எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அண்ணா அவர்கள் வெறும் முத்திரைதானா?

இன்றைய அ.தி.மு.க. ஆட்சிக்கு கொள்கைப் பார்வையே கிடையாது

ஷெயங்கொண்டத்தில் செய்தியாளர்களுக்கு தமிழர் தலைவர் அளித்த பேட்டி

ஜெயங்கொண்டம், ஜன.22  அண்ணா அவர்களை, வெறும் முத்திரையாக, முகத்திரையாக அவர்கள் பயன்படுத்து கிறார்களே தவிர, கொள்கைப் பார்வை என்றைக்கும் இந்த ஆட்சிக்குக் கிடையாது என்று தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களிடம் கூறினார்.

நேற்று (21.1.2018) ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்கச் சென்ற  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

அடக்குமுறைகள் எப்பொழுதும் வென்றதில்லை!

செய்தியாளர்:  தமிழக அரசு காலண்டரில் முதலமைச்சரின் படத்தோடு பிரதமர் மோடி படமும் அச்சிடப்பட்டு இருக்கிறதே?

தமிழர் தலைவர்: இந்த ஆட்சி என்பது முழுக்க முழுக்க பா.ஜ.க.வினுடைய தயவில் நடைபெறுவதைப்போன்ற ஒரு எண்ணத்தை அவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவேதான், தமிழக அரசு  காலண்டர் போடும்போது, இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவிற்கு, முதலமைச்சர் படத்தை மட்டுமில்லாமல், பிரதமர் படத்தையும் சேர்த்து போட்டுள்ளனர்.

அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்.சின் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்துவிட்டு, திராவிடர் கழகம், அமைதிப் பூங்காவாகத் தமிழகத்தைப் பார்த்துக்கொள்ளக் கூடிய, மதச் சார்பின்மையைக் காப்பாற்றக் கூடிய, சமூக நல்லிணக்கத்தைப் பாராட்டக்கூடிய வகையில் இருக்கக்கூடிய அமைப்பின் ஊர்வலத்திற்குத் தடை செய்வது என்பது, ஒருதலைப்பட்சப் போக்காகும்.

இதற்குரிய விலையை இந்த அரசு, குறிப்பாக இன்றைய தமிழக அரசு நிறைய கொடுக்கவேண்டியது இருக்கும். அடக்குமுறைகள் எப்போதும் வென்றதில்லை.

நோட்டாவிற்கும் - பா.ஜ.க.விற்கும்தான் போட்டி!

செய்தியாளர்: தினமணி ஆசிரியர் வைத்தியநாதனும், கவிஞர் வைரமுத்து இரண்டு பேரும்தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். ஆனால், வைரமுத்துவின்மீது மட்டும் எதிர்ப்பு எழுவது ஏன்?

தமிழர் தலைவர்: வைரமுத்துவின்மீது அவர்களுக்கு வரக்கூடிய கோபம், வைத்தியநாதன்மீது வரவில்லை என்ப திலிருந்தே ஒன்றைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

வைரமுத்து அவர்களின் கருத்துக்காக அவரை அவர்கள் எதிர்க்கவில்லை. மாறாக, அவருடைய பேச்சைத் திரித்து, மாற்றிக் கூறி, அதன்மூலமாக, பெரியார் மண்ணில் ஆர்.எஸ்.எசை அல்லது மதவெறியைத் தூண்டி, தாங்கள் காலூன் றுவதற்கு வாய்ப்பு ஏற்படுமா? இதனால் அரசியல் லாபத்தை ஏற்படுத்திக் கொள்ளலாமா? என்று நினைக்கிறார்கள்.

ஆன்மிக அரசியல் என்ற ஒரு புதிய வார்த்தையை இப்பொழுது உலவ விட்டிருக்கிறார்களே, அதற்கு அடித் தளத்தை இதன்மூலமாவது நிறைவேற்றலாமா என்கிற நப்பாசைதான். ஆனால், ஒருக்காலும் அது நடக்காது என்பது இப்பொழுது தெளிவாகிவிட்டது.

கடைவிரித்தார்கள்; இன்னும் கொஞ்ச நாளில் கட்டிக் கொள்வார்கள். என்ன முயற்சி எடுத்தாலும், நோட்டாவைவிட, இவர்கள் எவ்வளவு நோட்டு கொடுத்தாலும்கூட அதிகமாக வாக்குகளை வாங்க முடியாது என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. எனவே, போட்டி நோட்டாவிற்கும், இவர்களுக்குமே தவிர மற்ற கட்சிகளோடு அல்ல.

பெரியார் பாதைக்கு...

செய்தியாளர்: பா.ம.க. நிறுவனர் இராமதாசு அவர்களை ஜீயர்கள் சந்தித்திருக்கிறார்களே...?

தமிழர் தலைவர்: ஒருவேளை பெரியார் பாதைக்கு மிக வேகமாக  வந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு அடையாள மாக இருக்குமோ!

கமலகாசனும், ரஜினியும்

கருத்துக் கூறாதது ஏன்?

செய்தியாளர்: ஆண்டாள் விவகாரத்தைப் பொறுத்த வரையில், ரஜினியும், கமலும் எந்தவிதமான கருத்தையும் சொல்லவில்லை என்று வைரமுத்து சொல்லியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: அவர்களைப் பொருத்தவரையில், எல்லாவற்றிற்கும் கருத்து சொல்வதற்கு வாய்ப்பு இருக்குமா என்று சொல்ல முடியாது? இப்பொழுது அவர்கள் தங்களைப்பற்றி எதிலும் தெளிவில்லாத, சினிமாத் துறையில் தங்களுக்கு இருக்கிற செல்வாக்கு, அல்லது தங்களுடைய ரசிகர்களை மட்டும் மூலதனமாக வைத்திருக்கிறார்கள். இதுபோன்ற விவகாரத்தில் கருத்து சொல்லக்கூடிய அளவிற்கு ஆழமான சிந்தனையோ, துணிவோ அவர்களுக்கு இல்லை என்பதைத்தான் தெளிவாக இது காட்டுகிறது.

பாலுக்கும் காவல் - பூனைக்கும் தோழன்! இதுதான் அவர்களுடைய நிலை.

உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சி

செய்தியாளர்: செல்லூர் ராஜூ அவர்கள், அண்ணா வினுடைய புகைப்படம் அ.தி.மு.க.வின் கொடியில் இல்லை என்றால், அவருடைய அடையாளமே அழிந்துவிடும் என்று நேற்று ஒரு மேடையில் சொல்லியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: அவர் பெரிய ஆராய்ச்சியாளர். அவரைப்பற்றி நான் அதிகமாக சொல்லவேண்டியதில்லை. அவருடைய ஆராய்ச்சி  உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சி. அந்த அளவிற்கு இருக்கும்பொழுது, அவரைப் பற்றி சொல்லவேண்டிய அவசியமில்லை.

அண்ணா எங்கே இருக்கிறார்? கொடியில் இருக்கிறாரா? கொள்கையில் இருக்கிறாரா? என்பதுதான் முக்கியம்.

கொடியில் இருப்பது முக்கியமல்ல - கொள்கையில் இருக்கவேண்டும். அண்ணாவினுடைய கொள்கை இருந் திருந்தால், டில்லிக்குக் காவடி தூக்கவேண்டிய அவசியம் கிடையாது.

டில்லிக்கே சென்று, நான் திராவிடன், தென்னாட்டிலிருந்து வந்திருக்கிறேன் என்று நேருவிற்கு முன் நாடாளுமன்றத் திலேயே முழங்கியவர் அறிஞர் அண்ணா.

அதுமட்டுமல்ல,

Unity different from Uniformity

என்று சொல்லி, சீர்மை என்பது வேறானது; ஒற்றுமை என்பது வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள் ளாதீர்கள்.

நான் திராவிடப் பாரம்பரியத்தில் இருந்து வந்தவன் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன் என்று மாநிலங்களவையில் முழங்கியவர் அண்ணா அவர்கள்.

அதுமட்டுமல்ல, அண்ணா அவர்கள் ஏற்படுத்திய அந்த முப்பெரும் சாதனைகளை இன்றைக்கும் மாற்ற முடியாது என்று அவர்கள் தெளிவாகச் சொன்னார்கள்.

ஆகவே, அப்படிப்பட்ட அண்ணா அவர்களை, வெறும் முத்திரையாக, முகத்திரையாக அவர்கள் பயன்படுத்து கிறார்களே தவிர, கொள்கைப் பார்வை என்றைக்கும் இந்த ஆட்சிக்குக் கிடையாது. அப்படி இருந்திருந்தால், இந்த அளவிற்கு, எல்லாவற்றிற்கும், நீட் தேர்வு உள்பட தலை யாட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

- இவ்வாறு செய்தியாளர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.

Comments  

 
#1 manokaran.m 2018-01-23 11:12
அருமையான பேட்டி இதை மக்களுக்கு கொண்டு செல்வது நம் மக்களின் கடமை . பகுத்தறிவு இல்லாமல் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள் என்பதைதிராவிட கொள்கை இல்லாத ஆட்சியாளர்கள் என்று மிக தெளிவாக சொல்லி இருக்கிறார் அண்ணாவின் படம் முக்கியமல்ல கொள்கைதான் முக்கியம் என்பதை மிக சரியாக சொல்லி இருக்கிறார்இதை ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டு அண்ணாவின் கொள்கையை காப்பாற்றினால் நம்நாட்டுக்கு நல்லது
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner