எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காஞ்சி சங்கராச்சாரியார்  பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்!தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் மீது

தமிழக அரசு வழக்குப் பதிவு செய்யவேண்டும்!

தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

ஜூனியர் சங்கராச்சாரியார் விஜயேந்திரர் மாநில ஆளுநர் முன்னிலையிலே தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் வகையில் அநாகரி கமாக நடந்துகொள்வது என்பது சட்டப்படி குற்றமே ஆகும். நியாயமாக தமிழக அரசு விஜயேந்திரர்மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கை  வருமாறு:

உலகம் முழுவதும் 10 கோடி தமிழர்கள் பேசிடும் உயிர்த் துடிப்புள்ள மொழி!

காஞ்சி சங்கராச்சாரியார்களில் ஜூனியரான ஒருவர் நேற்றுமுன்தினம் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், அதுவும் ஆளுநர் பன்வாரி புரோகித் அவர்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில், தமிழ் வணக்கம் பாடப்பட்டபோது, எழுந்து நின்று மரியாதை செய்யாமல், ஆளுநர் உள்பட கலந்துகொண்டோர் அனைவரும் எழுந்து நின்றும், உட்கார்ந்தபடியே இருந்தார்; காரணம், தமிழுக்கு மரியாதை செய்ய - அது எவ்வளவு உயர்ந்த செம்மொழி - உலகம் முழுவதும் 10 கோடி தமிழர்கள் பேசிடும் உயிர்த் துடிப்புள்ள மொழி என்றாலும், அவாளுக்கு அது ‘‘நீஷ பாஷையே’’ - சமஸ் கிருதம்போல அது ‘‘தேவ பாஷை’’யல்ல என்பதால் அலட்சியத்துடன் தமிழை அவமரியாதை செய்துள்ளார்!

நாட்டுப் பண் - ‘ஜனகன மன’ இசைத்தபோது மட்டும் எழுந்து நின்று மரியாதை காட்டியுள்ளார்!

பொதுவாக ஒரு அவைக்குச் சென்றால், அதன் மரபு முறை - அவையின் மரியாதைகளைப் பின்பற்றுவது பண்புடையார் செயல்! தாமும் அப்படி செய்வதே நாகரிகம் அறிந்த பண்பாளர்கள் செய்வது - இது குறைந்தபட்ச மனித நாகரிகமாகும்.

தள்ளாத வயதிலும்

தந்தை பெரியார் எழுந்து நிற்பார்!

கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார், கடவுள் வாழ்த்துப் பாடப்படும்போதுகூட, அவரின் தள்ளாத வயதிலும், இருவரைப் பிடித்துக்கொண்டே எழுந்தே நிற்பார்கள்.

ஆனால், இந்த காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தின் இளைய மடாதிபதி எழாமல் இருப்பதற்குப் பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்ற குரல் உலகம் முழு வதிலிருந்தும் கிளம்பியுள்ளது!

பெருந்தன்மையோடு, வருத்தமோ, மன்னிப்போ கேட்காமல், அதற்கு ஒரு பொருந்தா விளக்கத்தையும் அவரது மடத்தின் சார்பில் விட்டிருக்கிறார்கள்!

கலைஞர் அரசு போட்ட அரசாணை!

அப்போது தியானத்தில் இருந்தாராம்.  அப்படி யானால்,  தேசிய கீதத்திற்கு மட்டும் எழுந்து நின்று, தியானத்தைக் கலைத்துவிட்டாரோ! ‘நீராரும் கட லுடுத்த’ என்ற மனோன்மணியம் சுந்தரனாரின் பாட்டை மொழி வாழ்த்தாக 1970 ஆம் ஆண்டில் நமது கலைஞர் தலைமையில் அரசு ஆணையாகவே அறிவிக்கப்பட்டது.

அந்த அரசாணை அருகே காண்க!

சட்டப்படி கட்டாயக் கடமை!

‘Prayer’ என்ற சொல் உள்ளது. இதன்படி எழுந்து நிற்கவேண்டும், அப்பாடல் மொழி - வணக்கம் ஆக நிகழ்ச்சிகளில் பாடப்படும்போது எழுந்து நின்று மரியாதை செய்வது என்பது சட்டப்படி கட்டாயக் கடமையாகும் என்றே பொருள்.

இதனை ஏற்காது ஒருவர் - அதுவும் மாநில ஆளுநர் முன்னிலையிலே இப்படி அநாகரிகமாக நடந்துகொள்வது என்பது சட்டப்படி குற்றமே ஆகும். நியாயமாக தமிழக அரசு விஜயேந்திரர்மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும்!

சங்கரமடத்தின் பாரம்பரியத்தில் இப்படி தமிழ் அவமதிப்பு புதிதல்ல. இவருக்கு முந்தைய மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதியே தமிழை மரியாதைக்குரிய மொழியாக ஏற்றுக்கொள்ளவில்லை.

பேராசிரியர் ந.சுப்ரமணியன் அவர்களின்

‘‘தன் வரலாறு’’ நூலில்!

இதனை (உடுமலைப் பேட்டையில் வாழ்ந்து மறைந்த) பிரபல வரலாற்றுப் பேராசிரியர் ந.சுப்ரமணியன் அவர்கள், அவரது தந்தையாரான பிரபல தமிழ் வித்துவான் ந.பலராமய்யர் அவர்கள் கூறிய ஒரு செய்தியை தனது தன் வரலாறு நூலான ‘நான்’ என்பதில் பதிவு செய்திருக்கிறார். (பக்கம் 65).

‘‘அக்காலத்தில் சங்கராச்சாரியாராயிருந்த பெரியவர் காரைக்குடிக்கு வந்தார். பள்ளிக்கூடத்திற்கு வந்து கூட மாணவர்களிடையே பேசினார். அவரிடம் சென்று தீர்த்தம் வாங்கிக் கொள்ள ஊரிலிருந்து பெரும்பான்மையோர் ஆர்வத்தோடிருந்தனர். பள்ளி ஆசிரியர்கள் பலரும், தலைமை ஆசிரியர் உள்பட, அவரைக் கண்டு தரிசித்தனர். ஆனால், என் தந்தையார் மட்டும் போகவில்லை. பிறகு சில நாட்கள் கழித்துத் தலைமையாசிரியரின் வற்புறுத்தலுக்கு இணங்கி ஆச்சாரியாரைக் கண்டு தரிசித்துவிட்டு வந்தார். தொடக்கத்தில் மடத்திற்குச் செல்ல அய்யரவர்கள் ஏன் தயங்கினார்கள் என்பதை அறிய விரும்பிய மாசிலாமணி தேசியருக்கு, அய்யரவர்கள் கீழ்க்காணுமாறு கூறினார்:

‘தமிழ்நாட்டிலே தமிழ் மக்களால் பாராட்டப்படும் பீடத்தினர், அப்படியிருந்தும் பூஜைக்குச் செல்ல நீராடிய பிறகு வடமொழியிலே தான் பேசுவார்களாம். தமிழிலே பேசினால் ஆசாரக் குறைவு என்று கருதினார்கள். பூஜை முடித்துப் போஜனம் ஆனபின்தான் தமிழில் பேசுவார்களாம். ஆதலால், அரிய தமிழை அநாதரவு செய்கிறவர்களை நான் ஏன் பார்த்தல் வேண்டும்?’’ என்றார்.

வடலூர் வள்ளலாரின் பதிலடி!

‘தீக்குறளைச் சென்றோதோம்‘ என்ற ஆண்டாளின் திருப்பாவை வரிக்குத் தீய திருக்குறளை ஓதமாட்டோம் என்று சொன்னவரும் இதே சங்கராச்சாரியார்தான்! உண்மைப் பொருள் ‘குறளை’ என்ற சொல்லுக்கு அவ்விடத்தில் கோள் சொல்லுதல் என்பதாகும்.

வடலூர் வள்ளலாரும், அன்றைய சங்கராச்சாரியாரும் சந்தித்த ஒரு நேரத்தில் உலகில் உள்ள மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி சமஸ்கிருதமே என்று கூறிய போது, அப்படி சமஸ்கிருதம் தாய் மொழியாக இருக்கும் பட்சத்தில், அனைத்து மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழ் மொழியே என்று முகத்துக்கு முகம் பதிலடி கொடுத்தவர் வடலூர் இராமலிங்க அடிகளார் ஆவார்கள்!

கலைஞர் அவர்கள் முன்பு சிறிது உடல்நலம் குன்றி யதைச் சட்டிக்காட்டி மனிதப் பண்பின்றி, ‘கருணாநிதி நம் மடத்தைப்பற்றி விமர்சித்தார்; நாம் கொடுத்த சாபப்படி படுத்துண்ட்டுட்டார்!’ என்று எகத்தாளமாகப் பேசியதினாலேயே,  ‘‘சங்கராச்சாரி -யார்?’’ என்ற தொடர் ஆய்வு சொற்பொழிவினை (அது சங்கராச்சாரி-யார்? என்ற நூலாக தமிழிலும், ஆங்கி லத்திலும் வெளிவந்துள்ளது) நாம் நடத்தினோம்!

புரட்சி இயக்குநர் பாரதிராஜா

புரட்சி இயக்குநர் பாரதிராஜா அவர்கள் சுட்டிக் காட்டியதுபோல, தமிழர் நாட்டில், தமிழர் அளிக்கும் காசில் சாப்பிடும் பார்ப்பன பிச்சை இனத்திற்கு எவ்வளவு ஆணவம் இருந்தால், இப்படி நடப்பார்கள் - தமிழை இழிவுபடுத்தி?

தன்மானத்தை, இனமானத்தைக்

காப்பாற்றிக் கொள்ளுங்கள்!

பகிரங்க மன்னிப்புக் கேட்கும்வரை தமிழ்ப் பெருமக்கள் - தமிழாய்ந்த தமிழர்கள் இதனை விட மாட்டார்கள் - இது நிச்சயம்!

விபீடணத் தமிழர்களே, உணர்வு காட்டாவிடிலும் ஒதுங்கி நின்றாவது உங்கள்  தன்மானத்தை, இன மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்!

 

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.


சென்னை
25.1.2018

=====================

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner