எழுத்துரு அளவு Larger Font Smaller Font

Image may contain: 1 personதமிழ்நாடு தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா - கலைஞர் ஆகியவர்களின் மண்

மத்திய அரசின் மதவாத வெறி அரசியலை முறியடிப்போம்! மனித சமத்துவத்திற்காக 95 வயதுவரையிலும் உழைத்த தந்தை பெரியாரின் சிலைகளை உடைப்பவர்களுக்குக் காரணமானவர்களின்மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது! அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்க!

ஈரோடு மண்டல தி.மு.க. மாநாட்டில் அரிய 50 தீர்மானங்கள் நிறைவேற்றம்

 

ஈரோடு, மார்ச் 26 மதச் சார்பின்மைக்கு விரோதமாக மதவாதத்தை கையிலெடுக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்தும், மனித சமத்துவத்திற்காக 95 ஆம் வயதிலும் பாடுபட்ட தந்தை பெரியார் சிலைகளை உடைக்கத் தூண்டும் மதவெறியர்கள்மீது உரிய நடவடிக்கையை எடுக்கத் தவறிய அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு தேவை என்பதை வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று பிரகடனப்படுத்தும் தீர்மானம் உள்பட 50 அரிய தீர்மானங்கள்  ஈரோடு மண்டல தி.மு.க. மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

ஈரோட்டில் தந்தை பெரியார் திடல்,  அறிஞர் அண்ணா நகரில், 2018 மார்ச் 24, 25 (சனி, ஞாயிறு) அன்று ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் முன்னிலையில், செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

மத்திய பாஜக அரசின் மதவாதம் மற்றும் மொழித்திணிப்பைத் தடுத்து நிறுத்துவோம்!

2014 நாடாளுமன்றத் தேர்தலில் வளர்ச்சி, ஊழல் ஒழிப்பு, கருப்புப் பணமீட்பு என்ற பொய்யான உறுதிமொழிகளை முன் வைத்து மக்களை நம்ப வைத்து வாக்குகளைப் பெற்ற பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிப்  பொறுப்பு ஏற்றதிலிருந்து அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான பன்முகத்தன்மைக்கும், ஜனநாயகத்திற்கும் மதச்சார்பற்ற தன்மைக்கும் கூட்டுறவு கூட்டாட்சிக் கும் விரோதமான  செயல்களில் ஈடுபட்டு நாட்டைப் பிளவுபடுத்தும் மதவாதப் பாதையில் அழைத்துச் சென்று தங்கள் ஆட்சியின் தோல்வியை மறைத்து 2019 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க விபரீத விளையாட்டுகளையும், மீண்டும் கவர்ச்சிகரமான பொய்களையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. நாட்டை மத ரீதியாகவும் மொழிவெறி அடிப்படையிலும் பிரித்தாள முனைப்புடன் செயல்படும் பா.ஜ.க.விற்கும், அதன் ஆதரவோடு இயங்கிவரும் இந்துத்துவா சங்பரிவார அமைப்புகளுக்கும் இந்த மாநாடு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

மதவெறி சித்தாந்தங்களுக்கு எதிரான பகுத்தறிவுச் சிந்தனைகளைப் புறக்கணிப்பது, அத்தகைய சிந்தனையாளர்கள் இந்திய நாட்டுக்கு எதிரானவர்கள் என்ற பிரச்சாரத்தை மேற்கொள்வது, சுதந்திரச் சிந்தனையாளர்களான, எம். எம். கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கவுரி லங்கேஷ் ஆகியோரை கொலை செய்வது உள்ளிட்ட அக்கிரமமும் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் நடந்தேறியுள்ளது.

சுதந்திரமாக இயங்க வேண்டிய அரசியல் சட்ட அமைப்புகளை எல்லாம் சர்வாதிகார அடிப்படையில் தங்களின் கைப்பாவைகளாக மாற்றி, தங்களுக்கு எதிராக எழும் ஊழல் புகார்களையும் எதிர்க்கட்சிகளை நசுக்க எடுக்கும் முயற்சிகளையும் மறைத்து, பிரதமர் உள்ளிட்ட பொது ஊழியர்களின் மீது எழும் புகார்களை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக்பால் அமைப்பையும் ஏற்படுத் தாமல், ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் வகையில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு எதேச்சாதிகாரமாகச் செயல்படுவதால் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறிக் கொண்டிருக்கின்றன. பாட்டாளிகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் உற்ற தோழனாகக் கருதப்படும் லெனின் சிலையை திரிபுரா தேர்தல் வெற்றிக் களியாட்டத்தில், புல்டோசர் வைத்து இடித்ததோடு நில்லாமல், தமிழகத்தில் உள்ள பெரியார் சிலையையும் உடைப்போம் என தங்களது வெறுப்பு அரசியல் நஞ்சை தமிழகத்திலும் பாய்ச்சிட பா.ஜ.க.வும் அதன் கூட்டாளிகளான இந்துத்துவா அமைப்புகளும் தீவிரமாக ஈடுபட்டு வருவது நாட்டின் இறையாண்மைக்கே விடப்பட்டுள்ள சவால் என்று   இந்த மாநாடு உணருகிறது. அதில் ஒரு அங்கமாகவே ராமர் கோயில் கட்டுவது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதையும் மதிக்காமல், நாடு முழுவதும் விஸ்வ இந்து பரிஷத் ரத யாத்திரை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து, அந்த ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய அதிமுக அரசும் அனுமதி அளித்து பா.ஜ.க.வின் மதவெறி அரசியலுக்கு உரமூட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது. சகோதரத்துவத்துடனும், சகிப்புத்தன்மையுடனும் பல்வேறு மதத்தினரும் வாழும் தமிழகத்தில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படும் பா.ஜ.க.வின் துணை அமைப்புகளுக்கு உதவி செய்யும் மத்திய- மாநில அரசுகளுக்கு இந்த மாநாடு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாடு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் புகட்டிய மண் -  தலைவர் கலைஞர் பண்படுத்திய மண் என்பதால், மதவெறி - மொழித் திணிப்பு போன்றவை எந்த விதத்தில், எந்த வடிவத்தில் தமிழகத்திற்குள் நுழைந்தாலும் அதை ஜனநாயக முறையில் தட்டிக் கேட்கவோ, தடுத்து நிறுத்தவோ திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் தயங்காது என்றும், நாட்டின் பன்முகத்தன்மையைக் காப்பாற்ற அரசியல் சட் டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள அடிப் படை அம்சங்களை நிலைநாட்ட தி.மு.க. உறுதியுடன் போராடும் என்றும் இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

பெரியார்சிலை சேதத்திற்கு அதிமுக அரசே முழுப்பொறுப்பு!

தமிழகத்தில் பெரியார் சிலையை உடைப்போம் என்ற எச்.ராஜா போன்ற பா.ஜ.க.வினரின் பேச்சுக்களால் தூண்டப்பட்டு திருப்பத்தூரிலும், புதுக்கோட்டையிலும் தந்தை பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு இந்த மாநாடு கடும் கண்டனத் தைத் தெரிவித்துக் கொள்கிறது.

சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களையெடுத்து சமநிலைச் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கோடு, தன்னை வருத்திக் கொண்டு தமிழகம் முழுவதும் தனது 95 வயது வரையிலும் சுற்றி வந்து, மனிதனுக்கு மனிதன் சமம் என்ற ஒற்றைச் சிந்தனையை உருவாக்க, தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டுப் பண்படுத்திய மண்ணில், அவர் சிலையை உடைக்கவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் உதவாக்கரை அ.தி.மு.க அரசு குற்றவாளியை 12 மணி நேரத்தில் பிடித்து விட்டோம் என்று கண் துடைப்பு நாடகத்தை நடத்தி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

தந்தை பெரியார் மண்ணில் அவரது சிலையைப் பாதுகாக்க முடியாத கையாலாகாத ஆளும் அ.தி.மு.க. அரசு, தமிழ்நாட்டில் ஆட்சி நடத்துவது வெட்கக்கேடாக இருக்கிறது. மதவெறி பா.ஜ.க.விற்கு சாமரம் வீசவும் - ஊழல் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டு பதவிச் சுகத்தை அனுபவிக்கவும் -  பெரியார் சிலையை உடைப்பதை தூண்டும் பா.ஜ.க.வினர் மீதும், அதன் துணை அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க முதுகெலும்பு இல் லாமல் முக்கித் திணறிக்கொண்டிருக்கிறது ஆளும் அ.தி.மு.க அரசு. குறிப்பாக, ரத யாத்திரை தமிழகத்திற்குள் நுழையும் தினத்தில் சகோதரத்துவம் தவழும் தமிழ் மண்ணில் பெரியார் சிலையை உடைத்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை இந்துத்துவா அடிப்படையில் பிளவு படுத்தும் பா.ஜ.க.வின் வஞ்சக முயற்சிக்கு அதிமுக அரசு துணை போவதை இந்த மாநாடு மிகுந்த வேதனையுடன் பதிவு செய்கிறது.

எனவே, தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் மீது கை வைப்பவரை, குண்டர் சட்டத்தில் அடைத்து, தமிழ் மண் மத வெறியையும், வர்ணாசிரம இழிவுகளையும் விரும்பாத மண் என்பதை  நிலைநாட்ட வேண்டும் என்றும்;  இனி பெரியார் சிலை தமிழகத்தில் உடைக்கப்பட்டால் அதற்கு அ.தி.மு.க அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இந்த மாநாடு எச்சரிக்க விரும்புகிறது.

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு

மருத்துவப் படிப்பிற்கு நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்வதை கழகம் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழக மக்களும் கடுமையாக எதிர்த்து வருவதும், இன்றைய மத்திய பா.ஜ.க. அரசு மாநிலத்தின் ஒட்டு மொத்த எதிர்ப்பை உதாசீனப்படுத்தி வருவதும், அ.தி.மு.க அரசும் தேவையான அழுத்தம் தராமல் மாணவர்களைக் கைவிட்டதும் அனைவரும் அறிந்தவை.

2016-2017 இல், +2 அடிப்படையில், நீட் தேர்வு இல்லாத போது மருத்துவத் தேர்வு பெற்ற தமிழக மாணவர்கள் 3546 என்பது, 2017-2018 இல் நீட் அடிப்படையில் மாநிலத் திட்டப்படி தேர்வு பெற்ற தமிழக மாணவர்கள் வெறும் 2314 பேர் அதாவது 1232 பேர் குறைவாகத் தேர்வாகியுள்ளனர். ஆனால் அதற்கு மாறாக சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் படித்து நீட் நுழைவுத்தேர்வு அடிப்படையில் தேர்வு பெற்றவர்கள் எண்ணிக்கை 62 லிருந்து 1220 ஆக அதாவது 1158 இடங்கள் அதிகமாகப் பெற்றுள்ளனர். மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதுபவர் எண்ணிக்கை 9 லட்சம். அதாவது 98.5 சதவிகிதம் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் தேர்வு எழுதுபவர் சுமார் 14000 பேர் அதாவது 1.5 சதவீதம் என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல்  2016-2017-இல் நீட் இல்லாதபோது, தேர்வு பெற்ற பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 1781 ஆக இருந்து 2017-2018 -இல் நீட் அடிப்படையில் 1501 எனச் சுருங்கி, 280 இடங்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் 233 இடங்கள் குறைவாகியுள்ளன. 2016-2017-இல் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் +2 எழுதியவர்களுக்கு 30 இடங்கள் கிடைத்திருந்த நிலையில், 2017-2018 இல் அது வெறும் 5 பேர் என்ற அளவிற்குக் குறைந்து போனது. ஆக எல்லாவகையிலும், தமிழக மாணவர்களுக்கு மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது; சமூகநீதி முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது.       இந்நிலையில் 2018-19ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு அறிவிப்புகள் வெளிவந்து விட்டன.  மத்திய இணை அமைச்சர் இந்த ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள்கள் மாநிலப்பாடத்திட்டத்தின் படி இருக்கும் என்று 18.01.2018-ல் கூறியிருந்ததற்கு மாறாக, 21.01.2018 நாளிட்ட செய்திக் குறிப்பில் இந்த ஆண்டும் நீட் வினாத்தாள் சி.பி.எஸ்.சி பாடத்திட்ட அடிப்படையிலேயே இருக்கும் என்று அறிவித்திருப்பது ஏழை எளிய நடுத்தரப் பிரிவு மாணவர்களைப் பழிவாங்கும் மத்திய அரசின் ஏதேச்சதிகார மனப்பான்மையைக் காட்டுகிறது. கடந்த 2017 பிப்ரவரி 1ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டுமென்றும், அரசு மருத்துவர்களின் மேற்படிப்பிற்காக 50 சதவீதம் இட ஒதுக்கீடு பாதுக்காக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகச் சட்டம் நிறைவேற்றி, இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அப்படி அனுப்பி வைக்கப்பட்ட சட்டப்பேரவையின் இரண்டு சட்ட முன்வடிவுகளை எந்தக் காரணமும் இன்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கே அனுப்பாமல் மத்திய அரசு தனது கடமையிலிருந்து நழுவி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. 11.8.2017 அன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்த தமிழக முதலமைச்சர், இதைக் குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தவில்லை. மாநில அ.தி.மு.க அரசும் மத்திய அரசுடன் கைகோர்த்துக் கொண்டு, தமிழக மாணவர்களை வஞ்சித்துக் கொண்டிருப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. மத்திய மாநில அரசுகள் உடனடியாக தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவுகளை இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலிலேயே சட்டங்களாக்க வேண்டு மெனவும், நீட் தேர்விலிருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்கப்பட வேண்டுமெனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.       பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வியில் நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்து வரலாற்றுச் சாதனை படைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். ஆகவே நீட் மட்டுமல்லாது, மாவட்ட நீதிபதிகள் தேர்வு உள்ளிட்ட  எல்லா வகையான நுழைவுத் தேர்வுகளும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை. பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுகள், மாணவர் சேர்க்கை முதலியன மாநில அரசுகளின் அதிகார எல்லைக்கு உட்பட்டவை. அவசரநிலை காலத்தில் மைய அரசால் பறிக்கப்பட்ட மாநில அரசின் கல்வி உரிமையை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.       9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் படித்திருந்தால் மட்டுமே தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என்றும்; தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்பு முடித்தவர்கள் மட்டும் தான் தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பு படிக்க முடியும் என்றும் அரசாணைகள் வெளியிட வேண்டுமென்று மாநில அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது..

காவிரி மேலாண்மை வாரியம்

16.2.2018 அன்று வெளியிடப்பட்ட உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மைவாரியத்தையும் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவையும் ஆறு வாரகாலத்திற்குள் மத்திய அரசு அமைத்து அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டுமென 15.3.2018 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏற்கனவே ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆயினும் இன்னும் மத்திய அரசு அவற்றை அமைப்பதற்கான முனைப்பு காட்டாமல் உள்நோக்கத்துடன் தாமதப்படுத்திக் கொண்டு இருப்பதோடு உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராகவே மத்திய நீர் வளத்துறை அமைச்சரும், செயலாளரும் பேசி வருவதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. முதன் முதலில் காவிரி நடுவர் மன்றம் அமைக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, பிறகு 2.6.1990-ல் நடுவர் மன்றம் அமைத்தது, இடைக்காலத் தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை நடுவர் மன்றத்திற்குப் பெற்றது, நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு பெற்றது, அதன்படி நதிநீர் ஆணையம் அமைத்தது, 5.2.2007-ல் இறுதித் தீர்ப்பு பெற்றது என்று தலைவர் கலைஞர் அவர்களும், திராவிட முன்னேற்றக் கழகமும் நிகழ்த்திய காவிரி நதிநீர்ச் சாதனைகளை அதிமுக அரசு பொறாமை உணர்வுடன் கொச்சைப்படுத்தி வருவதற்கு இந்த மாநாடு கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது. 19.2.2013-ல் அரசிதழில் காவிரித் தீர்ப்பு வெளியிட்ட பிறகும், உச்சநீதிமன்றம் மூன்று நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்த பிறகும் அதிமுக அரசு, மெத்தனமாக இருந்து விட்டது. ஆகவே தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை மதித்து காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டுமென்றும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரான கழகச் செயல் தலைவர் தளபதி அவர்கள் தி.மு.க. சார்பில் அறிவித்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்கூட ரத்து செய்து விட்டு,  அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 22.2.2018 அன்று பங்கேற்று காவிரிப் பிரச்சினையில் தமிழக நலன் காக்க ஆளுங்கட்சிக்கு அளித்துள்ள முழு ஒத்துழைப்பைப் பயன்படுத்தி மாநில அரசு தனது தயக்க நிலையைத் தவிர்த்து, காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவையும் உடனே அமைத்திட மத்திய அரசுக்கு போதிய அழுத்தத்தை தர வேண்டுமென்றும், மத்திய அரசுக்கு எதிராக ஆந்திர மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தமிழக நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

Comments  

 
#1 saleem basha 2018-03-26 22:23
அருமையான பேச்சு நன்றி
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner