எழுத்துரு அளவு Larger Font Smaller Font

2019 மார்ச் மாதம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா

பல்வேறு மாவட்டங்களிலும் கழக மாநாடுகள் - 2019 ஜனவரியில் தஞ்சையில் கழக மாநில மாநாடு

நீட்' - காவிரி உள்ளிட்ட பிரச்சினைகளில் உரிமைகளை ஈட்ட மத்திய - மாநில அரசுகளை வீட்டுக்கு அனுப்புக!

தமிழக உரிமைகள் மீட்கப்பட கழகத்தின் ஒருங்கிணைப்புப் பணி தொடரும்

திராவிடர் கழக தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

No automatic alt text available.

சென்னை, ஏப்.12 நீட்' திணிப்பு, காவிரி உரிமை மறுப்பு, இந்தி சமஸ்கிருதத் திணிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் நமது உரிமைகளை மீட்டெடுக்க மத்திய - மாநில ஆட்சிகளை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்றும், தமிழக உரிமைகளை மீட்டெடுக்க திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்புப் பணிகள் தொடரும் என்றும், 2019 மார்ச் மாதம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவினை வெகுசிறப்பாக எழுச்சியுடன் நடத்துவது என்றும், வரும் 2019 ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தஞ்சாவூரில் திராவிடர் கழக மாநில மாநாடு நடத்தப்படும் என்றும் சென்னையில் இன்று (12.4.2018) கூடிய திரா விடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

12.4.2018 வியாழன் காலை 10 மணிக்கு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1:

இரங்கல் தீர்மானம்

உலகப் பகுத்தறிவுச் சிந்தனையாளர் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (வயது 76, மறைவு 14.3.2018), மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.இரத்தினவேல் பாண்டியன் (வயது 89, மறைவு 28.2.2018), மேனாள் தமிழக அமைச்சர் செ.மாதவன் (வயது 85, மறைவு 3.4.2018), சுயமரியாதை வீரர் இனமொழிப் போராளி புதிய பார்வை' ஆசிரியர் ம.நடராசன் (வயது 74, மறைவு 20.3.2018), நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு.பழனியப்பன், திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லக் காப்பாளரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான பொன்மலை அ.கணபதி (வயது 95, மறைவு 5.2.2018), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் குமரி மாவட்ட மேனாள் திராவிடர் கழக செயலாளர் முகம்மதப்பா (வயது 102, மறைவு 8.2.2018), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தருமபுரி இராமியம்பட்டி ஆர்.வி.சாமிக்கண்ணு (வயது 90, மறைவு 2.2.2018), இனமான நடிகர் பகுத்தறிவுக் கலைச்சுடர் எம்.ஏ.கிரிதரன், சட்ட எரிப்புப் போராட்ட வீரர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் எடமேலையூர் கே.எஸ்.காசிநாதன் (வயது 96, மறைவு 10.3.2018), தஞ்சை மாவட்ட பகுத்தறிவு கலை இலக்கிய அணி தலைவர் உரத்தநாடு கவிஞர் சித்தார்த்தன் (வயது 59, மறைவு 7.4.2018), காவிரி உரிமைப் பிரச்சினைக்காக தீக்குளித்து உயிர்நீத்த சித்த ஈரோடு சித்தோடு தருமலிங்கம், நெல்லை செல்வம், சிவகாசி தோழர் இரவி ஆகிய பெருமக்களின் மறைவிற்குத் திராவிடர் கழக தலைமைச் செயற்குழு ஆழ்ந்த இரங்கலையும், அவர்களின் மறை வால் பெருந்துயரத்திற்கு ஆளாகியிருக்கும் குடும்பத் தினருக்கும், தோழர்களுக்கும் ஆறுதலையும் தலைமைச் செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2:

காவிரி நீர் உரிமைப் போராட்டம் -

தொடர்ந்து ஆதரவு தாரீர்!

தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரை சட்டப்படி பெறுவதற் கான போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. கருநாடக மாநில சட்டப்பேரவையை மனதிற்கொண்டும், தமிழ்நாட்டில் தாங்கள் காலூன்ற முடியவில்லை என்ற எரிச்சலாலும் மோடி தலைமையிலான மத்திய பி.ஜே.பி. அரசு சட்டத்துக்குப் புறம்பாகவும், காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றங்களின் ஆணைகளை மதிக்காமலும், தான்தோன்றித்தனமாக நடந்து வருவது மத்திய அரசின் தகுதியைத் தனக்குத்தானே சீர்குலைத்துக் கொள்வதும் மக்கள் நல அரசு என்பதற்கான எதிர்நிலையுமாகும்.

இந்தப் பிரச்சினையில் தமிழ்நாட்டு மக்கள் காட்டி வரும் பேராதரவுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவிக்கும் அதேநேரத்தில், இந்தப் பிரச்சினையில் தி.மு.க. உள்ளிட்ட 9 கட்சிகள் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் மற்ற இந்த 9 கட்சிகளையும் கடந்து போராடி வரும் அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், நிறுவனங்களுக்கும் தொடர்ந்து ஆதரவு காட்டுமாறு தமிழ்நாட்டுப் பொதுமக்களையும், ஊடகங்களையும் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 3:

திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்புப் பணி

டில்லியில் கடந்த 3.4.2018 அன்று ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு, சமூகநீதி பாதுகாப்புக்கான மாணவர் பேரவை சார்பில் திராவிடர் கழகம் முன்னின்று நடத்திய நாடாளுமன்றத்தின்முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும், நீட்'டை எதிர்த்தும், சமூகநீதியை வலியுறுத்தியும் கான்ஸ்டியூசன் கிளப்பில் நடத்தப் பெற்ற கருத்தரங்கிலும் பங்குகொண்டும், இவை வெற்றிகரமாக நடைபெற பல வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய பெருமக்களுக்கும், அமைப்புகளுக்கும் இக்கூட்டம் நன்றியறிதலோடு பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. தொடர்ந்து இத்திசையில் நடத்தப்படவிருக்கும் நடவடிக்கைகளில் ஒத்துழைப்புக் கொடுக்குமாறும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.  தமிழ்நாட்டின் உரிமை மீட்புப் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் திராவிடர் கழகம் தொடர்ந்து ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 4:

மத்திய - மாநில ஆட்சிகளை வீட்டுக்கு அனுப்புக!

காவிரி உரிமைப் பறிப்பு, நீட்' தேர்வு, சமூகநீதிக்கு எதிரான போக்குகள், சமஸ்கிருதம், இந்தித் திணிப்பு, தேசியக் கல்வித் திணிப்பு, இந்துத்துவா திணிப்பு, சிறுபான்மை மக்கள் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான நடவடிக்கைகள், வெகுமக்களுக்கு விரோதமான பொருளாதார கொள்கைகள், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன், தமிழக ஆளுநரின் எதேச்சதிகாரமான செயல்பாடுகள், குறிப்பாகப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள் நியமனத்தில் தமிழக விரோதப் போக்கு போன்ற கொடுமைகளிலிருந்து விடுதலை பெற - ஒரே தீர்வு மத்தியில் உள்ள பி.ஜே.பி. தலைமையிலான ஆட்சியையும், அதற்குப் பல வகைகளிலும் துணைபோகும் மாநில ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்புவது என்பதே சரியானது என்று இச்செயற்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 5:

தமிழர்கள் காட்டிவரும் எழுச்சி வரவேற்கத்தக்கது!

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், மாவீரர் லெனின் சிலைகளை உடைக்கும் இந்துத்துவா வெறி கொண்ட அமைப்புகளின் காட்டுமிராண்டித்தனமான செயல்களை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலைக்குக் காவி வண்ணம் பூசுவது, அண்ணல் அம்பேத்கரின் இயற்பெயரான பீம்ராவ் அம்பேத்கர் என்பதை, பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று, ராம்ஜி' என்பதை வலிந்து திணித்து ஆணை பிறப்பித்திருக்கும் இந்துத்துவாவுக்கே உரித்தான உ.பி. அரசின் கீழ்த்தரமான செயலை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தலைவர்களை அவமதிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் - தூண்டுவோர்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தயங்கும் தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கண்டிக்கிறது.

குறிப்பாக தந்தை பெரியார் சிலையைச் சேதப்படுத்தியதன் விளைவாக தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல - உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், சமூகநீதியாளர்கள், பகுத்தறிவாளர்கள் காட்டிவரும் எழுச்சி வரவேற்கத்தக்கது;  இந்துத்துவா சக்திகளுக்கும், பிற்போக்குவாதிகளுக்கும் தந்தை பெரியார் அவர்களைக் கொச்சைப்படுத்தும் துரோகிகளுக்கும் தக்கப் பாடத்தைக் தொடர்ந்து கற்பிக்கவேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 6(அ):

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா

தந்தை பெரியார் அவர்கள் நீண்ட காலம் வாழ்வதற்குத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவரும், தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு கழகத்தையும், அறக்கட்டளையையும் பாதுகாத்து மேலும் வளர்த்த அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழாவை 2019 மார்ச் மாதத்தில் வெகுசிறப்பாக நடத்துவது என்றும், திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறையினர் இணைந்து செயல் குழுக்களை அமைத்து, முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 6(ஆ):

பல மாவட்டங்களிலும் மாநாடுகள் நடத்துதல்

கோவை மாவட்டம் கணியூரில் மகளிரணி மாநாட்டையும் (6.5.2018), திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இளைஞரணி மாநாட்டையும் (12.5.2018), கும்பகோணத்தில் மாநில திராவிட மாணவர் கழக மாநாட்டையும் (8.7.2018), பட்டுக்கோட்டையில் இளைஞரணி மாநாட்டையும் (29.5.2018), திண்டுக்கல்லில் பெரியார் பிஞ்சுகள் மாநாட்டையும் (18.8.2018) தொடர்ந்து, இராமநாதபுரத்திலும் 2019 ஜனவரி முதல் வாரத்தில் தஞ்சாவூரில் திராவிடர் கழக மாநில மாநாட்டையும் எழுச்சியுடன் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 6 (இ):

உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்துக!

மகளிரணியையும், மகளிர்ப் பாசறையையும் அனைத்து மாவட்டங்களிலும் பலப்படுத்துவது என்றும், மகளிரணி, மகளிர்ப் பாசறைகளுக்கு உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்துவது என்றும், அதேபோல திராவிட மாணவர் கழக அமைப்பை மேலும் பலப்படுத்துவது என்றும், கழக மாணவர்களின் எண்ணிக்கையைப் பெருக்கும் வகையில் உறுப்பினர் சேர்க்கையைத் துரிதப்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 7:

பட்டிதொட்டிகளில் எல்லாம் பெரியார்' திரைப்படம்

மீண்டும் பெரியார்'' எனும் திட்டத்தின்கீழ் தந்தை பெரியார் திரைப்படத்தை பட்டிதொட்டிகளில் எல்லாம் கொண்டு சென்று திரையிடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 7 (அ):

கிராமப்புறப் பிரச்சாரத் திட்டம் விரிவு

கிராமப்புறப் பிரச்சாரத் திட்டத்தை குமரி, கோவை மாவட்டங்களில் விரிவுபடுத்திச் செயல்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

முக்கிய அறிவிப்புகள்

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவிற்கு (இப்பொழுது 11 பேர்) மேலும் கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் (மொத்தம் 16 பேர்).

1. அ.கலைச்செல்வி, தஞ்சாவூர்

மாநில மகளிரணி செயலாளர்

2. கோ.செந்தமிழ்ச்செல்வி

மாநில மகளிர் பாசறை செயலாளர்

3. தகடூர் தமிழ்ச்செல்வி

மகளிர் மற்றும் பாசறை மாநில அமைப்பாளர்

4. த.சீ.இளந்திரையன்

மாநில இளைஞரணி செயலாளர்

5. பெ.செல்வராசு

தொழிலாளரணி மாநில செயலாளர்

குறிப்பு: சிறப்பு அழைப்பாளர்களாக சிலர் அவ்வப்பொழுது அழைக்கப்படுவார்கள்.

மாநில மாணவரணி அமைப்பாளராக இரா.செந்தூர்ப்பாண்டியன்

தஞ்சாவூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம்

தலைவர் - தமிழ்ச்செல்வன்

துணைத் தலைவர் - மு.செகன்

செயலாளர் - காவியன்

துணைச் செயலாளர்கள் - ச.சிந்தனை அரசு, ச.சற்குணன்

அமைப்பாளர் - இரா.மணிகண்டன்

தஞ்சாவூர் நகர திராவிட மாணவர் கழகம்

தலைவர் - க.இந்திரா காந்தி

துணைத் தலைவர் - மதன்ராஜ்

செயலாளர் - பொ.பகுத்தறிவு

துணைச் செயலாளர் - ர.விடுதலை

அமைப்பாளர் - செ.வீரமணி

மேற்கண்ட அறிவிப்புகளை திராவிடர் கழகத் தலைவர், தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் அறிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner