எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தற்கொலை செய்துகொள்வோம் என்பது வேடிக்கைப் பேச்சு - கவைக்குதவாத பேச்சு

நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப்பதோடு - எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்வோம் என்றால் - தமிழ்நாடே ஆதரவு தெரிவிக்கும்!

செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்

தஞ்சை, மார்ச் 29    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம்அமைக்கவில்லையானால்,தற்கொலைசெய்து கொள்வோம் என்பது வேடிக்கைப் பேச்சு; கவைக்குதவாத பேச்சு. இவர்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப் பதோடு மட்டுமல்லாமல், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்வோம் என்றால், இவர்களுக்குத் தமிழ் நாடே ஆதரவு தெரிவிக்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தஞ்சையில் நேற்று (28.3.2018)  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்பேட்டி வருமாறு:

மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந் திருக்கக் கூடியவரான அருமை சகோதரர் மானமிகு நடராசன் அவர்கள் மறைந்த நிலையில், அவருடைய வாழ் விணையரான அன்பு சகோதரி சசிகலா அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இரங்கல் தெரிவித்து, ஆறுதல் கூறி, துக்கத்தை விசாரிப்பதற்காக, நானும், எனது வாழ்விணையரும் வந்து, சிறிது நேரம் அவர்களிடத்தில் ஆறுதல் கூறிவிட்டு வந்தோம்.

வேடிக்கைப் பேச்சு, கவைக்குதவாத பேச்சு

செய்தியாளர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கா விட்டால், நாங்கள் தற்கொலை செய்துகொள்வோம் என்று மாநிலங்களவையில் அ.தி.மு.க. நாடாளுமன்றக் குழுவின் தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறியிருப்பதுபற்றி தங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: இன்னும் 48 மணிநேரம் கூட இல்லாத, ஒரு ஆவலை, எதிர்ப்பார்ப்பை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு பிரச்சினை; 6 வாரத்திற்குள்ளாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீரவேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தினுடைய திட்டவட்டமான தீர்ப்பாகும்.

அரசியல் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்துக்கொண் டிருக்கின்ற பிரதமர் மோடி அரசு, உச்சநீதிமன்றத்தை மதிக்க மாட்டோம்; உச்சநீதிமன்றத்தின் ஆணையை நாங்கள் செயல்படுத்தமாட்டோம் என்று சொன்னால், இதைவிட மிகப்பெரிய அரசியல் சட்டத்திற்கு கேடானதும், புறம்பானதும், அரசியல் சட்டத்தையே மீறுகின்ற ஆட்சி வேறு இருக்க முடியாது.

அந்த வகையில், நாங்கள் அவமதிப்பு வழக்கு போடு கிறோம் என்று சொன்னால் மட்டும் போதாது; இன்னும் ஒரு வேடிக்கையான செய்தி, அ.தி.மு.க. உறுப்பினர்களின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் நவநீதகிருஷ்ணன் அவர்கள், மாநிலங்களவையில் உரையாற்றும்பொழுது, நாங்கள் எல்லாம் தற்கொலை செய்துகொள்வோம் என்றார். இது விந்தையானது, தேவையற்றது.

ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் அவர்கள், ஜனநாய கத்தில் தற்கொலை என்ற எல்லைக்குப் போகவேண்டிய அவசியமே இல்லை. மாறாக, அது ஏதோ வித்தை போன்று தெரியுமே தவிர, அது உணர்வுபூர்வமான நிலை என்பது கிடையாது.

அதிகமாக செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான், மத்திய அரசின்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு மற்றவர்கள் தயாராக இருக்கின்ற பொழுது, நாங்கள் அதில் பங்கேற்போம் என்பது சொல்வது மட்டுமல்ல, இன்னும் ஒருபடி மேலே சென்று, எங்களுடைய எம்.பி.,க்கள் எம்.எல்.ஏ,.க்கள் எல்லோரும் ராஜினாமா செய்வோம் என்று சொன்னால், தமிழ்நாடே அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கக்கூடிய இந்தப் பிரச்சி னையில் ஏன் தயங்குகிறார்கள்?

எனவே, தும்பை விட்டு வாலைப் பிடிப்பது; அல்லது தற்கொலை செய்துகொள்வோம் என்று சொல்வது, ஏதோ அடிமைகள் வேறு வழியில்லாமல் சொல்வதுபோன்று சொல்வதால், அவர்களுக்குப் பெருமையளிப்பதும் இல்லை; அது அரசியலில் ஏற்கத்தக்கதுமில்லை.

இன்னுங்கேட்டால், இந்த சூழ்நிலையில், சரியான விடையாக அது அமையாது; சரியான தீர்வாகவும் அது ஆகாது. தீர்வு அவர்களுடைய கைகளிலேயே இருக்கிறது. ராஜினாமா கடிதங்கள்; நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு. தமிழ்நாட்டையே உலுக்குகின்ற பிரச்சினையில்,  தமிழ்நாடே ஒன்றாக இருக்கிறது என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அந்த உணர்வுகளைக் காட்டுகிறோம்; எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்ற பேதமில்லை. அப்படி இருக்கும்பொழுது, அதனைப் பயன்படுத்தத் தெரியாமல், நாங்கள் தற்கொலை செய்துகொள்கிறோம் என்பது வேடிக்கைப் பேச்சு, கவைக்குதவாத பேச்சாகும்.

எதையோ மறைக்க முயற்சிக்கிறார்கள்

செய்தியாளர்: இன்றைக்குத் தஞ்சைக்கு வந்த தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அவர்கள், பெயரில் என்ன இருக்கிறது? தமிழகத்திற்கு தண்ணீர் வந்தால் போதாதா என்று சாதாரணமாக சொல்கிறார்களே?

தமிழர் தலைவர்: இதைவிட தமிழகத்திற்குத் துரோ கம் இழைக்கின்ற பேச்சு வேறு கிடையாது. பட்டுக்கோட் டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு என்ன விலை என்று பதில் சொல்வதுபோல இருக்கிறது அவருடைய பேச்சு.  இவ்வளவு காலமாக நடந்த வழக்கு, நீண்ட காலமாக காவிரியை நம்பியுள்ள டெல்டா பகுதி விவசாயிகளுக்கு உள்ள சட்டபூர்வமான உரிமை. இது பிச்சையோ, சலுகையோ அல்ல.

அந்த வகையில் இருக்கும்பொழுது, காவிரி யாருக்கும் சொந்தமில்லை என்று உச்சநீதிமன்றம் சொல்லி, நடுவர் மன்றம் 18 ஆண்டுகளுக்குமேலான பிறகு, இடைக்கால தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு கொடுத்த பிறகு, எனக்கு அமைப்பின் பெயர் முக்கியமல்ல என்று தத்துவார்த்தம் பேசுவது இருக்கிறதே, அது எதைக் காட்டுகிறது என்றால், அவர்கள் எதையோ மறைக்க கஷ்டப்பட்டு முயற்சிக்கிறார்கள்; அவர்கள் அனுதாபத்திற்குரியவர்கள், கண்டனத்திற்குரியவர்கள்கூட அல்ல.

ஒரு அரசியல் நெருக்கடியை உண்டாக்கவேண்டும்

செய்தியாளர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைப் பதற்கு இன்னும் ஒரு நாள்தானே இருக்கிறது?

தமிழர் தலைவர்: இந்த ஒரு நாளில், அ.தி.மு.க. எம்.பி.,க்கள் தற்கொலை செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. கைகளில் வெண்ணெயை வைத்துக்கொண்டு, நெய்க்கு யாரிடத்திலோ பிச்சை கேட்பதுபோல, தற்கொலை செய்துகொள்வோம் என்று அ.தி.மு.க. சார்பில் பேசியிருப்பது விரும்பத்தக்கதல்ல.

அடிமைகளாக இருப்பவர்கள்தான் வேறு வழியில் லாமல், தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவார்களே தவிர, அதிகாரத் தைக் தங்கள் கைகளில் வைத்திருக்கிறவர்கள் செய்ய வேண்டிய ஒன்று என்னவென்றால், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாங்கள் வெகுவாக ஆதரிப்போம் என்று சொல்லவேண்டும். அல்லது எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் உள்பட அத்துணை பேரும் ராஜினாமா செய்வோம். தமிழ்நாட்டில் ஒரு அரசியல் நெருக்கடியை உண்டாக்குவோம் என்று சொல்லுகின்ற ஒரு பெரிய வீரம், துணிவுதான் இப்போதைக்குத் தேவையே தவிர, தற்கொலைத் தத்துவமல்ல.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner