எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடத்தை ஒழிக்க எந்தக் கொம்பனாலும் முடியாது!

மத்திய அரசு பந்தயம் கட்டிய மூன்று குதிரைகள்

ஒன்று வண்டிக் குதிரை-இரண்டு நொண்டிக் குதிரை-மூன்று மாயக் குதிரை

வேலூரில் தமிழர் தலைவர் பேட்டி

 

வேலூர், பிப்.12  திராவிடத்தை வீழ்த்திவிட எந்தக் கொம் பனாலும் முடியாது. மத்திய பி.ஜே.பி. மூன்று குதிரைகள் மீது பந்தயம் கட்டியுள்ளது. ஒன்று, வண்டிக்குதிரை, இரண்டு நொண்டிக் குதிரை, மூன்றாவது மாயக் குதிரை என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

வேலூரில் நேற்று (11.2.2018) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

தமிழகத்தில் உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றனவே?

செய்தியாளர்: இன்றைக்குத் தமிழகத்தில், மத்திய அரசு அலுவலகங்கள் எல்லாம் வேறு மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இதைப்பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நிதி ஒதுக்கவேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக, ஆந்திராவில் போராட்டம் நடத்து கிறார்கள். ஆனால், இங்கே நாம் தமிழகத்தினுடைய உரிமைகளை நிறைய இழந்துவிட்டோம்; ஆனால், தமிழக அரசு அதைப்பற்றி கவலைப்படாமல் இருக்கிறது. நீட் தேவையில்லை என்று தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது; ஆனால், அந்த மசோதாக்கள் இன்னும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படாமல் இருக்கின்றன. தமிழக அரசு அழுத்தம் கொடுத்திருந்தால், இந்த ஆண்டு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குக் கிடைத்திருக்கும். ஆனால், எதுவுமே செய்யாமல் இருக்கிறதே தமிழக அரசு?

தமிழர் தலைவர் ஆசிரியர்: தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய ஒரு ஆட்சி டில்லியினுடைய பார்வை தங்கள்மீது எப்போதும் பட்டால்தான் தொடர முடியும் என்கிற ஒரு நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு, டில்லியினுடைய பொம்மலாட்ட அரசுபோல இருக்கின்ற காரணத்தினால், மாநிலத்தினுடைய உரிமைகள் அத்தனையும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. நீங்கள் கேட்டபடி, ஒவ்வொரு உரி மையும், ஏற்கெனவே நாம் போராடி பெற்ற உரிமைகளாகும்.

உதாரணமாக, கோவையில் இருக்கக்கூடிய, காமராசர் கொண்டு வந்த சிறப்பான அச்சகம். அதில் ஆயிரம் பேர் பணி இழக்கக்கூடிய அபாயம். அதேபோன்று ஆவடி யில், ராணுவத்தினருக்கு உடை தயாரிக்கக்கூடிய தொழிற்சாலை. இன்னும் ஏராளமாக உரிமைகள் பறிபோகக் கூடிய அளவில் இருக்கின்றன.

காவிரி நீர்ப் பிரச்சினையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று தெளிவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் கூட, தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் பயிர்கள் வாடிக் கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், அதன்மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்?

எனவே, தமிழகத்தில் உள்ள அரசு என்பது இருக்கிறதே, இது ஒரு செயலற்ற தன்மையில், ஒரு கோமா நிலையில் இருக்கக்கூடிய அரசாக இருக்கிறது.

அவர்களுக்கே ஆட்சியில் எத்தனை நாள் இருப்போம் என்று தெரியாத ஒரு உணர்வு இருப்பதைப்போல நடந்து கொள்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, இரட்டை வேடம் போடுகிறார்கள். ஒரு பக்கம் நீட் தேர்வை நாங்கள் எதிர்ப்பதுதான் கொள்கை என்று சொல்கிறார்கள்.

இன்னொரு பக்கம், நீட் தேர்வுக்காக பயிற்சி வகுப்பு களைத் தொடங்குகிறார்கள்.

தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஓராண்டுக்கு மேலாக மத்திய அரசிடம் இருக்கிறது.

சட்டப்படி அது மாநிலத்திற்கு உரிய உரிமை. அது பிச்சையோ, சலுகையோ அல்ல.

இந்திய அரசியல் சட்டத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலைக்கும்கூட, பொதுப் பட்டியலில் நமக்கும் உரிமை உண்டு; அவர்களுக்கும் உரிமை உண்டு. ஏற்கெனவே இந்த நீட் தேர்வுகுறித்து கடைசியாக நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டு இருக்கின்ற சட்டத்தில் தெளிவாகவே இருக்கிறது.

எந்த மாநில அரசு விலக்குக் கேட்கிறதோ, அந்த விலக்கை அளிக்கவேண்டும் என்று. மாநில அரசு விலக்குக் கோரி, இரண்டு மசோதாக்களை நிறைவேற்றி ஓராண்டுக்கு மேலாக ஆகியிருக்கிறது. அந்த மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகச் சென்று,

அதற்கு அனுமதியில்லை - ஏற்க முடியாது என்றால், அதற்குரிய காரணத்தைச் சொல்லவேண்டும்.

இல்லையானால், இது தொடர்பாக நாங்கள் அடுத்த படியாக ஒத்தக்கருத்துள்ளவர்கள், திராவிடர் கழகம், மாண வர்கள், பெற்றோர்கள் எல்லோரும் சேர்ந்து நீதிமன்றத்தில் பரிகாரம் தேடவேண்டிய அளவிற்கு இருக்கிறது.

ஒரே ஒரு பரிகாரம் என்னவென்றால், எவ்வளவு விரை வில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதோ, அவ்வளவு விரைவில் தமிழ்நாட்டு மக்களுக்கு விடியல் ஏற்படும்.

அ.தி.மு.க. அரசு திராவிடத்தைப்

பலி கொடுக்கிறதா?

செய்தியாளர்: அ.தி.மு.க. அரசு தங்களுடைய ஆட்சியை, பதவியைக் காப்பாற்றுவதற்காக திராவிடத்தைப் பலி கொடுப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

தமிழர் தலைவர் ஆசிரியர்: திராவிடத்தை ஒழிக்க எந்தக் கொம்பனாலும் முடியாது. ஆனால், திராவிட ஆட்சியை மாற்றிவிடலாம் என்று இதற்கு முன்னால், மத்தியில் இருக்கக்கூடிய பா.ஜ.க. அரசு இரண்டு குதிரை கள்மீது பந்தயம் கட்டியது.

அதில் ஒன்று, வண்டிக் குதிரையாகிவிட்டது; இன்னொன்று நொண்டிக் குதிரையாகிவிட்டது. மூன்றாவதாக மாயக் குதிரையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.  அதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவுதான் அதன் ரகசியம்.  அதுவரையில் தேர்தலை இழுத்துக் கொண்டிருப்பார்கள்.

பல்கலைக் கழகங்களில்

லஞ்சம் தலைவிரித்தாடுகிறதே?

செய்தியாளர்: பல்கலைக் கழகங்களில் லஞ்சம் தலை விரித்தாடுகிறது என்று எல்லா அரசியல் கட்சிக்காரர்களும் சொல்கிறார்களே, உங்கள் கருத்து?

தமிழர் தலைவர் ஆசிரியர்: பொதுவாகவே கடந்த காலத்தில், அரசாங்கத்தின்கீழ் இருக்கின்ற துணைவேந்தர் பதவிகள் அதிகத் தொகைக்கு ஏலத்திற்கு விடப்பட்டு இருக்கின்றன.

எனவேதான், கைது செய்யப்பட்டு, காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டால், லஞ்ச லாவண்யம் நடந்தது அவருக் காகவா? அல்லது ஏஜெண்டாக இருந்து வாங்கினாரா? என்கிற உண்மைகள் வெளிவரவேண்டும்; பல உண் மைகள் வெளிவரவேண்டும்.

இது ஒரு பல்கலைக் கழகத்தில் மட்டுமல்ல, அரசு சார்பில் இருக்கின்ற பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனங்கள் எல்லாம் காலதாமதம் ஆகிக்கொண்டிருக்கின்ற காரணம் இதுதான்.

எனவேதான், கல்வி என்பது இருக்கிறதே, கல்வியை நடத்துகிறவர்கள் வியாபாரம் செய்கிறார்கள் என்று சொன்ன காலம் போய்,  கல்விக்கான அரசாங்கப் பதவிகளில் துணைவேந்தர் பதவியிலிருந்து எல்லாப் பதவிகளையும் ஏலம் போடுகிறார்கள் - பணம் கொடுத்து வாங்குகிறார்கள் என்று நீண்ட காலமாக ஒரு மரபாக இருக்கிறது. இதற்கு இதன்மூலமாவது ஒரு முற்றுப்புள்ளி ஏற்பட்டால் மகிழ்ச்சி!

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்தைத் திறப்பதுபற்றி...

செய்தியாளர்: தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  படத்தைத் திறப்பதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர் ஆசிரியர்: 100 கோடி ரூபாய் அபராதமும், தண்டனையும் பெற்றார் என்பதுதான் அதற்குரிய முழுத்தகுதி. அதையும் அந்த வரலாற்றில் இணைக்கவேண்டும்.

உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும்

செய்தியாளர்: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்காக, சிறைக் கைதிகளில், பத்தாண்டுக்குமேல் சிறையில் இருந்தவர்களை விடுதலை செய்கிறார்களே, அதில் ராஜீவ் காந்தி கொலைக் குற்றத்தில் கைதானவர்கள் ஏழு பேர் வரவில்லையே?

தமிழர் தலைவர் ஆசிரியர்: ராஜீவ் காந்தி கொலைக் குற்றத்தில், திட்டமிட்டே சம்பந்தப்படுத்தப்பட்டு, செய் யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்பதுபோல, அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த ஏழு பேர்.

அந்த வழக்கு சரிவர நடத்தப்படவில்லை என்று புலன் விசாரித்த அதிகாரியே தெளிவாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்த வழக்கை விசாரித்த கே.டி.தாமஸ் அவர்கள், தெளிவாக சொல்லியிருக்கிறார், அந்த வழக்கில், என்னு டைய மனச்சாட்சிக்கு விரோதமாக பல செய்திகள் நடந்தன என்று கூறியுள்ளார்.

எனவேதான், அது தெளிவான, நியாய அடிப்படையில் தரப்பட்ட தீர்ப்பல்ல என்பது இவர்கள்மூலமாகத் தெளிவாகியிருக்கிறது.

எனவேதான், இதையெல்லாம் பார்க்கும்பொழுதும், அதற்கப்பாற்பட்டு, சிறையில் 27 ஆண்டுகள் இருந்துவிட்ட பிறகு, சிறையில் அவர்களுடைய நடத்தை மிக சிறப் பாக இருக்கிறது; ஒழுக்கமாக இருக்கிறது என்று அதி காரிகளேகூட பாராட்டும் அளவில் இருக்கும்பொழுது, மனிதநேயத்தோடும், சட்டபூர்வமாகவும், நியாய உணர்வோடும் அவர்கள் உடனடியாக விடுதலை செய் யப்படவேண்டும்.

ரஜினி, கமல் அரசியல் வருகையைப்பற்றி..

செய்தியாளர்: ரஜினி - கமலகாசன் ஆகியோர் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர் ஆசிரியர்: முதலில் வரட்டும். பிறகு பார்க்கலாம். நீங்கள்தான் அந்தப் பலூனை ஊதி ஊதி பெரிதாக்குகிறீர்கள். அது வெடித்துவிடும். நீங்கள் ஊதாதீர்கள். கட்சி ஆரம்பிக்கட்டும், பிறகு நீங்கள் கேள்வி கேளுங்கள். பிள்ளை பிறந்தால்தானே பெயர் வைக்க முடியும்.

- இவ்வாறு செய்தியாளர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner