை ஒழிப்பது என்பதுதான் எங்களுடைய கொள்கை.

“மான உணர்ச்சி எவனுக்கு இருக்கிறதோ, அவர்கள் எல்லாம் என் பின்னால்தான் வருவார்கள்!”

மான உணர்ச்சி எவனுக்கு இருக்கிறதோ, அவர்கள் எல்லாம் என் பின்னால்தான் வருவார்கள்! காரணம், மனுதர் மத்தில் என்ன எழுதி வைத்திருக்கிறதோ அதை நான் மாலை யில் நடைபெறும் கூட்டத்தில் படித்துக்காட்டுகிறேன்.

அதில்,

அத்தியாயம் 8; 412 சுலோகம்

சூத்திரன் என்றால், ஏழு வகைப்படும்.

யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன்,

பக்தியினால் வேலை செய்கிறவன்,

தன்னுடைய தேவடியாள்மகன்,

விலைக்கு வாங்கப்பட்டவன்,

ஒருவனால் கொடுக்கப்பட்டவன் குலவழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன்,

குற்றத்திற்காக வேலை செய்கிறவன், என தொழிலாளிகள் எழுவகைப்படுவர்.

‘‘தன்னுடைய தேவடியாள் மகன்’’ இதே வார்த்தை அதில் இருக்கிறது. இதை சொல்வதற்கு நான் வெட்கப்படுகிறேன்.

நான் வழக்குரைஞன், இந்து லா என்ற சட்டத்தில் அது இன்னமும் அனுமதிக்கப்படுகிறது என்றால், அதை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

எனவேதான், மான உணர்ச்சி யார் யாருக்கு இருக்கிறதோ, அறிவு யார் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் எல்லாம் இந்த வேலையைத்தான் செய்வார்கள். அதனைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்.

எங்களுக்கொன்றும் அந்த மதம், இந்த மதம் என்று கிடையாது.

எங்களை அழிக்க நினைக்கின்ற ஒரு சமுதாயத்தினரை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்வோம்?

97 பேராக இருக்கின்ற எங்களை மூன்று பேர் வந்து எங்களை இழிவுபடுத்திக் கொண்டிருந்தால், உழைக்கின்ற சமுதாயம், பாடுபடுகின்ற சமுதாயத்தை படிக்கக்கூடாது என்று சொன்னால், எங்களை அழிக்க நினைக்கின்ற ஒரு சமுதாயத்தினரை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்வோம்?

எனவே, எங்கே புண் இருக்கிறதோ, அங்கே மருந்து போடுவோம்; எங்கே கால் உடைந்ததோ, அங்கே கட்டுப்போடுவோம். எங்கே அறிவு தேவைப்படுகிறதோ, அங்கே சுட்டிக்காட்டுவோம்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner