எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!

கடந்தாண்டு 'நீட்' தேர்வில் முறை கேடுகள் நடந்ததை மத்திய அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளாரே!

'நீட்' - சமூகநீதிக்கு, மாநில உரிமைக்கு, கூட்டாட்சித் தத்துவத்துக்கு,  ஏழை எளியோருக்கு எதிரானதே!

ஒடுக்கப்பட்டோரே எழுவீர் - ஒன்று சேர்ந்து வெற்றி பெறுவோம்! தமிழர் தலைவரின் சமூகநீதிக்கான சங்கநாத அறிக்கை

'நீட்' தேர்வில் முறைகேடுகள் நடந்ததைச் சுட்டிக் காட்டியும், 'நீட்' தேர்வால் சமூகநீதி, மாநில சுயாட்சி, ஏழை - எளிய கிராமப்புற மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை எடுத்துக்காட்டியும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு.

'நீட்' தேர்வு என்ற மருத்துவப் படிப்பின் நுழைவுத் தேர்வு என்பது திட்டமிட்ட - சமூக நீதிக்கு எதிரான கொடுவாள் ஆகும் என்பதையும், இது ஊழலை ஒழிப்பதற்காக என்று பா.ஜ.க. அரசு உச்சநீதிமன்றத்தின் துணையோடு அவசரக் கோலத்தை அள்ளித் தெளித்தது போல் கொண்டு வந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் கனவுகளை உடைத்து நொறுக்கி, அனிதாக்களை பலிவாங்கிய ஒரு அக்கிரம ஏற்பாடு என்பதால்தான் தமிழ்நாடு - பெரியார் மண் சமூகநீதி பூமியாக இருப்பதால் தொடர்ந்து போராடி வருகிறது.

கிழிந்தது பொய்த்திரை!

இந்த 'நீட்' தேர்வு மூலம் தகுதி, திறமை அப்படியே பரிமளிக்கிறது என்று தம்பட்டம் அடித்தது, எடுத்த எடுப்பிலேயே அப்பொய்த்திரை கிழிக்கப்பட்டு விட்டதை வெட்ட வெளிச்சமாகியது.

1. ஆங்கிலத்தில் வந்த கேள்விகள் வேறு; மற்ற மொழிகளில் (நீட் தேர்வுக்கானது) குறிப்பாக தமிழ், மலை யாளம் போன்ற மொழிகளில் கேட்கப்பட்ட வினாத்தாள்கள் வேறு. வட புலத்திற்கான கேள்விகள், எளிதானவை; மற்ற பகுதி கேள்விகள் கடினமானவை.

2. சி.பி.எஸ்.இ. பள்ளி கல்வித் திட்டத்திலேயே முழுக் கேள்வித்தாளும் இருந்தன. தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் 10 சதவீதம் கூட இல்லை. எஞ்சிய செகண்டரி (மாநில) கல்வித் திட்டப் பள்ளிகளில் பயின்ற 90 விழுக்காடு பிள்ளைகள் எம்.பி.பி.எஸ். படிப்பிற்குத் தகுதியாக முடியாத சூழலில்தான்  அனிதாக்கள் 'காவு' கொடுக்கப்பட்ட வேதனை!

நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் உண்டா?

3. சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 கேள்விகளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேட்டதற்கு இதுவரை பதில் உண்டா?

அதன்மீது உச்சநீதிமன்ற உயர் அதிகார கணை பாய்ந்த தனால் அப்படியே கிடக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய விலக்குக்கோரும் இரண்டு மசோதாக்கள் கிடப்பில் கிடப்பதைப் போல, கேள்விகளுக்கு பதிலும் - கிடைக்காத ஒன்றாக இதுவரை உள்ளது.

4. தவறுகளும், குளறுபடிகளும் கேள்வித்தாள்களில் ஏற்பட்டன என்பதை உச்சநீதிமன்றத்தில் 'நீட்' தேர்வுத் துறையும், அதற்கு பொறுப்பேற்கும் மத்திய சுகாதாரத் துறையும் ஒப்புக் கொண்டுள்ளன!

'நீட்' தேர்வில் வெற்றி பெற்றது எப்படி?

ஏற்கெனவே அந்த 'நீட்' தேர்வில் வெற்றி பெற்று இடம் பெற்றவர்கள் அந்த ஆண்டே பிளஸ் டூ படித்து, 'நீட்' தேர்வு எழுதி  இடம் பெற்றவர்கள் அல்ல; மாறாக, 1 ஆண்டு, 2 ஆண்டு 'நீட்' நுழைவுத் தேர்வு பயிற்சி மய்யங்களில் பல ஆயிரக்கணக்கில் பணம் கட்டி படித்து தயாரானவர்கள் தானே தவிர (பெரும்பாலும்) மற்றவர்கள் அல்ல.

பன்னாட்டு வணிக அமைப்பின் அங்கமே!

பன்னாட்டு வணிக அமைப்பின் (கீஜிளி) ஓர் அங்கம் ஆகிவிட்டது நம் நாட்டு மருத்துவப்படிப்புத் துறை என்பது எவ்வகையில் ஏற்கத்தக்கது?

கார்ப்பரேட் முதலாளிகள் என்ற பன்னாட்டு 'பகாசுர' கொள்ளைத் திமிங்கலங்கள் இதற்கு குத்தகைதாரர்களாக மாறி, பெரு வாணிபத்தை அதற்குரிய மென்பொருள் தயாரிப்பு - பயிற்சி என்று முதலீடு செய்து அறுவடை செய்கின்றனர்.

தெலங்கானா எம்.பி., எழுப்பிய நியாயப் பூர்வ கேள்வி?

அதில் எத்தகைய ஊழல் ஏற்பட்டுள்ளது என்ற திடுக்கிடும் அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி நாடாளு மன்றத்தில் (மக்களவையில்) 2.4.2018 அன்று 'நீட்' தேர்வு தொடர்பாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் பூர்ரா நர்சையா கவுட் என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர் பின்வரும் கேள்விகளை எழுப்பியதால் வெளி வந்துள்ளது.

1. மருத்துவ மேல்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேர்வினை நடத்தும் புரோ மெட்ரிக் எனும் அமெரிக்க நிறுவனம்,  'நீட்' தேர்வு தொடர்பான மென்பொருளை கையாள முடியும் என ஒப்புக் கொண்டுள்ளதா?

2. மருத்துவ மேல்படிப்புக்கான 'நீட்' தேர்வுக்கான மென்பொருள் கையாளப்பட்டதா? ஆம் எனில், விசாரணை  நிலவரம் மற்றும் குற்றவாளிகள் மீது  மத்திய அரசு எடுத்த  நடவடிக்கை என்ன?

3. ஆம் எனில், மத்திய தேர்வுக் குழுமம் நடத்தும் தேர்வுகளை நடத்திட பொறுப்பேற்கும் நிறுவனம் அல்லது முகவர், மேலும் சிலருக்கு உள் ஒப்பந்தம் செய்ய முடியுமா?

4. ஆம் எனில், இதன் விவரங்களும், காரணங்களும் என்ன?

தவறு நடந்ததை மத்திய அமைச்சரே ஒப்புதல்

மேற்குறிப்பிட்ட கேள்விக்கு, மத்திய மனித வளத் துறை யின் இணை அமைச்சர் டாக்டர் சத்யபால் சிங் அளித்த பதில்:

1,2: மத்திய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத்துறையில் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

மத்திய தேர்வுக் குழுமம், 'நீட்' தேர்வு நடத்துவதற்கான அதிகாரப் பூர்வ அமைப்பு.

இந்த அமைப்பு, மத்திய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

2017ஆம் ஆண்டுக்கான மருத்துவ மேல்படிப்பில் சேருவதற்கான 'நீட்' தேர்வை, அமெரிக்க நிறுவனமான புரோ மெட் ரிக் நிறுவனம் நடத்தியது.

இத்தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக மத்திய தேர்வுக் குழுமம் கொடுத்த புகாரின் பேரில், டில்லி குற்றப்பிரிவு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

இந்தப் புகார் தொடர்பான குற்றப்பத்திரிக்கையில்,  விசாரணையின்போது, அமெரிக்க நிறுவனமான புரோ மெட் ரிக் நிறுவனத்துடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில், தங்களது மென்பொருள் கையாளப்பட்டதை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில், புதுடில்லி உயர் நீதிமன்றத்திலும், தகவல் அறிக்கையை, குற்றப்பிரிவு காவல்துறையினர் கொடுத்துள்ளனர்.

3,4: தேர்வை நடத்துவதற்கு, உள் ஒப்பந்தம் எதுவும் தங்களது ஒப்புதல் இல்லாமல் தருவதற்கு அனுமதி இல்லை என்று, மத்திய தேர்வுக் குழுமம் கூறியுள்ளது.

இவ்வாறு மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் 2.4.2018 அன்று பதில் அளித்துள்ளார்.

மருத்துவ மேல் படிப்பில் மாணவர் சேர்க்கை 'நீட்' தேர்வு நடத்துவதிலும் எப்படி தவறு - ஊழல் நடந்துள்ளது பார்த்தீர்களா?

சி.பி.எஸ்.இ. தேர்வில் கேள்வித்தாள் வெளியான கதை

அதோடு மற்றொன்று; சி.பி.எஸ்.இ. தேர்வில் கேள்வித்தாள் 'அவுட் ஆகி' சந்தி சிரித்தது; மாணவர்கள் கொதித்தெழுந்து கிளர்ச்சி செய்தனர்!

மறுதேர்வு நடத்தி வித்தை காட்டினார்கள்; மற்றொரு தேர்வு அறிவித்து பிறகு நிறுத்தி எழுதியதை வைத்தே "ஒப்பேற்றிடுவார்களாம்!"

என்னே கூத்து!

சாயங்கள் வெளுத்தன!

'நீட்' சாயமும், சிபிஎஸ்இ 'தகுதி திறமையும்' எப்படிப் பட்டது  புரிகிறதா? அதன் சாயம் வெளுத்து விட்டனவே!

"யோக்கியன் வருகிறான்; சொம்பைத் தூக்கி உள்ளே வை" என்று கிராமங்களில் சொல்லும் பழமொழிபோல உள்ளதே!

'நீட்'டுக்கு முந்தைய முறையில் படித்து வெளிநாட்டுக்குச் சென்றவர்களின், நமது டாக்டர்களின் அறிவும் அனுபவமும் மிகுதியாக வெளிநாட்டுக்காரர்களாலேயே பாராட்டப்படுகிறதே!

'நீட்' தேர்வால் ஏற்படும் கேடுகள்!

(1) அரசியல் சட்ட உத்தரவாத சமூகநீதிக்கு குழிபறிப்பது.

(2) மாநில உரிமைகளைப் பறிப்பது.

(3) கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணானது.

(4) ஏழை - எளிய கிராமப்புற, ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு எதிரானது என்று ராஜீவ் தவான் போன்ற உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்களே கூறும் போது எத்துணைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? என்பதே நமது கேள்வி!

ஏப்ரல் 3 - டில்லி ஆர்ப்பாட்டம்  - கருத்தரங்கம்

டில்லியில் 3.4.2018இல் நடைபெற்ற அறப்போராட்டம், கருத்தரங்கில் கலந்து கொண்டு வடபுல மாணவர் பிரதிநிதிகளும் நன்கு புரிந்து கொண்டு நாங்களும் இந்தப் போரில் இணைகிறோம் என்றனர்!

ஒன்று சேர்வோம் - வெற்றி பெறுவோம்!

பெற்றோர்களும் புரிந்து தெளிந்து வருகின்றனர். நமது போராட்டம் எல்லா துறைகளிலும் மேலும் தொடரும். நாளும் நமது கருத்துக்கு வலு சேர்க்கும் மேலே காட்டிய சான்றாவணங்கள் பெருகுகின்றன!

ஒன்றுசேருவோம்;  வெற்றி பெறுவோம்!

 

கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை  
6.4.2018

Comments  

 
#1 Ajathasathru 2018-04-06 23:53
கமிசன் வாங்கிகொண்டு தமிழினத்துகே துரோகம் செய்கிறார்கள் நமது அடிமைகள்! அவர்கள் துரோகம் தொடர 18எம்எல்ஏக்கள் பதவிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு தீர்ப்பை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது மனுநீதிமன்றம்?
தமிழக இசைகலலூரிக்கு கேரள முதல்வர்; தகுதியிருந்தும் தமிழன் புறக்கணிப்பு;
பார்பனரல்லாதார் கல்வி அறகட்டளைக்கு மலையாள பார்பனர் நியமனம்;
அம்பேத்கர் சட்டகல்லூரிக்கு ஆந்திர பார்பனர் முதல்வராம்;
அண்ணா பொறியியல் கல்லூரிக்கு கன்னட ஆர்எஸ்எஸ் நியமனம்!
தமிழ்நாட்டில் இயங்கும் அஞ்சல்துறை, இரயில்வே, அரசுடமை வங்கிகள் அனைத்திலும் பிற மாநிலத்தவர்களே நியமனம்! உப்பிட்டு உண்ணுகிறதா தமிழக ஆட்சி? சுறண்டி கொழுப்பதே சுகம் என இருக்கிறதா?
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner