எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 


திருச்சி திராவிடர் கழகமும், பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நேற்று (5.5.2018) திருச்சி செவனா அரங்கில் ஓர் அரிய அறிவு விருந்தினைப் படைத்தனர்.

புத்தக வெளியீட்டு விழா என்பது கழகத்திற்கென்றே உரித்தான தனி சொத்து. சாதாரணப் பொதுக்கூட்டங்கள் என்றாலும், குறிப்பாக சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகிறார் என்றால், புத்தக வெளீயீட்டு விழா என்று தனியாக அறிவிக்கவேண்டிய அவசியமில்லை. நூல்களைப் பெற்றுக் கொள்வதற்கென்றே அறிவுத் தேனீக்கள் வந்து மொய்த்துக் கொண்டு விடுவார்கள்.

நேற்று திருச்சியில் ஏழு நூல்கள் வெளியிடப்பட்டு ஆய்வுரைகளும் நிகழ்த்தப்பட்டன. கூட்டத்தின் தலைப்பே  கண் சிமிட்டுகிறது.

‘‘ஏழிசை நூல்களை ஏந்த வாரீர்!'' என்பதுதான் அந்தக் கண் சிமிட்டு.

பேராசிரியர்  இ.சூசை

தந்தை பெரியாரின் முக்கிய நேர்காணல்கள், நமது குறிக்கோள் (தொகுதி 2), டாக்டர் அம்பேத்கரின் புத்த காதலும், புத்தகக் காதலும் (ஆசிரியர் கி.வீரமணி) ஆகிய மூன்று நூல்களை திருச்சி தூயவளனார் கல்லூரிப் பேராசிரியர் இ.சூசை ஆய்வு செய்து உரை நிகழ்த்தினார்.

நமது குறிக்கோள் (முதல் தொகுதி) எனும் நூல் - 1929 ஆம் ஆண்டில் செங்கற்பட்டில் நடத்தப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாடு தொடங்கி 1948 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டுத் தீர்மானங்களின் உள்ளடக்கம் என்றால், இந்த இரண்டாம் தொகுதி 1949 திருச்சி திராவிடர் கழக 18 ஆம் மாநாடு தொடங்கி 1973 டிசம்பர் 8, 9 ஆகிய நாள்களில் தந்தை பெரியார் இறுதியாக நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு வரையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடங்கல் ஆகும்.

திராவிடர் கழகம் என்ன செய்தது என்று வாய்களை வாடகைக்கு விட்ட மனிதர்கள்! வாடகை ஒலி பெருக்கி களாகச் சத்தம் கொடுக்கிறார்களே - அவர்கள் திராவிடர் கழகம் நடத்திய மாநாடுகள், அவற்றில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானங்களை ஒரே ஒருமுறை படித்தாலே போதும் - பைத்தியம் தெளிந்துவிடும்.

பேராசிரியர் இந்தக் கருத்தை அழுத்தந்திருத்தமாகப் பதிவுசெய்தார். கிறித்துவ மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்த ஒரே கழகம் திராவிடர் கழகம். அதுவும் எப்பொழுது? 1953 இல் லால்குடியில் நடத்தப்பட்ட திராவிடர் விவசாயத் தொழிலாளர்கள் மாநாட்டில் 1953 ஆம் ஆண்டிலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றால், அது சாதாரணமானதுதானா? என்ற வினாவை எழுப்பினார் பேராசிரியர் சூசை.

திருச்சி திருவெறும்பூர் ‘பெல்' ஆலையிலும், நெய்வேலி நிலக்கரி ஆலையிலும் மலையாளிகளின் ஆதிக்கம் பெருக்கெடுத்து ஓடியபோது, அங்கெல்லாம் சென்று ஆதிக்கத்தை எதிர்த்துப் போர்க்குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் - கொடுத்த இயக்கம் திராவிடர் கழகம். இந்த உண்மையை மறந்து அல்லது மறைத்து திராவிடர் கழகம் தமிழர்களுக்குத் துரோகம் செய்தது என்று பிதற்றும் தமிழ்த் தேசியவாதிகளின் வாயினைக் கிழிக்கத் தவறவில்லை பேராசிரியர் சூசை.

‘‘டாக்டர் அம்பேத்கரின் புத்தக் காதலும், புத்தகக் காதலும்'' என்ற நூலை ஆய்வு செய்த பேராசிரியர் சூசை அவர்கள், இந்த நூலில் ‘விடுதலை' ஆசிரியர் அவர்களின் எளிய தமிழ் நடையைப் பெரிதும் வியந்தார்.

டாக்டர் அம்பேத்கர் பல இடங்களில், பல காலகட்டங்களில் ஆற்றிய உரையை நேர்த்தியாகத் தொகுத்தளிக்கப்பட்டுள்ள பாங்கினைப் பாராட்டினார்.

அம்பேத்கர் அவர்களின் வாழ்நாளில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை அழகாக எடுத்துக்காட்டினார் தூயவளனார் கல்லூரிப் பேராசிரியர்.

ஒரு விபத்தில் பலியாகி இருக்கவேண்டிய அம்பேத்கர் அவர்கள் அதுபற்றி என்ன கூறுகிறார்?  சாவைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. ‘‘நான் பிறக்கும்போது இந்துவாக பிறந்திருந்தாலும் சாகும்போது இந்துவாக சாகமாட்டேன்'' என்று சொன்னது பொய்த்துப் போயிருக்குமே என்று அண்ணல் அம்பேத்கர் வருந்துவதை எடுத்துக்காட்டி நெகிழச் செய்தார்.

‘‘புத்தமும் தம்மமும்'' என்ற நூலை வெளியிடுவதற்கு ரூ.30 ஆயிரம் அம்பேத்கருக்குத் தேவைப்பட்டது. நேரு அவர்களுக்கு அதுபற்றி எழுதினார். நேரு அவர்களோ, அந்தக் கடிதத்தை டாக்டர் இராதாகிருஷ்ணனுக்கு அனுப்பினார். இராதாகிருஷ்ணனோ எந்தவித உதவியும் செய்ய முன்வரவில்லை என்ற (நூலிலும் உள்ளது) தகவலை பேராசிரியர் கூறியபோது, ‘அட பார்ப்பனர்களே!' என்ற கோபம் கேட்பாளர்களின் ஒவ்வொரு உள்ளத்திலும் மின்னி வெடித்த நெருப்புக் கீற்றலாகும்.

பேராசிரியர் சூசை அவர்களால் ஆய்வு செய்யப்பட்ட மூன்றாவது நூல் ‘தந்தை பெரியாரின் முக்கிய நேர்காணல்களாகும்.'

1959 ஆம் ஆண்டு பம்பாய் ‘கரண்ட்' இதழுக்குத் தந்தை பெரியார் அளித்த பேட்டியை முக்கியமாக ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்.

‘‘திருச்சியிலே நேரு கூறினாரே, திராவிடர் கழகத் தலைவரானாலும் சரி, அவரது சீடர்களானாலும் சரி அவர்களுக்கு நமது தேசியக் கொடியோ அல்லது அரசியல் சட்டமோ பிடிக்கவில்லையானால்,  மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு இந்தியாவை விட்டு வெளியேறிவிடலாம்'' என்று நேரு கூறியுள்ளாரே என்று ‘கரண்ட்' இதழ் சார்பில் கேட்ட கேள்விக்குப் பெரியார் சொன்ன பதிலடி,

‘‘இது ஒன்றே போதாதா இது ஜனநாயகமல்ல என்று எடுத்துக்காட்ட?'' என்று சுருக்கென்று தந்தை பெரியார் கொடுத்த பதிலடியைச் சிலாகித்தார் பேராசிரியர் சூசை அவர்கள்.

மற்றொன்றும் சுவையானது. கருத்தூன்றத்தக்கது. ‘கரண்ட்' ஏடு சார்பில் கேட்கப்பட்ட கேள்வி.

‘‘திராவிட மன்னன் இராவணன் வேதம் ஓதிய பார்ப்பனர் என்பதும், சாம வேதத்தில் விற்பன்னர் என்றும் சொல்லுகிறார்களே?''

தந்தை பெரியாரின் பதில்:

‘‘இராவணன் உண்மையிலேயே பார்ப்பானாக இருந்திருந்தால், யாகங்களை ஒழிக்க முன்வந்திருக்கமாட்டான்; தேவர்கள் எனப்படும் பார்ப்பனர்களுக்குத் தொல்லை கொடுத்திருக்க மாட்டான்.''

இந்தப் பகுதியை எடுத்துக்காட்டி தந்தை பெரியார் அவர்களின் நுண்மா நுழைபுலம் எத்தகையது என்று வியக்கிறார் -  இந்நூல்கள் பகுத்தறிவுத் தீயைக் கொளுத்தும் தீப்பெட்டிகள் என்று பாராட்டுகிறார்.

பேராசிரியர்  டாக்டர் இராசாத்தி

திருச்சி தூயவளனார் கல்லூரிப் பேராசிரியர் இராசாத்தி அவர்கள் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் ‘‘இராமன் - இராமாயணம் - கிருஷ்ணன் - கீதை'' எனும் நூல்பற்றியும், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ‘‘பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி''  எனும் நூல்பற்றியும் திறனாய்வு செய்தார்.

எடுத்த எடுப்பிலேயே அரசியல், தேர்தல், பதவி நோக்கங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு சமுதாய மாற்றத்திற்காக ஓயாது உழைக்கும் ஓர் இயக்கம் திராவிடர் கழகமே என்று பேராசிரியர் இராசாத்தி அவர்கள் உரையின் நுழைவு வாயிலிலேயே சொன்னபோது, பெரும் கரவொலி வெடித்துக் கிளம்பியது.

வடக்கே அம்பேத்கர் என்றால், தெற்கே தந்தை பெரியார். இருவரின் நோக்கு ஒன்றே!

இராமாயணத்தில் பல உண்டு. பவுத்த இராமாயணத்தில் இராமனும், சீதையும் சகோதர, சகோதரி ஆவர். அப்படியென்றால், எது உண்மையான இராமாயணம்?

இராமனைப்பற்றிய அம்பேத்கரின் மூன்று குற்றச்சாட்டுகளை வகைப்படுத்திக் காட்டினார்.

சுக்கிரீவனும், அனுமனும் சென்று இராமனிடம் வைத்த வேண்டுகோள், வாலியைக் கொன்று ராஜ்ஜியத்தை சுக்கிரீவனிடம் ஒப்படைக்கவேண்டும். அதற்குக் கைமாறாக சீதையை இராவணனிடம் இருந்து மீட்டு இராமனிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதாகும்.

இது நியாயமானதுதானா? நாணயமானதுதானா? வாலியைச் சாகடித்தது கண்டிப்பாகப் பச்சைப் படுகொலைதானே!

இரண்டாவதாக சீதையை இராமன் எப்படி நடத்தினான் என்பதாகும்.

சீதை மீட்கப்பட்ட நிலையில், இராமன் சீதையை சென்று பார்க்கவில்லை. சீதையே வலிய சென்று பார்க்கிறாள். அப்பொழுது இராமன் என்ன சொல்கிறான்?

நான் உன்னை மீட்பதற்காக இந்தச் சண்டையைத் தொடுக்கவில்லை. என்னை அவமானப்படுத்திய இராவணனைப் பழிதீர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த யுத்தம் என்கிறானே!

இதில்  இராமனிடம் என்ன உயர்ந்த பண்பாடு குடிகொண்டுள்ளது?

மூன்றாவதாக இராமன் என்ற தனிமனிதன் எப்படி நடந்துகொண்டான்? என்பதாகும். இராமன் இராஜ்ஜியத்தை ஆண்ட போது ஒரு நாளை இரண்டாகப் பிரித்துக் கொண்டான். முதல் பகுதியில் யாகம், பக்தி சம்பந்தப்பட்டவை. இரண்டாவது பகுதி வெறும் கேளிக்கைகள், கும்மாளம்தான் என்று வகைப்படுத்தி இராமனைத் தோலுரித்துக் காட்டினார் பேராசிரியர் இராசாத்தி அவர்கள்.

‘‘பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி'' எனும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் நூலின்மீது பேராசிரியர் இராசாத்தி அவர்கள் ஆய்வுரை செய்தார்.

இந்த நூலை நாம் படிக்காவிட்டாலும் பரவாயில்லை. நம் பிள்ளைகளைப் படிக்கச் செய்யவேண்டும் என்று எடுத்த எடுப்பிலேயே அறிமுகம் செய்தார்.

பார்ப்பனர் அல்லாதார், சூத்திரன் என்பவர்களுக்கு மாற்றுச் சொல்தான் திராவிடர்! வேறு நியாயமான வார்த்தை ஒன்றைச் சொன்னால், நான் மன்னிப்புக் கேட்டு, ஏற்றுக்கொள்கிறேன் என்று தந்தை பெரியார் சொன்னதன் மாண்பை உணர்த்திக் காட்டினார் பேராசிரியர் இராசாத்தி.

பெண்கள் மாநாடு கூட்டி ‘‘பெரியார்'' என்ற பட்டம் அளித்து மகிழ்ந்த வரலாற்றுக் குறிப்பை எடுத்துச் சொன்னார். சென்னைக்கு வந்த காந்தியார் சீனிவாசய்யங்கார் வீட்டுத் திண்ணையில் உட்கார வைக்கப்பட்டதையும், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத் தோற்றத்திற்குப் பின் சீனிவாச அய்யங்காரின் வீட்டுக்குள் காந்தியார் செல்லும் உரிமையைப் பெற்றுத் தந்ததன் சீலத்தைச் சொன்னபோது பெருத்த வரவேற்பு.

நமஸ்காரம் வணக்கம் ஆனதும், வந்தனோபசாரம் நன்றியாக மலர்ந்ததும், அக்ராசனபதி தலைவர் ஆனதும் தந்தை பெரியாரால்தானே? இந்தத் தகவல்கள் எல்லாம் தமிழர் தலைவரின் நூலில் விரவி மணப்பதை சிறப்பாக எடுத்துச் சொன்னார் பேராசிரியர் இராசாத்தி.

நூல் விற்பனை

இந்த நிகழ்ச்சியில் ரூ.30,800-க்கு நூல்கள் விற்பனை செய்யப்பட்டன. நூல்களை அனைவரும் ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டனர்.

தொகுப்பு: மின்சாரம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner