எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய பி.ஜே.பி. அரசே தமிழ்நாட்டை வஞ்சிக்காதே!

இந்தியாவிலேயே சிறந்த ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை மூடுவது கண்டிக்கத்தக்கது!

வெகுமக்கள் போராட்டம் வெடிக்கும் - எச்சரிக்கை!

இந்தியாவிலேயே தலைசிறந்த ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை மூடும் மத்திய பி.ஜே.பி. அரசின் முடிவைக் கண்டித்தும், எதிர்த்தும்   திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மத்திய அரசின் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. தென் கிழக்கு ஆசியாவிலேயே இயங்கி வந்த ஒரே போட்டோ பிலிம் தொழிற்சாலையான இது கடந்த 1967 ஆம் ஆண்டு தொடங் கப்பட்டது.

நேரடியாக 5 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 20 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பு அளித்து வந்தது. 1996 ஆம் ஆண்டு முதல் நலிவடைந்த தொழிற்சாலையாக இது அறிவிக் கப்பட்டது.கடந்த 4 ஆண்டுகளாக 165 பேர் மட்டுமே பணியாற்றும் நிலை.

மூடுவதில் ஆர்வம் ஏன்?

இந்நிலையில் இந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்விடத்தை தமிழக அரசு மருத்துவக் கல்லூரி அல்லது தொழில்நுட்பப் பூங்காவாக மாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்தத் தொழிற்சாலைக்கு மூடுவிழா நடத்துவதிலேயே மத்திய அரசுகள் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றன. அப்பொழுதெல்லாம் திராவிடர் கழகம் கண்டனத்தைத் தெரிவித்ததுடன், மக்களைத் திரட்டிப் போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வந்திருக்கிறது. அதன் காரணமாக மூடுவிழா தடுத்து நிறுத்தப்பட்டது என்றாலும், தொழிற்சாலையை நசியச் செய்து பல்லாண்டுக்காலம் பணியாற்றுவோரை விருப்ப ஓய்வில் அனுப்பும் கொடுமையும் தொடர்ந்தது. 2012 ஆம் ஆண்டிலேயே நமது அறிக்கை

இதுகுறித்து 6 ஆண்டுகளுக்கு முன்பே (16.2.2012) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தோம்.

அதில் குறிப்பிடப்பட்டிருந்தவை வருமாறு:

மருத்துவம், அச்சுத்தொழில், கல்வி, ஒலிபரப்பு, பாதுகாப்புத் துறைகளுக்குத் தேவையான படச்சுருள்களை ஒருங்கிணைந்து தயாரிக்கும் நிறுவனம் இந்தியாவிலேயே இது ஒன்றுதான்!

இத்தகைய தொழிற்சாலைகள் உலகில் மொத்தம் ஆறுதான். இத்தகைய நிறுவனம் மிகப் பெரிய அளவில் போற்றி வளர்க்கப்படுவதற்குப் பதிலாக, இதனை இழுத்து மூடுவதிலேயே மத்திய அரசு கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவதுபோல் தோன்றுகிறது.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அரசு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் பிலிம்கள், இந்நிறுவனத்திலிருந்தே வாங்கப்பட வேண்டும் என்ற ஆணை நடைமுறையில் இருந்து வந்தது. இப்பொழுது அந்த நிலை மாற்றப்பட்டதாகத் தெரிகிறது.

நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு ஆ. இராசா அவர்கள் சிறையில் இருந்தாலும், தனது தொகுதி சம்பந்தப்பட்ட பிரச்சினையில் கவலை எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேலுக்குக் கடிதம் எழுதி, ஊட்டித் தொழிற்சாலையின் புனரமைப்புக்கு நிதி உட்பட எல்லா வகையிலும் உதவிட வேண்டும் என்று எழுதியுள்ளது பாராட்டத்தக்கதாகும்.

நீலகிரி மாவட்டம், தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய பகுதியாகும். இந்த நிறுவனத்தில் தோடர், குரும்பர், இருளர், பணியர், காட்டு நாயக்கர் போன்ற பழங்குடி மக்களே பெரும்பாலும் வாழுகின்றனர்.

ஊட்டி தொழிற்சாலையில்  பணியாற்றுவோரில் 66 சதவிகிதத் திலும் இத்தகைய பழங்குடி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களே.

இந்தத் தொழிற்சாலையை மூட நினைத்தாலோ, பலகீனப்படுத்த நினைத்தாலோ, அதன் விளைவு இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கச் செய்வதாகும்.

இதில் பணியாற்றுவோரின் பிள்ளைகள் இப்பொழுதுதான் கல்வி வாசனையைப் பெற ஆரம்பித்துள்ளனர். எந்தக் காரணத்தாலோ ஊட்டி பிலிம் தொழிற்சாலை இயங்குவது தடை செய்யப்பட்டால், இந்தப் பிள்ளைகளின் எதிர்காலம் இருட்டறையில்தான் தள்ளப்படும்.

வெறும் தொழிற்சாலை வியாபாரம் என்பதோடு சமூக நீதிப் பிரச்சினை இதில் உள்ளடக்கமாக உள்ளது என்பதை மறக்க வேண்டாம்.

தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து திரு. இராசா எம்.பி., அவர்கள் கடிதத்தில் தெரிவித்திருக்கும் தகவல் பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. ஊட்டி பிலிம் தொழிற்சாலையைத் தக்க வைத்துக் கொள்வதிலும், வளர்ச்சித் திசைக்கு அதனை உயர்த்துவதிலும் தமிழ்நாடு அரசு அரசியல் கண்ணோட்டமின்றி அக்கறை செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று வற்புறுத்துகிறோம்.

இத்தொழிற்சாலை மூடப்பட்டால் மாநில அரசின்மீதும் மக்கள் வெறுப்புத் திரும்புவதும் தவிர்க்க முடியாததாகும்.''

மக்கள் போராட்டம் வெடிக்கும்!

2012 இல் வலியுறுத்தியதையே மீண்டும் இப்பொழுதும் வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டை வஞ்சிப்பதில் முன்கை நீட்டும் மத்திய பி.ஜே.பி. அரசு, அதன் விளைவுகளை அனுபவிக்க நேரிடும் - வெகுமக்கள் போராட்டம் வெடிக்கும், எச்சரிக்கை!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்.

27.4.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner