எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல்

தேசிய கீதத்துக்கு மட்டும் எழுந்து நின்ற காஞ்சி சங்கராச்சாரியார்

பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள கண்டன அறிக்கை

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல், தேசிய கீதத்துக்கு மட்டும் எழுந்து நின்ற காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரசுவதி பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கை  வருமாறு:

நேற்று (23.1.2018) சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூனியர் காஞ்சி சங்கராச்சாரியாரான விஜயேந்திரர், ஆளுநர் மற்ற சிலரும் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட நேரத்தில் எழுந்து நிற்காமல், இறுதியில் ‘தேசியகீதம்‘ என்ற ஜன கன மண பாட்டுப் பாடப்பட்டபோது மட்டும் எழுந்து நின்றுள்ளார் என்ற செய்தி இன்றைய (24.1.2018) ‘டெக்கான் கிரானிக்கள்’ ஆங்கில நாளேட்டில் வந்துள்ளது!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமதிப்பு!

ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலைந்து திரிந்து, பிறழ் சாட்சிகள் 83 பேர்களின் தயவால் கொலைக் குற்றத்திலிருந்து, புதுவை செஷன்ஸ் கோர்ட்டில் விடுதலை பெற்று, மேல்முறையீடு செய்யாது தப்பித்துக் கொண்டதால், வெளியில் நடமாடும் இவர், அந்த சமஸ்கிருத நூல் வெளியீட்டு விழாவில்,  தமிழ்த்தாய் வாழ்த்தின்போது அதுவும் ஆளுநர் போன்றவர்கள் எழுந்து நின்ற நிலையில்கூட, எழுந்து நிற்க மறுத்து,  அடாவடித்தனமாக அப்படியே அமர்ந்திருப்பது எவ்வகையில் ஏற்கத்தக்கது?

இது அவை நாகரிகத்திற்கேகூட அவமரியாதை அல்லவா?

தமிழ் நீஷ பாஷை - சமஸ்கிருதம் தேவ பாஷை என்று கருதும் - கூறும் புத்திதானே இதற்கு மூலகாரணம்?

தந்தை பெரியார் கட்டிக் காத்த தனிப் பண்பாடு

தள்ளாத வயதில்கூட, கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சிகளில், ‘கடவுள் வாழ்த்து’ பாடப்பட்ட நேரத்திலும், நாட்டுப் பண் இசைக்கப்பட்டபோதும் எழுந்து நின்று அவை நாகரிகத்தினைப் பேணிக் காப்பாற்றிய வரலாறு நாடறிந்த ஒன்று அல்லவா!

இன்னமும் மொழியிலும் உயர்வு- தாழ்வு மனப்பான்மை, பேதத்தன்மை, பார்ப்பனர்களிடம் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகும்!

மன்னிப்புக் கேட்கவேண்டும் சங்கராச்சாரியார்!

தமிழ்நாட்டிலிருந்து கொண்டு, தமிழர்களிடம் காணிக்கை கணிசமாகப் பெற்றுக்கொண்டு பிழைக்கும் பார்ப்பன மடாதிபதியின் தமிழ் அவமதிப்பை - தமிழர்கள் புரிந்துகொள்வார்களா - அம்மேடையில் அமர்ந்திருந்த பட்டிமன்றப் புலவர் சாலமன் பாப்பையா உள்பட?

தமிழர்களே அடையாளம் காண்பீர்!

சங்கர மடம் இதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும்!

 

கி.வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்.

சென்னை24.1.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner