எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காவிரிப் பிரச்சினை வெறும் டெல்டா பகுதி பிரச்சினை மட்டுமல்ல!

மாநில உரிமையை மீட்கக்கூடிய வாழ்வாதாரப் பிரச்சினை!

முதலமைச்சர் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்க பிரதமர் மறுப்பது தமிழ்நாட்டையே அவமதிப்பதாகும்!

அரியலூரில் தமிழர் தலைவர் உரிமை முழக்கம்

 

அரியலூர், ஏப்.10  அரசு கூட்டிய அனைத்துக் கட்சியினர் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின்படி பிரதமரை சந்திக்க முதலமைச்சர் தேதி கேட்டும், அதனை மதிக்காதது - பிரதமர் தமிழ்நாட்டை அவமதிக்கும் செயலே என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

9.4.2018 அன்று  அரியலூரில் காவிரி உரிமை மீட்பு 2 ஆம் பேரணியைத் தொடங்கி வைத்து  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடு  நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலை வருமான தளபதி அன்புச்சகோதரர் ஆற்றல்மிகு  மு.க. ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில், முக்கொம்பில், அனைத்து இயக்கங்களின் ஒத்துழைப்போடு பயணங்கள் தொடர்ந்து கடந்த 3 நாள்களாக தஞ்சை, திருச்சி மற்ற மாவட்டங்களில் நடைபெற்றுக் கொண்டுள்ளன. அதனு டைய தேவை, அதுபற்றிய விளக்கங்கள் வரவேண்டும் என்பதற்காக, அரியலூரிலிருந்து இன்றைக்குத் தொடங்கப்படக்கூடிய இந்த சிறப்பான காவிரி உரிமை மீட்புப் பயணத்தில் பங்கேற்று, சிறப்பாக உரையாற்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் அன்பிற்குரிய அருமை சகோதரர் அய்.பெரியசாமி அவர்களே,

துணைப் பொதுச்செயலாளர் அருமைத் தோழர் வி.பி. துரைசாமி அவர்களே, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களே, கொள்கைப் பரப்புச் செயலாளர் அன்புச்சகோதரர் ஆ.இராசா அவர்களே,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அருமைச் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களே,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அன்பிற்குரிய தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் அன்பிற்குரிய தோழர் மு.வீரபாண்டியன் அவர்களே,

தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் அன் பிற்குரிய டாக்டர் துரை.மாணிக்கம் அவர்களே,

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக இங்கே உரை யாற்றி அமர்ந்துள்ள மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது அவர்களே,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர் மட்டக் குழு உறுப்பினர் அருமைச் சகோதரர் சின்னப்பா அவர்களே,

இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மாவட்டச் செய லாளர் இராஜேந்திரன் அவர்களே,

இந்திய யூனியன் முசுலீம் லீக் கட்சியின் மாநில செயலாளர் ஷாஜகான் அவர்களே,

இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருக்கக்கூடிய ஆற்றல்மிகு நம்முடைய மாவட்டச் செயலாளர் அருமை சகோதரர் சிவசங்கர் அவர்களே,

மற்றும் இந்த மேடையில் அமர்ந்திருக்கின்ற அனைத் துப் பொறுப்பாளர்களே, அனைத்துக் கட்சியைச் சார்ந்த தோழர்களே, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்கள் ஜெயக்குமார், டாக்டர் துரை.சந்திரசேகரன் அவர்களே, மற்றும் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களே, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாவது கட்ட பயணம் இன்னும் சற்று நேரத்தில் இங்கே தொடங்கவிருக்கிறது.

இங்கே பேசிய அத்துணைப் பேரும் மிக அழகாக சொன்னார்கள், இது ஏதோ குறிப்பிட்ட டெல்டா மாவட்டப் பிரச்சினையல்ல. தமிழகம் முழுவதற்குமே இது வாழ் வாதாரப் பிரச்சினை. அதுமட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்தையே பாதுகாக்கக்கூடிய ஒரு மாநில உரிமைப் பிரச்சினை. அதுமட்டுமல்ல, நம்முடைய வருங்கால சந்ததியினருக்கு சரியான பாதையை, பாதுகாத்து அனுப்ப வேண்டிய ஒரு பிரச்சினை.

கடல் இல்லாத அரியலூரில்

மக்கள் கடல்!

எனவேதான், அரியலூரில் கடல் இல்லை; ஆனால், மக்கள் வெள்ளம் இதோ எதிரில் கடல்போல் இருக்கிறது. மக்கள் கடலில் நீந்திச் செல்லக்கூடிய அந்த உணர்ச்சியை, இந்தப் பேரெழுச்சியை, பார்க்க மறுப்பவர்களை, வர லாற்றில் இடம்பெற மக்கள் மறுப்பார்கள் அவர்களை - அவர்களை எங்கே அனுப்ப வேண்டுமோ, விரைவிலே அங்கே அனுப்பி வைப்பார்கள் என்பதற்கு, இந்தக் கூட்டம் மட்டுமல்ல, முக்கொம்பிலே முதல் பேரணியைத் தொடங்கி, இங்கே இரண்டாவது பேரணி தொடங்கி, பல ஊர்களுக்குச் சென்று, 12 ஆம் தேதி மாலையில் கடலூரில் முடிகிறது.

ஆம்! கடலூரில்தான் எப்பொழுதுமே சங்கமம். அந்த வகையில்தான், முக்கொம்புவில் தளபதி அவர்களுடைய தலைமையிலும், அதேபோல, இங்கே மற்ற தோழர் களுடைய ஒத்துழைப்போடு நடைபெறக்கூடிய அத் துணையும் கடலூரில் முடிவடைய விருக்கிறது.

ஏனிந்த போராட்டம்? அருள்கூர்ந்து நினைத்துப் பார்க்க வேண்டும். இது நியாயமாக செய்திருக்கவேண்டியது யார்? மாநில அரசாங்கமா? மாநில அரசு செய்வார்கள் என்றுதானே வாக்களித்தார்கள் மக்கள். நம்புங்கள், நம்புங்கள், கடைசிவரை நம்புங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். எதிர்க்கட்சித் தலைவர் நேரிடையாகச் சந்தித்து, மீண்டும் மீண்டும் கேட்கிறார். தன்னுடைய சுயகவுரவத்தைப்பற்றிக்கூட அவர் கவலைப்படவில்லை. முதலமைச்சரை அவர் சந்தித்த காட்சியை நாமெல்லாம் நேரிடையாக தொலைக்காட்சியில் பார்த்தோம்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஆளும்கட்சி கூட்டவில்லை என்றவுடன்,  23 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என்று நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அறிவிக்கிறார். ஆளும்கட்சி செய்யத் தவறினால், ஜனநாயக முறைப்படி, எதிர்க்கட்சித் தலைவர் செய்யவேண்டும் என்கிற அந்த முறையை அவர்கள் ஏற்றுக்கொண்டு, அனைத்துக் கட்சிக் கூட்டத் திற்கு அழைப்பு விடுத்தார் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.

அதைப் பார்த்தவுடன்தான் ஆளுங்கட்சியினர் கொஞ் சம் அசைந்தார்கள். 22 ஆம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என்று அறிவிப்பு செய்தார்கள்.

ஆளும்கட்சி 22 ஆம் தேதி அனைத்துக் கூட்டம் நடை பெறும் என்று சொன்னவுடன், இல்லை, இல்லை. நாங்கள் 23 ஆம் தேதிதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்து வோம் என்று சொன்னோமா? போட்டிக்காக நடத்தி னோமா? இல்லையே! காவிரி பிரச்சினையில் அரசியல் செய்யக்கூடாது. காவிரிப் பிரச்சினை மக்கள் பிரச்சினை - வாழ்வாதாரப் பிரச்சினை. ஆகவே, எங்களுடைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, 22 ஆம் தேதி அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டோம்.

23 ஆம் தேதி நடைபெற்ற அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலில் பேசியது எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்.

எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்புக் கொடுத்தனவே!

உங்களுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கிறோம்; காவிரிப் பிரச்சினையில் மாறுபட்ட கருத்துகள் வேண்டாம்; மற்ற பிரச்சினைகளில் நாம் மாறுபடலாம். இதில் அப்படி கூடாது என்று சொல்லி, ஒருமனதாக தீர்மானத்தை நிறை வேற்றுவோம் என்றார்.

ஏற்கெனவே உச்சநீதிமன்றம், மத்திய  அரசு ஆறு வார காலத்திற்குள்ளாக காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் அமைக்கவேண்டும் என்று தீர்ப்பு அளித்திருக்கிறது. எனவே, அந்தத் தீர்ப்பை செயல் படுத்தவேண்டும் என்று நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும் மத்திய அரசுக்கு. அதற்காக நாம் பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று ஒருமனதாக தீர் மானம் நிறைவேற்றினார்கள்.

பிரதமரை சந்திக்கவேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர் மானம்; காலை முதல் மாலை 5 மணிவரை இதுவரையில் இல்லாத அளவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் அது. அந்தத் தீர்மானம் என்னாயிற்று என்று முதலமைச்சர் அவர்கள் மக்களுக்குப் பதில் சொன்னாரா?

அந்தத் தீர்மானம் என்னாயிற்று? என்று இங்கே உரையாற்றிய நம்முடைய திருமா அவர்கள் கேட்டார்களே,

தமிழகத்தை மதிக்கத் தயாராக இல்லை பிரதமர் மோடி

பிரதமர் மோடி, தமிழகத்தை மதிக்கத் தயாராக இல்லை. தமிழக மக்களுடைய  உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தயாராக இல்லை. தீர்மானம் நிறைவேற்றிய அடுத்த நாளே, பிரதமர் தமிழகத்திற்கு வருகிறார்; ஒரு அரசு நிகழ்வில் கலந்துகொள்கிறார். அந்த நிகழ்ச்சியில், மிகவும் பவ் வியமான முதலமைச்சர், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி மேலாண்மை வாரியம்'' என்று சொன்னாரே பிரத மரிடம், அதனை அலட்சியப்படுத்திவிட்டு, ஒரு புன்னகை யோடு போய்விட்டார்.

செய்தியாளர்கள் எல்லாம், டில்லிக்கே சென்று பிரத மரை சந்திப்பார் தமிழக முதலமைச்சர் என்றெல்லாம் அனுமான செய்தி வெளியிட்டார்கள். அப்படி நடந்ததா என்றால், இல்லை.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் போட்டவர்கள், பிரதமர் அலட்சியப்படுத்தியவுடன் என்ன செய்திருக்கவேண்டும், அனைத்துக் கட்சித் தலைவர் களையும், அனைத்து விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்து, இந்தப் பிரச்சினையில் இந்த நிலைமை - நாங்கள் இதுபற்றி கேட்டோம் - அந்த வாய்ப்புகளை மத்திய அரசு கொடுக்கவில்லை என்று சொன்னார்களா?

50 எம்.பி.,க்களை வைத்திருக்கிறோம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறீர்களே, நாடாளுமன்றத்தையே முடக்கி விட்டோம் என்று சொல்கிறீர்களே,  அந்த 50 எம்.பி.,க்களும், இந்தப் பிரச்சினையில், பிரதமரை சந்திக்கக்கூடிய ஏற்பாட் டினை செய்யக்கூட முடியவில்லை என்று சொன்னால், இதைவிட வெட்கக்கேடு தமிழக ஜனநாயகத்திற்கு வேறு உண்டா? கிராமங்களில் சொல்வார்கள், அறுக்கமாட்டா தவன் இடுப்பிலே 1008 அரிவாள்கள்'' என்று.

நீங்கள் எத்தனை அதிகார அரிவாள்களை வைத்திருந் தாலும், அதனால் என்ன பயன்?

மறுபடியும் நம்முடைய தளபதி அவர்களும், துரை முருகன் அவர்களும் சென்று, முதல்வர், துணை முதல் வரைச் சந்தித்து நினைவூட்டுகிறார்கள்.

அரசியலுக்கான பயணம் அல்ல இது!

இந்தப் பயணம் அரசியலுக்காக அல்ல; பதவிக்காக அல்ல. இந்த நாட்டினுடைய வாழ்வாதாரத்தை உயிர்மூச்சுப் பிரச்சினையைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பயணம்.

நடுநிலையாளர்கள், நாக்கிலே நரம்பின்றி, நேர்மை யின்றி, மனச்சாட்சியை அடகு வைத்துவிட்டு, விமர்சனம் செய்யக்கூடியவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். திரும்பப் போய் கேட்கிறார்கள், பிரதமரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்துவிட்டீர்களா?  என்னாயிற்று? என்று.

உடனே அவர்கள், இப்பிரச்சினைக்காக மத்திய நீர்வளத் துறை அமைச்சரான நிதின்கட்காரியைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

அவரைப் பார்த்து என்ன பயன்? ஏன் பிரதமர் சந்திக்க மாட்டேன் என்று சொல்கிறாரா? என்று கேட்டுவிட்டு, பிறகு நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு, சட்டமன்றத்தைக் கூட்டுங்கள் என்று சொன்னார்கள்.

இன்னும் மூன்று நாள்கள்தான் இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் பதறி சொன்ன பிறகுகூட,

பொறுத்திருங்கள், நாளை வரை பொறுத்திருப்போம் என்று, பொறுத்திருந்து கழுத்தறுத்த கதை. நீட் தேர்விலும் இதே கதைதான். இல்லையானால், அனிதாக்களை நாம் இழந்திருக்கமாட்டோம் நண்பர்களே!

நம்ப வைத்துக் கழுத்தறுப்பு!

கடைசிவரையில் அவர்கள்  நம்ப வைத்து கழுத்தை அறுத்தார்கள் நீட் தேர்வுப் பிரச்சினையில். அதற்காக அவசர சட்டம் வருகிறது -  இதேபோன்று ஏமாற்றினார்கள். ஏமாற்றுவது அவர்களுடைய வேலையாக இருக்கலாம்; என்றைக்கும் ஏமாறுவது எங்கள் பணியாக இருக்க முடியாது. அதற்காகத்தான் இந்தப் பிரச்சாரப் பயணம்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பில் என்ன சொல்லியிருக்கிறது? 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம் சொல்கின்ற  தீர்ப்பு பெரிய அளவில் இருக்கும் என்று பலர் நினைத்தார்கள். ஆனால், ஏமாற்றியது உச்சநீதிமன்றம்.

கூட்டங்களில் உரையாற்றும்பொழுது, பெரியார் சொல் வார், அசல் அநியாயம்; அப்பீலில் அதுவே காயம்'' என்று. அதுபோல, அசல் அநியாயம்; அப்பீலில் அதுவே காயம் என்பதுபோல, ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதுபோல, இன்றைக்கு உச்சநீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறது? இதுவரையில் உச்சநீதிமன்ற வரலாற்றில், நாங்கள் எல்லாம் வழக்குரைஞர்கள் - இந்த மேடையில் வழக்குரைஞர்கள் இருக்கிறார்கள். இராசாவி னுடைய வாதம் எப்படிப்பட்டது என்பதை அகில இந்தி யாவும் புரிந்துகொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட வழக்குரை ஞர்கள் இங்கே இருக்கிறோம். நாங்கள் சமுதாயத்திற்காக வாதாடக்கூடிய வழக்குரைஞர்கள். அந்த வகையில் நண்பர்களே, நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும் - எப்படிப்பட்ட உணர்வைப் பெறுகிறோம்?

உச்சநீதிமன்றத்தின் போக்கு

உச்சநீதிமன்ற வரலாற்றில் இல்லாத ஒரு முறையற்றப் போக்கு இன்றைக்கு நடந்திருக்கிறது. உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பையே, உச்சநீதிமன்றம் தானே மறு ஆய்வு செய்வதைப்போல, வேறு திசைப் திருப்பலா? தயவு செய்து நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

இதுதான் உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு.  ஆறு வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது. எத்தனைப் பக்கம் தீர்ப்பு தெரியுமா? 465 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு.

இந்தத் தீர்ப்பில் இறுதிப் ப:குதி என்ன? எப்படி ஆறு வார காலத்தை வலியுறுத்துகிறார்கள்? ஏன் இதனைப் படித்துக் காட்டுகிறேன் என்றால், நீங்கள் ஒவ்வொருவரும் பிரச்சாரகர்களாக மாறவேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் வீட்டுக்கு வீடு, தெருவுக்குத் தெரு இந்தத் தகவல்களை சொன்னால் மட்டும் போதாது; நீங்கள் புரிந்துகொண்டு பேசவேண்டும்.  இங்கே சகோதரர் திருமா அவர்கள் இங்கே அழகாக விளக்கினார்கள்.

உச்சநீதிமன்றம் என்ன கூறுகிறது?

உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பில் மிக முக்கியமான பகுதி, 456, பத்தி 74

‘‘The report of the commission as the language would suggest, was to make the final decision of the Tribunal binding on both the States and once it is treated as a decree of this Court, then it has the binding effect. It was suggested to make the award effectively enforceable. The language employed in Section 6(2) suggests that the decision of the Tribunal shall have the same force as the order or decree of this Court. There is a distinction between having the same force as an order or decree of this Court and passing of a decree by this Court after due adjudication. Parliament has intentionally used the words from which it can be construed that a legal fiction is meant to serve the purpose for which the fiction has been created and not intended to travel beyond it. The purpose is to have the binding effect of the Tribunals award and the effectiveness of enforceability. Thus, it has to be narrowly construed regard being had to the purpose it is meant to serve.''
இதன் தமிழாக்கம் வருமாறு:

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் 456 ஆம் பக்கம், பத்தி 74 நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை இரண்டு மாநிலங் களும் நீதிமன்றத்தின் உத்தரவாக  ஏற்றுக்கொண்டு அதற்கு கட்டுப்பட்டு,  அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பிரிவு 6(2) இல் கூறியுள்ளதன்படி, நடுவர் மன்றம் அறிவிக்கின்ற தீர்வு என்பது உச்சநீதிமன்றம் அளிக்கின்ற ஆணை அல்லது உத்தரவைப்போன்று வலிமையுள்ள தாகும்.

உச்சநீதிமன்றம் அளிக்கின்ற உத்தரவைப்போன்றே, நடுவர் மன்றம் அளிக்கின்ற உத்தரவுக்கும் உச்சநீதிமன் றத்தின் உத்தரவைப் போன்று முழுமையான வலிமை உண்டு. நாடாளுமன்றத்தில் உள்நோக்குடன் சட்ட கற்பனை எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. கற்பனை என்று கூறுவதன் நோக்கம் அதனுடைய எல்லைகளுக்கப்பால் சென்று விடக்கூடாது என்பதுதான். உண்மையில் நோக்கம் என்னவென்றால், நடுவர் மன்றம் அளிக்கின்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான்.  ஆகவே, அதுகுறித்து சுருக்கமாக தெளிவுபடுத்தும்போது, அதன் நோக்கம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான். நடுவர் மன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதே!

இந்தத் தீர்ப்பு, ஏற்கெனவே நடுவர் மன்றம் கொடுத்த தீர்ப்பு டிகிரி. அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அந்த டிகிரியை  அமல்படுத்தவேண்டும். எப்படி அமல் படுத்தவேண்டும் என்பதையும் சொல்கிறார்கள்.

தடுக்க முடியாத அளவிற்கு  effectively enforceable. இதுதான் effectively enforceable லட்சணமா? நெஞ்சம் கொதிக்கிறது. பதறுகிறோம். எங்களுடைய வாழ்வாதாரம்; எங்கள் வருங்கால சந்ததியினருடைய மூச்சுக்காற்று. இன் னொரு சோமாலியாவாக தமிழ்நாடு ஆகவேண்டுமா?

மேலும் அந்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

We have referred to the aforesaid passages as the award of the Tribunal has to be treated as decree of the Supreme Court. It is so stated in Section 6(2) to give teeth to the award passed by the Tribunal so that none of the States can raise objection to the same and be guided by the directions of the Tribunal. The purpose of framing the scheme is exclusively for implementation of the award. The authorities cited by Mr. Ranjit Kumar, we are afraid, are of no assistance in the present context. It needs no special emphasis to state that the purpose of Section 6A is to act in the manner in which the award determines the allocation and decides the dispute with regard to allocation or sharing of water. Keeping that in view, we direct that a scheme shall be framed by the Central Government within a span of six weeks from today so that the authorities under the scheme can see to it that the present decision which has modified the award passed by the Tribunal is smoothly made functional and the rights of the States as determined by us are appositely carried out. When we say so, we also categorically convey that the need based monthly release has to be respected. It is hereby made clear that no extension shall be granted for framing of the scheme on any ground.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க என்ன தடை?

இதன் தமிழாக்கம் வருமாறு:

உச்சநீதிமன்றம் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடை முறைப்படுத்த ஆணையிடும் என்று கோரிக்கை விடுத் துள்ளோம்.  அதாவது பிரிவு 6(2)இன் கீழ் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளவற்றை அப்படியே நிறை வேற்ற வேண்டும். இதற்கு எதிர்ப்புகள் வரும்போது இது குறித்து மாநிலங்களுக்கு விளக்குவதற்கும் நடுவர்மன்றத் தீர்ப்பில் இடமுள்ளது.   காவிரி நடுவர் மன்ற தீர்ப்பானது காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக நடை முறைக்குக் கொண்டுவரவேண்டும் என்று தான் கூறி யுள்ளது.   ஆனால், இந்த வழக்கில் ரஞ்சித் குமாரைச் சேர்த் திருப்பது குறித்து நாங்கள் கவலை அடைந்திருக்கிறோம்.  பிரிவு 6 இன்படி நதிநீர் பங்கீட்டை நிர்ணயம் செய்யும் விதத்தில் செயல்படுவதுதானே தவிர, நீர்ப் பங்கீடு தொடர்பாக விவாதம் செய்யவும், மூன்றாவது  நபரிடம் ஆலோசனை கேட்கவும் தேவையில்லை என்று தெளி வாக குறிப்பிட்டுள்ளது.  மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களுக்குள் அமைக்கவேண்டும், என்று கூறிவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசுக்கு எந்த ஒரு தடையுமில்லை. அவர்கள் இதை அமைக்க எல்லா உரிமைகளும் உள்ளது,  காவிரி நீரை மாதாந்திர தேவைக்காக தொடர்ந்து திறந்துவிடவேண்டும், இதற்கு எந்த தடையுமில்லை. மேலும் இது தொடர்பாக புதிய திட்டத்தை, ஆணையை வரைமுறைப்படுத்ததேவையில்லை.''

இதை உச்சநீதிமன்றமே மீறியது. இதைவிட வெட்கக் கேடு வேறு என்ன? இந்த நாட்டிலே உச்சநீதிமன் றத்தினுடைய மரியாதை ஏற்கெனவே குறைந்திருக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகளே வெளியில் வந்து அறிக்கை கொடுத்தது, எந்தக் காலகட்டத்திலும் கிடையாது; இந்தக் காலகட்டத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இதன்மூலமாக, மக்களுடைய நம்பகத்தன்மையை உச்சநீதிமன்றம் இழந்திருக்கிறது. மேலும் நீங்கள் இழக்கவேண்டுமா?

எவ்வளவு காலம் நீங்கள் பதவியில் இருக்கப் போகிறீர்கள்? எனவேதான் தெளிவாக சொல்கிறோம். இதில் என்ன ஸ்கீமிற்குத் திட்டம்!

தமிழ்நாடு அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கின் தீர்ப்பில் இன்று என்ன சொல்லியிருக்கவேண்டும்  அவர்கள், அவமதிப்பு இருக் கிறது என்று சொல்லியிருக்கவேண்டும் அல்லவா!

நீங்கள் எப்பொழுது செயல் வரைவுத் திட்டத்தைக் கொடுக்கப் போகிறீர்கள்? மே 3 ஆம் தேதி என்று சொன்னால், எந்த மே 3 ஆம் தேதி?

அய்.பெரியசாமி அவர்கள் மிக அழகாக இங்கே சொன்னாரே, காலதாமதம் செய்யப்பட்ட நீதி; மறுக்கப்பட்ட நீதி'' என்று. அதனை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டாமா?

காவிரி பிரச்சினைக்காக தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய கிளர்ச்சிகள் எல்லாம் நடக்கிறதே, அவர்கள் பார்க்க வில்லையா? ஏன் நிறுத்தவில்லை என்று சொன்னால், அதற்கு என்ன அர்த்தம்?  நீங்கள் எல்லாம் என்ன நவீன கேன்டிடியூட் மன்னர்களா?

ஸ்கீம்' என்பது என்ன?

ஸ்கீம்'', ஸ்கீம்'' என்று சொல்கிறீர்களே, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் இன்னொரு பகுதியில்,

For this purpose, we recommend that Cauvery Management Board on the lines of Bhakra Beas Management Board may be constituted by the Central Government. In our opinion, the necessity of setting up a suitable mechanism is of utmost importance; besides whatever machinery is set up should be adequately empowered to implement the Tribunal's decision, as otherwise, we are afraid our decision would only be on a piece of paper.

The mechanism shall have to be independent in character comprising of technical officers from the Central Government and representatives from the Governments of the party States on the lines of Bhakra Beas Management Board (BBMS), to achieve objective of the distrubution of waters as per equitable shares determined by the Tribunal.

Since the implementation of the final award of the Tribunal involves regulation of supplies from various reservoirs and at other important nodal points/diversion structures, it would be imperative that the mechanism (Cauvery Management Board) is entrusted with the function of supervision of operation of reservoirs and with regulation of water releases therefrom with the assistance of Cauvery Water Regulation Committee (to be constituted by the Board).

இதன் தமிழாக்கம் வருமாறு:

சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்ட பக்ரா அணை அதன் நதிநீர்ப் பங்கீடு போன்ற ஒரு திட்டவரையறையை  மத்திய அரசு உருவாக்கவேண்டும், தற்போது அதே போன்ற ஒரு செயல்வடிவம் கட்டாயம் தேவைப்படுகிறது, காவிரி நதிநீர் பங்கீடு நடுவர் நீதிமன்றமும் தெளிவாக ஒரு வரை முறையை உருவாக்கியுள்ளது, ஆகவே நீதிமன்றத் தின் தீர்ப்பினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண் டும். இதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் இந்த தீர்ப்பு வெற் றுக்காகிதமாகிவிடும்

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான மேலாண்மை வாரியம் என்பது மத்திய அரசில் நீர் மேலாண்மை அதிகாரிகள் மற்றும் மாநில அரசின் சார்பில் உள்ள அதிகாரிகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்த ஒரு குழுவை பக்ரா மேலாண்மை வாரியம் கொண்டிருந்தது, எந்த ஒரு முடிவையும் தெளிவாக அறிவித்து அதை உடனடியாக சரிசமமாக நடை முறைப்படுத்தும் முழுஅதிகாரமும் பக்ரா மேலாண்மை வாரியத்திடம் இருந்தது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பில் நடுவர் மன்றம் தலையிட்டு முக்கிய முடிவுகள் எடுக்கும், அதை வரை முறைப் படுத்தும்.  இதே போல் காவிரி மேலாண்மை வாரியமும்  அமைக்கப்பட்டால் நதிநீர் பங்கீடுகளை மேற் பார்வையிடும், மேலும் மாநிலங்களுக்கு தேவையான நீரை தேவைக்கேற்ப பகிர்ந்து கொடுக்கும், காவிரி மேலாண்மை வாரியம் என்பது ஒரு அதிகாரமிக்க அமைப்பாக இருக்கும்.''

இதுதான் ஸ்கீம். இதிலே ஸ்கீம் என்கிற வார்த் தையைத்தான் முழுமையாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்பொழுது என்ன விளக்கம் தேவைப்படுகிறது. இவ்வளவு நாள் தூங்கிக்கொண்டிருந்துவிட்டு, இப்பொழுது என்ன விளக்கம். இது எவ்வளவு பெரிய மோசடி? எனவே, நண்பர்களே, மக்களை நம்புவதைத்தவிர, இனி யாரையும் நம்பிப் பயனில்லை என்பதற்காகத்தான், இந்த மக்கள் பேரணி. தமிழ்நாடே கிளர்ச்சிக் களமாக ஆகியிருக்கிறது.

இதில் ஒரு பெரிய வேதனை என்னவென்றால், எல் லோரையும் அரவணைத்துச் செல்லவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர், தன்னுடைய சுயமரியாதை, கவுரவத்தைப்பற்றி கவ லைப்படாமல், ஆளுங்கட்சியைப் பார்த்து கேட்கிறார்கள்,

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? உங்களுடைய பதில் என்ன? உங்களுடைய மரியாதை என்ன? ஒரு ஆட்சிக்கு இருக்கிற மரியாதை போகலாமா?

தந்தை பெரியார் சொன்ன ஒரு கதை!

தந்தை பெரியார் ஒன்றை சொன்னார், அதுதான் எனக்கு இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

எல்லோரும் போருக்குப் போகவேண்டும் என்று சொல்லி, வீட்டிற்கு ஒருவர் என்று ஆளுக்கொருவர் கைகளில் துப்பாக்கி ஏந்திக் கொண்டு சென்றார்களாம். ஒருவன் மட்டும் சீக்கிரத்தில் திரும்பி வீட்டிற்கு வந்து விட்டானாம். அவனுடைய மனைவி அவனைப் பார்த்து கேட்டாராம், இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டீர்களே, போர் முடிந்து போய்விட்டதா? வெற்றி வந்துவிட்டதா?'' என்று கேட்டாராம்.

அவனும் சிரித்துக்கொண்டே சொன்னானாம், ஆம், மற்றவர்கள் துப்பாக்கியை எல்லாம் பிடுங்கி வைத்தார்கள்; என்னுடைய துப்பாக்கியை மட்டும் வாங்கி வைத்தார்கள்'' என்று சொன்னானாம்.

மற்றவர்கள் எல்லாம் கொஞ்சமாவது முரண்டு செய்திருக்கிறார்கள்; ஆனால், இவன் கேட்பதற்கு முன் துப்பாக்கியைக் கொடுப்பதற்குத் தயாராக இருந்ததினால்,  இவனுடைய துப்பாக்கியை வாங்கி வைத்தார்களாம்.

இந்த நிலையில்தான், தமிழ்நாட்டு முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் இருக்கிறார்கள் என்றால், இதைவிட வெட்கக்கேடு, மானக்கேடு வேறு உண்டா? என்பதை நினைத்துப் பார்க்கவேண்டாமா?

ஒரே தீர்வு மத்திய அரசை வீட்டுக்கு அனுப்புவதுதான்!

எனவே நண்பர்களே, இந்த அணி என்பது அரசு அணியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், தீர்வு என்பது ஒரே தீர்வுதான். அந்தத் தீர்வு, மத்தியில் இருக்கிற ஒரு ஆட்சி, தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் துரோகம் செய்யக்கூடிய மோடி ஆட்சி - அதனை எவ்வளவு விரைவில் வீட்டிற்கு அனுப்பவேண்டுமோ அதனை அனுப்புவதற்கு, தேர்தல் எப்பொழுது வந்தாலும், தயார் என்று காட்டுகின்ற முதல் அறிகுறியாக, 12 ஆம் தேதி மோடி அவர்கள் சென்னைக்கு வருகிறார் என்று சொன் னால், சென்னை மட்டுமல்ல,  தமிழ்நாடு முழுக்க இருக்கின்ற தமிழர்களே, இன உணர்ச்சியுள்ள தமிழர்களே, நீங்கள் கருப்புச் சட்டை அணியுங்கள்! வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுங்கள்!  எல்லாக் கட்சியினரும் கருப்புச் சட்டை போடலாம் - இனிமேல்தான் கருப்புச் சட்டை வாங்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் கருப்புச் சட்டையை ஏற்கெனவே தைத்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஏதாவது போராட்டம் என்றால், கருப்புச் சட்டைதான் - அது ஆளும்கட்சி உள்பட - உணர்த்தி இருக்கிறது அந்தக் கருப்புச்சட்டை - இப்பொழுதாவது சொரணை வந்தி ருக்கிறதே, அதனைப் போட்டுத் தொலையுங்கள்!

எனவே, கருப்புச் சட்டை  அணியுங்கள்! கருப்புக் கொடியை வீடுகளில் ஏற்றுங்கள். அந்த உணர்வுகளைத் தெளிவாக காட்டுங்கள் என்று சொல்லி, நம்முடைய பயணம் வெற்றிப் பயணமாக அமையும்.

நடப்போம்! நடப்போம்!! நடந்துகொண்டே இருப்போம்!! வெற்றி கிட்டும் வரையில் போராடுவோம் - நடப்போம் என்று கூறி என்னுரையை முடிக்கிறேன்.

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு! வளர்க ஜனநாயக உரிமைகள்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner