எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சுயநலம் கலவாத உண்மை உழைப்பு எக்காலத்திலும் தோல்வியைத் தராது!

திராவிடர் கழகப் பொதுச்செயலாளராகப் பொறுப் பேற்று 40  ஆவது ஆண்டு தொடங்கும் இக்காலகட்டத்தில்,  இயக்கமும், அறக்கட்டளைகளும், அதன்  அமைப்புகளும், அதன் பணிகளும் மேலும் சிறந்திடவும்,  பெரியார்   கொள்கைப்  பணிகளும் மேலும் தொடர  அருளுங்கள். அதுவே எமது அன்பு வேண்டுகோள்!  சுயநலம் கலவாத உண்மை உழைப்பு எக்காலத்திலும் தோல்வியைத் தராது என்பது உறுதி! வாழ்க பெரியார்! வருக அவர் விரும்பிய சுயமரியாதை உலகு!  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

முழுமுதற் காரணம் ஆசிரியர் ஆ.திராவிடமணி

எனது 85 ஆண்டு வாழ்வில்  75 ஆண்டு கால பொது வாழ்வு அனுபவம் - வாய்ப்புக் கிடைத்தது யான்பெற்ற பேறு. அதற்காக என்னை பக்குவப்படுத்திய  எனது ஆசான் ஆ.திராவிடமணி (அவர் ஊரின் பெயர் பொன்னேரி அருகில் உள்ள ஆசானபுதூர்!) அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றி!

நம் அறிவு ஆசானின் வாழ்நாள் மாணவனாக என்னை ஈடுபடுத்திய முழுமுதற் காரணம் அவரே!
எனது நன்றி என்றும்!

எவ்வித மறுப்பும் இன்றி  இளமை - மாணவப் பருவத் திலேயே இயக்கப் பேச்சாளனாக, பணியாளனாக என்னை இருக்க அனுமதித்த எனது தந்தை மற்றும் (கடலூர்) குடும்பத்தவருக்கு எனது நன்றி என்றும்!

குருதிக் குடும்பத்தைத் தாண்டி, கொள்கைக் குடும்பப் பயணத்திற்கு உதவிடும் எனது இயக்க இருபால் தோழர் களின் இணையிலா ஊக்குவிப்பும், ஒத்துழைப்பும் எனது பணி ‘தொழிலாக' அமையாமல், ‘தொண்டாக' அமைந்திடக் காரணமாகும்!

தொண்டறம் நோக்கிய
தொடர் பணி நோக்கிய வாழ்வு

அரசியல் பாதையில் சென்று இடறிடாமல், சமூக இழிவு ஒழிப்பு, சமூகநீதி, சமத்துவ சமவாய்ப்பு சமுதாயம் அமைக்கும் பேதமிலா பெருவாழ்வை மக்களுக்கு அளித் திடும், சுயமரியாதை உலகை உருவாக்கும், மனநிறைவும், மகிழ்ச்சியும் நிரம்பிய மான மீட்புப் பணியில் ஈடுபட்டு, பெரியார் தொண்டர்களின் தொண்டனாகத், தோழனாகப் பணியாற்றிடும் அரிய வாய்ப்பை தந்த ‘ஞான'த் தந் தைக்கும், தாய்க்கும் எனது ஊனிலும், உணர்விலும், இரத்தத்திலும், சிந்தையிலும் நிறைந்து காணப்படும் நன்றி என்றும் உண்டு. அதுதான் துரோகக் கறை முளைக்காது, தொண்டறம் நோக்கிய, தொடர் பணி நோக்கிய வாழ்வைத் தருவதற்கான காரணமாக அமைந்தது!

எனது வாழ்விணைப்பு - தந்தை பெரியார் ஒரு தொலைநோக்காளர் என்பதற்கான மற்றுமோர் எடுத்துக்காட்டு!
என்னை எனது ஆசானிடம் பணியாற்றிட, அவரை அணுவும் பிசகாமல் அப்பழுக்கின்றிப் பின்பற்றிட அரிய வாய்ப்பினை ஏற்படுத்தியது!

56 ஆண்டுகள்!

‘விடுதலை'க்கு என்னை அறிவு ஆசான் அழைத்தார்; இன்று எண்ணினால், 56  ஆண்டுகள் ஓடிவிட்டன! வீறுநடை போடுகிறது ‘விடுதலை' - இலட்சியப் பயணத்தில் - லட்சக்கணக்கானப் படிகள் நாளை என்ற நம்பிக்கை நமக்குண்டு என்றும்,

இது கருத்து ஏடு - ‘கவர்ச்சி' ஏடு அல்ல!
கொள்கை ஏடு - விளம்பரக் கொள்ளை ஏடு அல்ல!

வாணிபம் அல்ல அதன் நோக்கு

வையம் மானவாழ்வு, உரிமை வாழ்வு, லட்சியம்

வாழ போர்க் குணத்துடன் போராடும் தாக்கு

அதற்குத்தான் எத்தனை எத்தனை சோதனைகள்!

தடைகளைத் தாண்டிய லட்சியப் பயணத்தைத் தடையுறாமல் நடத்தி வருவதில்தான் எவ்வளவு மகிழ்ச்சி - எழுச்சி!

தொய்வில்லா தொடர் பணி!

நெருக்கடி தணிக்கைப் புயலையே சந்தித்து வெற்றி பெற்ற வரலாறும், ‘ஜாமீன்' கட்டல் என்ற விழுப்புண்களும், அக்கால அரசின் அடக்குமுறைகளையும் ஏற்று தனது தொய்வில்லா தொடர் பணியை தொடர்கின்றது!

1978 - இயக்க வாழ்வில் மறக்க முடியாத மற்றொரு ஆண்டு, 1973 ஆம் ஆண்டைப் போலவே!

அறிவு ஆசான் மறைந்தது 1973 இல்!

அன்னையார் மறைந்தது 1978 இல்!

அதற்கடுத்துதான்,

இந்த சின்னக் குருவி தலையில்,

அந்த பெரிய தனிப் பொறுப்பு என்ற பனங்காய்!

தூக்கிச் சுமக்கிறேன் - சுமக்கிறோம்!

சுமையாகத் தெரியவில்லை; சுகமாகவே இருக்கிறது!

காரணம், இந்தச் சின்னக் குருவி, ‘‘பெரியார்'' என்ற இமயத்தினிலும் பெரிதான மலைமீது அல்லவா அமர்ந் திருக்கிறது! அதுவும் அன்னையார் அன்புக் கரங்களின் தழுவலோடு!

இயக்கக் காப்பு என்ற
கெட்டியான தளம்

இவைகளுக்கெல்லாம் கூடுதல் பலம் என்னருந் தோழர்களின் இமை காப்பு போன்ற இயக்கக் காப்பு என்ற கெட்டியான தளம்.

எத்தனை சூறாவளிகளையும், சுனாமிகளையும் சுயமரியாதையுடன், சோர்வின்றித் சொக்கத் தங்கங்களாக அரண் செய்கின்றனர்; எம் மானமிகு தோழர்கள்! பின் அயர்வு எப்படி நமக்கு வரும்?

தனிப் பொறுப்பை ஏற்று, அய்யா, அம்மா அனுபவப் பாடங்களைப் புரட்டி, எதையும் எதிர்கொள்ளும் திடசித்தம் நமக்குண்டு!

எம்மை உற்சாகம் குன்றாது உழைத்திட ஒத்துழைப்பு நல்கும் எனது குருதிக் குடும்பத்தினர், எனது வாழ்விணையருக்கு முதல் நன்றி!

வீட்டைப் பொறுத்தவரை நான் ஒரு ‘விருந்தாளி', நாட்டைப் பொறுத்தவரை நான் ஒரு ‘போராளி' என்ற நிலையை எனக்கு இயல்பாகவே அளித்திடும் வாய்ப்பு அதனால்தான்!

எமது 24 மணிநேரச் சிந்தனையெல்லாம் இயக்கம் - கொள்கை - அதன் எதிர்காலம் இவைபற்றியே!

வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும்போது, எதிர்ப்பு களும், ஏளனங்களும், தடைகளும், சோதனைகளும் ஏற்படுவது இயற்கைதான்!

‘ஈரோட்டுப் பெரியார்'

இன்று ‘உலகப் பெரியார்!'

கட்டுப்பாடு காக்கும் தொண்டர்களும், தோழர்களும் உள்ள இயக்கக் குடும்பம் - அவைகளை பரிபக்குவத்துடன் ஏற்று அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி முன்னேறியதால், அன்று ‘ஈரோட்டுப் பெரியார்' இன்று ‘உலகப் பெரியார்!'

ஆம்! அவர் ஒரு தனி மனிதரல்ல!

தகத்தகாய ஒளிவீசும் தத்துவக் களஞ்சியம்!

தன்னிகரில்லா தன்மான எரிமலை-

எதிர்ப்புகள் நெருங்கும்போது!

இளைஞர்களின் இன்றைய நோய்க்கு அவரே மாமருந்து!

அவரே வாழ்வியல் வழிகாட்டி என்று உணருகிறார்கள்; எனவே ஒன்றுபட விரைகிறார்கள்!

‘நாம்' என்ற கூட்டுப் பெருமுயற்சி!

40 ஆண்டு தொடங்கும் இக்காலத்தில், துணிவு, பணிவு, நேர்மை - இவைகளுடன் இயக்கம் - அறக்கட்டளைகள் - அவை நடத்தும் பல்வேறு தொண்டறப் பணிகள் எல்லாம் சீரும் சிறப்புடன் நடைபெறுவதற்கு மூலகாரணம் - ‘நான்' என்பதல்ல; அல்லவே அல்ல; ‘நாம்' என்ற கூட்டுப் பெருமுயற்சி! மதிஉரைஞர்களான நல்வழிகாட்டல்!!

ஓவ்வொரு பொறுப்பிலும் ஒத்துழைப்பு  நல்கிடும் ஒப்பற்ற தோழர்களின் ஓய்வறியா பணிகளே காரணம்!

எமது அன்பு வேண்டுகோள்!

அத்துணைப் பேருக்கும் எமது இதயத்தின் ஆழமான நன்றி! நன்றி!! இயக்கமும், அறக்கட்டளைகளும், அதன் அமைப்புகளும், அதன் பணிகளும் மேலும் சிறந்திடவும், பெரியார் கொள்கைப்பணிகளும் மேலும் தொடர அருளுங்கள். அதுவே எமது அன்பு வேண்டுகோள்!

சுயநலம் கலவாத உண்மை உழைப்பு எக்காலத்திலும் தோல்வியைத் தராது என்பது உறுதி!

வாழ்க பெரியார்! வருக அவர் விரும்பிய சுயமரியாதை உலகு!

தலைவர்
திராவிடர் கழகம்.

சென்னை
19.3.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner