எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தலைவர்கள் கண்டனம்

சென்னை, மார்ச் 21 தமிழர்களின் தந்தை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு, போற்றப்படும் தந்தை பெரியார் சிலையை உடைக்கத் தூண்டியவர்மீது, அண்ணா பெயரை கட்சி யில் வைத்துக்கொண்டிருக்கும் தமிழக அரசு நடவ டிக்கை எடுக்காதது ஏன்? என்று வினா தொடுத்து, கண்ட னங்களையும் தெரிவித்துள்ளனர் தலைவர்கள்.

ராகுல் காந்தி கண்டனம்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அமைந் துள்ளது புதுக்கோட்டை விடுதி கிராமம். இங்குள்ள குளம் அருகே பெரியாரின் முழு உருவச் சிலையின் தலையை நேற்று முன்தினம் (19.3.2018) இரவு மர்ம நபர்கள் உடைத்து தனி யாக துண்டித்துள்ளனர்.

மேலும் பெரியாரின் கையில் இருந்த தடியும் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது. துண்டிக்கப்பட்ட தலை அதே பகுதியில் வீசப்பட்டுக் கிடந்தது. நேற்று காலை அங்கு வந்தவர்கள் சிலை உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பெரியாரின் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து, காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித் துள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ``திரிபுராவில் லெனின் சிலைத் தகர்ப்பை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. ஊக்குவித்தபோதே அவர்களின் சித்தாந்தத்தை எதிர்த்தவர்களின் சிலைகளை தகர்க்குமாறு தங்களது தொண்டர்களுக்கு அவர்கள் சிக்னல் கொடுத்து விட்டனர். அவ்வகையில், தலித்துகளுக்காகப் போராடிய மிக உயர்ந்த சமூக சீர்திருத்தவாதி பெரியாரின் சிலை இன்று தமிழ்நாட்டில் நாசப்படுத்தப்பட்டுள்ளது'' என குறிப்பிட்டுள்ளார்.

திருடர்கள்போல இரவில் வந்து தந்தை பெரியார் சிலையை உடைப்பதா?

தளபதி மு.க.ஸ்டாலின் கேள்வி


இரவோடு இரவாக கோழைகளைப் போல தந்தை பெரியார் சிலையை உடைக்கிறார்கள் என்றார் தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்.

நேற்று கைதாகி விடுதலை செய்யப்பட்டபோது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இன்று சட்டமன்றத்தின் நேர மில்லா நேரத்தில் ஒரு முக்கியமான பிரச்சினையை நான் எழுப்பினேன். விஷ்வ இந்து பரிஷத் என்ற அமைப்பு மதக் கலவரத்தை தூண்டக்கூடிய வகையில் ஒரு ரத யாத்திரையை தமிழ்நாட்டில் நடத்த திட்டமிட்டு, இன்றைக்கு நெல்லை மாவட்டத்துக்குள் நுழைந்து இருக்கிறார்கள்.

அது தவறு, அதனால் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படும், மத கலவரங்கள் உருவாகும் என்ற எண்ணத்தில், பல்வேறு அமைப்புகளை சார்ந்த தலைவர்கள், குறிப்பாக தொல்.திருமாவளவன், பேராசிரியர் ஜவாஹிருல்லா போன்ற அரசியல் தலைவர்கள் தட்டிக் கேட்ட காரணத்தினால், எதிர்த்து குரல் கொடுத்த காரணத்தினால், நேற்று இரவோடு இரவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டமன்றத்தில் இதுகுறித்து நான் பிரச்சினை எழுப்பினேன்.

அதுமட்டுமல்ல, உச்சநீதிமன்றம் ராமர் கோயில் வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு இந்த யாத்திரையை தொடங்கி இருக்கிறது. இது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே, நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் இதற்கு எப்படி அனுமதி கொடுத்திருக்கிறார் என்பது வியப்புக்குரியதாக இருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், நெல்லை மாவட்டத்தில் நேற்றிரவு திடீரென 144 தடையுத்தரவு போட்டிருக்கிறார்கள். 144 தடையுத்தரவு போடப்பட்டால், அந்தப் பகுதியில் எந்த ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும், மறியலும் நடத்தப்படக்கூடாது. அதுமட்டுமின்றி, 5 பேர் கூட கூட்டமாக கூடக்கூடாது என சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், கலவரத்தை தூண்டிவிட திட்டமிட்டு யாத்திரை நடத்தக்கூடியவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அது தவறு என்று குரல் கொடுப்பவர்களுக்கு அனுமதி இல்லையாம். இது வேடிக்கையானது.

எனவே, இப்படிப்பட்ட உத்தரவை வழங்கியுள்ள அந்த ஆட்சி தலைவர் மீதும், அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவல்துறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் இதையெல்லாம் கண்டும், காணாமல் நடந்து கொண்டிருக்கும் குதிரை பேர ஆட்சி, பாரதிய ஜனதா கட்சிக்கு துதி பாடக்கூடிய, ஜால்ரா போடக்கூடிய நிலையில் இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பது அதிமுக ஆட்சியா அல்லது பிஜேபி ஆட்சியா என்ற சந்தேகம் வந்திருக்கிறது.

இதுபற்றியெல்லாம் நான் சட்டமன்றத்தில் தெளிவாக பேசியிருக்கிறேன். ஆனால், அவைக்குறிப்பில் இருந்து நான் பேசியவை நீக்கப்பட்டு இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. இதற்கெல்லாம் விளக்கம் சொல்வது போல முதலமைச்சர் ஒரு தவறான தகவலை, பாரதிய ஜனதா கட்சிக்கு ஜால்ரா போட்டு, சில தகவல்களை சட்டமன்றத்தில் பதிவு செய்தார்.

அதனை நாங்கள் ஏற்காமல், உடனடியாக அந்த யாத்திரைக்கு தடைபோட வேண்டும், உள் நோக்கத்தோடு 144 தடையுத்தரவு போட்டுள்ள ஆட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சட்டமன்றத்தில் குரல் கொடுத்தோம். உடனே, சபாநாயகர் எங்களை அவையிலிருந்து வெளியேற்றினார். எனவே, வேறுவழியின்றி நாங்கள் கோட்டைக்கு வெளியில் சாலை மறியலில் ஈடுபட்டோம். அதனால் எங்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

பெரியார் சிலையை உடைக்கத் தூண்டிய பிரமுகரை கைது செய்திருந்தால் பெரியார் சிலை உடைக்கப்பட்டு இருக்காது

செய்தியாளர்: ரத யாத்திரை தொடங்கியுள்ள நேரத்தில் தந்தை பெரியார் சிலை உடைக்கப்பட்டு இருக்கிறதே?

மு.க.ஸ்டாலின்: நான் சட்டமன்றத்தில் எழுப்பிய பிரச்சினையையும், இதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பொருத்தமாக இருக்கும். ஏற்கெனவே, பாரதீய ஜனதா கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, தந்தை பெரியார் பற்றியும், திராவிட இயக்கம் பற்றியும் எவ்வளவு கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி பேசிக் கொண்டிருக்கிறார். பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென்று அவரே வெளிப்படையாக, பட்டவர்த்தனமாக கருத்து தெரிவித்து இருக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கையை இந்த அரசு எடுத்திருந்தால், இப்படிப்பட்ட நிலை ஏற்படாமல் நிச்சயம் தடுக்கப்பட்டு இருக்கும். ஆனால், இதையெல்லாம் இந்த ஆட்சியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

செய்தியாளர்களிடையே தளபதி மு.க.ஸ்டாலின்

செய்தியாளர்: பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளதே?

மு.க.ஸ்டாலின்: தந்தை பெரியாரின் சிலையை உடைத்தவர்கள், எல்லோரும் தூங்கிய பிறகு திருடர்கள் போல ராத்திரியில் வந்து உடைத்து விட்டு சென்றிருக்கிறார்கள். அவனுக்கு துணிச்சல் இருந்து, ஆண்மையோடு பட்டப்பகலில் அந்தக் காரியத்தில் ஈடுபட்டு இருந்தால், உரிய தண்டனை நிச்சயமாக அவனுக்கு கிடைத்திருக்கும். இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.

தமிழகத்தில் முதுகெலும்பற்ற ஆட்சி : பெரியார் சிலை உடைப்பு சம்பவத்திற்கு வைகோ கண்டனம்

புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைப்பு சம்பவத்திற்கு ம.தி.முக. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதுகெலும்பற்ற ஆட்சி நடைபெறுவதால் வன்முறைகள் நடைபெறுகின்றன என வைகோ குற்றம்சாட்டியுள்ளார். பெரியார் சிலை உடைப்போம் என்ற எச்.ராஜாவை கைது செய்திருக்க வேண்டும் என வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தை என்ற பெருமை பெரியாருக்கு மட்டுமே உண்டு: மருத்துவர் ச.இராமதாசு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் உருவச் சிலையின் தலையை சில சமூக விரோதிகள் துண்டித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த இரு வாரத்தில் நிகழ்ந்த இரண்டாவது நிகழ்வு இதுவாகும். காட்டுமிராண்டித்தனமான இந்தச் செயல் கண்டிக்கத்தக்கதாகும்.

தந்தைப் பெரியார் தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் சமூகநீதியின் அடையாளமாக திகழ்கிறார். அவரது சிலைகளை சேதப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களும், துடிப்பவர்களும்  பகுத்தறிவற்ற முட்டாள்களாகவும், அயோக்கியர்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் தான் இருக்க வேண்டும். ஏனெனில் தந்தை பெரியார் சிலைகளில் வாழவில்லை. மாறாக, தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் வாழ்கிறார்; பல தலைமுறைகளுக்கு வழி காட்டும் அவரது கொள்கைகளில் வாழ்கிறார்; சமூக நீதியில் வாழ்கிறார். இதை உணராமல் தந்தை பெரியாரின் சிலைகளை உடைப்பதன் மூலம்  தமிழ்நாட்டில் அவர் உருவாக்கி வைத்த உணர்வுகளை அழித்து விடலாம் என்று நினைப்பவர்களை இதை விட கண்ணியமாக எப்படி வர்ணிக்க முடியும்? அவர்களை நினைத்து பரிதாபப்படுகிறேன்.

இந்தியாவில் எந்த தலைவரையும் மக்கள் தந்தையாகவும், பெரியாராகவும் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தப் பெருமை தந்தைப் பெரியாருக்கு மட்டும் தான் உண்டு. ஏனெனில் அடக்கி ஒடுக்கி வைக்கப் பட்டிருந்த மக்களுக்கு தந்தையாக இருந்து போராடினார்; பாதுகாத்தார்; அதனால் அவர் பெரியாராக  உயர்ந்தார். பெரியாரின் கொள்கைகள் இன்னும் நூறு நூற்றாண்டுகள் ஆனாலும் தங்களின் இலக்கை அடைய முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதை உணர்ந்தவர்கள் தான் அவரின் சிலைகளை சேதப்படுத்தி தங்களின் அரிப்பையும், வெறுப்பையும் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். கொள்கைகளை கொள்கைகளால் எதிர்கொள்வதுதான் நேர்மையாகும். அதை சிலரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.

தமிழகத்தில் கடந்த காலங்களில் சிலைகள் அவமதிக்கப்பட்ட நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. ஆனால், தந்தை பெரியாரின் சிலையிலிருந்து தலையை துண்டித்த நிகழ்வு நடந்ததில்லை. தந்தை பெரியாரின் சிலைகளை அகற்றுவோம் என்று கொக்கரித்தவர்கள் தாங்கள் நினைத்ததை நடத்திக் காட்ட முடியும் என்பதை நிரூபிப்பதற்காக நள்ளிரவில் வந்து இந்த செயலைச் செய்து விட்டு போயிருக்கிறார்கள்.

அவர்களுக்கு இத்தகைய துணிச்சல் எங்கிருந்து வந்தது? தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் சிலைகளை அகற்றுவோம் என்று கொக்கரித்தவர்கள் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெரியாரின் வழிவந்த கட்சியைச் சேர்ந்தவராக கூறிக் கொள்ளும் பினாமி முதலமைச்சர் பழனிச்சாமி, பெரியாரை விமர்சித்தவரை கண்டிக்காமல் அவரது அட்மினை விமர்சித்து தனது வீரத்தைக் காட்டினார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தந்தை பெரியாரின் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகள் இருவரும் 10 நாட்களில் பிணையில் வெளிவரும் அளவுக்கு தான் அவர்கள் மீது தமிழக அரசு வலிமையாக வழக்குப் பதிவு செய்திருக்கிறது. அரசுக்கு எதிராக ஆவேசமாகப் பேசினால் குண்டர் சட்டத்தை ஏவும் தமிழக ஆட்சியாளர்களுக்கு இந்த சமூக விரோதிகள் மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சத் துணிச்சல் இல்லையா? சிலையை சேதப்படுத்தியவர்களிடம் அரசு கருணைக் காட்டக்கூடாது.

இம்மாதத் தொடக்கத்தில் தந்தை பெரியாருக்கு எதிராக கொக்கரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தமிழக அரசு காட்டிய அலட்சியம் தான், புதுக்கோட்டை மாவட்டத்திலும் தந்தைப் பெரியாரின் சிலையை சேதப்படுத்தும் துணிச்சலைக் கொடுத்திருக்கிறது. இத்தகைய நிகழ்வுகள் இனியும் நடப்பதைத் தடுக்க புதுக்கோட்டை ஆலங்குடியில் தந்தைப் பெரியாரின் சிலையை சேதப்படுத்தியவர்களையும், அதற்கு தூண்டியவர்களையும் அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

தூண்டிய குற்றவாளி ராஜாமீது சட்டம் பாயாதது ஏன்? பேரா.ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி என்ற கிராமத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை பெரியார் சிலை உடைப்பை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தந்தை பெரியார் எடுத்துரைத்த கொள்கையை வீழ்த்த இயலாத, விரக்தியின் உச்சத்தில் இருக்கும் தீயசக்திகள் அதன் வெளிப்பாடாகவே இந்த சிலை உடைப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

சமீபகாலமாகவே தமிழ்நாட்டில் மதவெறியைத் தூண்டும் பிரச்சாரங்களும், மதரீதியான வெறுப்பு பிரச்சாரங்களும் அதிகமாகி வருகின்றன. மதவெறியைத் தூண்டி நாட்டில் வன்முறைகளைத் தூண்ட நினைக்கும் பாசிச சக்திகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க மறுக்கும் தமிழக அரசு, மதவாதத்திற்கு எதிராக ஜனநாயக அடிப்படையில் போராடுபவர்களை காவல்துறையைக் கொண்டு கைது செய்து வருகிறது.

ஏற்கெனவே திருப்பத்தூர் பெரியார் சிலையை சிதைத்தவர்கள் மீதும், அதற்கு தூண்டுதலாக இருந்த பாஜகவின் எச்.ராஜா மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால், சிலைகளை உடைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருந்திருக்கும். ஆனால் தமிழக அரசு அதனை செய்யத் தவறியதால், இதுபோன்ற வன்செயல்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் இதுபோன்ற வன்முறையைத் தூண்டும் செயலில் ஈடுபடும் பாசிச பயங்கரவாதிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில், தந்தை பெரியாரின் சிலை உடைக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று சொன்ன பிறகும், வி.எச்.பி ரத யாத்திரையை ஒட்டியும் பெரியார் சிலை உடைக்கப்பட்டிருப்பது சங் பரிவாரத்தின் கெட்ட உள்நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது.

கடந்த முறை சிலை உடைப்பை தூண்டும் விதத்திலும், நியாயப்படுத்தும் விதத்திலும் சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட எச்.ராஜா மீது உரியமுறையில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்காதது சமூக விரோத சக்திகளுக்கு தெம்பை அளித்துள்ளது. எனவே, தமிழக அரசு பாஜகவுக்கு விசுவாசம் காட்டுவதை மட்டுமே தன்னுடைய அரசின் கடமையாக கொண்டிருப்பதை கைவிட்டு சட்டம் -ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் தவறிழைக்கும் மதவெறி அமைப்புகள் மற்றும் நபர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாவட்டக் குழுக்கள், அனைத்து மாவட்டங்களிலும், இதர ஜனநாயக சக்திகளோடு இணைந்து கண்டன இயக்கங்களை நடத்தவேண்டும் எனவும், தமிழகத்தில் ஜனநாயக சக்திகளும், மதச்சார்பற்ற அமைப்புகளும் இதற்கெதிராக தங்கள் வலுவான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பெரியாரைப் புரிந்து கொள்ள நூறு ஆண்டுகள் தேவை: மக்கள் நல்வாழ்வுத்துறை மேனாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே கண்டனம்

புதுக்கோட்டையில் தந்தைபெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை மேனாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு என்னுடைய கடுங் கண்டனத் தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது மூளைவளர்ச்சியற்ற காட்டுமிராண்டிச் செயலாகும். இதைச் செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண் டும். பெரியாரைப் புரிந்துகொள்வதற்கு அதிக அளவிலான முதிர்ச்சி தேவை.

75ஆண்டுகளுக்கு முன்பாகவே வெளிப்படையாகவே தன்னை ஒரு நாத்திகர் என்று பெரியார் கூறினார். அவருக்குப்பிறகு 50 ஆண்டுகளுக்குப்பிறகு மாபெரும் இயற்பியல் அறிவியலாளராகிய ஸ்டீபன் ஹாக்கிங் பெரியார் கருத்தை எதிரொலித்தார்.

இருவரிடையே உள்ள வேறுபாடு என்னவென்றால்,  சாதாரண மனிதனும் புரிந்துகொள்ளும்வகையில்  அப்பட்டமாகவும், தெளிவான முறையிலும் பெரியார்  பேசினார். தந்தை பெரியார் கூறிய கருத்தையே ஸ்டீபன் ஹாக்கிங் வானவியல் மற்றும் இயற்பியல்துறையில் தீவிரமான ஆராய்ச்சிகளுக்குப்பின்னர் கூறினார்.

அவர்களின் கருத்துகளை நாம் ஏற்கலாம் அல்லது ஏற்காமல் போகலாம். அதுவேறு.

இந்த நேரத்தில் ஒன்றை நினைவிற்கொள்ள வேண்டும். ராஜாஜியுடன் பெரியார் வேறுபாடுகளைக் கொண்டிருந்தபோதிலும், ராஜாஜி மறைவுற்றபோது, இறுதி மரியாதை செலுத்துமிடத்தில் ராஜாஜியின் உடல் கொண்டுவரப்படுவதற்கு முன்பாகவே முதல் மனிதராக சக்கர நாற்காலியில் அமர்ந்து காத்திருந்தார். அதுதான் தந்தை பெரியாரின் பண்பாடு.

பெரியாரின் கருத்தில் மாறுபாடு கொண்டிருந்தாலும் அவர்குறித்து அலட்சியமாகப் பேசுவதற்கு உரிமையோ, அருகதையோ எவர் ஒருவருக்கும் கிடையாது.

என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால், தந்தை பெரியார்பற்றி முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு மேலும் ஒரு நூறு ஆண்டுகள்கூட ஆகலாம். 21ஆம் நூற்றாண்டில் நாம் இருக்கிறோம். மனிதகுலம் வெட்கித் தலைகுனியும் அளவிற்கு காட்டுமிராண்டியாக இல்லாமல் நாகரிகமான நடத்தை உள்ளவர்களாக இருக்கவேண்டும்.

இவ்வாறு எச்.வி.ஹண்டே வெளியிட்ட கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner