எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மக்கள்தொகை கட்டுப்பாடு - வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்கு

நிதிப் பங்கீடு செய்வதில் மத்திய அரசின் அணுகுமுறை தவறானது

தென்னக மாநிலங்கள் பாதிக்கப்படும் நிலை - தமிழக அரசு கடுமையாக எதிர்க்கவேண்டும்

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

மோடி உண்மையிலேயே பிற்படுத்தப்பட்டவரா - அமித்ஷா இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவரா?

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது, பொருளா தார வளர்ச்சியை மேம்படுத்துவது என்ற முறையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களைத் தண்டிக்கும்'' வகையில், மாநிலங்களுக்கு அளிக்கப்படும் நிதிப் பங்கீட்டில் மத்திய அரசுமேற்கொள்ளும் அணுகு முறை மிகவும் தவறானது; தமிழ்நாடு மாநிலம் பாதிக்கப்படுவதால், தமிழ்நாடு அரசு இதனைக் கடுமையாக எதிர்க்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டின் வரவு - செலவுத் திட்டத்தில் தற்போது அதிக பற்று - கடன் சுமை சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்களைத் தாண்டியுள்ள நிலையில், மற்றொரு பேரிடி போன்ற செய்தி தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைத் தாக்க ஏவுகணைபோல் தயார் நிலையில் ஆயத்தமாகியுள்ளது!

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி

முன்னாள் நிதியமைச்சராக இருந்த நண்பர் ப.சிதம்பரம் அவர்கள், ஃபினான்ஷியல் எக்ஸ்பிரஸ்' நாளேட்டிற்கு 8.3.2018 அன்று அளித்துள்ள ஒரு பேட்டியில், அதனைத் தெளிவாக்கி, ஆக்கபூர்வ மாற்று யோசனைகளையும் தெரிவித்துள்ளார்.

1. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 280 ஆம் பிரி வின்படி, மாநிலங்களுக்கு நிதிப் பங்கீட்டினை மத்திய அரசு - நிதி அமைப்புகள் எப்படி பங்கீட்டு அளிப்பது என்பதற்காக - ஒவ்வொரு அய்ந்தாண்டும் நிதிக் கமிஷன் (Finance Commission) ஒன்றை அனுபவம் வாய்ந்த நிதித்துறை அறிஞர், வல்லுநர்களைக் கொண்டு அமைப்பதுடன், பங்கீட்டுக்குரிய அடிப்படை நெறிகளையும், நியதியினையும் ஏற்படுத்திக் கொடுப்பதன் அடிப்படையில் மாநிலங்கள் நிதி ஆதாரங்கள் பெறுவது வழமை - வாடிக்கை.

நிதி பகிர்ந்தளிக்கும் முறை

யூனியன் அரசும், மாநிலங்களும் வசூலிக்கும் வரிகளில் எத்தனை சதவிகிதம் பகிர்ந்து கொள்வது என்பதை இந்த நிதிக் கமிஷன் - ஒவ்வொரு அய்ந்தாண்டும் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப ஏற்பாடு செய்து, அதன்படி நிதிப் பங்கீடு செய்யப்படும்.

இதற்கு முந்தைய 14 ஆவது நிதிக் கமிஷனில் மொத்தம் 100 சதவிகிதத்தில் 42 சதவிகிதம் மாநிலங்களின்  பங்காக (அதிக பட்சம்) அமைந்தது.

கடந்த 2017  ஆம் ஆண்டு நவம்பரில் 15 ஆம் நிதிக் கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்தப் பங்கீடு எப்படி, எந்த விகிதத்தில் அமைவது என்பதை Terms of Reference    என்ற வறையறைக்குள் அமைத்திடல் வேண்டும்.

வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் பாதிப்பு!

இம்முறை அமைந்துள்ள 15 ஆம் நிதிக் கமிஷனின் வரைமுறை விகிதத்தில் இரண்டு வகை மாறுதல் புகுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நன்றாக ஆளும், முற்போக்குத் தன்மையும், மக்கள் நலத்திட்டங்களை செய்து வளர்ச்சியை நோக்கி பயணம் செய்யும் மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக உள்ளது!

அ) மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது! அதாவது அதிக மக்கள் தொகையுள்ள மாநிலங்களுக்கு கூடுதல் நிதி கிடைக்கும், வளர்ச்சி பெற்ற மாநிலங்களைத் தண்டிப்பதுபோலவும் நிதிப் பங்கீடு குறையும் அபாயமும் ஏற்பட நிரம்ப வாய்ப்புள்ளது!

மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு!

14 ஆம் நிதிக் கமிஷன் வரைமுறை நோக்கின்படி, மக்கள் தொகை கணக்கீடு எந்த ஆண்டை அடிப்படை யாகக் கொண்டது என்றால், 1971 ஆம் ஆண்டு, இப்போது அதை (15 ஆவது நிதிக் கமிஷன்) மாற்றி, 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை (சென்சஸ்) குறியீடாகக் கொள்ளவேண்டும் என்றால்,  மத்திய அரசுக்கு வரி விதிக்கும் அதிகாரம் அதிகமாகவும், மாநில அரசு கூடுதல் செலவினப் பொறுப்பு களையும் ஏற்கவேண்டியிருக்கும்; மாநில உரிமைகளைப் பறித்து மத்திய அரசு மேலும் தன்னை வளப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பே இதன்மூலம் ஏற்படும் என்ற ஆபத்தும் உள்ளது!

மாநில அரசுகளின் பட்ஜெட், வரி விதிப்பு மற்ற பலவற்றிற்கும் மிகப்பெரிய பறிப்பினை உருவாக்கி, தடைக்கற்களைப் போடுவதாகவும் அமைந்துவிடும்.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தினால் தண்டனையா?

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது அரசின் இலக்கு - திட்டம் (பாலிசி). இதனைச் சரியாக செயல்படுத் திடும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கருநாடகா போன்ற தென் மாநிலங்களைத் தண்டிக்கவும், இந்தி பேசும் பின்தங்கிய மாநிலங்களுக்கு வாரி வாரி வழங்குவதுமான நிலை ஏற்படக்கூடும்.

நண்பர் ப.சிதம்பரம் அவர்கள் ஒரு புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டியுள்ளார்!

(புள்ளி விவர அட்டவணை மேலே காண்க)

தென் மாநிலங்களை பிற வட மாநிலங்களோடு ஒப்பிடுகையில், சிறப்பான நிர்வாகம் நடத்திய தமிழ்நாடு ஏற்கெனவே 6.338 சதவிகித இழப்பைச் சந்தித்துள்ளது! அதன் காரணம், 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை 24.7 சதவிகிதம் மொத்தம் குறைந்துள்ளது.

2011  ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின் அடிப்படையைக் கொண்டு நிதிப் பங்கீடு செய்தால், அந்த மாநிலங்களின் பங்கு பெரும் அளவு குறையக்கூடும்.

சிறப்பாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் நாம் ஏற்கெனவே ஒரு தண்டனையைப் பெற்றோம். நமது மக்களவை நாடாளுமன்றத் தொகுதி 40 ஆக இருந்தது! 39 ஆகக் குறைந்துவிட்டது.

இப்போது இதன்மூலம் மற்றொரு தொடர் தண்ட னையைத் தருவதாக அமைந்துவிடக் கூடும்.

தமிழக அரசு கடுமையாக எதிர்க்கவேண்டும்

தமிழக அரசு - ஆளும் கட்சி உடனடியாக தனது எதிர்ப்பினை மத்திய அரசுக்கு தெரிவித்து, பழைய 1971 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு அடிப்படையே நீடிக்க வேண்டும் என்று வற்புறுத்திட வேண்டும்! கடுமையாக எதிர்க்கவேண்டும்.

இல்லையேல், தமிழ்நாடு அரசுக்கு பெரிய நிதி நெருக்கடி - பற்றாக்குறை அதிகமாகி, பெரிய பொருளாதார நெருக்கடிக்கு  ஆளாக நேரிடும்.

இதில் தனிக் கவனம் செலுத்திடுவது அவசர அவசியம்!

பிரதமர் மோடி அரசு, மாநிலங்களைக் குறிப்பாக தென்னக மாநிலங்களை வஞ்சிப்பதில் குறியாய் இருப்ப தாகத்தான் இந்த மாற்றமும் கருதப்படும். எனவே, வன்மை யாக எதிர்ப்பது அவசரம், அவசியம்!

 

தலைவர்  
திராவிடர் கழகம்.


சென்னை
12.4.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner