புகைப் பிடிப்பவர்கள் நுரையீரல் புற்று நோய்களுக்கு ஆளாகி மரணிப்பது அதிகரித்து வருகிறது. (இன்னொரு சேதி தெரியுமா? புகைப்பிடிக்காமலேயே அடுத்தவர்கள் புகைத்துச் சுருள்சுருளாக விடும் புகையைச் சுவாசிப்பவர்கள் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் பேர் மரணமடைகிறார்கள்).
தமிழ்நாட்டில் நீதிமன்ற ஆணைகளை அரசு அலுவலர்கள் மதிப்பதில்லை என்ற அடிப்படையில் 2000 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 30840 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. (ஓ வேலியே பயிர்களை மேய்கின்றனவா? அரசு ஆணைகள் ஏன், உச்சநீதிமன்ற ஆணையையே மீறி பொது இடங்களில் கோயில்களைக் கட்டி வருகிறார்களே - இது அதில் சேருமா என்று தெரியவில்லை).
கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர் பகுதியிலிருந்து ஓடி வந்து மகேந்திர தோனியின் காலைத் தொட்டுக் கும்பிட்டார்கள்.
(கடவுள்கள் இப்படிதான் உருவாக்கப்பட்டு இருக்குமோ!)
கிராமப்புறங்களில் சிறந்த விளையாட்டு வீரர்கள் இருந்தாலும் போதிய ஊக்கமும், வசதிகளும் செய்து கொடுக்கப்படுவதில்லை. (கிராமம் என்றாலே வருணாசிரமக் கண்ணோட்டத்தில் நான்காம், அய்ந்தாம் (பஞ்சம) வருணம் தானே!)
கேரளாவின் கழிவுகள் தமிழக எல்லையில் கொட்டப்படுகின்றன. (முல்லைப் பெரியாறு தண்ணீர் தான் தமிழகத்தில் கொட்டவில்லை என்றாலும் இதையாவது கொட்டுகிறார்களே)
ஆளுநரைக் குற்றம் சாட்டுவது தரம் தாழ்ந்த அரசியல். - நாராயணன் திருப்பதி, ஊடகத் தொடர்பாளர், பா.ஜ.க. (ஆமாம் ஆளுநர் செய்ததுதான் தரம் தாழாத செயல் என்று நம்புவோமாக!)
நானும் அரசியலுக்கு வருவேன் வருவேன் என்று நடிகர்கள் துடிக்கிறார்கள். (மக்களை மயக்கும் நடிப்புக் கலை அவர்கள் கைவசம் இருக்கிறதே!) நெகட்டிவான கேள்விகளுக்கு பதில் அளிப்பதிலேயே எங்கள் சக்தியெல்லாம் வீணாகிறது. - தமிழிசை சவுந்தரராசன், மாநில பா.ஜ.க. தலைவர் (என்ன செய்வது? பா.ஜ.க.வும், அவர்கள் கூறும் 'இந்துத்துவாவும் சமூக சமத்துவத்துக்கு எதிரான நெகட்டிவ் பாசிசம் தானே!)
தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் 2017-2018ஆம் ஆண்டில் ரூ.500 கோடி வருவாய்க் குறைவு - நிதித்துறை செயலாளர் சண்முகம்.
(மகிழ்ச்சியாக சொல்லுகிறாரா? வருத்தமாக சொல்லுகிறாரா?)