எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வேறு மாநிலங்களுக்குச் சென்று மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை

சென்னை, மே 5 கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை கலைத்த நீட் தேர்வு வேறு மாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுத முடியாத நிலையையும் ஏற்படுத்தி உள்ளது.  செய்தி விவரம் வருமாறு:

நீட் தேர்வை எழுதும் முடிவை தமிழக கிராமப்புற மாணவர்கள்கைவிட்டுள்ளனர்.ராஜஸ்தான், சிக்கிம் மாநிலங்களுக்குச் செல்ல முடியாததால் இந்த சோக முடிவை அவர்கள் எடுத்துள்ளனர். மேலும் மத்திய அரசின் பிடிவாதத்தால் தங்களது மருத்துவக் கனவு கலைந்துவிட்டதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவித் துள்ளனர். இது தங்களுக்கு பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற செயல்களால் தேர்வில் கவனம் செலுத்த முடியவில்லை என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் பேருக்கு வெளிமாநில தேர்வு மய்யங்களை ஒதுக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், தமிழக மாணவர்கள் மத்தியில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 476 மருத்துவக் கல்லூரிகளில், 60,990 இடங்கள் உள்ளன. இதற்காக 13 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 2900 இடங்கள் உள்ளன. அதில் 1,07,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் சுமார் 15 ஆயிரம் பேருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளி யாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தேர்வு எழுத மய்யங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தை ஒட்டியுள்ள மாநிலங்களுக்கு ஒதுக்கி யதையே மாணவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில்,மகாராஷ்டிரா,ராஜஸ்தான் ஆகியமாநிலங் களில் மய்யங்கள் ஒதுக்கியது பீதியையும், பரபரப் பை யும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் பிடிவாதத் தால் வேறு வழியில்லாமல் நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு ரயில்களிலும், பேருந்துகளிலும் பயணம் மேற்கொண்டுள்ளனர். 10 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத தமிழகத்தில் இடம் உள்ளபோது, நீட் தேர்வு எழுத இடம் இல்லையா என்று மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை பறிப்பதற்காகவே மத்திய அரசு இவ்வாறு செய்கிறது என்று புகார் அளித்துள்ளனர். இனிவரும் காலங்களில் இதுபோன்ற குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழகத்திலேயே நீட் தேர்வு மய்யங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன உளைச்சலுடன் கேரளாவுக்கு செல்கிறேன்: நாகை மாணவி

நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா அருகே எலந்தங்குடி கிராமத்தில் கொத்தனார் வேலை பார்க்கும் முருகன் என்பவரின் மகள் துர்காதேவி அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகிறார். இவர் மருத்துவம் படிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இவருக்கு தற்போது எர்ணாகுளத்தில் தேர்வு மய்யம் ஒதுக்கப்பட்டு, தேர்வு அனுமதிச் சீட்டு வந்ததை கண்டு துர்காதேவி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து துர்காதேவி கூறும்போது, மருத்துவருக்கு படிக்க வேண்டும் என்று ஆசைப்பட் டேன். ஏழை குடும்பத்தில் பிறந்தாலும் எனது ஆசையை நிறைவேற்ற பெற்றோர் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். நீட்டிற்கு விண்ணப்பித்தபோது விருப்ப தேர்வு மய்யங் களாக புதுச்சேரி, திருச்சி, கோவை ஆகிய தமிழக மாவட்டங்களைத்தான் தேர்வு செய்திருந்தேன். ஆனால், நான் தேர்வு செய்யாத வெளி மாநிலமான எர்ணாகுளத்தில் எனக்கு தேர்வு மய்யத்தை ஒதுக்கியுள்ளனர். இது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

இதுகுறித்து மாணவியின் தந்தை முருகன் கூறுகையில் கொத்தனார் வேலை பார்த்து வந்தாலும் எனது மகள் துர்காதேவி மருத்துவருக்கு படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் கடன்வாங்கி படிக்க வைத்து வருகி றேன். நீட் தேர்வு எழுத கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்ல வேண்டி உள்ளது. அங்கு செல்வதற்கு ரூ.5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை செலவு ஆகும். அதற்கும் கடன் வாங்கித்தான் செல்கிறோம்.

தமிழக அரசு ரூ.1000 உதவித்தொகையை அறிவித்துள்      ளது. எப்படி நாங்கள் அரசு உதவித்தொகையை பெற முடியும். மாணவர்களுக்கு எந்தெந்த மாநிலங்களில் தேர்வு மய்யம் ஒதுக்கப்பட்டுள்ளனவோ அதற்கான அனைத்து செலவுத் தொகையையும் முழுமையாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்றார்.

அய்பிஎல்லுக்கு சிறப்பு ரயில்களை இயக்க முடியும்போது நீட் தேர்வுக்கு இயக்க மனமில்லாதது ஏன்?

அய்பிஎல் போட்டிகளை பார்வையிட புனே உள்ளிட்ட வட மாநில பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்கிய ரயில்வே அமைச்சகம் நீட் தேர்வு எழுதும் தமிழக மாண வர்களுக்கு சிறப்பு ரயிலை இயக்க முன்வராதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வுக்காக சிறப்பு ரயில்களை இயக்குமாறு தமிழக அரசு இதுவரை எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சிறப்பு ரயில்கள் ஒதுக்க முடியாது என்றும், 5,500க்கும் மேற்பட்ட மாணவர்கள், அவர்களுடன் வரும் பெற்றோர்களுக்கு உடனடியாக சிறப்பு ரயிலை ஒதுக்க முடியாது என்றும் மத்திய ரயில்வே அமைச்சகம் கூறிவிட்டது.

புனேவில் நடைபெற்ற அய்பிஎல் போட்டிகளுக்கு மட்டும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. ஆனால் மருத்துவ கனவில் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு ரயிலை இயக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. நீட் தேர்வு மய்யம்தான் தமிழகத்தில் அமைக்க முடியாது என்று கைவிரித்த மத்திய அரசு, சிறப்பு ரயிலையாவது இயக்கியிருக்கலாமே.

நீட் தேர்வு நடத்த தமிழகத்தில் மய்யம் தரக் கூடாது என்று சிபிஎஸ்இ முன்கூட்டியே திட்டமிட்டுதானே மாணவர்களை அலைக்கழிக்கிறது. அவ்வாறிருக்கையில் தமிழக அரசாவது சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்திருக்கலாமே. எது எப்படியோ மத்திய அரசுக்கு மாணவர்களின் நலனை காட்டிலும் சூதாட்டம் என்று அழைக்கப்படும் கிரிக்கெட் மட்டும்தான் முக்கியத்துவம் என்று கருதுகிறது போல.

படித்த பெற்றோர்கள், வசதியுள்ள பெற்றோர்கள் இதுபோல் வெளிமாநிலங்களுக்கு தங்கள் வசதிகேற்ப செல்ல முடியும். படிக்காத ஏழை பெற்றோர்கள் இதுபோல் மாநிலம் விட்டு மாநிலத்துக்கு எப்படி அனுப்புவது என்ற அச்சத்தின் காரணமாக சிலரை தேர்வு எழுத அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் இருந்து மருத்துவ மாணவரே உருவாகக் கூடாது என்பதில் மத்திய அரசு பெரும் அக்கறை காட்டி வருகிறது என்பதை தவிர வேறு என்ன சொல்வது.

நீட் தேர்வு எழுத கம்மலை அடகு வைத்து கேரளாவுக்கு புறப்பட்ட அரியலூர் மாணவி

நேற்று (4.5.2018) திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள் ளிட்ட பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் நூற்றுக் கணக்கானோர் கேரளா மாநிலம் எர்ணாக்குளத்தில் உள்ள நீட் தேர்வு மய்யத்திற்கு திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து கார்டன் விரைவு ரயில் மூலம் புறப்பட்டு சென்றனர்.

மாணவ, மாணவிகளுக்கு உதவியாக அவர்களது பெற்றோரும், உறவினர்களும் உடன் சென்றனர். இதில் அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் மாணவி ஹேமா தனது கம்மலை பயண செலவுக்காக அடகு வைத்த சோகம் ஏற்பட்டுள்ளது.

முதலில் திருச்சியில் தேர்வு மய்யம் இருக்கும் என்று எதிர்பார்த்த ஹேமா எர்ணாகுளம் தேர்வு மய்யம் ஒதுக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தார். பயண செலவு, தங்கும் இடம் செலவு என ரூ.3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை ஆகும் என்பதால் தாய் கவிதாவிடம் கூறி அழுதார்.

வேறு வழியில்லாமல் ஹேமா தான் அணிந்திருந்த கம்மலை தாயிடம் கழட்டி கொடுத்து அதை அடகு வைத்து பணம் பெற்று வரும்படி கூறினார். அதன் படி தாய் கவிதா ஹேமாவின் கம்மலை அடகு வைத்து பணம் பெற்று வந்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை ஹேமா தனது தாய் கவிதா உதவியுடன் திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு நீட் தேர்வு எழுத புறப்பட்டு சென்றார். ஹேமா போன்று பல ஏழை கிராமத்து மாணவிகள் திடீரென பணம் தேவைப்பட்டதால் கடன் வாங்கியும்,  நகைகளை அடகு வைத்தும் பணத்தை புரட்டியுள்ளனர்.

இந்த தேர்வு மய்ய குளறுபடியால் மாணவிகளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக ஹேமா தெரிவித்தார். இது தேர்வு முடிவில் பாதிப்பை வெளிப்படுத்தும் என சக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner