எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடிமக்கள் கேள்வி கேட்டு ஆராயும் உளப்பாங்கினை வளர்க்கவேண்டும்

பாடத் திட்டத்தில் அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளை நீக்கவேண்டும்

பகுத்தறிவாளர் கழக, ஆசிரியரணி, எழுத்தாளர் மன்றக் கலந்துரையாடலில் முடிவு

சென்னை, மார்ச் 25 குடிமக்கள் கேள்வி கேட்டு ஆராயும் உளப்பாங்கினை வளர்க்கவேண்டும் என்றும், பாடத் திட்டத்தில் அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளை நீக்கவேண்டும் என்றும் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற பொறுப்பாளர்களின் மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

25.3.2018 அன்று சென்னை - பெரியார் திடலில் பகுத் தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற பொறுப்பாளர்களின் மாநில கலந்துரை யாடல் கூட்டத்தில் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1:

இரங்கல் - வீர வணக்கத் தீர்மானம்

தாம் வாழும் காலத்திலேயே வியந்து போற்றப்பட்ட பேரண்ட அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த மார்ச் 14 அன்று காலமானார். சூரியனில் உள்ள கருந் துளை பற்றிய விளக்கம், உலகம் உருவாகி, அதில் உயிரி னங்கள் உருவாவதற்கு அடிப்படையாக அமைந்த பெரும் வெடிப்பு (Big Bang)  கோட்பாடுபற்றிய ஆதாரப்பூர்வமான அறிவியல் கருத்துகளை கூறி, உலகம், உயிரினங்கள்பற்றி நிலவி வந்த மதம் சார்ந்த நம்பிக்கைகளை தகர்த்த அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் ஆவார்.

சிறுவயதிலேயே ஒருவித கொடிய நரம்பியல் நோயால் தாக்கப்பட்டு, அதன் காரணமாக உடல் உறுப்புகள் (மூளை தவிர) செயலிழந்து வெகுவிரைவில் மரணம் அடைந்து விடுவார் என மருத்துவர்கள் கூறிய நிலையில், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அறிவியல்பற்று ஆகிய ஊந்துதல்களால் மருத்துவ அறிவியலுடன் போராடி, 76 வயது வரை வாழ்ந்து மறைந்துள்ளார் மாபெரும் அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்.

தமது அறிவியல் கூற்றுகளை தாமாகவும், பிற அறிஞர் களுடன் இணைந்தும் பல்வேறு புத்தகங்களைப் பதிவு செய்துள்ளவைதான் மானிட மேன்மைக்கு ஸ்டீபன் ஹாக்கிங் விட்டுச் சென்ற அருட்கொடையாகும். அறிவியல் வியக்கும் சாதனை படைத்து வாழ்ந்து பேரண்டம் பற்றிய கருத்துகளுக்கு வலுவான அறிவியல் கோட்பாடுகளைப் படைத்த ஸ்டீபன் மறைவிற்கு நமது பகுத்தறிவாளர் அமைப்பு, அவரது குடும்பத்தாருக்கும், அறிவியல் குழாமிற்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. பேரண்ட அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களுக்கு இந்தக் கூட்டம் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2:

காவி மயக் கூட்டத்தார் செயலை முறியடிக்க....

தமிழ்நாடு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்பொழுது, மதக் கலவரங்கள் நடைபெற்ற காலங்களில் அமைதிப் பூங்காவாக திகழ்ந்துள்ளது. திரிபுரா மாநிலத்தில் பொதுவு டைமை அறிஞர் லெனின் சிலையினை உடைத்து அங்கு அமைதியின்மையை நடைமுறையாக்கிய காவி மயக் கூட்டம், காட்டு தர்பார் நடத்தியுள்ளது. அத்தகைய அட்டூழியங்கள் தமிழ்நாட்டில் நடந்திடும் போக்கில், சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார்பற்றி அவதூறாக அவரது சமூக சமத்துவக் கொள்கைக்குப் புறம்பான   வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, தந்தை பெரியாரின் சிலைகளை சேதப்படுத்துதல், சிலை  உடைத்தல் என சட்டத்துக்குப் புறம்பான செயல்களைக் கண்டித்து தமிழகமே ஒன்று திரண்டு எதிர்த்து உள்ளது. காவி மயக் கூட்டத்திற்கு எதிர்வினைகள் தன்னெழுச்சிப் போராட்டங்கள், சாலை மறியல்கள், தொடர்ந்து கைது, சிறையில் அடைப்பு என்ற எதிர்ப்புக் கிளர்ச்சி எழுந்துள்ளது.

பிற மாநில முதல்வர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள்,  என மிகப் பலர் எதிர்ப்புத் தெரிவித்ததற்கு இக்கூட்டம் பெருமையுடன் நன்றி பாராட்டுகிறது. சிலை உடைப்பு என்பதன் பெயரால் சமூக அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் காவி மயக் கூட்டத்தார் செயலை முறியடித்திடவும் இக்கூட்டம் உறுதி எடுத்துக் கொள்கிறது.

தீர்மானம் 3:

அரசியலமைப்புச் சட்ட விதிமீறல்கள் கூடாது!

அறிவியல் கோட்பாடு என்பது ஆதாரம் சார்ந்த அடிப்படை கொண்டது. பரிசோதனைமூலம் நிரூபணம் செய்யப்படும் தன்மையிலானது. இப்படிப்பட்ட அறிவியல் கோட்பாடுகளை, மதம் சார்ந்த நம்பிக்கைகள் கொண்ட, வேத, புராணங்களில் உள்ள கூற்றுகளுடன் ஒப்பிட்டு, இதிகாச காலத்தில் இருந்தே நிலவி வருவதாக கருத்துத் திணிப்பு வலுவுடன் நடைபெற்று வருகிறது. மத்திய கல்வித் துறை இணை அமைச்சர், அண்மையில் மணிப்பூர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில், அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் நிறுவிய சார்பியல் கோட்பாடு, வேதங்களிலேயே குறிப்பிட்டுள்ளது என எந்தவித மேற்கோள் காட்டாமல் கூறியுள்ளார். மேலும் இந்தக் கூற்றினை மறைந்த இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாகவும் எடுத்துச் சொல்லியுள்ளார்.

அமைச்சரின் கூற்றுக்கு ஆதாரம் என்ன?' என கேட்கப்பட்டபொழுது, கேட்பவர்கள்தான் அந்த ஆதாரத்தைத் தேடவேண்டும் என சற்றும் பொறுப்பற்ற முறையில் நடந்துள்ளார்.

இத்தகைய அறிவியல் கூற்றுகளை, கண்டுபிடிப்புகளை முன்பே வேத, புராணங்களில் உள்ளன எனக் கூறி வருவது மத்தியில் ஆளும் அரசின் அமைச்சர்கள் - பிரதம அமைச்சரிடமிருந்து தொடங்கி, அறிவியல் கருத்துத் திரிபு, கருத்துத் திணிப்பு நடைபெற்று வருகிறது.  இதனை, பகுத்தறிவாளர் கழகம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும் அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் குடிமக்கள் கடமைகளுள் ஒன்றான கேள்வி கேட்டு ஆராயும் உளப்பாங்கினை வளர்க்கவேண்டும்' என்பதனை பொருளற்றதாக ஆக்கிவரும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதி கூறி பொறுப்பேற்றுள்ளவர்கள் இனியும் இத்தகைய அரசமைப்புச் சட்ட விதி மீறலை செய்திடக் கூடாது எனவும், பகுத்தறிவாளர் கழகம் கண்டனத்தினை தெரிவிக்கிறது.

தீர்மானம் 4:

அறிவியலுக்குப் புறம்பானவற்றை பாடத் திட்டங்களில் சேர்க்கக் கூடாது!

மத்தியில் ஆளும் காவி மய அரசும், பல மாநிலங்களில் ஆளும் அந்தக் கட்சியும் கல்விக்கூட பாடத் திட்டத்தில் அறிவியலுக்குப் புறம்பான ஆதாரமற்றவைகளை சேர்க்கும் பணியினைத் தொடர்ந்து செய்து வருகின்றன. இயற்கை அறிவியலாளர் சார்லஸ் டார்வின் நிறுவிய பரிணாமக் கோட்பாடு உண்மையல்ல என மத்திய கல்வி அமைச்சரே கூறி, அந்தக் கோட்பாட்டினை பாடத் திட்டங்களிலிருந்து நீக்கவேண்டும் என அறிவியல் மனப்பான்மை ஏதுமின்றி தெரிவித்துள்ளார்.

பரிணாமக் கோட்பாட்டின் அறிவியல் உண்மையினை சற்றும் புரியாமல், குரங்கினத்திலிருந்து மனித இனம் மாறியதை மூதாதையர்கள் யாரும் பார்க்கவில்லை என கூறியுள்ளார்.

தமது அறிவியல் அடிப்படை அறியாமையை அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில், கல்விப் பாடத் திட்டத்தில் இந்துத்துவா கொள்கையினை திணிக்கும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அண்மையில் அரியானா மாநில அரசு காயத்ரி மந்திரத்தை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் பாடத் திட்டத்தில் சேர்த்துள்ளது.

அறிவியல் மனப்பான்மைக்குப் புறம்பான இந்த செயல் அப்பட்டமான அரசமைப்புச் சட்ட மீறல். இந்தவித வேத, மந்திர திணிப்புகள் நாட்டின் மதச் சார்பின்மையினை அலட்சியம் செய்திடும் போக்காகும்.

அரசியலமைப்புச் சட்டத்தினை மதித்து நடக்கவேண்டிய மத்திய - மாநில ஆட்சியாளர்களின் இத்தகைய வரம்பு மீறல் நடவடிக்கைகளை இக்கூட்டம் கண்டிக்கிறது. திணிக்கப்பட்டுள்ள மதச்சார்புக் கருத்துகளை, அறிவியல் உண்மைக்கு மாறான செய்திகளை திரும்பப் பெறவேண்டும் என கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 5:

தொடர் மறியல்- ஆர்ப்பாட்டம்

மதச்சார்பற்ற அரசின் தகவல் ஒலிபரப்புத் துறையின் சார்பில் நடத்தப் பெறும் தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும், இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றான குடிமக்களின் அடிப்படைக் கடமையாகிய அறிவியல் மனப்பான்மையினை வளர்ப்பது, கேள்வி கேட்டு ஆய்வு நோக்கினை வளர்ப்பது, சீர்திருத்தம் மற்றும் மனிதநேயத்தை வளர்ப்பது எனும் 51ஏ(எச்) பிரிவுபடி, ஏதும் செய்யாததோடு, பகுத்தறிவற்ற மூடநம்பிக்கை, மூடத்திருவிழாக்களையே அனுதினமும் பரப்பி வருவதை வன்மையாக இக்கமிட்டி கண்டிப்பதோடு,

பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும், அந்தக் கொள்கைபற்றிய செய்திகள் - நூல்கள்பற்றியும், பகுத்தறிவாளர்களுக்கு வாய்ப்புத் தரவேண்டும் என்று வற்புறுத்துகிறது.

இந்த மாற்றத்தினை 15 நாள்களுக்குள் செய்யமுன்வராவிடில், தொலைக்காட்சி, வானொலி நிலையங்களின்முன் தொடர் மறியல் போன்ற ஆர்ப்பாட்டம் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அறவழிப் போராட்டம் நடத்தவேண்டியிருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 6:

தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' சந்தா சேர்க்கும் பணி

கடந்த டிசம்பர் 2017 இல் தொடங்கப்பட்ட தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' ஆங்கில ஏட்டிற்கு சந்தா சேர்ப்பு இயக்கத்தை மேலும் வலுவுடன் நடத்திட, ஒவ்வொரு கழக மாவட்டத்திற்கும் இலக்கிடப்பட்ட சந்தா எண்ணிக்கையை முடித்திட வேண்டும். தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' சந்தா சேர்க்கும் பணியினை  ஜூன்  2018 மாதத்திற்குள் முடித்திடவும் தீர்மானிக்கப்படுகிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற பொறுப்பாளர்களின் மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner