எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீட்'டை எதிர்த்து டில்லி கான்ஸ்டிடியூசன் கிளப்பில் மாலை 4 மணிமுதல் இரவு 9.30 மணிவரை சமூகநீதி கருத்தரங்கம்

கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வருக!

நீட்' தொடர்பாக தமிழக சட்டமன்ற இரு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குக!

பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், மாணவர்கள் பங்கேற்ற சமூகநீதி வரலாற்றின் மைல்கல்!

புதுடில்லி, ஏப்.4 நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட் டுக்கு விலக்கு அளிக்கப்படவேண்டும்; கல் வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும்; மருத்துவ மேற்படிப்பிலும், பல்கலைக் கழக ஆசிரியர்கள் நியமனத்திலும் இட ஒதுக்கீடு முறையைக் கொண்டுவர வேண்டும் என்பது உள்பட மூன்று முத்தான கோரிக்கைகள், 3.4.2018 அன்று, புதுடில்லி கான்ஸ்டிடியூசன் கிளப்பில் நடைபெற்ற நீட்' எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் ஒரு மனதாக உணர்ச்சி முழக்கத்திடையே முன்வைக் கப்பட்டன.

முதல் அமர்வில்

மாணவர்கள் சங்க நாதம்

முதல் அமர்வு மாலை 4 மணிக்கு, முற்றிலும் மாணவர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசினார்கள். திராவிட மாணவர் கழ கத்தின் மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் நடைபெற்ற இந்த அமர் வில், சி.வி.எம்.பி.எழிலரசன் (சட்டப்பேரவை உறுப்பினர், மாநில செயலாளர், திராவிட முன் னேற்றக் கழக மாணவரணி), தி.ஆ.நவீன் (பொறுப்பாளர், தமிழ்நாடு மாணவர் காங்கிரசு), வழக்குரைஞர் செஞ்சுடர் (மாநில துணைச்  செயலாளர், முற்போக்குமாணவர்கழகம்), புளி யங்குடி எம்.முகமதுஅல்அமீன் (தேசிய இணைச் செயலாளர், முசுலிம் மாணவர் பேரவை), நூரு தீன் (மாநிலச் செயலாளர், சமூகநீதி மாணவர் இயக்கம்), எஸ்.முஸ்தபா (மாநில தலைவர், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா), முகம்மது அசாருதீன் (மாநில செயலாளர், மாணவர் இந்தியா), இளையராஜா (தலைவர், தமிழ்நாடு மாணவர் முன்னணி), சிறீநாத் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாணவரணி), கா.அமுதரசன் (அனைத்திந்திய கிராமப்புற மாணவர் சங்கம்),  தோழர் விசுவஜித்குமார் (பொதுச்செயலாளர், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்) மற்றும் மருத்துவர்களின் அமைப்பின் சார் பில், டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் (பொதுச்செயலாளர், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்), டாக்டர் நந்தகுமார் (கூடுதல் செயலாளர், தமிழ் நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம்) ஆகியோர் மிகச்சிறப்பாக தங்கள் கருத்துக்களை தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளிலும் பேசினார்கள். மாணவர் அமைப்பின் பிரதி நிதிகள் அனைவருக்கும், திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர்தலைவர் சால்வை அணிவித்து, சிறப்புசெய்தார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் கள், தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிறப் பித்தனர்.

தமிழர் தலைவர் தலைமையில்

இரண்டாவது அமர்வு

இரண்டாவது அமர்வு மாலை 5.45 மணிக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் தலைமையில் துவங்கியது.  அவர் தனது உரையில்,  உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் "நீட் தேர்வு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது" என்று குறிப்பிட்டதை ஆதாரத்தோடு சுட்டிக்காட்டினார். அதோடு "இது மாநில உரிமைகளுக்கு எதிரானது, ஏழை களுக்கு எதிரானது. இந்திய கூட்டாட்சிக்கே எதிரானது" என்றும் கூறினார். தொடர்ந்து இந்திய அரசியல் சட்டப் பிரிவுகள் 51, 76, 93 ஆகியவை தமிழ்நாட்டுக்காக மட்டும் மாற்றப்படும். அதற்கான கருத்து வலிமை எங் களிடம் இருக்கிறது. ஆகவே, வெற்றி பெற்றே தீருவோம். இது புராண காலமல்ல ஏகலைவனின் விரலை வெட்டுவதற்கு; துரோணாச்சாரிகள் எச்சரிக்கையோடு இருக்கட்டும்'' என்று முழங்கினார். அவரது உரை ஆங்கிலத்தில் அமைந்திருந்தது.

நாடாளுமன்ற  உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, து.ராஜா, மு.தமிமுன்அன்சாரி (சட்டப் பேரவை உறுப்பினர், பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயகக் கட்சி), கே.கே.எஸ்.எம். தெகலான்பாகவி (மாநில தலைவர், எஸ்.டி.பி.அய்), பேராசிரியர் அனில்சட்கோபால் (கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பின் தலைமைக் குழு உறுப்பினர் - கிமிதிஸிஜிணி  ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., தலைமையில் மூன்றாவது அமர்வு

மூன்றாவது அமர்வு இரவு 7.45 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்டி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. தொல்.திருமாவளவன் (தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), பெ.விசுவநாதன் (மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரசு), பேராசிரியர் மு.ஹி.ஜவாஹிருல்லா (தலைவர், மனிதநேய மக்கள் கட்சி), பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை), திமுக சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

நீட்' விலக்கு தொடர்பாக தமிழக சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய இரண்டு மசோதாக்கள், குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக 15  மாதங்களாக காத்திருக்கிறது.  இதனைக்கண்டித்தும், குடியரசுத் தலைவரின் ஒப்புதல்பெற, மத்திய அரசு உடனடியாக இரண்டு மசோதாக்களையும், அனுப்பி வைத்திடவும், இந்தக் கல்வி ஆண்டிலேயே, இதற்குத் தீர்வுகாண வலியுறுத்தியும் தீர்மானம் மாணவர் அமைப்புகளால் கொண்டுவரப்பட்டது. மாணவர் அமைப்பின் சார்பில் எழிலரசன் கொண்டு வந்த தீர்மானத்தை, அரங்கத்தில்  கூடியிருந்த  அனைவரும் வரவேற்று பலத்த கரவொலிமூலம் தங்கள் ஆதரவை தந்தனர்.

திராவிடர் கழகத்தின் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி நன்றியுரையுடன் கருத்தரங்கம் இரவு 9.30 மணிக்கு நிறைவுற்றது.

திராவிடர் கழகத் தலைவருக்குப் பாராட்டு!

மாலை 4 மணிமுதல் இரவு 9.30 மணிவரை நடைபெற்ற கருத்தரங்கில், தமிழகம் மட்டுமன்றி, புதுடில்லியில் உள்ள மாணவர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு, சிறப்பித்தனர்.  முன்னதாக வருகைதந்த அனைவருக்கும், அமைப்பின்  சார்பில் தேநீர் மற்றும் சிற்றுண்டி அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் துவங்கிய நீட்' எதிர்ப்புக்குரல், புதுடில்லிவரை சென்றடைந்துள்ளது.  இதற்கு அடித்தளம் அமைத்த தமிழர்தலைவரின் முயற்சியைப் பேசிய அனைவரும் பாராட்டினர். மாணவர்கள் அமைப்பின் சார்பில் பேசிய அனைவரும், பெரியார்வழியில் நாம் ஒருங்கிணைந்து பணியாற்றவேண்டிய அவசியத்தை, கட்சி, ஜாதி, மதம், மாநிலம் கடந்து செயலாற்ற வேண்டிய அவசியத்தை, வலியுறுத்தியது அனைத்துத் தலைவர்களையும் மகிழ்ச்சியடைய செய்தது. இரண்டு நிகழ்வுகளிலும், நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி, திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் மற்றும் திராவிடர் கழகத்தின் பொறுப்பாளர்கள், மாணவர் அமைப்பின் உறுப்பினர்கள், ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் அதன் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

சமூகநீதிக் கருத்தரங்கம் - தீர்மானம்

3.4.2018, புதுடில்லி கான்ஸ்டிடியூசன் கிளப்பில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கில் ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு நிறைவேற்றிய தீர்மானம் வருமாறு:

நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்குமாறு தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்ட முன்வரைவுகளையும் 15 மாதங்களாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், கிடப்பில் போட்டுள்ளது மத்திய அரசு. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமலும், ஏன் அனுப்பப்படவில்லை என்ற காரணத்தைக்கூட சொல்லாமலும் மத்திய பா.ஜ.க. அரசு காட்டி வரும் அலட்சியம் கண்டிக்கத்தக்கதும், இந்தப் போக்கு மாநில உரிமையையும், அரசியல் சட்டம் தந்திருக்கும் உரிமையையும் மறுப்பதுமாகும். மத்திய அரசின் இத்தகைய போக்கிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, இனியும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக வரும் 2018-2019 கல்வி ஆண்டிலேயே குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தர வேண்டும் என்பதை அழுத்தந்திருத்தமாக, உறுதியாக இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

ஜந்தர்மந்தரை கலக்கிய ஆர்ப்பாட்டம்

இதற்குமுன் காலையில், ஜந்தர்மந்தர் பகுதியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைத்திருந்தது.

திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை ஏற்று வழிநடத்திக் கொடுத்தார். அவர் தனது உரையில், தமிழகம் சமூகநீதியில் தெளிவாக விழிப்புணர்வு அடைந்திருக்கின்ற மாநிலம் என்றும், இந்திய அரசியல் சாசனத்தின் முதல் திருத்தம், 26ஆவது திருத்தம், 93ஆவது திருத்தம் மூன்றுமே சமூகநீதிக்கானவை; தமிழகத்தின் போராட்டங்களினால் ஏற்பட்டவை. ஆகவே நீட்' தேர்வுதான் வந்துவிட்டதே; என்ன செய்வது என்று எண்ண வேண்டியதில்லை. தமிழகத்தில் 21 ஆண்டுகள் போராடி நுழைவுத்தேர்வை தடைசெய்த அனுபவம் எங்களுக்கு உண்டு. ஆகவே வெற்றி பெறும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்று குறிப்பிட்டார்.

முன்னதாக திராவிடர் கழகத்தின் மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் ஆங்கிலத்தில் நீட்' நுழைவுத் தேர்வை எதிர்த்து ஒலிமுழக்கங்களை எழுப்பினார். தலைவர்கள் உள்பட மக்களும் மிகுந்த எழுச்சியோடு ஜந்தர்மந்தர் அதிரும்படி ஒலி முழக்கத்தினை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவிஞர் கனிமொழி, திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.இராசா, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேரா. சுப.வீரபாண்டியன், மனிதநேய  ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.தமிமுன்அன்சாரி, எஸ்டிபிஅய் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி, இந்தியன் முஸ்லீம் லீக்கின் தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் உமர், ஏஅய்எப்ஆர்டிஇ அமைப்பைச் சார்ந்த பேராசிரியர் அனில்சட் கோபால், திமுக மாணவர் அமைப்பின் மாநில செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சிவிஎம்பி.எழிலரசன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் முற்போக்கு மாணவர் கழகத்தின் மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் செஞ்சுடர், முசுலீம் மாணவர் அமைப்பின் தேசிய துணைச் செயலாளர் எம்.முகமதுஅல்சுமீன், சமூகநீதிக்கான மாணவர் அமைப்பு சார்பில் அதன் மாநில செயலாளர் நூருதீன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியாவின் மாநிலத் தலைவர் எஸ்.முஸ்தபா, இந்திய மாணவர் அமைப்பின் மாநிலச் செயலாளர் முகமது அசாரூதின், தமிழ்நாடு மாணவர் முன்னணியின் தலைவர் இளையராஜா, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் மாணவர் அமைப்பின் சார்பில் சிறீநாத், அனைத்து இந்திய கிராமப்புற மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் கா.அமுதரசன் மற்றும் மாணவர் அமைப்பு, சிறுபான்மை அமைப்புகள், கல்வியாளர்கள், தமிழகத்திலிருந்து அனைத்து அமைப்புகளின் சார்பில் வந்திருந்த தொண்டர்களும் பெருவாரியாக கலந்து கொண்டனர்.

இந்திய ஒன்றியத்தின் தலைநகர் டில்லியை கலக்கிய ஆர்ப்பாட்டம், கருத்தரங்கம் ஆகிய பணிகளை திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி ஆகியோர் மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.

திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் மிகச்சிறப்பாக ஒத்துழைப்பு நல்கியது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலிருந்து வருகை தந்து ஆர்ப்பாட்டம், கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சிகளின் தோழர்களை ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,  பெரியார் திடல் சுரேஷ், உடுமலை வடிவேல், பெரியார் திடல் ஜெ.பி.ஆனந்த், ஊடகவியலார் முரளி, பெரியார் வலைக்காட்சி அருள் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner