எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காவிரி நீர்ப் பிரச்சினை:

தமிழ்நாட்டுக்குரியதைப் பெற்றிட அனைத்துக் கட்சிகள் - அமைப்புக் கூட்டத்தை முதல்வர் உடனே கூட்டுக!

பிரதமரையும் சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டும்

தமிழர் தலைவர்  விடுத்துள்ள அறிக்கை

தமிழ்நாட்டுக்குச் சேரவேண்டிய காவிரி நீரைப் பெற்றிட, அனைத்துக் கட்சிகளின் கூட்டம் கூட்டப்படவேண்டும்; அனைத்துத் தரப்பினரையும் அழைத்துச் சென்று பிரதமரையும்  சந்திக்க தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மிகவும் வேதனையிலும், துன்பத்திலும் உழலுகிறார்கள். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு, இவ்வாண்டு நடைபெறவிருக்கும் கருநாடக சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வை அரியணை ஏற்றிட வசதியாக, கருநாடக வாக்காளர்களைக் குளிர் விப்பது எப்படி - சித்தராமைய்யா தலைமையில் நடை பெறும் ஆட்சிக்கு எதிராக மிகப்பெரிய அதிருப்தி அலை (Anti incumbency) ஏதும் இல்லாததால், அதனை எப்படியாவது, ஏதாவது பழி சுமத்தியாவது ஆட்சியைப் பிடிப்பது எப்படி என்ற வியூகத்தை வகுப்பதில் தமிழ்நாட்டின் நியாயமான காவிரி நதிநீர்ப் பங்கீட்டினை பலி கொடுக்கத் தயாராகிவிட்டது!

மத்திய அரசின் ஒரு சார்பு நிலை!

உச்சநீதிமன்றம் தொடக்கத்திலிருந்தே காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை செயல்படுத்த பலமுறை வற்புறுத்தியும், மத்திய அரசின் காதுகள் ‘கேளாக் காதுகளாகவே' இருந்து வருவதோடு, எதைச் செய்தாவது கருநாடக மக்களின் வாக்குகளைத் தட்டிப் பறிக்கலாம் என்றே திட்டமிட்டு, காவிரி நதிநீர்ப் பங்கீடு விஷயத்தில் பகிரங்கமாகவே ஒரு தலைப்பட்சமாக நடந்துவருகிறது.

நாடாளுமன்றத்தில் 45 எம்.பி.,க்களுக்குமேல் இரு அவைகளிலும் வைத்துள்ள அ.தி.மு.க.வை அதற்குரிய முக்கியத்துவம் கொடுத்து அவர்களைச் சந்திக்கக்கூட பா.ஜ.க. அரசின் பிரதமர் தயாராக இல்லை.

மாநில அரசோ, மத்திய அரசு ஆட்டுவிக்கும்படி ஆடும் பொம்மலாட்ட அரசாக உள்ளது!

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு

‘நீட்’ தேர்வுமுதல் ஜி.எஸ்.டி. பங்கு பகிர்வு உள்பட, தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது!

தமிழகத்தில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி அவர்கள் தலைமையில் உள்ள அரசு, அனைத்துக் கட்சிகள், அமைப்புகள்  கூட்டத்தை எந்த முக் கியப் பிரச்சினைகளுக்காகவும் கூட்டி, பொதுக் கருத்திணக்கத்தினை உருவாக்கி, ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கை இது என்று டில்லிக்கு உணர்த்தவேண்டிய அடிப்படையான, இன்றியமை யாத கடமையைக் கூடச் செய்யாமல், வீண் வறட்டுப் பிடிவாதம் காட்டுகிறது!

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

எம்.ஜி.ஆர். ஆட்சியிலும் சரி, ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலங்களிலும் சரி, பல நேரங்களில் அனைத்துக் கட்சி கூட்டங்கள் கூட்டி, இதே காவிரிப் பிரச்சினைக்கு அன்றைய பிரதமர்களை சந்தித்து வலியுறுத்திய வரலாறு இல்லையா?

பின் ஏன் இப்படி ‘தானடித்த மூப்பாக’ நடந்து கொண்டு, தமிழகத்தின் மாநில உரிமைகளை நாளும் இழந்துகொண்டு வரும் அரசியல் அவலம் தொடரவேண்டும்?

எதிர்க்கட்சியினரையும் அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்கவேண்டும்!

சட்டமன்றத்திற்கு வெளியே பல முக்கிய கட்சிகள், அமைப்புகள் உள்ள நிலையில், உடனடியாக அனைத்துக் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்களை கோட்டையில் கூட்டி, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கட்சிகளின் தலைவர்கள் கருத்தினைக் கேட்டு, ஒரு பொதுத் தீர்மானத்தை நிறைவேற்றி, மத்திய அரசின் முக்கிய அங்கங்களான பிரதமர், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், குடியரசுத் தலைவர் போன்றவர்களைச் சந்திக்கவேண்டும். தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து நேரில் சென்று, வற்புறுத்திடத் தயங்கக் கூடாது.

உடனடியாக, தாமதிக்காமல் மேற்கொள்ளவேண் டிய பணி இது!

கருநாடகம், கேரள அரசுகளின் அணுகுமுறைகள் பாரீர்!

கருநாடக அரசின் முதல்வர் எத்தனை முறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கருத்திணக்கத்தோடு சென்று பிரதமரை மற்ற அமைச்சர்களை சந்தித்துத் திட்டமிடுகின்றனர்.

கேரளாவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை அங்குள்ள முதல்வர் கூட்டி, மாநிலத்தின் பொதுப் பிரச்சினைகளில் வலிமையை உருவாக்கிடும் நிலையில், தமிழ்நாட்டு ஆட்சியினர் இப்படி நடந்து கொள்வது - ஜனநாயக  வழிமுறைதானா?

தேவை புதிய அணுகுமுறை

இந்த மக்கள் விரோத - மாநில உரிமைகள் பறி போவதைத் தடுக்க இயலாத போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து, புதிய அணுகுமுறையாக அனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகள் உள்பட அனைவரையும் ஓர் அணியில் நிற்க வைத்து, மாநில உரிமைகளை வென்றெடுப்போம் என்று மத்திய அரசுக்கும், அண்டை மாநில அரசுகளுக்கும் உணர்த்திட வேண்டியது அவசரம் - அவசியம்!

பிப்ரவரி 5 ஆம் தேதி, உச்சநீதிமன்றத் தீர்ப்பு வருகிறது; நீதிமன்றம் தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றாலும், நடைமுறைப்படுத்தவேண்டியது கருநாடக அரசு அல்லவா?

எனவே, இக்கட்டான தருணத்தில், உடனே அனைத்துக் கட்சி - அனைத்துத் தூதுக்குழு இவைதான் முக்கியம்! முக்கியம்!! முக்கியம்!!

கி.வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்.

 

சென்னை

1.2.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner