எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தருமபுரி, ஜன. 31- தருமபுரி மாவட்டம், கடத்தூர் காவல் நிலைய குடியிருப்பு பகுதி தருமபுரி சாலையில் அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட காவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தன. ஆனால் குடியிருப்புகள் பழு தடைந்ததால் குடியிருக்க யாரும் வரவில்லை.

இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தங்குவதற்கு மட்டும் இரண்டு வீடுகளை காவல்துறை கட்டி வழங்கியுள்ளது

கரையான் புற்றெடுத்தது!

இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு ஒரு கரையான் புற்று வளரவே அதை சில ஆன்மிக வியாபாரிகள், அங்கு ஆதிபராசக்தி குடியிருப்பதாக மக்களிடம் கூறி அந்த புற்றுக்கு செவ்வாடை போர்த்தி பூஜை செய்து வழிபட்டனர். சிறிது நாள் கழித்து அதே இடத்தில் சிறிய அளவில் கோயிலைக்கட்டி அதற்கு ஓம் சக்தி கோயில் என்று பெயரிட்டு பக்தி, பஜனை, பூஜை, ஆட்டம் பாட்டம் என நடத்தி வந்தனர். இது தொடர்பாக விடுதலை ஞாயிறு மலரில் வேலியே பயிரை மேயும் நிலை. கடத்தூர் காவல் நிலைய குடியிருப்பு பகுதியில் தனி நபர்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கோயிலை அகற்றுமா காவல் துறை என தலைப்பிட்டு விடுதலையில் செய்தி வெளிவந்திருந்தது. அந்த செய்தியையும் கோயிலை அகற்றக் கூறி ஒன்றிய, மாவட்ட கழக தீர்மான நகலையும் இணைத்து மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் மற்றும் கடத்தூர் காவல் நிலைய ஆய்வாளருக்கு கடிதங்கள் கொடுக்கப்பட்டன.

கழகப் பொதுக்கூட்டத்தில் எச்சரிக்கை

அதன்பிறகு 2017ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி கடத்தூரில்நடந்த திராவிடர் கழக பொதுக் கூட்டத்தில் காவல் நிலைய குடியிருப்புப் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் கோயிலை அகற்றக் கோரி பொது தீர்மானம் கொண்டு வந்து மேடையில் அதைப்பற்றி பேச்சப்பட்டது.

அதன் விளைவாக குடியிருப்பு பகுதியில் தனி நபர்கள் மூலம் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து தனிநபர்களால் கட்டி பணம்கொள்ளையடித்த கோயில் மற்றும் புற்று அதற்கு முன் வைத்திருந்த ஆதிபராசக்தி சிலை என அனைத்தும் அகற்றப்பட்டதுடன் அந்த இடத்தில் கோயில் இருந்ததற்கான எந்தச் சுவடும் இல்லாமல் புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளப்பட்டது (24.12.2017)

அதே போல் அரூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் பின்புறம் இதேபோல ஒரு பெண் பக்தை, காவல்துறைக்கு சொந்தமான இடத்தில் கோயில் கட்டி பக்தி பஜனை என தனி ராஜ்ஜியமே நடத்தியதுடன் அக்கோயிலுக்கு காவல் நிலையத்திருந்தே மின்சாரம் கொடுத்து உதவி வந்தனர்.

அந்த நிலையில் விடுதலை மலரில் கட்டுரை எழுதி, செய்தியுடன் கடிதத்தை டி.எஸ்.பி.யாக இருந்த சஞ்சைதேஷ்முக் சேகர் அவர்களிடம் நீதிமன்ற ஆணைகளின் நகல்களை எல்லாம் இணைத்து கொடுத்ததினால் சட்டத்தை மதித்து டி.எஸ்.பி. அவர்கள் ஜே.சி.பி. மூலம் இடித்துத் தள்ளினார். அவருக்கும் சேர்த்தே கடத்தூர் கூட்டத்தில் பாராட்டு தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் விளைவே கடத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் இரவிச்சந்திரன் மற்றும் துணை ஆய்வாளர் முருகேசன் ஆகியோரை விடுதலை செய்தியாளரும் பொதுக்குழு உறுப்பினருமான அ.தமிழ்ச்செல்வன் சந்தித்து நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார். ஆய்வாளர் கூறியது; ஏற்கெனவே எனக்கு இந்த செய்தியைச் சொன்னார்கள். யாராக இருந்தாலும் சட்டத்தை மதிக்க வேண்டும் அந்தக் குடியிருப்புப் பகுதியில் மேலும் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதையும் கருத்தில் கொண்டுதான் அக்கட்டடம் அகற்றப்பட்டது என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner