எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது

ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி! இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது என தமிழர் தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேற்று  மாலை (19.5.2018) சேலம் ஆத்தூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது தமிழர் தலைவர் கூறியதாவது:

கருநாடகத்தில் 117 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரசு, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை கொள்கை அடிப்படையிலே மதச்சார்பற்ற இரு கட்சிகள் என்ற வகையிலே இரண்டு சுயேச்சைகளையும் அவர்கள் தங்கள் பால் வைத்துக்கொண்டு, 117பேர் தங்களுக்கு ஆதரவு இருக்கிறது என்று சொன்ன நிலையிலேகூட, அங்கே இருக்கக்கூடிய ஒரு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த கருநாடக ஆளுநர் வஜுபாய் வாலா  மிகப்பெரிய அளவிலே ஜனநாயகத்தைப் படுகொலை நடத்தக்கூடிய அளவிற்கு மோசமாக நடந்துகொண்டார்.

அதனுடைய விளைவு காங்கிரசு தலைமையிலே இருக்கக்கூடிய மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு காங்கிரசு ஆதரவு கொடுத்த நிலையிலே, உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் இதற்கு முன்னால் தெளிவாக இருக்கிறது. கூட்டணி தேர்த லுக்கு முன்னால் வைத்தாலும் சரி, பின்னால் வைத்தாலும் சரி, அதை மதிக்க வேண்டும், ஏற்க வேண்டும் என்று தீர்ப்புகள் இருக்கின்றன.

அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அந்த வஜுபாய் வாலா என்று சொல்லக்கூடிய குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ்-சை வளர்த்த அவர் கருநாடகத்திலே மீண்டும் பாஜகவுக்கு வாய்ப்பைக் கொடுக்க வேண்டும் என்று மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காமல், 104 மட்டுமே கொண்டவர்களுக்கு,  எடியூரப்பா 7 நாள் கேட்டால், இவர் 15 நாள்கள் நாங்கள் அவகாசம் கொடுக்கிறோம் என்று சொல்லி, ராஜாவை விஞ்சிய ராஜவிசுவாசிபோல நடந்துகொண்டிருக்கக்கூடிய அந்த நிலை, மிக மோசமான நிலை யாகும்.

உச்சநீதிமன்றம் சரியான ஒரு நிலைப்பாட்டை இதில் எடுத்து ஜனநாயகத்தைப் பிழைக்க வைத்திருக்கிறது.

அடுத்த நாளே, 15 நாள்கள் அவகாசம் கிடையாது, இரண்டு நாளில்  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று  - இன்று (19.5.2018) மாலை  4 மணிக்கு நீங்கள் உடனடியாக இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லும்போது, என்னென்ன வகையிலே தந்திரங்கள், சூழ்ச்சிகள் செய்ய முடியுமோ, அதேபோல தனக்கு சாதகமான ஒரு சபாநாயகரை நியமித்து மூத்த எம்.எல்.ஏ. ஒருவர் எட்டுமுறை வெற்றிபெற்றவரை விட்டுவிட்டு, மீண்டும் அதற்குப்பிறகு தன் கட்சிக்காரரை வைத்து ஏதாவது தில்லுமுல்லு செய்யலாம் என்று திட்டமிட்டு, இறுதிவரையிலே முயற்சி எடுத்தது தோல்வி அடைந்தது என்று தெரிந்த உடனே, வேறு வழியில்லாமல், எடியூரப்பா நான் ராஜினாமா செய்கிறேன் என்று சொல்லி, ஒரு ‘ஏக் தீன்கா சுல்தான்’ என்று சொல்வார்கள், அதுமாதிரி மூன்று நாள் முதலமைச்சராக இருந்தவர் ராஜினாமா செய்துவிட்டார்.

இவர் பின்பற்றிய வழி பாஜகவுக்குப் புதியதல்ல. இதேநிலை, முன்பு வாஜ்பாயி முதல்முறையாக பிரதமராக   பதவி பொறுப்பேற்பதற்கு வந்தபோது, இதேமாதிரி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மான நேரத்தில் நாடாளுமன்றத்திலே 13 நாளில் திடீரென்று நான் ராஜினாமா செய்து விடுகிறேன், ஓட்டெடுப்பைக் கோரப்போவதில்லை என்று சொல்லி ராஜினாமா செய்தார்.

வாஜ்பாயி அவர்கள் 13 நாள்கள் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார். எடியூரப்பா 3 நாள்கள் முதல்வர் என்று சொல்லக்கூடிய நிலையை உருவாக்கினார் என்றால், இதிலே மிக முக்கியமான ஜனநாயகப் படுகொலை நிகழ்த்து வதற்கு காரணமான அந்த  கருநாடக ஆளுநரை முதலில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அவர் எடுத்த முடிவின் காரணமாக, கோவாவில், மணிப்பூரில், பாட்னாவில் இவை அத்தனை இடங்களிலும் போர்க் கொடி உயர்த்தப்பட்டுள்ளது.

அதோடு, என்ன செய்தாவது - எவ்வளவு பெரிய அளவிற்காவது - விலைக்கு வாங்கியாவது வெற்றி பெறுவோம் என்று தொலைக்காட்சிகளிலே ஒரு செய்தி பதிவானது.

ரூ.150 கோடி உங்களுக்கு, ஆகவே, நீங்கள் எங்கள் பக்கம் வாருங்கள் என்று ஒரு சுயேச்சை எம்.எல்.ஏவை அழைக் கிறார்கள். அவர் ரொம்ப நாணயமாக இல்லை இல்லை நான் கட்சிக்குத் துரோகம் செய்ய மாட்டேன் என்று சொல்லுகிறார். இது அத்தனையும் பதிவாகி வெளியே வந்திருக்கிறது.

இவ்வளவு அசிங்கமான, அருவருப்பான ஜனநாயக காட்சிகள் அங்கு நடந்துகொண்டிருந்த நிலையிலே, வேறு வழியில்லாமல், முட்டி மோதி பார்த்துவிட்டு, கடைசியில் தோல்விதான் என்று தெரிந்த உடனே, அதற்கு மேலே நீடிக்க முடியாது என்று சொல்லி, அவர் ராஜினாமா செய்திருப்பது, இது எடியூரப்பாவுக்கு மட்டும் தோல்வி அல்ல, அமித் ஷாவுக்குத் தோல்வி, பிரதமர் மோடிக்குத் தோல்வி.

இங்கே பாஜக, ஆர்.எஸ்.எஸ்.சினுடைய வீழ்ச்சிப் படலத் தினுடைய முதல்  துவக்கம் கருநாடகத்திலிருந்து வந்திருக் கிறது என்பதுதான் மிக முக்கியமானது.

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner