எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்திற்கு ஓர் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் துணைவேந்தரா?

தமிழக ஆளுநரின் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனப் போக்கைக் கண்டித்து 27 ஆம் தேதி சென்னை- மதுரையில் திராவிட மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தேர்வுக்குழுவினர் பரிந்துரைத்தவர்களைப் புறக்கணித்து சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்துக்கு ஓர் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரை தன்னிச்சையாக துணைவேந்தராக நியமித்த ஆளுநரைக் கண்டித்து சென்னை, மதுரை ஆகிய  இரு மாநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக துணைவேந்தர் பதவிக்கு ஒரு ஆந்திர ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரை, தமிழக ஆளுநர் நியமித்திருப்பது - முறைகேடான முறையில் செய்த தவறான நியமனம் என்ற செய்தி உலவி வருகிறது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் நியமனக் குழு இரண்டு நீதிபதிகள் (ஓய்வு), ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கொண்ட அத்தேர்வுக் குழு ரத்து செய்யப்பட்டது.

தேர்வுக் குழு தேர்ந்தெடுத்தவர்கள் நிராகரிப்பு!

அடுத்து நீதிபதி ஜெகதீசன் (ஓய்வு) அவர்களது தலை மையில் அமைக்கப்பட்ட தேர்வுக் குழு, அக்குழுவிற்கு வந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்து முனைவர் வின்சென்ட் காமராஜ், முனைவர் டேவிட் அமரோஸ், முனைவர் பாலு ஆகியோரின் பெயர்களைத் தேர்வு செய்து தமிழ்நாடு ஆளுநருக்குப் பரிந்துரைத்துள்ளது. மூவரும் முழுத் தகுதி படைத்தவர்கள். இவர்களில் ஒருவரை தமிழ்நாடு அரசு தேர்வு செய்து (காரணம் சட்ட அமைச்சர் என்பவர் இணைவேந்தர் - Pro Chancellor) ஆளுநர்மூலம் அறிவிப்புகள் வெளியிடுவது சட்ட சம்பிரதாயமே!

காரணம், ஆளுநர் ஒரு முழுநேர வேந்தர் அல்லர்;  ex offi cio --  ஆளுநர் என்ற தகுதியில் பல்கலைக் கழகங்களின் வேந்தரே தவிர, மற்றபடி பல்கலைக் கழகங்களில் உள்ளதுபோல தனித்த அதிகாரம் பெற்றவர் அல்ல; ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் ஆளுநர், அரசிடமிருந்து அதைப் பறித்துகொண்ட அவலம்; அதை எதிர்க்காமல் மவுனசாமியாராக' தமிழக அரசு இருந்து வருவதால், மாநில உரிமைகள் பறிபோனதன் விளைவு இது!

சட்ட விரோதமாக ஓர்  ஆர்.எஸ்.எஸ்.காரர்

இப்போது முழுக்க முழுக்க சட்ட விரோத, நியாய விரோத நியமனமாக ஒரு ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் - அதுவும் வேறு மாநிலத்தவர் என்பதோடு, பேராசிரியராகப் பணிபுரிந்தபோது பல குற்றச்சாற்றுகள் காரணமாக வேறு பல்கலைக் கழகத்தை நோக்கிச் சென்றவர் (மத்திய அரசு தயவில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் புகலிடம் தேடினார் என்கிற தகவல்கள் முகநூல், வாட்ஸ் அப் போன்றவைகளில் உலா வரும் தகவல்கள் ஆகும்).

முரளிமனோகர் ஜோஷி அன்று செய்தது!

வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, மனிதவள மேம்பாட்டுத் (கல்வி) துறை அமைச்சரான முரளிமனோகர் ஜோஷி என்ற பார்ப்பனர் வடநாட்டில் தங்கள் அதிகாரத் திற்குள் அமைந்த அத்துணைப் பல்கலைக் கழக துணைவேந்தர் பதவிகளிலும் ஆர்.எஸ்.எஸ். கார்டு ஹோல்டர்களையே' நியமித்த கொடுமை உலகறிந்த ஒன்று; மறுக்க முடியாததும் கூட!

தமிழக ஆளுநரின் வர்ணாசிரமப் பார்வை

அதையே தமிழக ஆளுநராக வந்த பார்ப்பனர், பார்ப்பன செயலாளரை தன்னோடு அழைத்து வந்து அமர்த்திக் கொண்டு பச்சைப் பார்ப்பன வருணாசிரம தர்ம தர்பாரை நடத்தத் துவங்கியுள்ளனர் போலும்!

இது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்!

இசைப் பல்கலைக் கழகத்துக்கும் ஒரு பார்ப்பனப் பெண்மணி!

இதுபோலவே, நுண்கலைப் பல்கலை கழகத்தில் (இசைப் பல்கலைக் கழகத்தில்) தகுதியுள்ள நாட்டுப்புற இசைப் பாடகரும், கருநாடக இசை உள்பட பல இசைகளிலும் வல்லுநராகிய ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி அவர்களைப் புறக்கணித்து, அமெரிக்காவில் உள்ள ஒரு பார்ப்பன நிறுவனத்தின் நல்லாசியுடன் பிரமிளா குருமூர்த்தி என்ற பார்ப்பன அம்மையாரை நியமனம் செய்தது குறித்து ஏற்கெனவே பல கடும் விமர்சனங்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன!

பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் எல்லாம் பார்ப்பன மயமாகி வருகிறது.

பணம் வாங்குவது மட்டும் ஊழலல்ல!

ஊழல் என்பது லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல; முறைகேடாக இப்படி தகுதியற்ற, ஏற்கெனவே விசார ணைகளுக்குட்பட்ட நபரை குழுவின் பரிந்துரைகளுக்கு அப்பால் நியமித்திருப்பது ஊழல் அல்லாமல் வேறு என்ன?

பார்ப்பனப் பண்ணையம் கேட்பாரில்லை' என்ற ஒரு பழமொழி உண்டு; அதுபோல், இப்போது வந்துள்ள ஆளுநர் ஒரு தனித்த இணை அரசினை (A Parallel Government)   நடத்துகிறார்!

நமது மாநில அரசும், அமைச்சர்களும் வாய்ப் பேசாது, கைகட்டி சேவகம் புரியும் அடிமைகளைப் போல இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியதே!

இந்த நியமனங்கள் - இதுவரை இருந்துவந்த நியமன முறைகளுக்கே முற்றிலும் மாறானது.

கல்வி ஓடையில் மீண்டும் பார்ப்பன முதலைகளா? காமராசர், கலைஞர் ஆட்சிகளில் பின்பற்றப்பட்ட சமூகநீதியெல்லாம்  தலைகீழாக ஆக்கப்பட்டு விட்டதா? அண்ணாவை கட்சிப் பெயரில் வைத்துக்கொண்டு ஆட்சி செய்வோர் சிந்திக்க வேண்டாமா?

துணைவேந்தர் பதவி வெறும் குமாஸ்தா வேலையா?

ஏதோ குமாஸ்தா வேலைக்கு நேர்முகத் தேர்வு மாதிரி துணைவேந்தர்கள் நியமனம் நடைபெறுவது அப்பதவிக்குள்ள கண்ணியத்தையும் வெகுவாகக் குறைப்பதாகும்.

இது வித்தியாசாகர் ராவ் என்ற ஆளுநர் (பொறுப்பு) காலத்தில் தொடங்கப்பட்டு, இப்போது ஆணியடிக்கப்பட்டு நிலை பெற்றுவரும் பழக்கமாகியுள்ளது!

அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்துக்கு ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர் துணைவேந்தரா?

நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாக, டாக்டர் அம்பேத்கர் பெயரில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்திற்கு ஒரு ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் அதுவும் அடுத்த மாநிலத்திற்குரியவர்; மேலும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான - பார்ப்பனரை  நியமிப்பதற்குக் காரணம்  - ஆர்.எஸ்.எஸ்.காரர் என்ற ஒரே தகுதி என்ற அளவு கோல்தானா?

சென்னையிலும், மதுரையிலும் ஆர்ப்பாட்டம்

இப்படிப்பட்ட நியமனங்களை எதிர்த்து, திராவிட மாணவர் கழகத்தினர் வருகின்ற 27.3.2018 அன்று சென்னையிலும், மதுரையிலும் கண்டன ஆர்ப்பாட்டங் களை நடத்துவார்கள்.


கி.வீரமணி
தலைவர்  
திராவிடர் கழகம்.

சென்னை 
23.3.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner