எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதவாத ஊர்வலத்திற்கு அனுமதி-மோட்' சார்பில் நடத்தும்

மதச்சார்பின்மைப் பிரச்சாரத்திற்குத் தடையா?

கருத்துரிமை - பிரச்சார உரிமைக்குத் தடை கூடாது!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

ராமராஜ்ஜியம் என்ற மதவாத ஊர்வலத்திற்கு அனுமதி யளிப்பதும், மதச்சார்பற்ற தன்மையைப் பரப்பும் மோட்' என்னும் அமைப்பின் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பதும் சட்டவிரோதமாகும். அரசு மறுபரிசீலனை செய்யட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மதச்சார்பற்ற அணியினரான பாசிசத்திற்கெதிரான மக்கள் மோட்' PPAF) என்ற அமைப்பின் சார்பில் சென்னையிலிருந்து கன்னியாகுமரிவரை நடத்தவிருக்கும் மதச்சார்பற்ற தத்துவ பாதுகாப்பு பிரச்சாரப் பேரணிக்கு சென்னை நகர காவல்துறை ஆணையர் அனுமதி மறுத்து, தடை விதித்திருப்பதினால், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் தொடர்ந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டீஸ் எம்.எஸ்.ரமேஷ் அவர்கள், எல்லா மாவட்டங்களிலும் காவல்துறை பாதுகாப்புடன் செல்ல, கேட்ட அனுமதியை ஏன் காவல்துறை மறுக்கவேண்டும்? காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) இதுபற்றி புதன்கிழமை (நாளைக்குள்) முடிவு எடுத்து தெரிவிக்கவேண்டும் என்று தமிழக அரசின் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மக்கள் எதிர்ப்பினைப் பொருட்படுத்தாமல் அனுமதி ஏன்?

இராமராஜ்ஜியம் - இராமன் கோவில் கட்டும் பிரச்சாரம் என்பதற்கு மக்கள் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், 144 தடை உத்தரவு பிறப்பித்து, அந்த ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தேர் வருவதற்குப் பாதுகாப்பும், மறைமுக வரவேற்பும் அளிக்கப்பட்டுள்ளதே!

ரத யாத்திரையில், 100 பேர்  வருகிறார்கள் என்றால்,  1000 காவலர்கள் பாதுகாப்பு என்று கொடுத்த அ.தி.மு.க. அரசும், அதன் காவல்துறையும், அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய பீடிகைத் தத்துவங்களில் (Preamble)
ஒன்றான மதச்சார்பின்மையை வலியுறுத்தி, மதக் கலவரமற்ற பூமியாகிய இந்தப் பெரியார் மண்ணைப் பாதுகாக்க, சமூக நல்லிணக்கத்தின் தேவைபற்றி, மதவெறியை மாய்த்து, மனிதநேயத்தைக் காக்கும் பிரச்சாரப் பயணம் செய்ய ஏன் தடை விதிக்கவேண்டும்?

வழக்குரைஞரின் நியாயமான கேள்வி

உயர்நீதிமன்றத்தில் வாதாடிய பிரபல மூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் அவர்கள், தமிழ்நாடு காவல்துறை, மக்களின் அடிப்படையாகிய ஊர்வலம், பேரணி, பிரச்சாரத்தைத் தடை செய்வது அரசமைப்பு சட்ட விரோதம்; அடிப்படை மனித உரிமைகள் பறிப்பு என்று வாதாடியதோடு, தமிழ்நாடு அரசுக்கென தனியே ஒரு அரசமைப்பு சட்டம் வகுத்துக் கொண்டார்களா? மதச்சார்பின்மைக்கு விரோதமாகப் பிரச்சாரம் செய்யும் மதவெறி அமைப்புகளுக்கு அனுமதி, காவல்துறையினரின் பாதுகாப்பு; (அரசமைப்புச் சட்டக் கடமையோடு எதிர்த்தவர்கள் கைது; 144 தடைச் சட்டத்தையும் தவறாகப் பயன்படுத்திய போக்கு என்பதெல்லாம் சரிதானா?) என்று வழக்குரைஞர் வாதாடியுள்ளது குறிப்பிடத்தகுந்ததாகும்.

காவல்துறை, ஏவல் துறையாக வேண்டாமே!

எனவே, தமிழக அரசும், காவல்துறையும் டில்லி காவி ஆட்சியின் ஏவல் துறையே என்று தங்களைக் காட்டிக் கொள்வதுபோல் நடந்து கொள்ளாமல், கருத்துரிமை, பேச்சுரிமை, பிரச்சார உரிமைகளுக்குத் தடை போடாமல், அரசமைப்புச் சட்டத்தின்படி கடமையாற்றிட அனுமதியளிப்பதுதான் நியாயமானது.

மதச்சார்பற்ற அத்தனை சக்திகளும் இதில் தமிழ்நாட்டில் ஒன்றுபட்டு நிற்கவேண்டியது இன்றைய காலகட்டத்தில் கட்டாயமாகும்!

மதச்சார்பின்மை தத்துவம்- பிரச்சாரத்துக்கு ஆதரவு தாரீர்!

திராவிடர் கழகம் ஆங்காங்கு இந்தப் பிரச்சாரப் பேரணிக்கு ஒத்துழைப்பும், வரவேற்பும் அளிப்பதுடன், எவ்வித கலவரங்களை எதிரிகள் நடத்த முனைந்தாலும், காவல்துறையை கடமையாற்றிடச் செய்து, பொதுமக்களுக்கு எவ்வித அசவுகரியமும் இன்றி, சீரிய முறையில் பிரச்சாரம் செய்து, வன்முறையற்ற நன்முறைப் பிரச்சாரப் பயணமாக அதனை ஆக்கிடுவது, மதச்சார்பின்மைக்கு பலம் சேர்ப்பதாகும், காவிகள் கனவை நிறைவேறவிடாமல் அமைதி வழியில் அறிவார்ந்த பிரச்சாரத்தை, பாட்டு, பேச்சு, சொற்பொழிவுகள்மூலம் செய்யவேண்டும் என்றும், கட்டுப்பாடு காக்கவேண்டும் என்றும் விரும்பி, உயர்நீதிமன்றத்தின் நீதியை எதிர்நோக்குகிறோம்.

எந்தக் கட்சிக்கும் ஆட்சி நிரந்தரமல்ல என்பது நினைவிருக்கட்டும்!

அடித்தவனை விட்டுவிட்டு, அடிபட்டவனை குற்றவாளியாக்கும் இந்த ஒருதலைப்பட்ச அநீதிப் போக்கினை காவல்துறை - முதலமைச்சர் பொறுப்பில் உள்ள துறை கைவிடவேண்டும்.

எந்தக் கட்சிக்கும் ஆட்சி நிரந்தரமல்ல என்பதையும் காவல் துறை அதிகாரிகள் நினைவில் வைத்து, நடுநிலையோடும், பொறுப்போடும் நடந்துகொள்வார்களாக!

 

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்.

சென்னை

27.3.2018

Comments  

 
#1 M.K. venkatraman 2018-03-28 16:12
இப்பேரணியில் நானும் கலந்துகொள்ள விருப்பமாயுள்ளே ன்
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner