எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

>> மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட முக்கிய கோவில்களுக்கு சி.அய்.எஸ்.எஃப். பாதுகாப்பு அளிக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்ப மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

(கடவுள் என்ற ஒருவர் இருந்தால் அவருக்கு உயிரும் இருக்குமானால் அவருக்கும் ஒரு நோட்டீசை அனுப்பி இருக்கலாம் அல்லவா!)

>> முன்னேற்பாடுகள் செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் முதலீட்டாளர் மாநாட்டை மேலும் ஓராண்டிற்குத் தமிழக அரசு ஒத்தி வைத்துள்ளது.

(ஓராண்டையும் தாண்டி ஆட்சியிருந்தால் அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்ற தொலைநோக்கோ!)

>> திருநெல்வேலியில் எட்வர்ட் சவுரிமுத்து (65) என்பவர் ‘செக்' மோசடி வழக்கில் ஏழு ஆண்டுகளாகத் தீர்வு கிடைக்காததால் நீதிபதிமுன் தீக்குளிக்க முயன்றார்.

(அப்படிப் பார்க்கப் போனால் நாட்டின் மக்கள் தொகை குறையும் அளவுக்கு தீக்குளிப்பு சம்பவங்கள் நாளும் நடக்க வேண்டியதுதான்!).

>> சேலம் மாவட்டம் தலைவாசல், கோவிந்தம்பாளையத்தில் மாணவியரிடம் ஆபாசமாகப் பேசிய ஆசிரியருக்கு அடி உதை!

(சரிதான்! அப்படியே ஆபாசப் புராணங்களை பள்ளிகளில் சொல்லிக் கொடுப்பதைத் தடுப்பதும் சாலவும் நன்று).

>> தே.மு.தி.க. கொடி அறிமுக நாள் விழாவை, அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜயகாந்த், தன் வீட்டில் தொண்டர்களுடன் கொண்டாடினார்.

(கட்சியைத் தொடங்கியபோது கொடியை திருப்பதி சென்று ஏழுமலையான் காலடியில் வைத்து ஆசி பெற்று கட்சியைத் தொடங்கினார். போணியாகவில்லையே - கொடியின் கொடி வழி வரலாறு இதுதான்!)

>> திருப்போரூர் வட்டம், தாழம்பூர் அருகில் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்த வங்கி அதிகாரியின் வீட்டில் 40 சவரன் நகைகள் கொள்ளை!

(வங்கிகளில்தான் சேப்டி லாக்கர்கள் இருக்கின்றனவே - ஊருக்குத்தான் உபதேசமோ!).

>> ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குப்பின் 90 விழுக்காடு பேர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிய சிறு குறு தொழில்கள் முற்றிலும் முடங்கிவிட்டன ப.சிதம்பரம் மேனாள் நிதியமைச்சர்

(பிரதமர் மோடியின் ‘பக்கோடா' வியாபாரம் இருக்கவே இருக்கே!).

>> சமூக வலைதளங்களை பா.ஜ.க. எம்.பி.,க்கள் இளம் வாக்காளர்களுடன் தொடர்பு கொள்ளவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு.

(சீன நாட்டின் ஷாங்காய் நகரப் பேருந்து நிலையத்தின் படத்தை - குஜராத் மாநிலம், அகமதாபாத் பேருந்து நிலையமாகக் காட்டினாரே அன்றைய குஜராத் முதலமைச்சர் மோடி - அந்த வழியைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்லாமல் சொல்லுகிறாரோ!).

>> பி.ஜே.பி. ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி.

(அண்மையில் நடந்த இடைத்தேர்தல் முடிவுப்படி பி.ஜே.பி. அரசை மக்கள்தான் தள்ளுபடி செய்யத் தயாராகி விட்டார்களே!).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner