எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'நீட்' : மாநில பாடத் திட்டத்தில் கேள்வித்தாள் என்று 18ஆம் தேதி அறிவித்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்

21ஆம் தேதி சி.பி.எஸ்.இ. திட்டத்தில் தான் கேள்வித்தாள் என்று அறிவிப்பது ஏன்?

சமூகநீதியை வீழ்த்த மாபெரும் சதி! சதி!!

கட்சிகளை மறந்து ஒன்றிணைவோம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள சமூகநீதிப் போருக்கான அழைப்பு

இன்றைய அ.தி.மு.க. ஆட்சிக்கு கொள்கைப் பார்வையே கிடையாது

2018இல் 'நீட்' தேர்வு சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தின் அடிப்படையில்தான் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

'நீட்' தேர்வு என்பது நீடிக்கப்படக் கூடாது; அது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களைப் பாதிப்புக்கு ஆளாக்கும்; தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நுழைவுத் தேர்வு என்பது அறவே கிடையாது; +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கான சேர்க்கைகள் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றன; இதில் எவ்வித சிக்கலுமில்லை; சிறந்த முறையில் கற்று சிறந்த மருத்துவர்களாக வெளி வந்து கொண்டுள்ளனர் என்று பல வகைகளிலும் எடுத்துச் சொல்லியாகி விட்டது.

கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் தமிழ் மண்ணில் நடத்தியும்  காட்டப்பட்டு விட்டது.

கடந்தாண்டு 'நீட்' தேர்வின் காரணமாக ஏற்பட்ட சமூக அநீதியின் புள்ளி விவரங்கள் பட்டியலிட்டும் காட்டப்பட்டன.

'நீட்'டால் ஏற்பட்ட இழப்புகள்

2016-2017இல் +2 தேர்வு அடிப்படையில், நுழைவுத் தேர்வின்று தேர்வு பெற்ற மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள் 3546.

2017-2018இல் 'நீட்' தேர்வு - மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் பெற்ற இடங்கள் 2314; இழப்பு 1232 இடங்கள்.

2016-2017இல் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் +2 அடிப்படையில் படித்தவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 62.

2017-2018இல் 'நீட்' தேர்வு காரணமாக சி.பி.எஸ்.இ.யில் படித்தவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 1220.

'நீட்'டில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கூடுதலாகப் பெற்ற இடங்கள் 1158.

2016-2017ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கு (+2 அடிப்படையில்) கிடைத்த இடங்கள் 1781.

2017-2018ஆம் ஆண்டு 'நீட்' தேர்வின் காரணமாக பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்த இடங்கள் 1501 இழப்பு 280.

2017-2018இல் இடம் கிடைக்கப் பெற்றவர்களில் 1004 பேர் முந்தைய ஆண்டுகளில் +2 தேர்வில் வெற்றி பெற்று பல லட்சம் ரூபாய் செலவு செய்து தனிப் பயிற்சி  (சிஷீணீநீலீவீஸீரீ சிமீஸீtக்ஷீமீs) பெற்றவர்கள்  - இதில் 250 பேர் பார்ப்பனர்கள்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர்

2016 - 2017இல் (+2 அடிப்படையில்)             - 854.

2017-2018 ('நீட்' காரணமாக)               - 621.

தாழ்த்தப்பட்டோர்

2016-2017இல்                  - 572

2017-2018இல்                  - 557

அரசு மேனிலைப் பள்ளியில்

2016 -2017இல் (+2 தேர்வு அடிப்படையில்)            - 30

2017-2018இல் ('நீட்' தேர்வு அடிப்படையில்)       - 5

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரின் முரண்பட்ட கருத்து

இந்த சூழலில் 2017-2018ஆம் ஆண்டுக்கான 'நீட்' அறிவிப்பு வெளி வந்துவிட்டது.

இதுகுறித்து கடந்த 18.1.2018 அன்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஒரு தகவலைத் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களை மனதில் கொண்டு மாநிலப் பாடத் திட்டத்திலிருந்து 'நீட்' தேர்வு கேள்வித்தாள்களைத் தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்பிற்கு முற்றிலும் மாறாக 21.1.2018 நாளேடுகளில் ஒரு செய்தி வெளி வந்துள்ளது.

மருத்துவப் படிப்பில் சேர நாடு முழுவதும் நடத்தப்படும் 'நீட்' தேர்வில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் படியே கேள்வித்தாள் தயாரிக்கப்படும் என்று அதே மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார் என்றால் - இது எவ்ளவுப் பெரிய கொடுமை! இடையில் மூன்று நாட்களில் என்ன நடந்தது? பார்ப்பன ஆதிக்க கூட்டத்தின் அழுத்தமில்லாது வேறு என்ன காரணம்?

18ஆம் தேதி தெரிந்த நியாயம் 21ஆம் தேதி தெரியாமல் போய் விட்டதா?

சமூக நீதியை முற்றிலும் அழிக்க சதி!

சமூக நீதியை ஒரேயடியாக முற்றிலும் ஒழித்துக் கட்டியே தீருவது என்று பாரதீய (பார்ப்பன) ஜனதா கட்சி ஆட்சி ஒற்றை முடிவில் உறுதியாக இருக்கிறது என்பது திட்டவட்டமாக விளங்கி விட்டது. தமிழ்நாடு அரசு இதிலும் மத்திய அரசின் கைப்பாவையாகத்தான் ஆடப் போகிறதா?

கடந்தாண்டு 'நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசின் இரு சட்டங்கள்  என்னாயிற்று? அதைப்பற்றியெல்லாம் இவ்வரசுக்கு அக்கறையில்லையா?

மற்ற மற்ற பிரச்சினைகளில் எப்படியோ இருந்து தொலைந்து போனாலும் தமிழ்நாட்டில் சமூகநீதிப் பிரச்சினையில் காட்டிக் கொடுத்தால் அதனைத் தமிழ் நாட்டு மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்பது கடந்த கால கசப்பான வரலாறு  என்பதை எச்சரிக்கையாக சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இதற்கு மேலும் ஒடுக்கப்பட்ட மக்கள் பொறுமை காப்பது என்பது மிகப் பெரிய ஆபத்தில் கொண்டு போய்தான் விடும். தந்தை பெரியார் பிறந்த சமூகநீதி மண் இந்தியாவுக்கே வழி காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மாநிலப் பட்டியலிலிருந்து கல்வி "பொதுப் பட்டியலுக்கு"  (சிஷீஸீநீuக்ஷீக்ஷீமீஸீt லிவீst) மாற்றப்பட்டது; இப்போது மத்தியப் பட்டியலுக்கே ஏக போகமாக மாறிவிட்டதே! மாநில அரசுகள் மவுனம் சாதிக்கலாமா?

ஒன்று சேர்வோம்! உறுதியாக எதிர்ப்போம்!!

அரசியல் மாச்சரியங்களையெல்லாம் ஒரு நொடியில் தூக்கி எறிந்து விட்டு, ஒத்த கருத்துள்ளோர் அனைவரும் ஓரணியில் பொங்கி எழுந்து இதற்கொரு முடிவைக் காண வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக எந்த விலையையும் கொடுப்போம்!

இதற்கான ஏற்பாடுகளை உடனடியாக திராவிடர் கழகம் மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


கி. வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்

 

சென்னை
23.1.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner