எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் கேள்வி

சென்னை, மார்ச் 21   ராமராஜ்ஜிய யாத்திரைக்கு தமிழக அ.இ.அ.தி.மு.க. அரசு அனுமதி கொடுத்துள்ளதே - சூத்திரன் சம்பூகன் தவமிருந்தான் என்பதற்காக அவன் தலையை வெட்டினானே ராமன் - அந்த ராமராஜ்ஜியத்தை உருவாக்க மேற்கொள்ளப்படும் ஊர்வலத்திற்கு அனுமதி யளித்தது சரிதானா என்ற வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

"தந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்குப் பதிலடி'' என்ற தலைப்பில், சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நேற்று (20.3.2018) நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்பேட்டி வருமாறு:

திட்டமிட்ட சரணாகதியினுடைய ஒரு விளக்கம்

செய்தியாளர்: முதல்வர் அவர்கள் ரத யாத்திரையால் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை; பிற மாநிலங்களில் எந்தவிதமான கேள்விகளும் எழவில்லை; தமிழகத்தில் மட்டும் ஏன் இந்தக் கேள்விகள் எழுகின்றன; இதன்மூலமாக எதிர்க்கட்சிகள் தங்களை விளம்பரப்படுத்தப் பார்க்கின்றன என்கிறாரே?

தமிழர் தலைவர்: முழுக்க முழுக்க இது ஒரு தவறான அல்லது திட்டமிட்ட சரணாகதியினுடைய ஒரு விளக்கம் என்றே கொள்ளவேண்டும்.

ஏனென்றால், மற்ற மாநிலங்களில் ரத யாத்திரை அனுமதிக்கப்பட்டது; ஆகவே, இந்த மாநிலத்தில் அதை ஏன் தடுக்கவேண்டும் என்கிற கேள்வி, அடிப்படையிலேயே அவர்களுக்கு, இந்த மாநிலத்தினுடைய தனித்தன்மை யான உரிமை எப்படிப்பட்டது என்பது - அவர்களு டைய இயக்கத்தைப்பற்றியே அவர்களுக்குத் தெரியவில்லை என்பது மிகவும் வேதனையாகவும், கண்டனத்திற்குரிய தாகவும் இருக்கிறது.

காரணம்,  பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில், இந்தியா முழுவதும் கலவரப் பூமியாகி, ரத்த ஆறு ஓடியபோது, கொலைகளும், கொள்ளைகளும், காஸ்மா பாலிட்டன் நகரம் என்று கருதப்பட்ட மும்பை உள்பட ஆந்திரா, கேரளா, கருநாடக மாநிலங்களில்கூட கடந்த காலகட்டத்தில் கலவரங்கள் நடந்தன.

கலவரம் நடக்காத ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்றால், அதைப்பற்றி அன்றைக்கு ஏடுகளே எழுதின - காரணம், இது திராவிட பூமி - பெரியார் பண்படுத்திய பூமி - அதன் காரணமாகத்தான், இங்கே இருக்கிற காவல் துறையினரை மற்ற மாநிலங்களின் பாதுகாப்புக்காக நாம் அனுப்பியிருக்கிறோம் என்ற செய்தியை மிகத் தெளிவாக வெளியிட்டிருந்தார்கள்.

மற்ற மாநிலங்களில் ராமராஜ்ஜிய ரத யாத்திரையை அவர்கள் அனுமதிக்கிறார்கள், அனுமதித்துவிட்டார்கள் என்பதற்காக, இந்த அமைதிப்பூங்காவாக இருக்கிற தமிழ் நாட்டில், அதை அனுமதிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.

சிலர் திட்டமிட்டுக் குடிக்கிறார்கள்; ஆகவே, மற்ற வர்கள் எல்லாம் அங்கே குடிக்கிறார்கள்; ஆகவே நாங்கள் இங்கே டாஸ்மாக்கை மூடமாட்டோம் என்று சொன்னால், அது எப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஏற்படும்.

இரவோடு இரவாக திருடர்களைப் போல பெரியார் சிலையின் தலையை உடைத்திருக்கிறார்கள்

தமிழகத்தில் அந்த ராமராஜ்ஜிய ரத யாத்திரை ஊர்வலம் வருவதற்கு முன்பே, தெளிவாக நாங்கள் சொன்னோம், இதை கலவர பூமியாக்குவதற்கு இது ஒரு முன்னோட்டம் என்று.

அதற்காகத்தான் இங்கு வருவதற்கு முன்னாலே, அதைப்பற்றிய பேச்சுகூட அதிகமாக இருக்கக்கூடாது என்பதற்கு, திசை திருப்புவதைப்போல, ஒரு சிறிய ஊரைத் தேர்ந்தெடுத்து, அங்கே இரவோடு இரவாக திருடர்களைப் போல பெரியார் சிலையின் தலையை உடைத்திருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் என்னவென்றால், எல்லோருடைய கவனமும் பெரியார் சிலையில் திரும்பும்; அதன்மூலமாக ரத யாத்திரையை நாம் மிகச் சுலபமாக நடத்திக்கொள்ளலாம் என்ற திட்டமும், ஆர்.எஸ்.எஸினுடைய திட்டமும் அதனுள் இருக்கிறது.

இதெல்லாம் புரியாமல், ஒரு தவறான அணுகுமுறையை தமிழக அரசு கைக்கொண்டிருப்பது, இது ஒத்துப் போவ தல்ல; சரணாகதி, முழுக்க முழுக்க!

144 தடை உத்தரவு என்றால் என்ன?

உதாரணம் சொல்லுகிறேன், நானும் வழக்குரைஞன் தான். 144 உத்தரவு போட்டால், அது எல்லோருக்கும் பொருந்துமே தவிர, அந்த உத்தரவின் தன்மை என்ன வென்றால், நான்கு பேர்களுக்குமேல் கூடி னாலே, அவர்களைக் கைது செய்யவேண்டும். இன்னுங் கேட்டால், பக்தர்கள் உள்பட அவர்களைக் கைது செய் திருக்கவேண்டும்.

அதெப்படி, 144 இல் முன் பகுதி, பின்பகுதி என்று தனித்தனியே பிரிக்க முடியுமா? இதுவரையில் நடைபெறாத, சட்ட விரோதமான தவறான ஒரு அணுகுமுறை.
ஆகவேதான், இவர்கள் எதைச் சொன்னாலும், பொம்மலாட்ட அரசாக இந்த அரசு இருப்பதற்கான அடையாளம்தான்.

வருமுன்னர் காக்கவேண்டும்; தீயை வைக்கின்ற வர்களுக்குப் பாதுகாப்பு; தீயை அணைக்கப் போகிறவர் களைக் கைது செய்து, சிறையில் வைக்கிறார்கள் என்றால், இவர்கள் யார்? இவர்களுடைய உருவம் என்ன? எவ்வ ளவு நாள்களுக்கு இப்படிப்பட்ட ஆட்சியை நடத்தப் போகிறார்கள்?

யாருக்குப் பாதுகாப்பு?

அதுமட்டுமல்ல, ராமராஜ்ஜியம் என்று அவர்கள் சொல்கிறார்கள்; ராமராஜ்ஜியத்தில், சூத்திர சம்பூகன் தவம் செய்தான் என்பதற்காக, விசாரணையே இல்லாமல், தலையை வெட்டினான் ராமன் என்பது முக்கியமானது. அதேபோலத்தான்,  இங்கு பெரியார் சிலையையும் அங்கே வெட்டக் கூடிய அளவிற்கு அவர்கள் அடையாளம் காட்டுகிறார்கள் என்றால், ராமராஜ்ஜிய ரதம் வந்த அன் றைக்கே, இன்னொரு பகுதியில் கலவரத்திற்கு வித்தூன்றி, இன்றைக்கு ஏறத்தாழ தமிழ்நாட்டில் 10 ஆயிரம் பேர்களுக்குமேல் ஆங்காங்கே கிளர்ச்சிகள் செய்து - கைது செய்யப்பட்டுள்ளனரே!

நூறு பேர் போகவேண்டிய இடத்தில், 1,500 காவல் துறையினரை அனுப்பியிருக்கிறார்களே, யாருக்குப் பாது காப்பு? ராமனுக்குப் பாதுகாப்பா? ரதத்திற்குப் பாதுகாப்பா? ஆர்.எஸ்.எஸ்.சுக்குப் பாதுகாப்பா?

கடும் விலையைக் கொடுக்கவேண்டி இருக்கும்

இந்த வித்தைகள் நீண்ட நாள்கள் நீடிக்காது. ஓடுகிற வரையில் ஓடட்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதற்கு அவர்கள் கடும் விலையைக் கொடுக்கவேண்டி இருக்கும்.

இந்த உணர்வு என்பது எப்படி இருக்கிறது என்றால், எல்லா இடங்களையும் கிளறி விட்டிருக்கிறது. ஆகவே, எங்களைப் பொறுத்தவரையில்,  இப்படிப்பட்ட சம்பவங்கள்மூலம் அவர்கள் பதம் பார்க்கிறார்கள், பார்க்கட்டும்!

பெரியார் வாழும்போதும் எதிர்நீச்சல் அடித்தார்;

பெரியார் தத்துவமாக வாழுகின்ற போதும் எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறார்.

எனவே, நாங்கள் அதனை வரவேற்கிறோம். இந்தக் கலவரங்களை செய்யட்டும்; அதன்மூலம் விளையும் விளைவை அவர்கள் அறுவடை செய்யட்டும்.

பார்ப்பனீயத்தின் கைவந்த கலை

செய்தியாளர்: கருநாடகாவில் புதிதாக ஒரு மதம் உருவாகியிருக்கிறது லிங்காயத் மதம். இதுபற்றி உங்களுடைய கருத்து என்ன? தமிழகத்தில் வீர வைணவர்கள் என்று ஒரு பிரிவு இருக்கிறதே, இதற்கு உங்களுடைய ஆதரவு எப்படி இருக்கும்?

தமிழர் தலைவர்: எந்த மதத்தையும் ஏற்காதவர்கள் நாங்கள். எங்களுக்கு மதம் பிடிக்காது. என்றாலும், மத உரிமைகள் என்று சொல்லும்பொழுது, மனித உரிமைகள் என்று சொல்லும்பொழுது, அவரவர்கள் அவரவர்களுடைய கருத்தைத் தெரிவிப்பதற்கு தாராளமாக இடம் உண்டு.

இந்து மதம் என்ற பெயரே, வெள்ளைக்காரன், வெளிநாட்டுக்காரன் கொடுத்ததே தவிர, அது நாம் வைத்த பெயர் அல்ல என்பதை, மறைந்த மூத்த காஞ்சி சங்கராச்சாரியாரே சொல்லி, தெளிவுபடுத்தியிருக்கிறார்.

விவேகானந்தர் அமெரிக்காவிற்குச் சென்று பிரசங்கம் செய்தார்; அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சு என்றெல்லாம் சொல்கிறார்களே, அங்கே விளம்பரப்படுத்தப்பட்ட பொழுதுகூட, எத்தனை மதங்கள் என்று பல மதங்களைச் சொல்லுகின்றபொழுது, இந்து மதம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. பிராமணிசம் - பார்ப்பன மதம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.

ஆகவே, அந்த மதம் நாங்களல்ல; பிராமணிசம் அல்ல; வேதத்தை, ஜாதியை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அல்ல என்று சொல்கிறார்கள். ஆகவே, அவர்கள் தங்களுடைய கருத்தை சொல்லுவதற்கு, இந்திய அரசியல் சட்டத்தில், அவரவர்களின் மதத்திற்குப் பாதுகாப்பு உண்டு. ஆகவே, அந்த உரிமைகளை அவர்கள்  எழுப்பியிருக்கிறார்கள்.

இந்து லா என்று சொல்லக்கூடிய இந்து சட்டத்திலேயேகூட திட்டமிட்டே அவர்கள் எல்லோரையும், ஏன் பவுத்தர்களையும், சீக்கியர்களையும்கூட கொண்டு வந்து வலுக்கட்டாயமாக, கட்டாயத் திருமணம் செய்து வைப்பதுபோல, இந்து என்பதற்குள் நுழைத்திருக்கிறார்கள். இது பார்ப்பனீயத்தின் கைவந்த கலை, அதை எதிர்த்து இப்போது போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன.

இந்து மதம் என்பது கிடையாது

ஏன், தமிழ்நாட்டில்கூட சைவ மதக்காரர்கள், நாங்கள் இந்து மதவாதிகள் அல்ல என்று மதுரை ஆதீனமே சில நாள்களுக்குமுன் சொல்லியிருக்கிறார்.

மறைமலையடிகள் அவர்கள் மதம் என்று எழுதுகிறபொழுது, நிச்சயமாக இந்து மதம் கிடையாது என்று சொல்லியிருக்கிறார்.

இன்னுங்கேட்டால், எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார்களே,  அந்த எம்.ஜி.ஆர். என்ன சொன்னார் என்பதையாவது குறித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
அவரிடம் சென்று உங்களுடைய மதம் என்னவென்று கேட்டபொழுது,

`திராவிட மதம்' என்று சொல்லியிருக்கிறார்.

ஆகவே, அவரவர்கள் கருத்தை சொல்வதற்கு உரிமை உண்டு. அதை ஏன் மறுக்க வேண்டும், ஜாதியின் பெயரால் பிளவுபட்டு இருப்பவர்களை மைனாரிட்டி என்று வைத்துக்கொண்டு, மதத்தில் நாங்கள் பெரும்பான்மையோர் என்று காட்டக்கூடிய வித்தைகள், ஆர்.எஸ்.எஸ். வித்தைகள் நீண்ட நாள்களுக்கு நிலைக்காது என்பதற்கு இது அடையாளம்.

எச்.ராஜாவைக் கேட்டு முடிவு செய்துகொள்ளட்டும்!

செய்தியாளர்: பிராமின்ஸ் நாங்கள் மிக அமைதியான முறையில் வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; எங்களை வேண்டுமென்றே திட்டமிட்டு திராவிடர் கழகத்துக்காரர்கள் பூணூல் அறுக்கிறார்கள் என்று நேற்று எஸ்.வி.சேகர் சொல்லியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: அமைதியான வாழ்க்கை வாழ்கிறார்களா? இல்லையா? என்பதை எச்.ராஜாவைக் கேட்டு முடிவு செய்துகொள்ளட்டும்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner