எழுத்துரு அளவு Larger Font Smaller Font

73 ஆண்டுகளுக்குமுன் மாணவராக கணியூர் வந்தேன் - பலமுறை வந்துள்ளேன்

மீண்டும் கணியூர் வருவேன் - நீண்ட நேரம் பேசுவேன்

கணியூரைப் பணியூரா'க்கிய கழக மகளிருக்குப் பாராட்டு!

கடந்த 6 ஆம் தேதி தாராபுரத்தையடுத்த கணியூரில் திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை சார்பாக நடத்தப்பட்ட திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டின் சிறப்புகள் குறித்தும், மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த மகளிர் அணியினரைப் பாராட்டியும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கடந்த 6.5.2018 அன்று காலை முதல் இரவு 9.30 மணிவரை கணியூரில் நடைபெற்ற திராவிட மகளிர் எழுச்சி மாநாடு ஒரு தனி வரலாறு படைத்த சிறப்பான மாநாடு ஆகும்.

இந்த மகளிர் மாநாட்டினைச் சிறப்புடன் நடத்திடும் பொறுப்பை கணியூர் மாவட்டத் தலைவரும், சிறந்த கொள்கை வீரரும், பெரு வணிகராக உழைப்பால் உயர்ந்த பெரியார் பெருந்தொண்டருமாகிய தோழர் மானமிகு கிருஷ்ணன் அவர்களும், அவருடன் இணைந்த கழகப் பொறுப்பாளர்களும், மகளிரும் ஏற்றனர்.

கணியூர் மாநாட்டு வெற்றிக்கு உழைத்த வீராங்கனைகள்

நாடு முழுவதும், குறிப்பாக மேற்குப் பகுதியான கொங்கு மண்டலத்தில் சுற்றிச் சுழன்று மகளிரணி பொறுப்பாளர்கள் ஆயிரக்கணக்கில் மகளிரைத் திரட்டி, மாநாடு மிகச் சிறப்புடன் நடந்திட கடும் உழைப்பைத் தந்து, நல்லதோர் கொள்கை அறுவடையைச் செய்திட வாய்ப்பை ஏற்படுத்தினார்கள்.

திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர்ப் பாசறை ஆகியவற்றின் முக்கியப் பொறுப்பாளர்களும், கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி தலைமையில் மிகவும் சிறப்பாகத் தொண்டாற்றி வெற்றிக்குப் பாதை அமைத்தனர்.

டாக்டர் பிறைநுதல் செல்வி, தகடூர் தமிழ்ச்செல்வி, கோ.செந்தமிழ்ச் செல்வி, கலைச்செல்வி (இருவர்), சி.வெற்றிச் செல்வி ஆகிய செல்வி''களும், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறியாளர் இன்பக்கனி ஆகியோர் மற்றவர்களை ஒருங்கிணைத்து ஏராளமான மகளிரைத் திரட்டியதோடு, காலை கருத்தரங்கம், மாலை எழுச்சிமிக்க பேரணி, ஊரைக் கலக்கிய வீராங்கனைகளின் தீப்பந்த ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள், சிலம்ப மற்றும் வீர விளையாட்டுகள் எல்லாம் மெய்சிலிர்க்க வைத்தன!

கருத்தரங்கில் கருத்து மழை!

காலைக்கருத்தரங்கில்கழகப்பிரச்சாரசெயலாள ரும்உயர்நீதிமன்றவழக்குரைஞருமானஅ.அருள் மொழி அவர்களது சீரிய தலைமையில்,சிந்தனை விருந்து படைப்பதில் தலைமை தாங்கிய நெறிப்படுத்திய வராயிருந்து உரையாற்றிய தோழர்கள் தஞ்சை அ.கலைச் செல்வி, கோவை இரா.அன்புமதி, வேலூர் தே.அ.ஓவியா, கோவை செ.அன்புமணி, கோவை தி.ச.யாழினி, கி.சரசுவதி உள்ளிட்ட அத்துணைப் பேர்களும் ஒருவரை ஒருவர் முந்துபவர்களாக இருந்தனர்!

இளையதலைமுறையினர் இப்படி தந்தை பெரியார் தம் லட்சியங்களை நன்றாக உள்வாங்கி மக்களிடம் அருமையான பரப்புரை ஆற்றும் அளவிற்கு பக்குவ மாகி உள்ளார்கள் என்று எண்ணும்போது எங்கள் உள்ளமெலாம் பூரித்தன!

திராவிடத்தைக் காக்க இத்தகைய புலிக்குட்டிகள் நமது பாசறையில் உள்ளனர் என்ற வியப்பில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தோம்!

திறந்தவெளி மாநாடு தீட்டிய காவியம்

இதிலும் இளையர்கள் வழக்குரைஞர் ம.வீ.அருள் மொழி, பா.மணியம்மை, சே.மெ.மதிவதனி ஆகியோரின் சிறப்பான சுருக்கப் பேச்சுகள்.

திறந்தவெளி மாநாடு - மாநாட்டின் லட்சியச் சொற்களை விளக்கிடும் வண்ணம், கொடியேற்றிய தமிழ்ச்செல்வி, திறப்பாளராக நம் அழைப்பை ஏற்று வந்து அருமையானதொரு உரையை - நேரத்தின் நெருக்கடியிலும் கருத்துரை வழங்கிய தி.முக. துணைப் பொதுச்செயலாளர் சகோதரி சுப்புலட்சுமி ஜெகதீசன், அதுபோல, தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் தோழர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட தி.மு.க. செயலாளர் இள.பத்மநாபன், மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப் பினர் இரா.செயராமகிருஷ்ணன் ஆகியோர் கருத்து மழை பொழிந்தனர். எடைக்கு எடை ஏராளமான பொருள்களை - அன்பின் வெள்ளமாக தந்தனர் கழகத் தோழர்கள்.  என்னைத் திருப்திப்படுத்த நாணயத்தால் எடைபோட்டு, இயக்கத்தின் நாணயத்தை உலகுக்குப் பறைசாற்றி, இயக்கத்திற்கு ரூ.75,000 மதிப்புள்ளதான அந்தப் பொருள்களை வழங்கினர்!

பெண்ணடிமைச் சின்னம் நீக்கம்!

பெண்ணடிமைச் சின்னமான தாலி அகற்றுதல் என்ற கொள்கை வெற்றிக்கு அடையாளமாக முன்வந்தனர் - இரண்டு வாழ்விணையர்கள். கணியூர் சரசுவதி - கிருஷ்ணன் ஆகியோர் 22 ஆண்டுகளுக்குமுன்னால் நடந்த திருமணத்தின்போது கட்டிய தாலியை, துணைவியார் கொள்கை வயப்பட்ட தன் முதிர்ச்சியினால், தாமே முன்வந்து அகற்றிக் கொள்வ தாகக் கூறி, பகிரங்கமாக மேடையில் அகற்றினார்.

அதுபோலவே, அடுத்து வாழ்விணையர்களான காரமடை தோழர்கள் அம்சவேணி - முருகேசன் ஆகியோர் அடிமைத் தளையான தாலியை அகற்றினர்.

மதியம் மாவட்டக் கழகத் தலைவர் கிருஷ்ணனின் பல்பொருள் அங்காடிக்குச் சென்று திறப்பு விழாவிற்கு நான் வர இயலாத குறையை நீக்கி, நிம்மதி அடைந்தேன். கணியூர்க் குடும்பம்' என்று திராவிட இயக்க வர லாற்றில் பிரபலமானது சகோதரர் கே.ஏ.மதியழகன் குடும்பம்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். அத்துணைத் தலைவர்களுக்கும் நெருக்க மான குடும்பம்.

கணியூர் குடும்பத்தினரின் விருந்து உபசரிப்பு

அவரது மூத்த சகோதரர் கே.ஏ.முருகேசன், கே.ஏ.மதி யழகன் சகோதரர் கே.ஏ.மாணிக்கம், கே.ஏ.கிருஷ்ணசாமி அந்தப் பாரம்பரிய தொடர்ச்சியாக டாக்டர் கே.கே.எம்.செல்வராஜ், (தமிழகக் கால்நடைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் - தற்போது கல்வி ஆலோசகராக இருப்பவர்) ஆகியோர் அடங்கிய திராவிட இயக்கக் குடும்பம் ஆகும். செல்வராஜ் அவர்களின் செல்வன் தோழர் சீரிய பகுத்தறிவாளர் இளங்குமரன் - இதற்காகவே கணியூர் வந்து நேரில் அழைத்து, மதிய உணவு - விருந்து அளித்து  மகிழும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. கொள்கைப் பாசம் என்பது திராவிடர் இயக்க முத்திரைகளில் முக்கியமானது என்பதை நிலை நாட்டியது.

வரலாற்றுப் பேராசிரியர் வீட்டில்...

பிறகு உடுமலைப்பேட்டையில் சிறிய இடைவெளி ஓய்வில், மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சில் நிறைந்த நண்பர் - வரலாற்றுப் பேராசிரியர் - பெருமான் ந.சுப்ரமணி யன் அவர்களது இல்லத்திற்குச் சென்று அவருடைய மகன் நண்பர் சுந்தரேசன் - அவரது வாழ்விணையர் ஆகியவர்களிடம் நானும், இணையர் மோகனாவும்,  கழகத் தோழர்களும் நலம் விசாரித்துத் திரும்பினோம்!

பல்கலைக் கொள்கலனான அந்த அறிஞர்தம் அறிவுச் சோலையைக் கண்டு திரும்பியது மகிழ்ச்சியூற்றைப் பெருக்கியது - இருசாராருக்கும்!

உடல்நலம் நலிந்துள்ள முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் தாராபுரம் வடிவேலு அவர்களைச் சந்தித்து உடல்நலம் விசாரிக்கும் வாய்ப்புக் கிடைத்தது - அவரது இணையர் இயக்க வீராங்கனை வ.துளசியம்மாள் பெயரில்தான் மாநாட்டு நினைவரங்கம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

எனக்குப் போதாத காலம்!'

இம்மாநாட்டில் பேசும்போது நான் வேடிக்கையாகக் குறிப்பிட்டேன். இப்போது எனக்குப் போதாத காலம்!' - காலம் போதாத நிலை - (கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் போதாத காலத்தால்'தான் பேசவேண்டாம் என ஒதுங்கி, பார்வையாளராக இறுதிவரை இருந்து திரும்பினார்)  காரணம் திருப்பூருக்குச் சென்று தொடர்வண்டியைப் பிடிக்கவேண்டியிருந்ததால், மனமில்லாமல் பேச்சை முடிக்கிறேன் - நமது கொள்கைக் குடும்ப உறவுகளான இப்பகுதி மக்களிடம் அதற்காக மன்னிப்புக் கேட்டு, விடைபெறுகின்றேன் என்று நா தழுதழுக்கக் கூறினேன்.

கணியூர் கழகப் பணியூர்

அக்கணியூருக்கு முதன்முதலாக நான் - மாணவர் பிரச்சாரத்திற்குச் சென்ற ஆண்டு 1945. அதாவது 73 ஆண்டுகளுக்குமுன்பு வந்திருக்கிறேன். இடையில் பலமுறை வந்துள்ள போதிலும், இந்தப் பயணம் மறக்க முடியாத பேரன்புப் பெருவெள்ளத்திடையே கழகம் நீந்திய பயணம் அல்லவா?

கணியூர் கழகப் பணியூராகியது

பணியூர் வெற்றி கண்டு அணியூராகி

வரலாறு படைத்தது!

அனைவருக்கும் மகிழ்ச்சி கலந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

 

கி.வீரமணி

திராவிடர் கழகம்.

தலைவர்

சென்னை  
9.5.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner