எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடத்திற்கு இங்கே இடம் இல்லை என்று சொன்னவர்கள்,

நாங்களும் திராவிடர்கள்தான் என்று ஒப்பனை போடுவது ஏன்?

தமிழக மக்கள் அவ்வளவு சுலபமாக ஒப்பனைகளுக்கு ஏமாறமாட்டார்கள்

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

சென்னை,ஜன.31   திராவிடத்திற்கு இங்கே இடம் இல்லை என்று சொன்னவர்கள், நாங்களும் திராவிடர்கள்தான் என்று திராவிடர் முகமூடி, திராவிட ஒப்பனையைப் போட்டாலாவது கடை விரிக்க முடியுமா? என்று பார்க்கிறார்கள்; ஆனால், தமிழக மக்கள் அவ்வளவு சுலபமாக ஒப்பனைகளுக்கு ஏமாறமாட்டார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

வடசென்னை மாவட்ட திராவிடர்  கழகம் சார்பில் நேற்று  (30.1.2018)  பெரம்பூர் அகரத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

‘நீட்’ தேர்வை எதிர்த்து

5 ஆம் தேதி பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஏற்கெனவே திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரசு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி அதேபோல, கல்வி அமைப்புகள் உள்பட அனைவரும் பெரியார் திடலில் கூடி, ஜனநாயக பாதுகாப்புப் பேரவையின் சார்பில் முடிவு செய்ததற்கு ஏற்ப, வருகிற 5 ஆம் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில் மிகப்பெரிய பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஏற்கெனவே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு உயிரூட்டப்பட்டு, குடியரசுத் தலைவரால் கையொப்பமிட்டு, மீண்டும் தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு வரவேண்டும் என்பதற்கான பெருந் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 5 ஆம் தேதியன்று சிறப்பாக தமிழ்நாடு முழுக்க அனைத்துக் கட்சிகளும் கலந்துகொள்ளக்கூடிய கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கிறது. (சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெறும்).

10 ஆம் தேதி மாணவர் அமைப்புகள் ஆலோசனை

அதற்குப் பிறகு 10 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய மாணவர் அமைப்புகள் சென்னை பெரியார் திடலில் கூடி, அடுத்தகட்டத்தைப்பற்றி தீவிரமாக ஆலோ சிக்கவிருக்கின்றன.

எனவே, ‘நீட்’ தேர்வு என்பதும், அதே போல, மருத்துவக் கல்லூரி, மருத்துவப் படிப்பிற்குத் தோன்றியிருக்கின்ற பல்வேறு பிரச்சினைகள், புதிய மருத்துவர் ஆணையம் இவைகளையெல்லாம் எதிர்த்தும், கைவிடப் படவேண்டும் என்பதை வலியுறுத்தக் கூடியதை சிறப்பாக செய்யவிருக்கிறோம். இதுதான் அடுத்த கட்டமாகும்.

திராவிடர் முகமூடி, திராவிட ஒப்பனை

செய்தியாளர்:  கவிஞர் வைரமுத்துமீதான எதிர்ப்பைப்பற்றி...?

தமிழர் தலைவர்: அவர்களுக்கு வேறு எந்த சரக்கும், மூலதனமும் இல்லை. இந்துத்துவாவிற்கு எந்த மூலதனமும் கிடைக்கவில்லை. அவர்கள் எந்த அளவிற்கு வந்துவிட்டார்கள் என்றால், இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டியதுபோல, பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களே, ‘‘திராவிடத்திற்கு இங்கே இடம் இல்லை என்று சொன்னதுபோக’’, நாங்களும் திராவிடர்கள்தான்’’ என்று திராவிடர் முகமூடி, திராவிட ஒப்பனையைப் போட்டாலாவது கடைவிரிக்க முடியுமா? என்று பார்க்கிறார்கள். ஆனால், தமிழக மக்கள் அவ்வளவு சுலபமாக ஒப்பனைகளுக்கு ஏமாறமாட்டார்கள்.

- இவ்வாறு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner