எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

** காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன - மத்திய இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால்.

(யார் சொல்லுவதைத்தான் நம்புவதோ? இத்துறை அமைச்சர் நிதின்கட்காரி வேறு ராகத்தில் பாடுகிறாரே - சுருதி பேதம்!).

** கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட இவ்வாண்டு அதிகமாக இருக்கும்.

(சமூகநீதி, பொருளாதாரம், மதவாதம்... அடேயப்பா, எத்தனை எத்தனைத் தாக்கங்களைத்தான் இந்தப் பரிதாபத்துக்குரிய பாரத மாதா புத்திரர்கள் தாங்குவரோ!).

** சென்னையில் மார்ச் 8 இல் சைவ சித்தாந்த மாநாடு.

(இந்து மதத்துக்கும், சைவத்துக்கும் சம்பந்தமில்லை என்று தமிழ்க்கடல் மறைமலை அடிகள், கா.சு.பிள்ளை போன்றவர்கள் சொன்னதை வழிமொழிந்து தீர்மானம் நிறைவேற்றுவார்களா?).

** ஜெயலலிதா நினைவிடத்தில் துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை.

(ஜெயலலிதா மரணமே ‘மர்ம நாவலாக' ஓடிக்கொண்டு இருக்கிறது - இது வேறா?).

** நூறு நாள் வேலைத் திட்டத்தில் வைக்கப்பட்ட ஒரு கோடி மரக்கன்றுகள் கருகும் நிலையில் உள்ளன.

(அந்த வேலைத் திட்டமே பி.ஜே.பி. ஆட்சியில் கருகும் நிலைக்கு ஆளாகிவிட்டதே!).

** பிரதமரை சந்திக்கும் முடிவில் தி.மு.க. பின்வாங்காது - மு.க.ஸ்டாலின், தி.மு.க. செயல் தலைவர்

(அது உண்மைதான். பிரதமர் பின்வாங்காமல் இருப்பாரா என்பதுதான் கேள்விக்குறி!).

** வெறுப்பு அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர். - பிரதமர் நரேந்திர மோடி.

(அது உண்மை என்றால், திரிபுராவில் பி.ஜே.பி. ஆட்சியைப் பிடித்தது எப்படி?!)

** மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைவது அவசியம். - வீரப்ப மொய்லி, காங்கிரசு

(முதலில் காங்கிரசு இதில் தெளிவான கொள்கைகளை வகுத்து திட்டமிட்ட வகையில் களத்தில் இறங்கவேண்டுமே!).

** பாகிஸ்தான் மேலவை உறுப்பினரானார் முதல் இந்துப் பெண்.

(உ.பி. மாநில தேர்தலில் ஒரு தொகுதியில்கூட முசுலிம் வேட்பாளரை நிறுத்தவில்லை பி.ஜே.பி.).

** 87 கோடி வங்கிக் கணக்குகள் ஆதாருடன் இணைப்பு.

(கோடிக்கணக்கில் வங்கிகளில் கடன் வாங்கி வெளிநாடுகளுக்குக் குடும்பத்தோடு வெளியேறிய திமிங்கலங்கள் எந்த இணைப்பில் இருக்கிறார்கள்?)

** கேரளம், கருநாடகத்தில் தாமரை மலரும்.  - யோகி ஆதித்யநாத், முதலமைச்சர் உ.பி.

(பி.ஜே.பி. ஆளும் ம.பி.யிலும், ராஜஸ்தானிலும் தாமரை மலர்கிறதா என்று முதலில் பார்க்கட்டும்!)

** சீனாவில் இரு முறையே அதிபர் பதவி நிபந்தனை நீக்கம்.

(ஜனநாயகம் படும்பாடு!)

** ‘இந்து' குழுமத்திலிருந்து ‘காமதேனு' வார இதழ் வெளிவந்துள்ளது.

(அது என்ன காமதேனு? காவி வாடை வீசுகிறதே!)

** சென்னை மாநகராட்சி நடத்தும் நவீன உடற்பயிற்சிக் கூடம் தண்டையார்பேட்டையில் 4 ஆண்டுகளாக முடக்கம்.

(மாநகராட்சியே முடங்கிக் கிடக்கும்போது, இது எம்மாத்திரம்!)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner